Published:Updated:

“இங்கிலீஷ்ல பேசச் சொன்னாங்க... தாகூர் கவிதையை ஒப்பிச்சு, தப்பிச்சேன்!”

டாக்டர் ராஜம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் ராஜம்மாள்

- மலைக்கிராமத்து ஆசிரியரின் வெற்றிக் கதை

“இங்கிலீஷ்ல பேசச் சொன்னாங்க... தாகூர் கவிதையை ஒப்பிச்சு, தப்பிச்சேன்!”

- மலைக்கிராமத்து ஆசிரியரின் வெற்றிக் கதை

Published:Updated:
டாக்டர் ராஜம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் ராஜம்மாள்

கல்விச்செல்வம் ‘எல்லாம் தரும்’ என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் கல்வியாளருமான டாக்டர் ராஜம்மாள்.

‘`நீலகிரி மாவட்டத்துல கேத்தொரைங்கிற மலைக்கிராமத்துல பிறந்து வளர்ந்தவ நான். படிப்பறிவில்லாத விவசாயக் குடும்பம். என்னோட சேர்த்து எங்க வீட்ல அஞ்சு குழந்தைங்க. ஒருதடவை எங்க ஊருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த இந்திரா காந்தி யோட இங்கிலீஷை கேட்டுட்டு வந்த எங்கப்பா, ‘என் பொண்ணு ராஜமும் ஒருநாள் இவங்களை மாதிரியே மைக் முன்னாடி நின்னு இங்கிலீஷ் பேசணும்’னு அடிக்கடி சொல்வார். எங்க படுகா இனத்துல பொண்ணுங்களுக்கு பதினாலு வயசுலேயே கல்யாணம் செஞ்சு வெச்சிடுவாங்க. எனக்கும் கல்யாண ஏற்பாடு நடந்துச்சு. அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உண்ணாவிரதம் இருந்து கல்யாணத்தை நிறுத்தினேன். பி.யு.சில தேர்வாகி பிராவி டென்ஸ் மகளிர் கல்லூரியில சேர்ந்தேன். மாசம் 600 ரூபாய் கட்டணம்கிறது என் குடும் பத்துக்கு பெரிய தொகை. ஆனா, விவசாய வேலை பார்த்த எங்கம்மாவோட அசுர உழைப்புதான் கைகொடுத்துச்சு'' என்று கலங்கியபடி, பேச்சை தொடர்ந்தார்.

‘`பள்ளிக்கூடம் வரை தமிழ் மீடியத்துல படிச்சதால இங்கிலீஷ்ல ‘வாட் இஸ் யுவர் நேம்’ அப்படிங்கிறதைதாண்டி வேற எதுவும் தெரியாது. முதல் டேர்ம்ல தமிழைத் தவிர்த்து அத்தனை பாடங்கள்லேயும் ஃபெயில். காலேஜ் லீவுல ஊருக்கு வந்து பஸ் ஸ்டாப்புல இறங்கினேன். அங்க என் அப்பா அவரோட நண்பர்களோட நின்னுகிட்டிருந்தார். என்னைப் பார்த்ததும், ‘ராஜம் கொஞ்சம் இங்கிலீஷ்ல பேசிட்டு போம்மா’ன்னு சொல் லிட்டார். என்ன பண்றதுன்னு தெரியாம, ரெண்டு நாளைக்கு முன்னால மனப்பாடம் செஞ்ச ரவீந்திரநாத் தாகூர் கவிதையை சொல்லிட்டு, கடைசியில என் டீச்சர்ஸ் மாதிரியே ‘ஐ ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட்’னு முடிச்சேன். அப்பாவோட நண்பர்கள், ‘ராமச் சந்திரா உன் பொண்ணு பிரமாதமா இங்கிலீஷ் பேசுறாடா’ன்னு பாராட்ட, அப்பாவுக்கு பெருமை தாங்கலை.

 “இங்கிலீஷ்ல பேசச் சொன்னாங்க... தாகூர் கவிதையை ஒப்பிச்சு, தப்பிச்சேன்!”

ரொம்ப சிரமப்பட்டுதான் இங்கிலீஷ் கத்துக்கிட்டேன். கொஞ்சம் சரளமா பேச வந்ததும் பேச்சுப்போட்டிக்குப் போக ஆரம்பிச்சேன். டிகிரி முடிச்சேன். டீச்சர்ஸ் டிரெயினிங் முடிச்சேன். கேந்திர வித்யா லயாவுல ஆசிரியரானேன். கடைசி பெஞ்ச் குழந்தைக்கும் நான் சொல்லித்தர்றது புரியணும்கிற தீர்மானத்தோட பாடம் நடத்தி னேன். தனக்குப் புரியும்படி சொல்லித்தர்ற ஆசிரியரை மாணவர்கள் நேசிக்க ஆரம்பிச் சிடுவாங்க. ஒரு குஜராத்தி ஸ்டூடன்ட், என்னை ரொம்ப நேசிச்சா. அவங்கப்பாவுக்கு டிரான்ஸ்ஃபராக, வேற ஊருக்குப் போயிட்டா. திடீர்னு அந்தக் குழந்தைக்கு ரொம்ப உடம்பு முடியாம போயிடுச்சு. என்னைப் பார்க்க ணும்னு என் வீட்டுக்கு குடும்பத்தோட வந் துட்டா. என்கூட பேசிக்கிட்டே இருந்த குழந்தை, அப்படியே என் தோள் மேல சாய்ஞ்சுகிட்டு ‘லவ் யூ மேம்’னு சொன்னா. நானும் ‘லவ் யூ டூ பேட்டி’ன்னு சொல்லி முடிக்கும்போதே அவளோட உயிர் போயிடுச்சு. நல்ல ஆசிரியர்களை மாணவர்கள் எந்தளவுக்கு நேசிப்பாங்கன்றதுக்கு இந்தச் சம்பவம் உதாரணம்’’ என்றவர் தன் வாழ்க்கையைப் புரட்டிபோட முயன்ற தன் திருமண வாழ்க்கை பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

‘`பெற்றோர்களை எதிர்த்து, என் கிராமத்தை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்தக் கல்யாண வாழ்க்கை ஒரு வருடம்கூட நீடிக்கலை. வயித்துல பிள்ளையோட தனியா நின்னேன். மறுபடியும் போராட்டம். ஒருகட்டத்துல கைக் குழந்தையோட ஊருக்குப் போனேன். ஊர்ப் பெரியவங்க எல்லாரும் என்னைத் தேடி வந் தாங்க. எங்க ஊர் கவுடா (ஊர்த்தலைவர்), ‘நம்ம ஊர்ல இருக்கிற போஸ்ட் ஆபீஸை பக்கத்துக்கு ஊருக்கு மாத்தணும்னு கேட்குறாங்க. அது நடக் காம இருக்கணும்னா என்ன செய்யணும்’னு கேட்டாரு. ‘ராஜம்மா, உன் கல்வி உன்னைக் காப் பாத்திடுச்சு’ன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு அவங்க பிரச்னையை சரி செஞ்சு கொடுத்தேன்.

அப்புறம் ரஷ்யாவுல இருந்த கே.வி. ஸ்கூல்ல மூணு வருஷம் வேலைபார்த்தேன். ஊரைத்தவிர வேற எதுவுமே தெரியாத என் அம்மாவை ரஷ்யா வுக்குக் கூட்டிட்டுப் போனேன். சிங்கிள் பேரன்ட் டுங்கிற குறை தெரியாம என் மகனை நல்லா படிக்க வெச்சேன். இப்போ அவன், பிரிட்டிஷ் கவுன்சில்ல லெக்சரரா இருக்கான். 2009-ல தேசிய நல்லாசிரியர் விருது கிடைச்சுது. படுகா இனத்துல தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற முதல் பெண் நான்தான். கல்வி சேவைக்காக தேசிய அளவில் நான்கு விருதுகள், மாநில அளவில் மூன்று விருதுகள் வாங்கியிருக்கேன். கல்வியும் லட்சியமும் ஒண்ணு சேர்ந்தா எதையும் சாதிக்கலாம்கிறதுக்கு நானே உதாரணம். என் கதையைக் கேட்டு பத்து பெண்கள் வாழ்க்கையில சாதிச்சாங்கன்னா அதுதான் என் வெற்றி’’ - கம்பீரமாய் பேசி முடித்தார் கல்வி தேவதை!