Published:Updated:

``கடலை பறிச்சுக்கிட்டே குரூப் ஒன் தேர்வுக்குப் படிச்சேன்!”

பவானியா
பிரீமியம் ஸ்டோரி
பவானியா

- டீக்கடைக்காரர் மகள் பவானியா டி.எஸ்.பி ஆகியிருக்கும் சாதனைக் கதை

``கடலை பறிச்சுக்கிட்டே குரூப் ஒன் தேர்வுக்குப் படிச்சேன்!”

- டீக்கடைக்காரர் மகள் பவானியா டி.எஸ்.பி ஆகியிருக்கும் சாதனைக் கதை

Published:Updated:
பவானியா
பிரீமியம் ஸ்டோரி
பவானியா

`` `சமீபத்தில் வெளியான குரூப் ஒன் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, டி.எஸ்.பி பணிக்குத் தேர்வாகி யிருக்கிறார் டீக்கடைக்காரரின் மகளான பவானியா’னு என்னை பத்தி செய்திகள்ல எல்லாம் படிச்சப்போ, பார்த்தப்போ, நம்ம கடின உழைப்புக்கான பலன், நமக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரத்தைக் கொடுக்கும்னு புரிஞ்சது’’ - பவானியா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கிடக்கிறது ஒரு கிராமத்துப் பெண்ணின் தன்னம்பிக்கை கதை.

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சியில் இருக்கிறது கீழ செட்டியாப்பட்டி கிராமம். கிராமத்துக்கென்று பேருந்து வசதி இல்லை. பிரதான சாலையில் இருந்து கிராமத்துக்கு சுமார் 3 கி.மீ தூரம் டூவீலரிலோ, நடந்தோதான் செல்ல வேண்டும். இப்படி அடிப்படை வசதிகள் குறைவான குக் கிராமத்தில் பிறந்து, தமிழ் வழியில் படித்த கிராமத்துப் பெண் பவானியா, சமீபத்தில் முடிவுகள் வெளியான, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வில் தனது முதல் முயற்சியி லேயே வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராகத் தேர்வாகி இருக்கும் இளம் மின்னல். பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு என இரண்டையும் தமிழ் வழியில் படித்த பவானியா, பெரிதாகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்து விடாமுயற்சியுடன் படித்து இன்று இந்த வெற்றியை அடைந்திருக்கிறார்.

டீக்கடைக்காரரின் மகளான பவானியாவின் இந்த வெற்றியை, இன்று அந்தக் கிராமமே கொண்டாடி வருகிறது, மாநிலமே மெச்சுகிறது. இனி பவானியாவே பேசுகிறார், ஒரு எளிய குடும்பத்தின் பெண்பிள்ளை அரசு அதிகாரத்துக்கு வந்திருக்கும் சாதனைக் கதையை...

அம்மா அப்பாவுடன்
அம்மா அப்பாவுடன்

அரசுப் பள்ளிப் படிப்பு, டீக்கடையில் செய்தித் தாள்!

``வீட்டுல என்னோட சேர்த்து மொத்தம் நாலு பெண் பிள்ளைங்க. ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சி, நான் மூணாவது பொண்ணு. அக்காக்களுக்கு திருமணம் ஆகிடுச்சு. ஏ.மாத்தூர்ல இருக்குற அரசுப்பள்ளியில ப்ளஸ் டூ முடிச்சப்போ, ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஊரே பாராட்டுனாங்க. அடுத்து படிக்கிறதுக்கு புதுக்கோட்டைக்குத் தான் போகணும். ஊர்லயிருந்து 3 கி.மீ தூரம் இருக்க செட்டியாப்பட்டி விளக்கு பகுதி வரை சைக்கிள்ல போயி, அங்கயிருந்து பஸ்ல கல்லூரிக்குப் போயிட்டு வருவேன். புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில பி.எஸ்ஸி கணிதம் படிச்சேன்.

அப்பா டீக்கடை நடத்தி, ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் எங்களை எல்லாம் வளர்க்குறாரு. சின்ன வயசிலயிருந்தே அப்பாவோட டீக்கடைக்குப் போயி, தண்ணி தூக்கி ஊத்துகிறது, கிளாஸ் கழுவுறதுன்னு என்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சு கொடுப்பேன். அப்படி போகும்போதுதான், அப்போயிருந்தே டீக்கடையில இருக்குற நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பிச்சேன். அதுல, மாணவிகளோட சாதனை, ஐ.ஏ.எஸ் அதிகாரிங்க பேட்டி, தன்னம்பிக்கை கட்டுரைகள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அதையெல்லாம் படிச்சு எனக்கு ஐ.ஏ.எஸ் ஆசை வந்துச்சு.

அந்த இரண்டு பேர்!

கல்லூரியில படிச்சப்போ, ஒருமுறை ஐ.ஆர்.எஸ் அதிகாரி நந்தகுமார் சாரோட உரையைக் கேட்டேன். அதேபோல மற்றொரு முறை, அப்போ சார் ஆட்சியராக இருந்த சரயுவோட தன்னம்பிக்கை பேச்சை கேட்டேன். என்னாலயும் போட்டித் தேர்வு எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையும், ஊக்கமும் கிடைச்சது. ஆனா, அதுக்கான வழிமுறைகள் எதுவும் தெரியாது, புத்தகங்கள் எங்க கிடைக்கும் தெரியாது. அப்போதான் பேப்பர்ல, குரூப் ஒன் எக்ஸாம் அறிவிப்பு வந்திருந்துச்சு. விண்ணப்பிச்சிட்டுத்தான், `இதை எப்படி எழுதுறது’னு சிலர்கிட்ட வழிகாட்டல் கேட்டேன். `தமிழ் மீடியத்துல படிச்சிட்டு, இதெல்லாம் ரொம்பக் கஷ்டம்’னு பயமுறுத்திவிட்டுட்டாங்க. ஆனாலும், என் மேல நான் நம்பிக்கை வெச்சு படிச்சு, முதல் நிலைத் தேர்வு எழுதி, மெயின் தேர்வுக்குத் தகுதி ஆகிட்டேன்.

கிடைத்த வழிகாட்டி, பயிற்சி!

சரளமா படிப்பேன், எழுதுவேன் ஆனா, பிரசன்டேஷன் பண்ணத் தெரியலை. ஸ்கூல் புத்தகங்கள் எல்லாம் படிச்சிட்டேன். கரன்ட் அப்டேட்ஸ் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் உள்ளிட்ட சில புத்தகங்கள் தேவைப்பட்டுச்சு. அந்த நேரத்துலதான், சாலைப் பணியாளராக வேலை செய்யுற எங்க மாமா சோலை, புதுக்கோட்டை கோட்டப் பொறியாளர் சுந்தர்ராஜன் சார்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போய், என் நிலைமையைச் சொன்னார். ஒரு கிராமத்துப் பெண்ணான என்னோட ஆர்வத்தைப் பாராட்டின அவர், மெயின் எக்ஸாம் எழுதுறதுக்கு, நேர்காணலுக்கான புத்தகங்கள் மற்றும் பயிற்சி உதவி கிடைக்கச் செய்தார். சென்னை, மனித நேய ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். எழுத்துத் தேர்வு, நேர் காணலை கையாள்வதற்கான அடிப்படை விஷயங்களை அங்கதான் கத்துக்கிட்டேன். பிரசன்டேஷன் பத்தி முழுமையா தெரிஞ்சுக் கிட்டேன். கூடுதலா, யு.பி.எஸ்.சி தேர்வு ஆலோசனைகளும் அங்க கிடைச்சது. ரொம்ப நல்லா தயார்படுத்துனாங்க.

ஆனா, கொரோனா தொற்றுப் பரவலால, ரெண்டு மாசம்தான் அந்த வாய்ப்பும் கிடைச்சது. அதுக்கு மேல அங்க இருக்க முடியலை. கொரோனாவால மெயின் எக்ஸாமும் தள்ளிப் போச்சு. எங்கக் கிராமத்துக்கே திரும்பிட்டேன்.

``கடலை பறிச்சுக்கிட்டே குரூப் ஒன் தேர்வுக்குப் படிச்சேன்!”

விவசாய வேலைகள், எட்டு மணி நேரம் படிப்பு!

குடும்ப வறுமை ஒரு பக்கம். அதனால படிச்சிக்கிட்டே முந்திரி உடைக்கிறது, கடலை பறிக்கிறதுன்னு சின்னச் சின்ன விவசாய வேலைகளையும் பார்ப்பேன். வேலைக்குப் போனாலும் பகல், இரவுன்னு தினமும் எட்டு மணி நேரம் வரைக்கும் படிச்சிருவேன். எக்ஸாமுக்கு முன்னாடி, ஒரு மாசம் மட்டும் கடின உழைப்பைக் கொடுத்தேன். தினசரி அட்டவணை போட்டு படிக்க ஆரம்பிச்சேன். அது ரொம்பவே கைகொடுத்துச்சு. டெபுடி கலெக்டர் ஆகணும்னுதான் இலக்கு. கொஞ்சம் மார்க் வித்தியாசத்துல இப்போ டி.எஸ்.பி போஸ்ட்டிங் கிடைச்சிருக்கு. பதவியேற்றவுடன், குற்றங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகமாக முன்னெடுப்பது, பேருந்துகள்ல தினசரி வேலைக்குப் போகும் பெண்களோட பாதுகாப்பை உறுதிசெய்வது, கிராம மக்கள் போலீஸாரை எளிதில் அணுகும் வகையில் தொடர்புகளை ஏற்படுத்துறதுனு இப்போவே பல செயல்பாடுகள் மனசுல தயாராகிட்டு இருக்கு. மேலும், அரசுப் பணி தேர்வு எழுதும் முயற்சியில இருக்குற பெண்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டணும். இப்போ டி.எஸ்.பி ஆனாலும், மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வையும் எழுதிப்பார்க்கணும் என்ற ஆசையும் இருக்கு. நிச்சயமா முயற்சி செய்வேன்.

தமிழ்வழி... தமிழ்தான் வழி!

தமிழ்வழியில படிச்ச நான், தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான சிறப்புப் பிரிவில்தான் இந்தப் பணிக்குத் தகுதி பெற்றிருக்கேன். தமிழ் மீடியத்துல படிக்கிறங்களும் குரூப் ஒன் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகள்ல நிச்சயமா வெற்றி பெற முடியும். ஆனா, எதுவும் சிரமப் படாம கிடைக்காது. கடின உழைப்பு போடணும். எந்த மொழியில எழுதுறோம்ங்கிறது முக்கியமில்லை. தெளிவா பிரசன்டேஷன் கொடுக்கிறதுதான் முக்கியம். வெற்றி கிடைக்கும்னு நம்பிக்கை வெச்சு, அந்த நம்பிக்கைக்குத் தேவைப்படுற உழைப்பைக் கொடுத்தா, முதல் முயற்சியிலேயே இலக்கை அடையலாம்!’’ - நம்மில் ஒருத்தியாக இருந்து பவானியா சொல்லும்போது, நம்பிக்கை இன்னும் கூடுகிறது!