Published:Updated:

2K kids: படிச்சாதான் பொழச்சுக்கலாம்! - ஒரு கிராமத்து தாயின் கதை -

ஒரு கிராமத்து தாயின் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கிராமத்து தாயின் கதை

பா.தமயந்தி

2K kids: படிச்சாதான் பொழச்சுக்கலாம்! - ஒரு கிராமத்து தாயின் கதை -

பா.தமயந்தி

Published:Updated:
ஒரு கிராமத்து தாயின் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கிராமத்து தாயின் கதை

கடந்த காலத்தை ஒப்பிடும்போது, இப்போது பெண் கல்வியின் சதவிகிதத்தில் நாம் கண்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சிக்குரியது. பெண்களின் கல்வி சதவிகிதம் குறித்து, 2018-ம் ஆண்டில் இந்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு, கடந்த ஆண்டு அதன் முடிவுகளை வெளியிட்டது. அதனடிப்படையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளா 99.5 சதவிகிதத்துடனும், இமாசலப் பிரதேசம் 98.8 சதவிகிதத்துடன் இரண்டாம் இடமும், தமிழ்நாடு 96.8 சதவிகிதத்துடன் மூன்றாவது இடமும் பெற்றன.

அந்த 96 சதவிகிதப் பெண்கள் குறித்து மகிழ்ச்சிகொள்ளும் அதே வேளையில், அடிப்படை உரிமையான கல்வியறிவே பெறாமல் மீதமுள்ள அந்த 4 சதவிகிதப் பெண்கள் குறித்து நாம் அக்கறைகொள்ள வேண்டியதும், அவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்கான முயற்சிகளை நோக்கி நகர வேண்டியதும் முக்கியமாகிறது. மேலும், ஆரம்பக் கல்வியுடன் இடைநிற்கும் மாணவிகள், உயர் நிலைக் கல்வியுடன் படிப்பை முடித்துவிடும் மாணவிகள் என, இவர்களின் கல்வித் தொடர்ச்சிக்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியதும் அவசியமாகிறது. அந்த அவசியம் குறித்து என்னை உணரவைத்த ஒரு கிராமத்துப் பெண்ணைப் பற்றி, இங்கு பகிர்கிறேன்.

அவள் ஒரு கிராமத்துச் சிறுமி. கிராமங்களில் எல்லாம், பள்ளிப் படிப்பை முடிப்பது கல்லூரியில் சேர்வதற்கான தகுதி என்பதைவிட, அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்துகொடுப்பதற்கான தகுதியாகவே பார்க்கப்படுவது அவலம். ஆனால் அந்தச் சிறுமிக்கு, அவள் பள்ளிப் படிப்பை முடிக்கும் கால அவகாசம் கூட தரப்படவில்லை. பதினொன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது, அவள் தாய்மாமனுக்கு அவளை மணம் முடித்தனர். அந்தப் பதின்ம வயதுச் சிறுமி, ‘மேலே படிக்க வேண்டும், கல்லூரிக்குச் செல்ல வேண்டும்...’ போன்ற கல்விக் கனவுகள் எல்லாம் அறிமுகப்படுத்தப்படாதவள். ப்ளஸ் டூ முடித்ததும் திருமணம் என்பதே அவள் அறிந்த படிநிலையாக இருந்தது. மேலும், தன் தாய்மாமாமீது தனக்கும் விருப்பம் இருந்ததால், சந்தோஷமாகத் திருமணம் செய்துகொண்டாள்.

திருமண வாழ்க்கை சில காலம் அவளுக்கு நன்றாகவே சென்றது. 19 வயதில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்பு 21 வயதில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. ‘ரெண்டும் பொம்பளப் புள்ளையா போச்சு...’ என்ற பேச்சுகள் அவள் வீட்டில் எழுந்தன. இதையே சாக்காக வைத்து, அவள் கணவர் நாள் தவறாமல் குடிக்க ஆரம்பித்தார். குடியின் கோரம் அந்த வீட்டுக்குள் குடிகொள்ள, அவள் நகைகளை ஒவ்வொன்றாக அடகுவைத்துக் குடித்துச் செலவழிக்கும் அளவுக்கு அவள் கணவர் குடிநோயாளி ஆனார்.

