Published:Updated:

பெண்கள்... அந்த வலியை உணர்ந்தவர்கள்!

தண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர்

தண்ணீர்... கண்ணீர்

பெண்கள்... அந்த வலியை உணர்ந்தவர்கள்!

தண்ணீர்... கண்ணீர்

Published:Updated:
தண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர்

“உலுகுரு மலையடிவாரத்திலிருந்து அந்தக் கலங்கலான நீரைக் கொண்டு வரவே நாங்கள் எட்டு மணி நேரம் நடந்தோம். அந்த நீரும் பாதுகாப்பானதல்ல. அதைக் குடித்தால் டயரியா வரும், தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்படும். குழந்தைகள் செத்துக்கொண்டிருந்தார்கள். எங்கள் கிராமம் எப்போதும் சண்டைச் சச்சரவுகளோடுதான் இருக்கும். ஏனென்றால், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதே அரிது. அதை மற்றவர்களிடமிருந்து பாதுகாத்து வைப்பதோ பெரும்பாடு” என்று தங்கள் கிராமத்தின் நிலையை விளக்குகிறார் 29 வயதான மரியா.

மரியா, தெற்கு தான்சானியாவின் உலுகுரு மலைத்தொடரில் அமைந்திருக்கும் கிங்கோல்விரா என்ற ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். தான்சானியாவில் மட்டுமல்ல, தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் இதே நிலைதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தண்ணீர்
தண்ணீர்

“பீகாரின் ராஜ்கிர் மாவட்டத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் கழிப்பறைகளை அமைத்துக்கொடுத்துள்ளார்கள். ஆனால், அதற்கான தண்ணீர் வசதி இல்லை. அந்தப் பகுதியின் ஆண்களுக்கும் சேர்த்து பெண்கள்தாம் ஐந்து கிலோமீட்டர் நடந்துசென்று தண்ணீரைக் கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் அதிகபட்சம் இரண்டு மூன்று குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ளும் விழிப்புணர்வு இருக்கிறது. பீகார் போன்ற வடமாநிலங்களில் இன்றளவும் எட்டு முதல் பத்து குழந்தைகள் வரை பெற்றெடுக்கிறார்கள். இத்தனை குழந்தைகள் பிறந்த பிறகும் நலிவடைந்த உடலோடு பெண்கள் ஒரு நாளைக்கு 25 லிட்டர் கொள்ளளவுள்ள சுமார் 35 குடங்களைச் சுமக்கிறார்கள். சென்னையிலும் வெயில்காலங்களின்போது வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டுக் காத்திருந்து லாரிகளில் தண்ணீர் பிடிக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். நீர்ப் பற்றாக்குறையின்போது பெண்களே மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலையடிவாரத்திலிருந்து அந்தக் கலங்கலான நீரைக் கொண்டு வரவே நாங்கள் எட்டு மணிநேரம் நடந்தோம். அதைக் குடித்தால் டயரியா வரும், தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்படும்.

ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் தண்ணீரைத் தேடிக்கொண்டு வரும் சுமை, பெண்களின் தோளிலும் இடுப்பிலும்தானே விழுகிறது? இதனால் ஏற்படும் இடுப்பு மற்றும் மூட்டு எலும்புகள் இடம் மாறுவது, உடல் நலிவடைவது, கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை இறங்குதல் போன்ற பிரச்னைகளை அனுபவிப்பவர்களும் பெண்களே. பெரும்பாலான பெண் குழந்தைகள் தண்ணீர்ப் பிரச்னையால்தான் பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நீர் விநியோகத்தையும் பயன்பாட்டையும் மேற்கொள்ளத் தகுந்த திட்டம் வந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும். இந்த வலியை உணர்ந்தவர்களால் மட்டுமே அத்தகைய எளிமையான திட்டத்தை உருவாக்க முடியும். பெண்களே அந்த வலியை உணர்ந்தவர்கள். அவர்களால்தான் அதைச் சாதிக்க முடியும்” என்கிறார் சூழலியல் ஆர்வலரும் ஒளிப்படக்காரருமான சாரா ரம்யா.

ஆம், அன்னைகளே அந்த வலியை உணர்ந்தவர்கள். தான்சானியாவின் தாய்மார்கள் அப்படியொரு திட்டத்தைக் கொண்டுவந்து சாதித்தும் காட்டியுள்ளார்கள்.

என்னதான் உடல் வலிக்க குடம் குடமாகச் சுமந்து வந்தாலும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதில் பெண்களுடைய பங்கு பெரியளவில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. தான்சானியாவில் அவர்கள் நீருக்காகவே நீண்ட நேரத்தைச் செலவிட்டதால், முறையான கல்வியைப் பெற முடியாமல், போதிய வருமானத்தை ஈட்ட முடியாமல் இருந்தனர். கிங்கோல்விராவின் பெண்கள் அந்த நிலையிலேயே வாழ விரும்பவில்லை. அவர்கள் அக்கிராமத்தின் நீர் மேலாண்மையைக் கையில் எடுத்தார்கள். ‘பெண்கள் நீர் மேலாண்மைக் குழு’வை உருவாக்கினார்கள். அந்தக் குழு ஒவ்வொரு வாரமும் கூடி, தங்கள் கிராமத்தில் ஏற்படும் நீர் குறித்த சிக்கல்களைத் தீர்க்க ஆலோசிக்கிறது.

உலுகுரு மலைத்தொடரின் அடிவாரத்தில் ஒரு சிறிய அணையைக் கட்டினால் தண்ணீரைச் சேமித்து வைத்து, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யலாம். இந்தத் திட்டத்தை ஐ.நா உட்பட பல்வேறு அமைப்புகளின் நிதியுதவியோடு செய்து முடித்தார்கள். அணையிலிருந்து குழாய் வழித்தடங்களை கிராமத்துக்குக் கொண்டுவந்து, எளிமையான முறையில் சுத்திகரித்து குழாய் மூலம் விநியோகம் செய்கிறார்கள். இப்போது, அந்தப் பெண்கள் தினசரி எட்டு கிலோமீட்டர் நடக்கத் தேவையில்லை. அதனால், வருமானத்தை ஈட்டுவதற்கான மற்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். பெண் குழந்தைகள் கல்வி கற்கவும் நேரம் கிடைக்கிறது.

தண்ணீர்
தண்ணீர்

“எங்களைப் பொறுத்தவரை, வாழ்க்கை சுத்தமான குடிநீரிலிருந்துதான் தொடங்குகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம், பெண் குழந்தைகளின் கல்வி, பெண்களின் பாதுகாப்பு அனைத்துமே அதில்தான் அடங்கியிருந்தது” என்கிறார் கிங்கோல்விரா பெண்கள் நீர் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர் மார்கரெத். வயது 39.

பெண்களின் பங்கு இருந்தால் நீர்ப்பற்றாக்குறையைச் சரிக்கட்ட முடியும் என்பதற்கு கிங்கோல்விராவின் பெண்கள் ஓர் உதாரணம்.

நீர் மேலாண்மை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அதிலுள்ள பெண்களின் பங்கு குறித்த பேச்சைத் தவிர்த்துவிட்டுப் பேசவே முடியாது, பேசவே கூடாது. தண்ணீர் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடித்துக் கொண்டுவர வேண்டிய கடமை எப்போதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதே விழுகிறது. இது நேரத்தையும் உழைப்பையும் தின்றுவிடுவதால் அவர்களால் கல்வி, வேலை போன்றவற்றில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. வறுமையிலிருந்து மீண்டுவருவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ச்சியாகக் குறைத்துக் கொண்டேயிருக்கிறது. நமக்கான தண்ணீரைத் தேடிப்பிடித்துக் கொண்டுவருபவர்கள், மழையின்போது ஆறுகளில் நீர் நிரம்புகிறதோ இல்லையோ... நம் வீட்டு அண்டாக்களில் நீர் நிரம்புவதற்குக் காரணமாக இருப்பவர்கள் அனைவரும் நம் குடும்பத்துத் தாய்களே. ஒரு நீர் மேலாண்மைத் திட்டம் வெற்றியடைய வேண்டுமென்றால் அதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியம்.

இந்தப் பிரச்னையை நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. நீர் மேலாண்மையில் பெண்களின் பங்கு என்பது குடும்பங்களோடு நின்றுவிடுவதில்லை. பொருளாதார ரீதியிலான நீர்ப் பயன்பாடு களிலும் பெண்களின் மறைமுகமான - ஆனால், முக்கியமான பங்கு இருக்கவே செய்கிறது. விவசாயம், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என்று அந்தப் பங்கு நீள்கிறது.

உதாரணத்துக்கு... ஆப்பிரிக்காவில் 43 சதவிகித விவசாயத் தொழிலாளர்கள் பெண்களே. இந்தியாவிலோ 47 சதவிகிதம். இந்திய கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களில் 80 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் ஆண் விவசாயத் தொழிலாளர்களைவிடக் குறைவு. சராசரியாக ஆண்களுக்கு ஒரு நாளைய சம்பளம் 281 ரூபாய். பெண்களுக்கு 218 ரூபாய்.

பண்பாட்டு ரீதியாகப் பார்த்தாலும் நீர்ப் பயன்பாட்டிலும் பராமரிப்பிலும் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நீர்நிலைகளைப் பராமரித்ததும் கட்டுப்படுத்தியதும் பெண்களே. தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் போதும் விளைச்சல் குறையும்போதும் மாற்றுவழிகளைக் கண்டுபிடிப்பது பெண்களின் கடமையாகவே இருந்துள்ளது. இப்போதும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுமா என்பதை முன்கூட்டியே உணர்ந்து, குடும்பப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் நீரைக் கணக்கிட்டுச் சேமித்து வைக்கும் வழக்கம் பெண்களிடம் உண்டு. இவை எல்லாவற்றையும்விட போதுமான நீர் கிடைக்கவில்லையென்றால் அதற்காக முதலில் வீதியில் இறங்கிப் போராடுவதும் பெண்களே.

கோடைக்காலத்தின்போது எவ்வளவு தொலைவானாலும் யார் குடங்களைத் தூக்கிச் சென்று நமக்கான தண்ணீரைக் கொண்டு வருகிறார்கள்? குடும்பத்துக்கான தண்ணீர்ப் பயன்பாடு குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் யார்? பல நேரங்களில் பற்றாக்குறையான காலகட்டத்தில்கூட இழுத்துப்பிடித்துக் கடைசிவரை தண்ணீர் கிடைக்கும் வகையில் நம் வீட்டில் நமக்காக நீர் மேலாண்மை செய்வது யார்?

முறையான நீர் மேலாண்மைக் கட்டமைப்புக் குள் இவற்றைச் சேர்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், நீரைப் பயன்படுத்துவதில், குழு மனப்பான்மையோடு திட்டமிடுவதில் பெண்களின் பங்கு எத்தனை சிறப்பானது என்பதை இவை நமக்குப் புரிய வைக்கின்றன.

நீர் மேலாண்மையில் பெண்களின் பங்கு இருப்பின் இன்னும் சிறப்பாகவே நம்மால் தண்ணீர்ப் பிரச்னைகளைக் கையாள முடியும். அதை வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய உதாரணங்களும் நம்முன் இருக்கவே செய்கின்றன. தான்சானியாவில் மேற்குறிப்பிட்டதுபோல பெண்கள் ஈடுபடத் தொடங்கியதால், அங்கு பெண்கல்வி நிலை 12 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. மொராக்கோ வில் உலக வங்கியின் நிதியுதவியோடு நீர் மேலாண்மையில் பங்கெடுத்த பெண்களால், தண்ணீர்ப் பற்றாக்குறை தீர்ந்து, சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. இப்போது அந்த நாட்டில் முன்பிருந்ததைவிட 20 சதவிகிதம் அதிகமான பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இன்னும் அதிக பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.

தண்ணீர்
தண்ணீர்

பெண்கள்தாம் களத்தில் நின்று சிரமப்பட்டு தத்தம் குடும்பங்களுக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். எவ்வளவு தண்ணீர் பயன்படுகிறது, எவ்வளவு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது, எவ்வளவு பற்றாக்குறை நிலவுகிறது போன்ற விவரங்களை நாம் அவர்களிடமிருந்தே சேமிக்க வேண்டும். நீர் மேலாண்மை குறித்த அவர்களின் பார்வைகளையும் திறன்களையும் அரசு பயன்படுத்த வேண்டும்.

தண்ணீர் விநியோகம் மற்றும் மேலாண்மை குறித்த திட்டமிடுதல்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்களோடு கலந்தாலோசித்து திட்டமிடுவது சிறப்பான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும். இந்திய மக்களின் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு தருவதோடு, பெண்களின் முன்னேற்றத்திலும் அது பங்கு வகிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism