Published:Updated:

அன்று, கடனாளி; இன்று, கோடிகளின் முதலாளி! - ஸ்நாக்ஸ் பிசினஸில் ஜெயித்த இளவரசி

இளவரசி
பிரீமியம் ஸ்டோரி
இளவரசி

நிறைய லோன் எடுத்திருந்தோம். இருந்தாலும் கடனுக்கு மேல நல்ல லாபம் கெடைச்சுது. சரிவு இல்லாத வெற்றி ஏது?

அன்று, கடனாளி; இன்று, கோடிகளின் முதலாளி! - ஸ்நாக்ஸ் பிசினஸில் ஜெயித்த இளவரசி

நிறைய லோன் எடுத்திருந்தோம். இருந்தாலும் கடனுக்கு மேல நல்ல லாபம் கெடைச்சுது. சரிவு இல்லாத வெற்றி ஏது?

Published:Updated:
இளவரசி
பிரீமியம் ஸ்டோரி
இளவரசி

மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள் இளவரசி. பஞ்சம் பிழைக்க கடவுள் தேசத்தின் திருச்சூர் மாவட் டத்துக்குச் சென்றனர் அவர் குடும்பத்தினர். உழைப்பையும், வறுமையையும் மட்டுமே பார்த்து வளர்ந்த இளவரசி, அப்பாவை போலவே, பலகாரம் சுட்டு விற்கும் தொழிலில் இறங்கினார். அதில் படிப்படியாக வளர்ந்து, சூப்பர் மார்க்கெட் திறக்கும் அளவுக்கு உயர்ந்தார். 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளி ஆனார். ஆனால், அடுத்தடுத்து அவர் இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட திருட்டு சம்பவத்தால் மொத்தத்தையும் இழந்து கடனாளி ஆனார்.

கைகளில் 100 ரூபாய்தான் இருக்கும் சூழல். இளவரசி மனம் தளரவில்லை. சாலையோர தள்ளுவண்டி கடை போட்டு பலகாரம் விற்க தொடங்கினார். இரவு, பகல் பாராத கடின உழைப்பு, மீண்டும் ஏணி கொடுத்தது. `அஸ்வதி ஹாட்ஸ் சிப்ஸ்’ என்ற பெயரில் திருச்சூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்து பேக்கரிகள் திறக்கப்பட்டன. இளவரசியின் உணவுப் பொருள்கள் இப்போது கண்டங்கள் கடந்து, அமெரிக்கா, கனடா, கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் கால் பதித்துள்ளன. 100 ரூபாயில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தவர், இப்போது கோடிகளில் டர்ன் ஓவர் செய்கிறார். அவமானம், புறக்கணிப்பு, வறுமை எல்லாவற்றையும் உழைப்பு என்ற அஸ்திரத்தால் வென்று இன்று விருதுகளையும், பெருமை களையும் அறுவடை செய்து வரும் இளவரசியை திருச்சூரில் சந்தித்தோம்.

 கணவருடன்...
கணவருடன்...

“மதுரை உசிலம்பட்டி கல்யாணப்பட்டி சொந்த ஊர். விவசாயம் கைக்கொடுக்காததால, நான் பொறக்கறதுக்கு முன்னமே அப்பா திருச்சூர் வந்தாச்சு. முறுக்கு சுட்டு தலையில வெச்சு ஒவ்வொரு இடமா போய் வித்துட்டு வருவார். எங்க வீட்ல ஏழு குழந்தைங்க. நான் கடைக்குட்டி. ஏழு பேருக்குமே இதே வியாபாரம்தான். நான் 1998-ல முறுக்கு, மிச்சர், வடை மாதிரியான பலகாரங்கள் சுட்டு கடைகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். பேக்கேஜிங், பில்லிங், விநியோகம், வாடிக்கையாளரை திருப்திப்படுத்தறதுனு நிறைய சவால்கள் இருந்தாலும், படிப்படியா வளர்ச்சி இருந்துச்சு. சூப்பர் மார்க்கெட் களுக்கும் சப்ளை பண்ணேன். அப்படியே திருச்சூர்ல இருந்து 60 கிமீ சுத்து வட்டாரத்துல வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன். 2007-2008 கால கட்டத்துல நல்லா முன்னேறிட் டோம். பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்கூட கெடைக்காத பொருள்களை மட்டும் போட ஆரம்பிச்சதால, மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்புறம் நாங்களே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சோம். அங்க மட்டும் 55 பேர் எங்ககிட்ட வேலை பார்த்தாங்க. 2011-ல கேரளாவின் சிறந்த தொழிலதிபர்னு விருது கொடுத்தாங்க’’ என்பவருக்கு இதற்கிடையில் திருமணம் முடிந் திருக்கிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

``நிறைய லோன் எடுத்திருந்தோம். இருந்தாலும் கடனுக்கு மேல நல்ல லாபம் கெடைச்சுது. சரிவு இல்லாத வெற்றி ஏது? திடீர்னு... எங்க ஆம்னி கார், சூப்பர் மார்க்கெட், தங்க நகைனு அடுத்தடுத்து எட்டு திருட்டு சம்பவங்கள் நடந்துச்சு; நொறுங்கிப் போயிட்டோம். ரூ.80 லட்சத்துக்கு மேல திருடு போயிடுச்சு. பிரஷர், சுகர் குறைஞ்சு ஆறு மாசத்துக்கு ஆஸ்பத்திரியில படுத்த படுக்கையா இருந்தேன். யாராவது சாப்பாட்டை ஊட்டி விட்டாதான் சாப்பிடவே முடியும். அதுலே ருந்து தேறி வர்றதுக்குள்ள, எங்க கஸ்டமர்கள் எல்லாம் கைவிட்டு போயிட்டாங்க” - இளவரசி பேச பேச அவர் கண்கள் பனிக்க தொடங்கின.

அன்று, கடனாளி; இன்று, கோடிகளின் முதலாளி! - ஸ்நாக்ஸ் பிசினஸில் ஜெயித்த இளவரசி
 ஊழியர்களுடன்...
ஊழியர்களுடன்...

“கடன் கழுத்தை நெரிச்சது. என் வாழ்க்கை யோட கடினமான நாள்கள் அதுதான். இங்க பலரும், ‘அவங்க தமிழ்நாடு, சொல்லாம ஊருக்குப் போயிட்டா என்ன பண்ணுறது...’னு பேசினதால, கடன், வியாபாரம் எல்லாத் துக்குமே அது பிரச்னையா இருந்துச்சு. வாங்கின கடனுக்கு என் சொத்தை எல்லாம் ஜப்தி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கடன் காரங்க என் பசங்ககிட்ட, `உங்க அம்மா உள்ள இருக்காங்களா, வரச்சொல்லு’னு கத்துறதுல அவங்க மிரண்டு போவாங்க. என் பசங்க கண்ணுல இருந்த பயம், என்னை உருகிப்போக வெச்சது. அவங்களை மனசுல நினைச்சுட்டு, ஜூரோல இருந்துதானே ஆரம்பிச்சோம், இப்போ வும் ஆரம்பிப்போம்னு ஒத்தை ஆளா ரோட்டு மேல ஒரு தள்ளுவண்டி போட்டு பலகாரம் சுட்டு விக்க ஆரம்பிச்சேன். சூப்பர் மார்க்கெட்ல இருந்து, இந்துஸ்தான் லீவர் நிர் வாகிகள் வரை என்னை வெயிட் பண்ணி பார்க்குற அளவுக்கு தொழில் செஞ்சவ. என்னைவிட, என்னை நம்பியிருந்த ஸ்டாஃப்களோட நிலைமையும் இப்படி ஆகிடுச்சே என்பது ரொம்ப வலிச்சுது.

கடன் கொடுத்தவங்க தள்ளுவண்டி கடைக் கும் வந்தாங்க. ‘உங்க காசை கொடுத்துட்டுதான் என் உயிர் போகும்’னு சொல்லுவேன். உழைப் போட, என்கிட்ட இருந்த வியாபாரி மூளையும் வேலைசெய்ய, திருச்சூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல கரன்ட், தண்ணி எதுவுமே இல்லாத ஒரு கடைக்கு முன்னேற முடிஞ்சது. பிளாட்பாரத்துல இருந்து கடைக்கு நகர்ந்ததே முன்னேற்றம்தான்னு நம்பிக்கை கிடைச்சது. நாலு வருஷங்கள், சின்ன சின்ன கடன் களை அடைக்கவும், கடன் வழக்கு கள்ல வக்கீலுக்கு பீஸ் கொடுக்கவும்னு போச்சு. ஆனாலும் கடனை முழுசா அடைக்க முடியல. ஆசைப்பட்டு கட்டின வீட்டை ஜப்தி பண்ண அதிகாரிங்க வர, என் சிபில் ஸ்கோர் அடி வாங்கிருந்ததால எங்கயும் கடன் கிடைக்கல. ஒரு பேங்க்ல மட்டும் ரூ.5 லட்சம் கடன் கொடுத்தாங்க. வீட்டை காப்பாத்திட்டு ராத்திரி பகல் பார்க்காம வியாபாரம் பார்த் தோம்” என்றவர், தலைகீழாக விழுந்து போன வாழ்க்கையை திருப்பிப் போடும் ஆக்ரோஷத்துடன் தொழி லில் அடுத்தடுத்து முன்னேறியிருக் கிறார்.

அன்று, கடனாளி; இன்று, கோடிகளின் முதலாளி! - ஸ்நாக்ஸ் பிசினஸில் ஜெயித்த இளவரசி
அன்று, கடனாளி; இன்று, கோடிகளின் முதலாளி! - ஸ்நாக்ஸ் பிசினஸில் ஜெயித்த இளவரசி

“2017-க்குள்ள நிறைய கடைய வாடகைக்கு எடுத்தோம். அக்ரி யுனிவர் சிட்டியில மதிப்புக்கூட்டல் கோர்ஸ்கள் படிச்ச நான், கேரளா வேளாண்துறை அமைச்சரை கூப் பிட்டு ஒரு கிளை தொடங்கினேன். அக்ரி யுனிவர்சிட்டில பலாப்பழம், தேங்காய், கருணை, சேனையில எல்லாம் எப்படி மதிப்பு கூட்டுதல் பண்ணலாம்னு படிச்சிருந்ததை எல்லாம் தொழில்ல கொண்டு வந்தேன். பலாப்பழம் சாம்பார், கறிக்கொழம்பு, பொறிச்ச மீன்னு 17 ஐட்டம் பண்ணி, 700 பேருக்கு சாப்பாடு போட்டோம். அப்ப எனக்கு `சமையல் ராணி’ அவார்டு கொடுத்தாங்க. இளவரசி இங்கதான் இருக்கேன்னு எல்லாருக்கும் சொன்னேன். 2019-க்குள்ள அஞ்சு கிளை திறந்தாச்சு.

இப்போ தொழிலை மீட்டுட்டேன், தொழில் என்னை மீட்டுடுச்சு. பனங்கற்கண்டு அல்வா, பலாப் பழம் அல்வானு, பலாக்கொட்டை கடலை மிட் டாய்னு, வேற எங்கயுமே கிடைக்காததா செய்றோம். 73 பேர் என்கிட்ட வேலை பார்க்கறாங்க; அதுல 63 பேர் பெண்கள். கேரளாவுல மட்டும் இல்ல, இந்திய அளவுல சிறந்த பெண் தொழிலதிபர் விருது வாங்கி யிருக்கேன். பிரிட்டன்ல டாக்டர் பட்டம் கொடுத் துருக்காங்க. மொத்தம் 136 அவார்டு வாங்கிட்டேன். எல்லாத்தையும் விட பெரிய சந்தோஷம், சொந்தக் காரங்க முன்னாடி மறுபடி தலைநிமிர்ந்திருக்கிறது தான். நான் நல்லாயிருந்தப்போ, எந்த உதவினாலும் இளவரசிகிட்ட கேக்கலாம்னு உரிமையா வந்தவங்க, நான் கடனாளி ஆனப்போ, ‘அவளால இனி தாக்குப் பிடிக்க முடியாது. தற்கொலை பண்ணிப்பா, இல்லைனா ஊரை விட்டுப் போய்டுவா’னு பேசினாங்க. கல்யாணம் காட்சிக்குக் கூட என்னை கூப்பிடல. இப்போ, ரெண்டு மடங்கா திரும்பி வந்துட்டேன். 24 வருஷங்களா பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். இத்தனை வருஷ கஸ்டமர்கள் மூலமா வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் இப்போ ஆர்டர் வந்துட்டு இருக்கு. வாழ்க்கையில எந்தளவுக்கு வலியை எதிர்த்துப் போராடுறமோ, அந்தளவுக்கு வெற்றிவசமாகும்”

- சரிவுகளைச் சந்திப்பவர்களுக்கு சிகரமாகும் நம்பிக்கை தருகிறார் இளவரசி.

****

ஜெயலலிதா முதல் ராகுல் காந்தி வரை!

“ஒரு நாள்ல லட்சக்கணக்குல பொருள் போடுறோம். சுவை, நிறத்துக்காக எதுவும் சேர்க்கிறதில்ல. அதனாலதான் தினமும் 1,500 கஸ்டமர்கள் வர்றாங்க. தமிழ்நாடு, கர்நாடகாவுல இருந்து வர மக்களும் வாங்கிட்டுப் போவாங்க. பெரிய ஆட்கள், இங்க எந்தக் கடை நல்லாருக்கும்னு ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்கும்போது, அவங்க எங்க கடையை சொல்ற அளவுக்கு பெயர் வாங்கியிருக்கோம். ஜெயலலிதாம்மா இங்க வந்தப்ப நம்ம கடை பொருள்களை வாங்கியிருக்காங்க. ராகுல் காந்தி, ஜெயபாரதினு முக்கிய பிரமுகர்கள் திருச்சூர் வந்தா, நம்ம பொருள்களைத்தான் வாங்குவாங்க. இந்திய அளவுல சிறந்த தொழிலதிபர் விருது வாங்கினப்ப ராகுல் காந்தி நேர்ல பாராட்டுனதை மறக்க முடியாது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism