Published:Updated:

முதல் பெண்கள்: உலகின் முதல் பெண் நட்டுவனார்- கே.ஜே.சரஸா

கே.ஜே.சரஸா
பிரீமியம் ஸ்டோரி
News
கே.ஜே.சரஸா

அம்மா ரொம்ப டிசிப்ளின் எதிர் பார்ப்பார். எல்லோரையும் தன் குழந்தைகள்னு நினைப்பார்.

“60 ஆண்டுகளாகக் கற்பித்து வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. கொடுப்பதிலும் பெறுவதிலும் இருக்கும் ஆனந்தம், இத்தனை குழந்தைகளுக்குத் தாயாக இருப்பது, வாழ்க்கை முழுக்க நிலைத்திருக்கும் உறவுகளைக் கட்டிக்காப்பது என்று ஆசிரியராக இருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய உண்டு. மேடைகளில் நடனமாடியது இல்லையே என்ற வருத்தம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை!”

- உலகின் முதல் பெண் நட்டுவனார் கே.ஜே.சரஸா

1937 மார்ச் 10 அன்று சரஸா பிறந்தார் என்று சொல்கிறார் அவர் தங்கை மகளான திருமதி மீனா லோகநாதன். காரைக்காலைச் சேர்ந்த ஜெகதீசன்-நாகவள்ளி தம்பதியின் மூன்றாவது மகள் சரஸா. இவரின் முன்னோர் தஞ்சை அரசவையில் இசைக்கலைஞர்களாக இருந்தவர்கள். தேர்ந்த நாகசுரக் கலைஞரான ஜெகதீசன், சிறுபெண்ணாக சரஸா இருக்கும்போதே இறந்துவிட, தாய்மாமாவின் வீட்டில் வளர்ந்தார். நான்கு பெண் குழந்தைகள் இருந்த வீட்டில் அவர்களை வளர்க்க முடியாமல் தன் சகோதரர் வீட்டில் சரஸாவை வளரச் செய்தார் அவர் தாய். சிறு வயதில் வழுவூர் ராமையா பிள்ளையைச் சந்திக்கும் வாய்ப்பு சரஸாவுக்குக் கிடைத்தது.

“ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் பேபி கமலாவின் நடனத்தைப் பார்த்தேன். இதேபோல நாமும் ஆடினால் எப்படி இருக்கும்னு நினைச்சேன். அப்படியே அந்தப்பக்கம் திரும்பி என் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம், ‘எனக்கும் கொஞ்சம் நடனம் சொல்லிக் கொடுங்களேன். நாட்டியம்னா ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னேன். ‘நீ சென்னைக்கு வந்து பாரு, ஆழகழகா இருக்குறவங்கதான் ஆடறாங்க. அந்த அழகெல்லாம் உனக்கு இல்லை. நீ கரிச்சான் குஞ்சு மாதிரி இருக்கே. உனக்கு நாட்டியம் வருமா’ன்னு கேட்டார்.

அப்ப நான் அழகாத்தான் இருப்பேன். எனக்கு ஆடணும்தான் ஆசையா இருந்துச்சு. அப்போ லலிதா, பத்மினி, ராகினி, வைஜயந்திமாலான்னு நிறைய பேர் ஆட வந்துட்டாங்க. எல்லாருமே குயின்தான்.

‘நீ என்ன கான்டிராஸ்ட் இதுல... நீ எதுக்கு ஆடுற... ஆடக் கூடாது. ஆடினா அதெல்லாம் அழகு, வயசு இருக்கிற வரைக்கும்தான். அதனாலதான் சொல்றேன்... சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலியா இருக்கே. நீ முதல்ல நட்டுவாங்கத்தைக் கத்துக்க'... என்றார் குரு வழுவூர் ராமையா பிள்ளை'' என்று தன்னை நட்டுவாங்கம் படிக்க அறிவுறுத்தியதைப் பேட்டி ஒன்றில் சரஸா பகிர்ந்திருக்கிறார். இப்படித்தான் உலகின் முதல் பெண் நட்டுவனாரது கலைப் பயணம் தொடங்கியது.

பிரபல நட்டுவனாரும் வழுவூர் பாணியை உலகம் முழுக்க பிரபலப்படுத்தியவருமான வழுவூர் ராமையா பிள்ளையிடம் குருகுல வாசம் மேற்கொள்ள அனுப்பப்பட்டார் சரஸா. “தூரத்துச்சொந்தமான வழுவூராருடைய மயிலாப்பூர், பிருந்தாவன் தெரு வீட்டிலேயே சரஸா வசிக்கத் தொடங்கினார்” என்று சொல்கிறார் அவரிடம் நடனம் கற்றுக்கொண்ட மிகச் சில ஆண்களில் ஒருவரும் சரஸாம்மாவின் மகன்போல 18 ஆண்டுகளாக அவருடன் பயணம் செய்தவருமான பிரபல நடனக் கலைஞர் ஷண்முகசுந்தரம்.

முதல் பெண்கள்: உலகின் முதல் பெண் நட்டுவனார்- கே.ஜே.சரஸா

பத்தாண்டுகள் குருகுல வாசத்தில் வழுவூராரிடமிருந்து நட்டுவாங்கம் கற்றுக் கொண்டார் சரஸா. கூடவே அந்த வீட்டின் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆசிரியரின் நிகழ்ச்சிகளுக்கு உடன் செல்வது, அவரின் மாணவர்களுக்குக் கற்றுத்தருவது, சினிமா பயிற்சிகளுக்குத் துணையாகச் செல்வது என்று நேரம் காலம் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருந்தார். 15 ஆண்டுகள் குருகுல வாசம் போக, ராமநாத புரம் கிருஷ்ணனிடமும், குருமூர்த்தியிடமும் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார்.

முதன்முதலில் பக்கத்து வீட்டுப்பெண்ணுக்கு நடனம் சொல்லித்தர வந்த சரஸாவைப் பார்த்து நடனத்தின் மேல் ஈடுபாடு கொண்டார் பிரபல நடனக்கலைஞரும் ஆசிரியருமான ரத்னா குமார். பலகை மேல் தட்டுக்கழி தட்டும் ஓசை தன்னை ஈர்த்தது என்று குறிப்பிடுகிறார் அவர். ரத்னாவின் தாய், தன் மகளுக்கு நடனம் கற்றுத்தருமாறு சரஸாவிடம் வேண்டுகோள்வைக்க, குருவின் ஆசியுடன் கற்றுத்தரத் தொடங்கினார். சரஸாவின் முதல் மாணவி ரத்னா. அவரது அரங்கேற்றத்தில் முதன்முறையாக மேடையில் தனியே நட்டுவாங்கம் செய்தார் சரஸா. அந்த அரங்கேற்ற விழாவுக்கு வருகை தந்து மேடையேறி இருவரையும் வாழ்த்திவிட்டுச் சென்றார் ராமையா பிள்ளை. அவ்வப்போது தன்னிடம் பயிலும் மாணவிகளை தன் குரு ராமையா பிள்ளையின் வீட்டுக்குச் சிறப்பு வகுப்புகளுக்காக சரஸா அழைத்துச் செல்வதுண்டு என்றும் ரத்னா குறிப்பிடுகிறார்.

1960-ம் ஆண்டு, சரஸா தன் சரஸாலயா நாட்டியக் கூடம் பள்ளியைத் தொடங்குவதற்கு முன்பு வரை தன்னிடம் பயின்ற மாணவர்களின் வீடுகளுக்கு ரிக்‌ஷாவில் சென்று வகுப்புகள் எடுப்பது வாடிக்கை. ஒருமுறை கைக்காசை செலவு செய்து பாரிஸ் கார்னருக்குச் சென்று வண்ண ஷீட்கள் வாங்கி தன் வாடிக்கை ரிக்‌ஷாவை அலங்கரிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சரஸாவின் நாட்டியப்பள்ளி சென்னை மந்தைவெளிப் பகுதியில் இயங்கியிருக்கிறது.

“அவர் தமிழ்நாடு இசைக்கல்லூரியில் கவுரவ இயக்குநராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டபோது எனக்கு நடனம் சொல்லித்தரும்படி அவரை நேரில் சந்தித்துக்கேட்டேன். முதலில் மறுத்துவிட்டார். ‘நீ யாரென்று எனக்குத் தெரியாது. உன் குடும்பம் குறித்தும் எதுவும் தெரியாது’ என்று தயங்கினார். மூன்று நான்கு முறை மீண்டும் மீண்டும் அவரைச் சந்தித்துக் கேட்டேன். என் ஆர்வத்தைக் கண்டு ஒருவழியாக ஒப்புக்கொண்டார். முதல் மாதம் மட்டும்தான் என்னிடம் ஃபீஸ் பெற்றுக்கொண்டார். அதன்பின் ஒரு முறை கூட அவர் என்னிடம் கட்டணம் வாங்கியது இல்லை. 18 வருடங்கள் அவரிடம் நடனம் கற்றுக்கொண்டேன்” என்று சிலிர்க்கிறார் ஷண்முகசுந்தரம்.

“அம்மா ரொம்ப டிசிப்ளின் எதிர் பார்ப்பார். எல்லோரையும் தன் குழந்தைகள்னு நினைப்பார். உலகத் தமிழ் மாநாட்டுக்கு வேனில் குழுவாகப் போனோம். வழியில் சாப்பிட ஹோட்டலில் இறங்கினோம். எங்களுக்கு முன்பாக கிச்சனுக்குள் நுழைந்து உணவை எடுத்து வந்து எங்களுக்குப் பரிமாற ஆரம்பித்துவிட்டார். ‘என் பசங்களுக்கு நான்தான் சாப்பாடு போடுவேன்’ என்றார். அவ்வளவு தாய்ப்பாசம் அவருக்கு. அவரைப் போல மாணவரை ஊக்குவிக்கும் குருவை நீங்கள் பார்க்க முடியாது. நான், என் மேல்வைத்த நம்பிக்கையைவிட அவர், என் மேல் வைத்த நம்பிக்கைதான் நான் இந்த அளவுக்கு வளர காரணம். மேடை பயத்தை எப்படித் தாண்டி வருவதுன்னு சொல்லித்தருவார். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வகுப்புகள். 24 மணி நேரமும் ராணி அண்ணாதுரை தெருவிலுள்ள அவர் வீடு பரபரப்பாக இருக்கும்” என்று ஷண்முகசுந்தரம் நினைவுகூர்கிறார்.

இதை ஆமோதிக்கிறார் சரஸாவின் மாணவியும் நடனக்கலைஞருமான கவிதா ராமு ஐ.ஏ.எஸ்... “தினமும் காலை 7 மணிக்கே பயிற்சிக்குச் சென்று விடுவோம். எப்போது பசித்தாலும் நாங்களே அவர் வீட்டு சமையற்கட்டுக்குச் சென்று தட்டில் எடுத்துப்போட்டு சாப்பிட்டு விடுவோம். அவரது இட்லி மிளகாய்ப்பொடி சுவை இன்னும் என் மனத்தில் நிற்கிறது. காலை உணவு, மதிய உணவு எல்லாம் டீச்சர் வீட்டில்தான்'' என்கிறார்.

சரஸாவிடம் நடனம் கற்றுக்கொண்டவர்கள் பலர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எழுத்தாளர் சிவசங்கரி, கல்கியின் மகள் ஆனந்தி, சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருந்த ரகுராம் மாஸ்டர், ஹீராலாலின் மகன் தருண் குமார், நடனக் கலைஞர்கள் ஊர்மிளா சத்யநாராயணா, ஸ்ரீகலா பரத், கவிதா ராமு, சொர்ணமால்யா என்று பலரைச் சுட்டுகிறார் ஷண்முகசுந்தரம். நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் ஷோபனா, சுஹாசினி, பானுப்ரியா ஆகியோரும் இவரிடம் பயின்றவர்களே.

சரஸாவின் சகோதரி மகளான மீனா லோகநாதன், “அம்மா அன்பாகவும், அதேநேரம் கண்டிப்பாகவும் இருப்பாங்க. அன்கண்டிஷனல் லவ் அவங்ககிட்ட இருக்கும். அவங்க சிங்கிள் பெர்சன். தனி ஆளா, அந்தக் காலத்துல டான்ஸ் தொழில்ல இருக்கணும்னா, அதற்குண்டான அவங்களே ஏற்படுத்திக்கிட்ட வேலிகள் உண்டு.

டான்ஸ் ஃபீல்டுல முழுக்க முழுக்க ஆணாதிக்கம் இருந்த அந்தக் காலத்தில் ஒரே ஒரு பெண் நட்டுவனார். ரொம்ப தைரியமானவங்க. கடினமான உழைப்பாளி. அசதி என்கிறதே அவங்களுக்குக் கிடையாது. ஆறு மணிக்கே ரெடியாகி, பட்டுப்புடவை கட்டிக்கிட்டு உற்சாகத்தோட கிளாஸுக்கு தயாரா இருப்பாங்க.

சபாவுக்குப் போனா முன்னாடி போய் உட்கார்ந்துருவாங்க, எல்லாத்துக்குமே ஒரு போல்டான பதில் இருக்கும். யார் என்ன கேட்டாலும், சுத்தி இருக்கறவங்க என்ன சொல்வாங்க என்கிற பயமெல்லாம் கிடையாது. தனக்கு எது சரியோ, அதைச் சொல்வாங்க. ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு. அதேபோல அவங்க ரொம்ப ஜோவியல். ஜோக் சொல்லிவிட்டு அமைதியா இருப்பாங்க. பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க” என்று நினைவுகூர்கிறார் மீனா.

இதை ஆமோதிக்கிறார் ஷண்முகசுந்தரம். “அவருக்குக் கண்ணில் கேடராக்ட் உண்டு. அடிக்கடி கண் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வேன். ஒருமுறை மருத்துவமனையில் காத்திருந்தவரை உள்ளே பரிசோதனை செய்ய அழைத்தார்கள். ‘இப்ப என்ன... உங்களுக்கு அந்த போர்டை நான் படிக்கணுமா’ என்று கேட்டார். `ஆமாம்' என்ற பதில் கிடைத்ததும் ‘அதான் எனக்கு மனப்பாடமா இருக்கே’ என்று அவர் சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்” என்று இப்போதும் சிரிக்கிறார்.

வழுவூர் பாணியின் வழக்கமான நடனங்களை முன்னெடுக்கும்போதே, தன் புதிய முயற்சிகளையும் உட்புகுத்த சரஸா தயங்கியதில்லை. கிருஷ்ண பாரிஜாதம், ஆதித்ய ஹிருதயம், சிலப்பதிகாரம், குன்றக்குடி குறவஞ்சி, தேச பக்தி, குற்றாலக் குறவஞ்சி என்று நடனத்துக்குப் புத்துயிரூட்டினார். ஆணாதிக்கம் நிறைந்த நட்டுவனார் உலகுக்குள் நுழைந்தபோது பல சிக்கல்கள் இருந்தன என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் சரஸா.

பெண் நட்டுவனார் என்ன செய்கிறார் என்று பார்க்கும் ஆர்வத்தில் ஒரு காலத்தில் தன் நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் வந்திருக்கிறது என்று அவர் சொன்னதாகக் கூறுகிறார் ஷண்முகசுந்தரம். `காலப்போக்கில் இந்த சிக்கல்கள் மறைந்து பணியாற்றுவது எளிதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருந்தது' என்று பேட்டி அளித்திருக்கிறார் சரஸா.

சரஸாவின் சிறப்பே தன்னிடம் பயின்ற மாணவர்களைக் கட்டுக்கோப்பான ஒரு முறைக்குள் உட்புகுத்தாமல், அவர்கள் பாணியைக் கண்டெடுத்து அதைப் பட்டை தீட்டியதுதான்.

இதை கவிதா ராமு, “டீச்சர் எப்போதுமே மாணவிகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பார். யாரையும் ஒரு கட்டத்துக்குள் வைத்து அப்படித்தான் நடனமாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார். அவரவரிடமுள்ள திறமையை மலரவிடுவார். என் அரங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தனஸ்ரீ தில்லானா ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதில் சில கதக் ஸ்டெப்ஸ் ஆடுகிறேன் என்று நான் சொல்ல, டீச்சர் எந்தவிதத்திலும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. `அப்படியே செய்' என்று சொல்லிவிட்டார். இந்த படைப்புச் சுதந்திரம் அவரிடம் எல்லோருக்கும் கிடைத்தது” என்று விளக்குகிறார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்கேற்ற நிகழ்ச்சிகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகள், நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ச்சிகள் என்று பரபரப்பாகவே சரஸா இயங்கினார். 1975-ம் ஆண்டு, கலைமாமணி விருது பெற்றார். பரதநாட்டியத்துக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக 1992-ம் ஆண்டு, ,சங்கீத் நாடக அகாடமி விருதும் பெற்றார். 2004-ம் ஆண்டு, இசைப்பேரறிஞர் விருதும் சரஸாவுக்குக் கிடைத்தது. திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்த சரஸாவுக்கு அவரின் மாணவிகள் அனைவரும் பிள்ளைகள்தாம்.

சரஸாவின் நினைவாக `சரஸா நாட்டிய மாலா' என்ற நாட்டிய விழாவைத் தொடர்ந்து ஆண்டுதோறும் முன்னெடுத்து நடத்திவருகிறார் ஷண்முகசுந்தரம். ஆரம்ப காலங்களில் கார் பயணங்களில் இடமின்மை காரணமாக சிறுவனாக இருந்தபோது, அவரது மடியில் அமர்ந்து பயணம் செய்ததை ஷண்முகசுந்தரம் சொல்கிறார். தன் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடக்க முடியாத நிலையிலும் வீல் சேரில் வந்திருந்து சரஸா நட்டுவாங்கம் செய்ததைச் சொல்கிறார். சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சரஸா, 2012 ஜனவரி 2 அன்று காலமானார்.

ஆண்களின் கோட்டை என்று அறியப்பட்ட நட்டுவாங்கம் துறைக்குள் புயலென நுழைந்து தன் அன்பால் ஒரு தலைமுறை நடனக் கலைஞர்களைக் கட்டிப்போட்டவர் சரஸா. டீச்சரை பற்றி கவிதா ராமு, “அவர் இறப்பதற்கு 10-15 நாள்களுக்கு முன் அவரை வீட்டில் சந்தித்தேன். அப்போது ஒரு நடன நிகழ்ச்சிக்காக அவரது உருவாக்கமான `குன்றக்குடி குறவஞ்சி'யை நிகழ்த்த ஆசைப்பட்டேன். ‘குன்றக்குடி குறவஞ்சியை நிகழ்த்த வேண்டும், ஆனால், என்னிடம் அந்த பாட்டே இல்லை டீச்சர்’ என்று சொன்னேன். உடனே நொட்டேஷன் எழுதிய அவரது நோட்டுப் புத்தகத்தை எடுத்து என் கையில் கொடுத்துவிட்டார். ‘இதை தாராளமாகப் பயன்படுத்திக்கொள், உனக்கு உதவும். எதுவும் சந்தேகம் இருந்தால் கேள்’ என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்.

எத்தனை பேருக்கு இந்த மனது வரும்... தன் படைப்பை ஒவ்வொருவரும் உரிமை கோரி தன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தானே எண்ணுவார்கள்... ஜனவரி 3-ம் தேதி எங்கள் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. முந்தைய தினம் டீச்சர் இறந்துவிட்டார். எங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து, பின்னாளில் அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சியாக அவரது பல மாணவிகள் இணைந்து நடத்தினோம்” என்கிறார் கவிதா.

இறந்துபோன தன் குருவுக்கு அஞ்சலியாக சவுண்டு கிளவுட் தளத்தில் தானே எழுதிய பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் நடனக் கலைஞர் சொர்ணமால்யா.

`சியாமளே சரோஜித லோசினி' என்று தொடங்கும் அந்தப் பாடலை நள்ளிரவில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தன் மாணவிகள் அனைவரையும் தன் மகள்களாக சுவீகரித்துக்கொண்டார் என்று பொருள்படும்படியே பாடுகிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாடிய பாடல் போலத் தோன்றவில்லை. பஃப் ஸ்லீவ் சட்டையுடன் குருவும், அவர் அருகே ஒய்யாரமாக மாதவி வேடமிட்டு நிற்கும் மாணவியும் கண்முன் வந்து போகிறார்கள்.

நடனம் உள்ள மட்டும் சரஸாவின் பெயர் எங்கோ ஒலித்தபடிதான் இருக்கும். வழுவூரார் பெரும் தீர்க்கதரிசி!டான்ஸ் ஃபீல்டுல முழுக்க முழுக்க ஆணாதிக்கம் இருந்த அந்தக் காலத்தில் ஒரே ஒரு பெண் நட்டுவனார். ரொம்ப தைரியமானவங்க... கடினமான உழைப்பாளி. அசதிங்கறதே அவங்களுக்கு கிடையாது. ஆறு மணிக்கே ரெடியாகி, பட்டுப்புடவை கட்டிக்கிட்டு உற்சாகத்தோட கிளாஸுக்கு தயாரா இருப்பாங்க. டீச்சர் எப்போதுமே மாணவிகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பார். யாரையும் ஒரு கட்டத்துக்குள் வைத்து அப்படித்தான் நடனமாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார். அவரவரிடமுள்ள திறமையை மலர விடுவார்...