கணவர் சம்பாதிக்கவில்லை. வீட்டு வருமானத்துக்கு வழியில்லை. இரண்டு பிள்ளைகளுக்கும் பசியாற்ற வழியில்லை. தன் பெற்றோர் வீட்டில் சிறிது காலம் தஞ்ச மடைந்தாள். ஆனால், அந்த நிழலை நிரந்தரம் என ஆக்கிக்கொள்ளக் கூடாது என முடிவெடுத்தவள், ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல நினைத்தாள். அப்போதுதான், பன்னிரண்டாம் வகுப்புகூட முடிக்காமல் தன் கல்வி பாழாக்கப்பட்டதை எண்ணி முதன்முறையாக வருந்தினாள். அந்தக் கையறு நிலையில், ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்ற விளம்பரத்தைப் பார்த்தாள். கல்வித் தகுதி அல்லாது உடல் உழைப்பைக் கோரும் அந்த வேலையில் சேர்ந்தாள். ஆனால், அங்கு அவளுக்குச் சில பிரச்னைகள் ஏற்பட்டது. ‘நான் படிச் சிருந்தா இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க மாட்டேனே....’ என்ற அழுகுரல் அவளுக்குள் ஒலிக்க ஆரம்பித்தது. என்றாலும், ‘இப்போ என்ன குடி முழுகிப் போச்சு... படிச்சிட்டு வேலைக்குப் போவோம்...’ என்ற தீர்க்கமான முடிவை எடுத்தாள்.

முதலில் பன்னிரண்டாம் வகுப்பை எழுதித் தேர்ச்சி பெற்றாள். பின்னர் டீச்சர் டிரெயினிங் முடித்துவிட்டு, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தாள். சுயசம்பாத்தியம், அவள் தன்னம்பிக்கையை வலுப்படுத்தியது. இப்போது, டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இரவு, பகல் பாராது படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் சொன்ன வார்த்தைகளுடனேயே இந்தக் கட்டுரையை நிறைவு செய்துவிடலாம்...

‘`நாங்கெல்லாம் கிராமப்புற பொண்ணுங்க. கல்வியோட அவசியம் என்னன்னு எங்களுக்கு எடுத்துச் சொல்லவோ, அதை நோக்கி எங்களை முன்னேற்றவோ யாரும் இல்ல. ஆனா, இதே கிராமத்துக்கு சினிமா, சீரியல் எல்லாம் வந்து சேர்ற அளவுக்கு, பெண் கல்வி பத்தின விழிப்புணர்வு வந்து அடையாததுக்கு யாரை, எதை காரணம் சொல்றதுனு தெரியல.

2K kids: படிச்சாதான் பொழச்சுக்கலாம்! - ஒரு கிராமத்து தாயின் கதை -

பள்ளிக்கூடத்துல டீச்சர்ஸ், ‘நல்லா படிச்சாதான் வேலைக்குப் போகலாம்’னு பொதுவா சொல்லுவாங்கதான். ஆனா, ஒரு படிச்ச பொண்ணோட வாழ்க்கைக்கும், படிப்பு கிடைக்காத, படிப்பைக் கைவிட்ட பொண்ணோட வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை, அதை வாழ்ந்து பார்க்கும்போதுதான் எங்கள்ல பல பொண்ணுங்க உணர்றோம். நான் ஒருத்தி எப்படியோ அந்தச் சூழல்ல இருந்து வெளிவந்திருக்கேன். ஆனா, என் வயசை ஒத்த பல பொண்ணுங்க, ‘படிசா பொழச்சிருக்கலாமே...’னு இப்பவும் மருகிட்டு இருக்காங்க.

படிச்சாதான் வெற்றினு சொல்ல வரலை. சுயதொழில் வாய்ப்புகளும் இங்கே இருக்குதான். ஆனா, கல்விதான் அடிப்படை. பெண்கள் நலத்திட்டத்தின் கீழ் அரசு கொடுக்குற லோன்கூட, எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி, பட்டதாரினு அதுக்கு தகுந்தாற்போலதான் கிடைக்கும். அதனால, எக்காரணத்தைக் கொண்டும் பொண்ணுங்க படிப்பைக் கைவிடக் கூடாது. உங்களுக்குத் தெரிஞ்சு அப்படி யாராச்சும் பொண்ணுங்க இருந்தா, உங்களால முடிஞ்ச உதவி, வழிகாட்டல், நம்பிக்கையைக் கொடுத்து அந்தப் பெண்ணின் படிப்பை முடிக்க வையுங்க.

‘நாம மூணு பேரும் நல்லா படிப்போம், அப்போதான் நல்லா பொழைக்கலாம்!’ - என் ரெண்டு பொண்ணுங்க கிட்டயும் இப்போ தினமும் இதைத்தான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.’’

‘அவள்’களுடைய எண்ணங்கள் ஈடேறட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism