Published:Updated:

மனசு சொல்வதைக் கேட்போம்!

மனசு சொல்வதைக் கேட்போம்!
பிரீமியம் ஸ்டோரி
மனசு சொல்வதைக் கேட்போம்!

As I am Suffering from stress...

மனசு சொல்வதைக் கேட்போம்!

As I am Suffering from stress...

Published:Updated:
மனசு சொல்வதைக் கேட்போம்!
பிரீமியம் ஸ்டோரி
மனசு சொல்வதைக் கேட்போம்!

“என் மனம் சொல்வதை உடல் கேட்கவில்லை. உடல்நலத்தைப் பாதுகாப்பது போல மன நலத்தையும் பாதுகாக்க வேண்டும். அதனால் என் மன நலத்தில் கவனம் செலுத்தப் போகிறேன்” - ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு முறை பதக்கம் வென்ற 24 வயதான அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், இப்படிச் சொல்லிவிட்டு, இந்த வருட ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார். சிமோன் பைல்ஸ் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மனநலம் சார்ந்த பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். உடல்நலத்தையே அலட்சியப்படுத்திப் பழகிய பெண்களுக்கு மனநலம் பெரிதாகப்படுவதில்லை.

‘மனசு சரியில்லை...’ என்ற வார்த்தையை உபயோகிக்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள். சிலர் வாழ்க்கையில் இது எப்போதாவதும், சிலருக்கு அடிக்கடியும் நிகழலாம். உடம்பு சரி யில்லை என்றால் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறோம். மருத்துவரைப் பார்க்கிறோம். ஆனால், மனசு சரியில்லை என்றால் அதை வெளியில் சொல்லக்கூட வெட்கப்படுகிறோம். உடல்நலத்தைப் போலவே மனநலமும் முக்கிய மானது. இந்த இரண்டிலுமே பெண்களின் அலட்சியம் கொஞ்சமல்ல... ரொம்பவே அதிகம்.

மனசு சொல்வதைக் கேட்போம்!

தன் ஆரோக்கியத்தைக்கூட கவனிக்காமல் குடும்பத்துக்காகவும் வேலையிடத்துக்காகவும் ஓடும் அவர்கள், மனநலன் என ஒரு விஷயம் இருப் பதையே மறந்துவிடுகிறார்கள். எப்பேர்ப்பட்ட கவலையையும் அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு தியாகிப் பட்டம் சுமப்பதையே விரும்புகிறார்கள். உடல்நலனைப் புறக்கணிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைவிடவும் மோசமானவை மனநலனைப் புறக்கணிப்பதால் வரும் விளைவுகள் என எச்சரிக்கிறார்கள் மனநல மருத்துவர்களும் உளவியல் ஆலோசகர்களும்...

மனநலனின் அடிப்படையைப் புரிய வைத்து, பிரச்னைகளைக் கண்டுபிடித்து சிகிச்சைக்குத் தயாராக வேண்டியதன் அவசியம் உணர்த்தி, மனதை ரிலாக்ஸ் செய்யும் வழிகளையும் கற்றுத் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்...

மனசு சொல்வதைக் கேட்போம்!

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்... ஸ்ட்ரெஸ் நல்லதா? - மனநல மருத்துவர் கவிதா, சென்னை.

மனிதன் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும் தகவமைத்துக்கொள்ளவும் மனஅழுத்தம் தேவைப்படுகிறது. பாசிட்டிவ்வான மன அழுத்தம் நல்லதே. மன அழுத்தம் ஏற்படுவதற்கு அதைத் தூண்டி விடும் காரணங்கள் ஏதாவது இருக்கலாம். உதாரணமாக, அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கும்போது டிராஃபிக் ஜாம் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் அலுவலகத் துக்குச் செல்ல வேண்டும் என்ற படபடப்பு, பதற்றம், உந்துதல்... இதுதான் ஸ்ட்ரெஸ் அல்லது மன அழுத்தம். அவ்வப்போது ஏற்பட்டு அதுவாக மறையும் மனஅழுத்தத் தால் பிரச்னை இல்லை.

ஒரு நேர்காணலுக்கு மனதளவில் தயாராகும் போது இயல்பாகவே ஸ்ட்ரெஸ் ஏற்படும். இதை `பாசிட்டிவ் ஸ்ட்ரெஸ்’ (Positive Stress) அல்லது `யூஸ்ட்ரெஸ்’ (Eustress) என்கிறார்கள். ஒருவேளை அந்த ஸ்ட்ரெஸ் இல்லையென்றால் நேர்காணலை அலட்சியமாகக் கருதி, முன்தயாரிப்புகள் இல்லாமல் சென்று, அதை வெற்றிகரமாகக் கையாள முடியாமல் போகும். அதனால் பாசிட்டிவ் ஸ்ட்ரெஸ் நல்லது!

அதுவே தொடர்கதையாகி தூக்கம், சாப்பாடு, அன்றாட வாழ்க்கை என அனைத்தும் பாதிக்கப்பட்டால் மனச்சோர்வு அல்லது டிப்ரெஷன் என்ற நிலையை அடையும். இது பல ஆண்டுகள்கூட நீடிக்கலாம். மனச்சோர்வு என்பது மருத்துவ கவனிப்பு தேவைப்படக்கூடிய ஒரு நிலை. மனஅழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் மனச்சோர்வு சற்றே தீவிரமானது.

நெருக்கமானவர்களின் உயிரிழப்பு, விவாக ரத்து, பிரிவு, பதவி ஓய்வு, கர்ப்ப காலம், கடன், புது அலுவலகம், கணவரின் வேலையிழப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம், தூக்கத்தில் மாற்றம், வேலையில் பொறுப்பு கூடுவது அல்லது மாறுவது, உயரதிகாரியுடன் பிரச்னை, டேட்டிங், காதல் என மனஅழுத்தம் ஏற்படுவ தற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

மன அழுத்தம் இருப்பதை ஒருவர் தானாகவே உணர முடியும். சோர்வு, அழுகை, வழக்கமாகச் செய்யும் வேலைகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது, ‘நான் ஏன் வாழ வேண்டும்’ என்பது போன்று நெகட்டிவ்வாகப் பேசுவது எல்லாம் மன அழுத்தம் மனச்சோர் வாக மாறியதன் அறிகுறிகள். குறிப்பாக, தற்கொலை பற்றிப் பேசினால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மனசு சொல்வதைக் கேட்போம்!

பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும் காலகட்டங்கள் - மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா, சென்னை.

பெண்கள் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஹார்மோன்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிட்யூட்ரி சுரப்பியிலிருந்து சுரக்கும் `எஃப்.எஸ்.ஹெச்’ (FSH), `எல்.ஹெச்’ (LH), `புரோலாக்டின்’ (Prolactin) மற்றும் ‘ஆக்ஸிடோசின்’ (Oxytocin) ஆகிய ஹார்மோன்கள் மற்றும் கருவகத்திலிருந்து சுரக்கும் `ஈஸ்ட்ரோ ஜென்’ மற்றும் `புரொஜெஸ்ட்ரான்’ ஆகியவற்றின் தாக்கத்தால்தான் பெண்களின் மனநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன அழுத்தம் அதிகமாகும் போது ஆண், பெண் இருவருக்கும் `புரொலாக்டின்' எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்கும். அதனாலும் சில பிரச்னைகள் ஏற்படலாம்.

மாதவிடாய்

ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் சுரப்பு மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு, மூன்று நாள்களுக்கு முன் அடிமட்டத்துக்குப் போய்விடும். அப்போது மனநிலையில் மாற்றம், எரிச்சலுணர்வு, கோபம், மனச்சோர்வு போன்றவை ஏற்படும். இதை `ப்ரீமென்ஸ்ருவல் சிண்ட்ரோம்' (Premenstrual Syndrome) என்போம். மாதவிடாய் ஏற்பட்ட நாளிலிருந்து கீழே சென்ற ஹார்மோன்களின் அளவு மெள்ள அதிகரிக்கத் தொடங்கும். 28 நாள்கள் மாதவிடாய் சுழற்சி காலம் என்றால் ஈஸ்ட்ரோஜென் அளவு மேலே செல்லக்கூடிய முதல் 14 நாள்கள் மனநிலை ஃப்ரெஷ்ஷாக, மகிழ்ச்சியாக இருக்கும்.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் சுரப்பு மிக அதிகமாக இருக்கும். அதன் தாக்கத்தால் கவலை, மகிழ்ச்சி எனக் கலவையான மனநிலையில் இருப்பார்கள். சாதாரணமாக 100, 200 என்ற அளவில் இருக்கும் புரொஜெஸ்ட்ரான் சுரப்பு கர்ப்ப காலத்தில் 10,000, 25,000 என அதிகரிக்கும். அதனால்தான் கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலை தொட்டால் நொறுங்கிவிடும் கண்ணாடி போல இருக்கும். இந்தச் சமயத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை `ப்ரீநேட்டல்' அல்லது `போஸ்ட் நேட்டல் மெட்டர்னல் ஸ்ட்ரெஸ்' என்கிறோம். கர்ப்பிணியின் மனநிலை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவார்கள்.

பிரசவத்துக்குப் பிறகு

கர்ப்ப காலத்தில் அதிகரித்திருந்த ஹார்மோன்களின் எண்ணிக்கை பிரசவத்துக்குப் பிறகு குறைவதால், பிரசவம் நடைபெற்ற ஓரிரு நாள்கள் விவரிக்கவே முடியாத பரவச மனநிலையில் இருப்பார்கள். இதை `பேபி பிங்க்' (Baby Pink) என்பார்கள். ஆனால், சிலருக்கு `பேபி புளூஸ்’ (Baby Blues) எனப்படும் லேசான மன அழுத்தம் ஏற்படலாம். தாய்ப்பால் கொடுக்க முடியாமல் இருப்பவர்கள், குழந்தை இரவு நேரத்தில் அழுவதால் தூக்கம் தடைப்படுவது, குழந்தையைக் கவனிக்க ஆள் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் இது ஏற்படும். மனநோய் இருப்பவர்கள், குடும்பத்தில் யாருக்கேனும் மனநோய் இருந்தால் அல்லது கர்ப்பகாலத்தில், பிரசவ காலத்தில் சரியான கவனிப்பு இல்லாதது போன்றவை மனச்சோர்வாக (Postpartum Depression) மாறும். அதற்குத் தகுந்த சிகிச்சையளிக்கவில்லை என்றால் `குழந்தை பிறப்புக்குப் பின்னர் ஏற்படும் சைகோசிஸ்’ (Postpartum Psychosis) என்ற மிகத் தீவிர பிரச்னையாக மாறும்.

மெனோபாஸ்

மெனோபாஸை நெருங்கும் கடைசி நான்கைந்து ஆண்டுகளில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு மெள்ள குறையத் தொடங்கும். அதனால் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் உண்டாகத் தொடங்கும். தூக்கம் தடைப்படுதல், வியர்த்துக்கொட்டுதல், சோர்வு போன்ற உடல் சார்ந்த பிரச்னைகளுடன் எரிச்சலுணர்வு, பொறுமையிழத்தல், விரக்தி போன்ற எண்ணங்கள் வரும்.

ஸ்ட்ரெஸ் என்னவெல்லாம் செய்யும்?

ஸ்ட்ரெஸ்... எந்த அளவு வரை அனுமதிக்கலாம்?

கட்டுப்படுத்துவதற்கான 4-6-8 டெக்னிக்

சிகிச்சைகள் எப்படி?

இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் தரும் டிப்ஸ்

- அடுத்த இதழில்...

மனசு சொல்வதைக் கேட்போம்!

எனக்கு ஆங்ஸைட்டி பிரச்னை இருந்தது - நடிகை மஞ்சிமா மோகன்

‘`டிப்ரெஷனை ஏற்படுத்துற சூழல்கள் என் வாழ்க்கையில நடக்கலை. ஆனா, ஆங்ஸைட்டினு சொல்ற பதற்றம் இருந்தது. 2017-ல அதை முதல்முதலா ஃபீல் பண்ண ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லா போயிட்டிருந்தபோதும் எல்லாமே தப்புத் தப்பா நடக்கறதா தோணும். ஏதோ மிஸ் ஆகுற மாதிரி தோணும். அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். ‘தொடர்ந்து ரெஸ்ட் இல்லாம ஷூட் பண்றதால இருக்கலாம், அதுவா இருக்கலாம், இதுவா இருக்கலாம்’னு ஆளாளுக்கு ஏதேதோ காரணங்கள் சொன்னாங்க. ஆனா,ஒரு கட்டத்துல எனக்கு அது வேற பிரச்னைனு புரிஞ்சது.

முதல் கட்டமா ஒரு கவுன்சலரை சந்திச்சேன். அவங்ககிட்ட பேசின பிறகு, கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அடுத்த மாசமே எல்லாம் சரியாயிடும்னு நினைச்சேன். ஆனா, திடீர் திடீர்னு பேனிக் அட்டாக், ஆங்ஸைட்டி, சின்ன விஷயத்துக்குகூட டென்ஷனாகிறதுனு பல மாசங்கள் அந்தப் பிரச்னை எனக்கு நீடிச்சது. அப்புறம் இன்னொரு சைக்காலஜிஸ்ட்டை மீட் பண்ணினேன். அவர்தான் என் பதற்றத்துக்கான மூல காரணத்தைக் கண்டுபிடிச்சார். அது தெரிஞ்சதும் அதை எப்படி சமாளிக்கணும்னு கத்துக்கிட்டேன். மெள்ள மெள்ள ஆங்ஸைட்டி யிலேருந்து வெளியே வந்தேன்.

மென்ட்டல் ஹெல்த் பத்தி பிரபலங்கள் யாரும் வெளியில பேசறதில்லை. அப்படிப் பேசினா அடுத்து சான்ஸ் கிடைக்காதுனு சொல்லி, சுத்தியிருக்கிறவங்களே அவங்களைப் பேச விட மாட்டாங்க. நான் தைரியமா என் அனுபவத்தை வெளியில பேச ஆரம்பிச் சதும் நிறைய பேர் அவங்களுடைய மனநல பிரச்னைகளை வெளியே பேச முன்வந்தாங்க. இந்த நிலையிலதான் ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ்ல எனக்கு ஜூனியரான பூஜா என்னை அணுகினாங்க. மனநலம் தொடர்பான விழிப்புணர்வு கொடுக்க ‘ஒன் லைஃப்’ அமைப்பின் மூலமா ‘தி டிரான்ஸ்ஃபாமைண்ட் புராஜெக்ட்’டுனு ஒரு கேம்பைன் ஆரம்பிக்கிறதா சொல்லி என்னை அதுக்கு பிராண்ட் அம்பாசிடரா இருக்கச் சொன்னாங்க. காய்ச்சல் வந்தா பாராசிட்டமால் எடுக்கணும்னு நமக்குத் தெரியும். ஆனா, அதுவே மனசு சம்பந்தப்பட்ட பிரச்னை வந்தா, என்ன செய்யணும்னு யாருக்கும் தெரியறதில்லை.

ஸ்கூல் படிக்கிற வயசுலேருந்தே குழந்தை களுக்கு மனநல ஆரோக்கியத்தின் அவசியத்தைப் புரியவெச்சு, விழிப்புணர்வு கொடுக்கிறதுதான் இந்தப் பிரசாரத்தின் நோக்கம். குழந்தைங்களுக்கு மட்டுமில்லாம, பேரன்ட்ஸ், டீச்சர்ஸ்னு எல்லாருக்கும் இந்த விழிப்புணர்வைக் கொடுக்கறோம். மென்ட்டல் ஹெல்த் தொடர்பா உதவிகள் தேவைப்படறவங்களை சரியான கவுன்சலர்களோடு இணைச்சு பிரச்னை கள்லேருந்து வெளியே வர உதவறோம்.

மனசு சரியில்லையா... முதல்ல அதை ஏத்துக் கோங்க. அடுத்து அதுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு வெளியே வாங்க. தயங்கினாலோ, தவிர்த்தாலோ உங்க உடல்நலமும் சேர்ந்து பாதிக்கப்படும். அது உங்க வேலை, வாழ்க் கைன்னு எல்லா விஷயங்கள்லயும் பிரதி பலிக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism