Published:Updated:

ஹிட்லர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்! - ஹன்னா ஆரெண்ட்

MARUDHAN G
கார்த்திகேயன் மேடி

புத்துயிர்ப்பு

பிரீமியம் ஸ்டோரி

‘சிந்திப்பதைக் காட்டிலும் ஆபத்தான இன்னொரு செயல் இந்த உலகில் இல்லை. அதிலும் விமர்சன பூர்வமாகச் சிந்திப்பதை ஒருவரும் விரும்புவதில்லை. மீறிச் செய்தால் அவர் கடும் விரோதத்தையே சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும்’ என்று தனது இறுதி நேர்காணலில் குறிப்பிட்டார் 20-ம் நூற்றாண்டின் முக்கியமான அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹன்னா ஆரெண்ட்.

டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றிக்குப்பிறகு ஆரெண்டின் புத்தக விற்பனை அமெரிக்காவில் ஆச்சர்யமூட்டும் வகையில் திடீரென்று உயர்ந்திருப்பதற்கான காரணம் வெளிப்படையானது. இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்னையைத்தான் ஆரெண்டும் அவர் காலத்தில் எதிர் கொண்டிருக்கிறார்.

ஒரு சர்வாதிகாரி எப்படி உருவாகிறார்? அவர் எப்படி அதிகாரத்தைக் குவித்துக்கொள்கிறார்? அவரை எப்படி இனம் காண்பது? எப்படி எதிர்கொள்வது? எப்படி முறியடிப்பது? அவர் வலதா, இடதா? இவையெல்லாம் ஆரெண்டுக்கு முக்கியமில்லை. எத்தனை உன்னதமானதாக அவர் கோட்பாடு காட்சியளித்தாலும் அவரைப் பொறுத்தவரை அது ஒரு கேடயம் மட்டுமே. பாதுகாப்பாக ஒளிந்துகொள்வதற்கு அவர் பயன்படுத்தும் ஒரு கருவி அது. அதன் புறத்தோற்றத்தில் மயங்கி நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட முடியாது. அதேபோல, அவர் பின்னால் எத்தனை பேர் திரண்டிருக்கிறார்கள் என்பதும் ஆரெண்டுக்கு முக்கிய மில்லை.

`சில நேரம் ஒட்டுமொத்த மக்களையும் அவர் வென்றெடுத்து விட்டதுபோன்ற தோற்றம் கிடைக்கும். அது ஒரு மயக்க நிலை. மந்தையிலிருந்து விலகிவந்து அவரைக் கவனியுங்கள். மிக முக்கியமான, உங்களுக்கு அவரால் என்ன நேர்கிறது என்பதைக் கவனியுங்கள். சர்வாதிகாரி என்பவர் தனியாக இன்னொரு கிரகத்திலிருந்து உதிப்பதில்லை. அவர் நம்மிடமிருந்தே உருவாகிறார். நம்முடைய மொழியிலேயே பேசுகிறார். ‘இது நம்நாடு. நாம் பெரும்பான்மையினர். இருந்தும் நாம் வஞ்சிக்கப்படுகிறோம். நம் அதிகாரத்தை நாம் வென் றெடுக்க வேண்டாமா?' என்று அவர் உணர்ச்சிபூர்வமாக முழங்கும்போது நாம் பெருமிதம் கொள்கிறோம் அல்லவா... அந்தப் பெருமிதம்தான் அவர் கரங்களைப் பலப்படுத்துகிறது. நம்மிடமுள்ள வெறுப்பையே அவர் ஊதி ஊதிப் பெரு நெருப்பாக வளர்த்தெடுக்கிறார். எனக்கெதற்கு அரசியல் என்று சுற்றிலும் நடப்பதைக் கவனியாமல் நீங்கள் ஒதுங்கி நிற்கும்போது அவருடைய கூட்டாளியாக மாறிவிடுகிறீர்கள்’ என்கிறார் ஆரெண்ட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஒரு பெருங்கனவை உங்களுக்கு அவர் காட்டுவார். இது நமக்கான கனவு, நம் மக்களுக்கான கனவு, நம் தேசத்துக்கான கனவு என்று உருகுவார். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உங்கள் கண் முன்னால் அவர் வெறுப்பு அரசியலை வளர்ப்பார். அவரை நீங்கள் நம்பத் தொடங்கும் போது, உங்கள் கரங்களில் ஆயுதம் ஒன்று முளைத்திருக்கும். நேற்றுவரை நெருங்கிப் பழகிய ஒருவரை நோக்கி அந்த ஆயுதத்தை நீங்கள் உயர்த்துவீர்கள். நேற்றுவரை இயல்பாக இருந்த நீங்கள், சர்வ சாதாரணமாகக் கொல்லத் தொடங்குவீர்கள்.

ஹன்னா ஆரெண்ட்
ஹன்னா ஆரெண்ட்

அடால்ஃப் ஈச்மென் உங்களையும் என்னையும் போல இயல்பானவர்தான். ஒருநாள் ஹிட்லரின் சொற்கள் அவருக்குள் இறங்கத் தொடங்கின. `ஒரு பொன்னுலகைப் படைக்கலாம் வா' என்று ஒரு பெருங்கனவை ஹிட்லர் காண்பித்தபோது ஈச்மென் அதன் அழகில் தன்னைப் பறிகொடுத்தார். ஹிட்லரின் கனவு, ஈச்மெனின் கனவாக மாறியது. நம் கனவு நிறைவேற வேண்டுமானால் ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று ஹிட்லர் சொன்னபோது ஈச்மென் அதை ஏற்றுக்கொண்டார். லட்சக் கணக்கான யூதர்களை வதை முகாம்களில் அடைத்தார். அவர்கள் வதைக்கப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தார்.

நேற்றுவரை நீங்கள் பார்க்க, மற்றவர்களுக்கு நிகழ்ந்தது நாளை உங்களுக்கும் நிகழும். எனக்கென்ன என்ற அப்போது சிலர் உங்களைக் கடந்துசெல்வார்கள். உங்கள் அலறல் அவர்கள் காதில் விழாது.

ஹிட்லர் இறந்து, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கழித்து அர்ஜெண்டினாவில் இஸ்ரேலின் மொசாட் அதிகாரிகளால் ஈச்மென் கைது செய்யப்பட்டபோது காலம் ஒரு முழு வட்டம் அடித்து முடித்திருந்தது. ஈச்மெனால் வேட்டையாடப்பட்ட யூதர்கள் இப்போது ஈச்மெனை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்திக்கொண்டிருந்தார்கள். ஒரு பத்திரிகையாளராக அந்த விசாரணைகளில் நானும் கலந்துகொண்டேன்.

முதன்முறையாக ஈச்மெனின் முகத்தை நான் நெருக்கத்தில் கண்டேன். அதிர்ந்துபோனேன். நான் நினைத்திருந்ததைப் போல தீமையின் திருவுருவாக அவர் காட்சியளிக்கவில்லை. சாலையில் தினம் தினம் நான் கடந்து செல்லும் கறுப்புக் கண்ணாடியும் கோட்டும் அணிந்த ஒரு முதியவரைப் போலவே அவர் இருந்தார். சாத்தானுக்கு இருப்பதைப் போன்ற கொம்பு அவர் தலையில் இல்லை. அவர் பற்கள் கூர்மையானதாக இல்லை. நீண்ட விரல் நகங்களை அவர் கொண்டிருக்கவில்லை. இவர்தான் யூதர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடினார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஈச்மெனின் உருவம் ஓர் அடிப்படை உண்மையை எனக்குக் கற்றுக்கொடுத்தது. ஈச்மென் நம்மில் ஒருவர். பல நூறு ஈச்மென்களை ஜெர்மனி முழுக்க உருவாக்கும் பணியை மட்டுமே ஹிட்லர் செய்தார். மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள்’ என்கிறார் ஆரெண்ட்.

‘யூதர் என்னும் சொல்லைக்கூட இளம் வயதில் நான் கேள்விப்பட்டதில்லை’ என்னும் ஆரெண்ட் 1906-ம் ஆண்டு ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர். ஏழு வயதில் அப்பா இறந்துவிட, அம்மாவால் வளர்க்கப்பட்டார். இருத்தலியல் தத்துவவியலாளரான மார்டின் ஹைடெக்கரிடம் பயின்றவர் என்றாலும், ‘தத்துவத்திடமிருந்து ஒருகட்டத்தில் பிரிந்து வந்துவிட்டேன். தத்துவவியலாளர் என்றல்ல, அரசியல் கோட்பாட்டாளர் என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்’ என்கிறார் ஆரெண்ட்.

யூத வெறுப்பு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படியெல்லாம் பரப்பப் படுகிறது என்பது குறித்து ஆரெண்ட் ஆய்வு செய்வதற்கும் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. ஆரெண்ட் உடனடியாக கைது செய்யப்பட்டார். விடுவிக்கப்பட்டதும் ஜெர்மனியைவிட்டு விலகி பிரான்ஸில் குடியேறினார். 1940-ம் ஆண்டு, ஹிட்லரின் படைகள் பிரான்ஸின்மீது போர் தொடுத்தபோது ஆரெண்ட் மீண்டும் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து தப்பி அமெரிக்கா சென்றடைந்த பிறகே ஆரெண்ட்டால் எழுத்துப் பணிகளைத் தொடரமுடிந்தது. 18 புத்தகங்களும் கணக்கற்ற கட்டுரைகளும் கொண்டு இன்றும் நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கிறது அவருடைய படைப்புலகம்.

1951-ம் ஆண்டு வெளிவந்த ஆரெண்டின் The Origins of Totalitarianism எதேச்சதிகாரத்தின் நிஜ முகத்தை நமக்குக் காட்டுகிறது. `ஹிட்லரை மட்டும் பிரதானப்படுத்தாதீர்கள். அவர் பின்னால் திரண்ட ஜெர்மானியப் பெருங்கூட்டத்தையும் நெருங்கிச் சென்று படியுங்கள். ஹிட்லர் அவர்களை உருவாக்கினார் என்பது உண்மை; அவர்கள் ஹிட்லரை உருவாக்கினார்கள் என்பதும் உண்மை. இது ஓர் ஆபத்தான இணைப்பு. இந்த இணைப்பு எப்போது, எங்கே உருவானாலும் அக்கறை செலுத்துங்கள்’ என்று எச்சரிக்கிறார் ஆரெண்ட். `ஹிட்லரை வெறுப்பது சுலபம். நாஜிகள் நம் விரோதிகள் என்று சொல்வதும் சுலபம். எதிரிகளைக் காட்டிலும் நம்முடனே இருக்கும் நண்பர்களால்தான் நாம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இனவெறுப்பு என்பது நடந்துமுடிந்துவிட்ட ஒன்றல்ல. அந்த நெருப்பு அணைந்துவிடாமல் காக்க புதிய சர்வாதிகாரிகள் உலகம் முழுக்கத் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். இன்று யூதர்கள், நாளை யார் வேண்டுமானாலும் அவர்கள் இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம்’ என்கிறார் ஆரெண்ட்.

ஆரெண்டின் எழுத்துகளை வாசிக்கும் போது 20-ம் நூற்றாண்டு அரசியல் சூழலை மட்டுமல்ல, இன்றைய சூழலையும் நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. இரண்டுக்கும் அதிக வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. `ஹிட்லரும் ஈச்மென்களும் மறைந்துவிட்டாலும் எதேச்சாதிகாரம் மறைந்துவிடவில்லை. அது உருவாவதற்கான காரணங்களும் மறைந்துவிடவில்லை. ட்ரம்ப் போன்ற ஒருவர் ஏன் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்கான விடையை அவரிடம் மட்டும் தேடுவதில் பலனில்லை, நம்மிடமும் தேடுங்கள்' என்கிறார் ஆரெண்ட். எது இருள், அது எப்படிப் பரவுகிறது, எப்படி நம்மையெல்லாம் பற்றிக்கொள்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு ஆரெண்ட் நிறுத்திக்கொள்ளவில்லை. எப்படி வெளிச்சத்தைக் கொண்டுவருவது என்றும் சிந்திக்கிறார்.

`நம்மிடையே ஏற்படும் பிளவுகளை ஆராயுங்கள். அந்தப் பிளவுகள் எப்படி, யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். யார் நம் எதிரிகளாக மாற்றப்படுகிறார்கள், ஏன் என்பதில் கவனம் செலுத்துங்கள். பறிக்கப்படுபவை என் உரிமை களல்ல என்றோ, பாதிக்கப்படுவது நானல்ல என்றோ ஒதுங்கிச் செல்லாதீர்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று நிம்மதி கொள்ளாதீர்கள். நான் ஒரு நல்ல குடிமகன். நான் என் அரசை நம்புகிறேன். நான் தேசபக்தி மிக்கவன். எனக்கு எந்தத் தீங்கும் நேராது என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். தொலைவில் இருப்பதைப்போல் தோன்றும் இருள் நாளை உங்களையும் எட்டிப்பிடித்து விழுங்கும். நாளை நீங்கள் இன்னொருவரின் எதிரியாக மாறுவீர்கள். நேற்றுவரை நீங்கள் பார்க்க, மற்றவர்களுக்கு நிகழ்ந்தது நாளை உங்களுக்கும் நிகழும். எனக்கென்ன என்று அப்போது சிலர் உங்களைக் கடந்துசெல்வார்கள். உங்கள் அலறல் அவர்கள் காதில் விழாது. நீங்கள் அப்போது ஓர் அகதியாக மாறியிருப்பீர்கள். உங்கள் பெயரைப் பறித்து உங்களுக்கு ஒரு எண் கொடுக்கப்படும். அப்போது நீங்கள் ஒரு யூதராக மாறியிருப்பீர்கள். ஒரு புதிய ஹிட்லர் உங்களுக்காகக் காத்திருப்பார். ஒரு புதிய ஈச்மென் உங்களை வளைத்துப் பிடித்து வண்டியில் ஏற்றுவார். ஒரு புதிய வதைமுகாமின் முன்பாக நீங்கள் இறக்கிவிடப்படுவீர்கள். நீங்கள் உள்ளே சென்றதும் அதன் நீண்ட கதவுகள் மூடிக்கொள்ளும். அதற்குப் பிறகு உங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை யாராலும் தெரிந்துகொள்ளமுடியாது.இப்போதே விழித்துக்கொள்ளுங்கள்’ என்று அவசரப்படுத்துகிறார் ஆரெண்ட்.

ஆம், எப்போதும் விழித்தே இருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு