Published:Updated:

சாணத்தில் விறகு முதல் எரிவாயு வரை... ஆச்சர்யமூட்டும் கோசாலை!

ஸ்ரீவித்யா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீவித்யா

‘மாடுகளின் சேவகி’ ஸ்ரீவித்யா

சாணத்தில் விறகு முதல் எரிவாயு வரை... ஆச்சர்யமூட்டும் கோசாலை!

‘மாடுகளின் சேவகி’ ஸ்ரீவித்யா

Published:Updated:
ஸ்ரீவித்யா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீவித்யா

பாரம்பர்ய நாட்டு மாடுகளின் அழிவைத் தடுக்க, ‘கோசாலை’ என்னும் உன்னதமான பராமரிப்பு மையங்களைத் தோற்றுவித்தனர் நம் முன்னோர்கள். நாடு முழுவதிலும் உள்ள இதுபோன்ற கோசாலைகள், ஆதரவற்ற பல்லாயிரக்கணக்கான மாடுகளுக்குப் புகலிடமாகத் திகழ்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகிலுள்ள தேவந்தவாக்கம் கிராமத்தில், 550-க்கும் அதிகமான நாட்டு மாடு களுடன் கூடிய கோசாலையை நிர்வகித்துவருகிறார் ஸ்ரீவித்யா.

மாடுகள் மீதான அன்பில் கிராம வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர், கறவை முடிந்த பிறகு, அடிமாடுகள் என்கிற பெயரில் இறைச்சிக்காக விற்கப்படும் மாடுகளை விலை கொடுத்துவாங்கி, அவற்றின் உயிர் களைக் காப்பாற்றுவதோடு, கடைசிவரை அவற்றைப் பராமரித்தும் வருகிறார். 2010-ல் இரண்டு மாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கோசாலையில், நூற்றுக்கணக் கான பசுக்களுடன், ஏராளமான காளைகளும் கன்றுக் குட்டிகளும் வளர்கின்றன. அவற்றின் சாணத்திலிருந்து விறகு, வறட்டி, விபூதி, கடவுள் சிலைகள், விளக்குகள், கொசு விரட்டி, சோப்பு, பல்பொடி உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து அசத்துகிறார். கோசாலை தேடிச் சென்ற நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஸ்ரீவித்யா, கோசாலையைச் சுற்றிக்காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

சாணத்தில் விறகு முதல் எரிவாயு வரை... ஆச்சர்யமூட்டும் கோசாலை!

“எனக்குப் பூர்வீகம் சென்னை. விவசாயத்துக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத குடும்பம். தூத்துக் குடி மாவட்டத்தைச் சேர்ந்த என் கணவருடையது விவசாயக் குடும்பம். அதனால, கல்யாணத்துக்கு அப்புறமா விவசாய வேலைகளைக் கத்துக்கிட்டேன். பலவித காரணங்களால பசுக்கள் அடிமாடுகளா அனுப்பப்படுற செய்திகளை அடிக்கடி கேள்விப் பட்டோம். இந்தப் போக்கை நம்மால முடிஞ்சவரை தடுக்கலாம்னு, முறையான அனுமதியுடன் ‘ஸ்ரீகோகுல கிருஷ்ணா’ங்கிற இந்தக் கோசாலையை ஆரம்பிச்சோம். சென்னையிலிருந்து இங்க வந்துட்டுப் போறது சிரமமா இருந்துச்சு. எங்களோட நேரடிக் கண்காணிப்பும் அவசியப்பட்டதால, நானும் என் கணவரும் வேலையை விட்டுட்டு, 2012-ல் இங்கேயே குடியேறினோம்.

விவசாய நண்பர்கள் மூலமா, பால் கறவை முடிஞ்ச மாடுகளையும், பராமரிக்க முடியாத மாடுகளையும் வாங்கினோம். இப்போ பல நூறு மாடுகள் சேர்ந்துடுச்சு. இதுல, உடல்நிலை சரியில்லாதது, சினையில இருக் கிறதுனு 50-க்கும் அதிகமான மாடுகளால மேய்ச் சலுக்குப் போக முடியாது. மத்ததையெல்லாம் சுற்று வட்டாரத்திலிருக்கிற கவர்ன்மென்ட்டுக்குச் சொந்த மான தரிசு நிலங்கள்ல தினமும் மேய்ச்சலுக்கு அனுப்பு வோம். காலையில மேய்ச்சலுக்குப் போச்சுன்னா சாயந்திரம் வரை மேயும். இதுக்கும் முறையா அனுமதி வாங்கியிருக்கோம்...” மாடுகளைத் தடவிக்கொடுத்த படியே மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டார். பின்னர், சாண விறகுகளை வெயிலில் உலர்த்தும் பணிகளை முடித்துவிட்டு வந்தவர், அவற்றின் தயாரிப்பு முறையை விளக்கினார். எந்திரத்தில் கொட்டப்படும் சாணம், மறுமுனையில் விறகு வடிவத்தில் வெளிவருகிறது.

சாணத்தில் விறகு முதல் எரிவாயு வரை... ஆச்சர்யமூட்டும் கோசாலை!

சாணத்திலிருந்து வருமானம் ஈட்டும் மதிப்புக்கூட்டல் உத்திகளை விவரிப்பவர், “வட மாநிலங்கள்ல அதிக அளவுல பயன்படுத்தப்படுற சாண விறகின் பயன்பாடு, தமிழகத்துல இப்பதான் பிரபலமாகுது. 30 சதவிகிதம் ஈரப்பதம் கொண்ட சாணத்தை மெஷின்ல கொடுத்து, தேவைக்கேற்ற நீளத்துல எளிதான முறையில உருளை வடிவா விறகா தயாரிக்கலாம். சமையல், பாய்லருக்கான எரிபொருள் தேவை, கொசு விரட்டி, சடலத்தைச் சிதையூட்டுறதுனு பல தேவைகளுக்கு இந்த விறகுகளைப் பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழலுக்கு ரொம்பவே உகந்தது. 650 கிராம் எடையுள்ள ஒரு விறகை எட்டு ரூபாய்க்கு விற்கிறோம். சாணத்துல செய்யப்படுற கடவுள் சிலைகளை, வழிபாட்டுக்குப் பிறகு, நீர்நிலைகள்ல கரைக்கலாம். அதுல உயிர்வாழுற ஜீவராசிகளுக்கு சாணம் உணவாகிடும். கோமியத்துல பஞ்ச கவ்யா, சானிடைசர், பினாயில் தயாரிக்கிறோம். இதுபோல சாணத் துலயும் கோமியத்துலயும் மட்டுமே 20-க்கும் அதிகமான மதிப்புக்கூட்டுப் பொருள்களை விற்கிறோம். பால்ல நெய், பால்கோவா, பனீர் தயாரிக்கி றோம்” என்பவர், இந்தத் தயாரிப்பு களுக்காகவே எட்டுப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறார்.

சாணத்தில் விறகு முதல் எரிவாயு வரை... ஆச்சர்யமூட்டும் கோசாலை!

“கோசாலை பணியாளர்களுக்கு இங்கேயே தங்க ஏற்பாடு செஞ்சிருக் கோம். அவங்களுக்கும், எங்க வீட்டுத்தேவைக்கும் சாணத்து லேருந்து தயாரிக்கப்படுற பயோ கேஸ்லதான் உணவு சமைக்கிறோம். வாட்ஸ்அப் மூலமாவே ஆர்டர் எடுத்து, மதிப்புக்கூட்டுப் பொருள் களை கூரியர் பண்ணிவிடுவோம். இந்த விற்பனையில கிடைக்கிற வருமானம், கோசாலை பரா மரிப்புக்கு உதவுது. தவிர, பலருடைய நிதியுதவியாலதான் பொருளாதார ரீதியான சிரமங்களை சமாளிச்சு, கோசாலையை நிர்வகிக்க முடியுது. இதுக்காக, நானும் என் கணவரும் எந்த வருமானமும் எடுத்துக்கிறதில்லை. சிலரின் தோட்டங்கள்ல இயற்கை விவசாய ஆலோசகராவும், பராமரிப்பாளராவும் என் கணவர் நட்ராஜ் வேலை செய்யுறார். அந்த வருமானத்துல எங்க தேவையைப் பூர்த்தி செஞ்சுக்கிறோம்” கனிவாகக் கூறுகிறார் ஸ்ரீவித்யா.

இந்தக் கோசாலையில், கலப்பின ரகத்தைச் சேர்ந்த மூன்று மாடுகள் தவிர, பர்கூர், காஞ்சிக்குட்டை, காங்கேயம், ஓங்கோல், கிர், சாஹிவால், காங்ரேஜ், தார்பார்க்கர் போன்ற பல்வேறு நாட்டு இனங்கள் மட்டுமே வளர்க்கப்படுவது கூடுதல் சிறப்பு. காயங்களுடன் கூடிய சில மாடுகளுக்கு மருந்திடும் பணிகளை முடித்துவிட்டுத் தொடர்ந்தவர், “சினைப் பிடிக்குமா, பால் கறவை நல்லாயிருக்குமா, ஆயுட்காலம் அதிகம் இருக்குமானு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமதான் மாடுகளை வாங்குவோம். உடல் நிலை சரியில்லாதது உட்பட எந்த நிலையில இருந்தாலும், எஞ்சிய தன் ஆயுட்காலத்தை அவை எங்கக் கோசாலையில நல்லபடியா கழிக்கும்படியா பராமரிப்போம். அடிக்கடி கால்நடை மருத்துவர் வந்து வைத்தியம் பார்க்கிறதுடன், மாடுகளுக்கு வரக்கூடிய பெரும் பாலான நோய்களுக்கும் நாங்களே சிகிச்சை கொடுக்கிற அளவுக்கு அனுபவம் பெற்றிருக்கோம்.

சாணத்தில் விறகு முதல் எரிவாயு வரை... ஆச்சர்யமூட்டும் கோசாலை!

முறையா வளர்க்க முடியாதவங்க, மாடுகளை இறைச்சிக்கு அனுப்பாம, கோசாலைகள்ல விடுறதால ஆயுட்காலம் முடியுற வரைக்கும் அவை நிம்மதியா வாழும். நிறைய பேர் இந்தக் கோசாலைக்கு வந்து பார்வையிடுவாங்க. ஒருமுறை இங்கே வருகை தந்த நம்மாழ்வார் ஐயா, பயனுள்ள ஆலோ சனைகளைக் கொடுத்தார். இத்தனை மாடு களையும் பராமரிக்க எங்களுக்குக் கிடைச்ச இந்த வாய்ப்பை, பெரிய புண்ணிய காரியமா நினைக்கிறோம்” என்று முடிப்பவரின் முகத்தில் தாய்மைப் பூரிப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism