Published:Updated:

மிளிரும் வைரங்கள்!

ஆலிஸன் ஃபெலிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலிஸன் ஃபெலிக்ஸ்

ஜூ.வி 2020

மகாலத்தில் வெல்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்; அதிலும், ஆண்டாண்டுக் காலமாகத் தங்களைப் பிணைத்திருக்கும் அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிந்து சமகாலத்தில் வெல்பவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்! ஆம், ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றி அதிக மதிப்புகொண்டது. அப்படி, 2019-ம் ஆண்டின் பக்கங்களில், கறுப்பினப் பெண்களின் கொண்டாடப்பட வேண்டிய வெற்றிகள் பல நிரம்பியிருக்கின்றன. விளையாட்டுப் போட்டிகள் முதல் அழகிப் போட்டிகள் வரை வைரங்களாக மிளிர்கின்றன கறுப்பினப் பெண்களின் வெற்றிப் புன்னகைகள். ‘ஆப்பிரிக்க நாடுகள் சாக்கடைக் குழி’ என்று வெளிப்படை யாகவே தனது நிறவெறியை வெளிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு, இந்த வெற்றிகளைவிடச் சிறந்த பதில்கள் வேறு எதுவும் இல்லை!

இந்த ஆண்டு, சிறந்த இலக்கியத்துக் கான புக்கர் விருதை தனது ‘கேர்ள், உமன், அதர்’ (Girl, Woman, Other) புத்தகத்துக்காக பெர்னடைன் எவரிஸ்டோ பெற்றிருக்கிறார். ஐம்பது ஆண்டுக்கால புக்கர் விருது வரலாற்றில், இலக்கியத்துக்கான புக்கர் விருது பெறும் முதல் கறுப்பினப் பெண் இவர்தான். ‘தி டெஸ்டமென்ட்ஸ்’ புத்தகம் எழுதிய மார்கரெட் அட்வுட் என்பவருடன் இணைந்து, 2019-ம் ஆண்டுக்கான இந்தப் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக் கிறார் பெர்னடைன். இவர் எழுதிய பன்னிரண்டு கதைகள் அடங்கிய இந்தப் புத்தகம், கறுப்பினப் பெண்களின் கதைகளால் நிரம்பியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போல்ட்டின் சாதனையை முறியடித்த அம்மா!

2019 ஜூலை, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான அமெரிக்க அவுட்டோர் சாம்பியன்ஷிப் போட்டி யில் கலந்துகொண்டார் ஆலிஸன் ஃபெலிக்ஸ். இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். ஆறு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். புகழின் உச்சத்தில் இருந்த ஆலிஸன், 2018-ல் குழந்தை பெற்றெடுத்தார். குறை மாதத்தில் பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளக் காலம் எடுத்துக் கொண்டவர், மீண்டும் ஓட்டப் பந்தயக் களத்துக்கு வரலாம் என முடிவெடுத்தார்.

ஷெல்லி ஆன் பிரேசர் - ஆலிஸன் ஃபெலிக்ஸ்
ஷெல்லி ஆன் பிரேசர் - ஆலிஸன் ஃபெலிக்ஸ்
கறுப்பு நிறமுடைய, சுருள் சுருளாகக் கேசம் உடைய பெண்கள் அழகு அற்றவர்களாகக் கருதப்படும் எண்ணங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

கர்ப்பமாவதற்கு முன்வரை ஆலிஸனுக்குக் கோடிகளைக் கொட்டிக்குவித்த ஸ்பான்ஸர்கள், அவர் அம்மாவாகி வந்தபோது பின்வாங்கினார்கள். பிரசவத்துக்குப் பின்னான பெண்ணுடல்மீதும் அவள் பலம்மீதும் இந்த உலகம் கொண்டிருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடு அது. சம்பளத்தில் 70 சதவிகிதம் குறைத்துத் தருவதாகச் சொன்ன தன் ஸ்பான்ஸர்களிடம், சுயமரியாதையே முக்கியம் எனச் சொல்லி ஸ்பான்ஸர்களை மறுத்து, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார் ஆலிஸன். பந்தய வர்ணனையாளர் அவரை, ‘குழந்தை கேமரினின் தாய்’ என்று அறிமுகப் படுத்தி கௌரவித்தார். அமெரிக்க மண்ணில் நடைபெற்ற அந்த ஓட்டப் பந்தயத்தில், தனது 12-வது தங்கப் பதக்கத்தை வென்று, ‘அதிக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கம் பெற்ற ஓட்டப் பந்தய வீரர்’ என்கிற உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித் தார் ஆலிஸன். இவரைப் போலவே ஜமைக்காவின் ஷெல்லி ஆன் பிரேசரும் 100 மீட்டர் தடகள ஓட்டத் தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கறுப்புக்குக் கிரீடம்!

கறுப்புக்கும் அழகுக்கும் இடையே இந்த உலகம் வைத்திருக்கும் இடைவெளியை இன்னொரு முறை இல்லாமல் ஆக்கினார், ஸோஸிபினி துன்ஸி. 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில், ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக மகுடம் சூடினார், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த துன்ஸி. உலக வரலாற்றில், கறுப்பினப் பெண் ஒருவர் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. சுமார் 1,770 வைரக்கற்கள் மற்றும் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட பிரபஞ்ச அழகிக்கான கிரீடத்தைச் சூடிக்கொண்ட பிறகு பேசிய துன்ஸி, ‘என்னைப் போன்ற கறுப்பு நிறமுடைய, சுருள் சுருளாகக் கேசம் உடைய பெண்கள் அழகற்றவர்களாகக் கருதப்படும் உலகத்தில்தான் நான் வளர்ந்தேன்.

டோனி - துன்ஸி
டோனி - துன்ஸி

ஆனால், அப்படியான எண்ணங்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இனி என்னைப் பார்க்கும் எம் இனத்தின் பெண் பிள்ளைகள் என்னில் அவர்களுடைய பிரதிபலிப்பைக் காண்பார்கள்’ என்றார். அட்லாண்டாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் அவருக்குக் கிடைத்த இந்த வெற்றி, அதே மண்ணில் 400 ஆண்டுகளுக்கு முன்பாக அடிமைப்பட்டுக்கிடந்த கறுப்பினப் பெண்களுக்குச் சமர்ப்பணம். ஆனாலும், இது அவர்களுக்கான காலம் கடந்த அங்கீகாரமே!

இரண்டு பெண்களால் அழகான மேடை!

பிரபஞ்ச அழகியாக துன்ஸி மகுடம் சூட்டிய சில தினங்களிலேயே, உலக அழகிப் போட்டி முடிவுகளும் வந்தன. 2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-க்குப் பிறகு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது கறுப்பினப் பெண் டோனி. அவர் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு அறிவிக்கப்பட்ட மேடை, இன்னொரு பெண்ணால் இன்னும் அழகானது. அவர், டோனியின் சக போட்டியாளரான நைகச்சி டக்ளஸ்.

நைஜீரியப் போட்டியாளரான டக்ளஸ், முடிவு அறிவிக்கப்பட்டதும் துள்ளிக் குதித்துச் சென்று டோனியை அணைத்துக்கொண்டார். சர்வதேச மேடையொன்றில் தனது சக போட்டியாளரிடம் தோற்றதற்கான எந்தச் சுவடையும் வெளிப்படுத்தாமல், டோனியின் வெற்றியை அவர் கொண்டாடியது பார்வையாளர் களைச் சிலிர்க்கச் செய்தது. ‘ஒரு பெண் தனது தோல்வியையும் பொருட்படுத்தாமல், மற்றொரு பெண்ணுக்காக உடன் நிற்பதில்தான் ஒட்டுமொத்தப் பெண்ணினத்தின் வெற்றியும் இருக்கிறது. அதைத்தான் அன்றைய மேடையில் நாங்கள் கண்டோம்’ என்று பரவசத்துடன் பகிர்ந்துகொண்டார் அந்த நிகழ்ச்சி யின் பார்வையாளர்களில் ஒருவர்.

பெர்னடைன் எழுதிய ‘கேர்ள், வுமன், அதர்’ புத்தகத்தின் இறுதி வாக்கியமும் அப்படித்தான் முடிகிறது. ‘This is about being

together!’