Published:Updated:

வீட்ல விசேஷம்... சிறப்புங்களா?

வீட்ல விசேஷம்
பிரீமியம் ஸ்டோரி
வீட்ல விசேஷம்

அனைத்தின் மீதும் உங்கள் பாணியிலான சம்மட்டி அடி ஓங்கிவிழட்டும்... ஒவ்வொன்றாக நொறுங்கட்டும்!

வீட்ல விசேஷம்... சிறப்புங்களா?

அனைத்தின் மீதும் உங்கள் பாணியிலான சம்மட்டி அடி ஓங்கிவிழட்டும்... ஒவ்வொன்றாக நொறுங்கட்டும்!

Published:Updated:
வீட்ல விசேஷம்
பிரீமியம் ஸ்டோரி
வீட்ல விசேஷம்

50 வயதில் கர்ப்பம்...சொல்லும்போதே முகஞ்சுளிக்க ஆரம்பித்து விடுவோம்தானே... ஆனால், இது நூற்றுக்கு நூறு இயல்பான விஷயம் என்பதை உண்மையிலேயே மறக்கடிக்க வைத்துவிட்டது, நாம் போட்டுக் கொண்டிருக்கும் ‘நாகரிக’ வேஷம்.

இப்படி முகச்சுளிப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் இயல்பான விஷயங்கள் நூற்றுக்கணக்கில் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அந்த விஷயங்களையெல்லாம் கேலி, கிண்டல்களுக்கு இலக்கானவையாக்கி, இயல்புக்கு மாறாக நடந்துகொள்வதுதான் ‘நாகரிகம்’ என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால், இளவயது கர்ப்பத்தையேகூட வெளியில் சொல்ல சங்கடப்படும் அளவுக்கு, ‘வீட்டுல விசேஷம்’ என்று கேலிப்பொருளாக்கி வைத்துள்ளோம் காலகாலமாக. கேட்டால், சும்மா ஜாலிக்காகத்தானே என்று கடந்து விடுவோம். ஆனால், அவையெல்லாம் ஆழமாக அனைவரின் மனதிலும் கேலிக் குரிய விஷயங்களாகத்தானே இன்றளவும் பதிந்துகிடக்கின்றன.

வீட்ல விசேஷம்... சிறப்புங்களா?

பெண்களின் மாதவிடாயைக் கேலியாகப் பார்ப்பது, கருமை நிறப் பெண்ணை ‘கறுப்பி’ என்று அழைப்பது என அடுக்குவதற்கு ஆயிரத் தெட்டு விஷயங்கள் இருக் கின்றன.அதில் ஒன்றைக் கையில் எடுத்து, தன்னுடைய வழக்கமான காமெடி சாட்டையைச் சுழற்றி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ‘ஆர்ஜே’ பாலாஜி. முதல் படத்தில் ‘எல்.கே.ஜி’-யாக அரசியல் வகுப்பெடுத்தவர், இரண்டாவது படத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ என மூட நம்பிக்கை களுக்கு எதிராகச் சூலாயுதம் தூக்கியவர், ‘நாகரிகம்’ என்கிற பெயரில் தேவையே இல்லாமல் நாம் சுமந்து கொண்டிருக்கும் பலவிதமான சுமைகளையும் சுத்தியலால் அடித்து நொறுக்கி துவம்சம் செய்துள்ளார் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் மூலம்.

சமூகத்துக்குச் சொல்லத் தேவையுள்ள கதையைத் தேர்ந்தெடுத்து, கொஞ்சம்கூட அசிங்கப்பட வைக்காமல், நேர்க்கோட்டில் வெகு நேர்த்தியாகவே சொல்லியிருக் கிறார்கள் இரட்டை இயக்குநர்களாக இந்தப் படத்திலும் கைகோத்திருக்கும் ஆர்ஜே பாலாஜி-என்ஜே சரவணன். ஏற்கெனவே, இந்தியில் (ப(த்)தாயி ஹோ) வெளியாகி வெற்றிபெற்ற கதை. ஆனால், முழுக்க முழுக்க தமிழ்மணம் கமழ வைத் துள்ளனர்; இடையிடையே மலையாள மணமும் வீசுகிறது.

முதல் பாதி, ‘அட அதுக்குள்ள முடிஞ் சுடுச்சே!’ என்று சொல்லும் அளவுக்குக் கலகல. இரண்டாம் பாதியிலும் கல கலப்புக்குப் பஞ்சமில்லை. அத்துடன் ஆங்காங்கே கண்களில் நீர் கசிய வைக் கும் காட்சிகளையும் கோத்திருப்பது கூடுதல் சிறப்பு!

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ரிடையர் ஆகவிருக்கும் ரயில் டிக்கெட் பரிசோதகர் (சத்யராஜ்). அவருடைய அம்மா (கே.பி.ஏ.சி லலிதா), மனைவி (ஊர்வசி), கல்யாண வயதில் மூத்த மகன் (ஆர்ஜே பாலாஜி) மற்றும் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மகன் என அளவான குடும்பம். மகனுக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டிய வயதில், அம்மாவே கர்ப்பமாக நிற்க... வேறென்ன குடும்பமே கதிகலங்கி நிற்க, ஊரும் உறவும் சிரித்துத் தீர்க்கின்றன.

ஆர்ஜே பாலாஜி என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக் காது. அதேசமயம், காமெடியுடன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பல விஷயங்களையும் பக்குவமாகப் பார்வையாளர்களின் மனதில் ஏற்றுகிறார். பாழாய்ப் போய்க்கொண்டிருக்கும் இந்த சமூகத்தை நோக்கி, நெஞ்சில் நேர்மையுடன் கேள்விகளை அள்ளி வீசுகிறார்.

50 வயதில் கர்ப்பம்... சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு சர்வசாதாரணம். அம்மாவும் மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பது, அடுத்த நாள்களில் குழந்தைப் பெற்றுக்கொள்வதெல்லாம் கிராமப்புறங்களில் சாதாரண நிகழ்வு. இது இயற்கையின் ஏற்பாடு என்பதால் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்களால் அதை யெல்லாம் சர்வசாதாரணமாகக் கடந்து செல்ல முடிந்தது. ஆனால், நாகரிகம், நகர்ப்புற வாழ்க்கை என்று கலாசார மாற்றங்கள் ஏற்பட ஏற்பட... 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வது என்பதே விடைபெற ஆரம்பித்து விட்டது. அதற்காக, எதிர்பாராதவிதமாகவோ... காலம் கடந்த திருமணத்தின் காரணமாகவே ஐம்பதிலும் பெற்றுக்கொள்ள நேரிடும்போது, கேலிக்கும் கிண்டலுக் கும் ஆளாக்குவது அநியாயம்தானே.

‘எப்படி வளர்ப்பார்கள்... வயதான காலத்தில் என்ன செய்வார்கள்?’ என்கிற அக்கறையாக இல்லாமல், வெறும் வாயை மெல்வதற்கான அவல் போல மாற்றப் படுவது கொடுமைதானே!

சொல்லப்போனால், கிராமப் புறங்களில் இளம் கர்ப்பிணிகளைப் பார்த்தால்கூட கேலியாகவோ, கிண்ட லாகவோ பேசும் அளவுக்கு ‘நாகரிகம்’ கொடிகட்டிப் பறக்கிறது. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது போல, பெண்கள் கொஞ்சம் ஓவராகப் போய் கிண்டலடிப்பது, கேலி பேசுவது, குத்திக்காட்டுவது பரவலாகவே நடக் கிறது. இதற்குக் காரணம்... ஓவர் ஆக்‌ஷன்தான். ஆம்... எங்கே நம்மையும் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்கிற பயம் அவர்களுடைய ஜீன்களிலேயே கிட்டத்தட்ட புகுத்தப்பட்டுவிட்டதால், அதிலிருந்து வெளியேற முடியாமல், அந்த ஆணாதிக்க வலையில் விழுந்து, பெண்களே பெண்களையே கேலி பேசும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றை யெல்லாம் போகிற போக்கில் காட்சிகளாலும் வசனங்களாலும் தோலுரித்திருக்கிறார்கள்.

வீட்ல விசேஷம்... சிறப்புங்களா?

‘25 வயசுல குழந்தை பெத்துக்கலன்னாலும் திட்டு வாங்க... 50 வயசுல பெத்துக்கிட்டாலும் திட்டுவாங்க’, ‘அம்பது வயசுல ஆம்பள அப்பாவானா ஆம்பள சிங்கம். இதுவே நான் பெத்துக்கிட்டா அசிங்கம்?’ என்றெல்லாம் ஊர்வசி ஊரைச் சாடும் இடங்கள் அடி தூள்.

‘50 வயசுலயும்கூட அன்பா இருக்க முடியும்கிறதைத் தான் வெளிக்காட்டியிருக்கார் எங்க அப்பா. ஆனா, அது புரியாம அதை அசிங்கமான ஒரு விஷயமா நினைச்சது என் தப்புதான்னு என்னை உணர வெச்சதே உங்க மகள்தான்’ என்று நவயுகப் பெண்ணான தன் தோழி (அபர்ணா பாலமுரளி) பற்றி அவருடைய அம்மாவிடம் உருகுமிடத்தில், ‘பெண்ணுக்குப் பெண்ணே எதிரி’ என்பதையும் உடைத்து நொறுக்கியிருக்கிறார் பாலாஜி.

‘ஹேட்ஸ் ஆஃப்’ ஆர்ஜே பாலாஜி. இங்கே பெண் களுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் மூட்டை மூட்டையாக இருக்கின்றன. ‘அது அத்தனையும் சத்தியமான உண்மைகளே’ என்று பெரும்பாலான பெண்கள் கால காலமாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்... நம்பியே வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். மாதவிடாய், செவ்வாய்தோஷம், விதவை... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அனைத்தின் மீதும் உங்கள் பாணியிலான சம்மட்டி அடி ஓங்கிவிழட்டும்... ஒவ்வொன்றாக நொறுங்கட்டும்!

என்னதான் நாம் பேசினாலும்... கேலி, கிண்டல் களையெல்லாம் நேரடியாக எதிர்கொள்பவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும். இதுபோன்ற படங்கள், வலியை நீக்கும் முயற்சிகளே.

அந்த வகையில், பெண்களைக் கொண்டாடும் படம்... பெண்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய படம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism