Published:Updated:

‘சூப்பர் மாம்’ பட்டம்... ஒரு சுயபரிசீலனை!

சூப்பர் மாம்
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் மாம்

#Lifestyle

‘சூப்பர் மாம்’ பட்டம்... ஒரு சுயபரிசீலனை!

#Lifestyle

Published:Updated:
சூப்பர் மாம்
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் மாம்

சில மாதங்களுக்கு முன், ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சமையலறையில் நின்றபடியே ஒரு பெண் சமைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ‘அம்மான்னா அப்படித்தான்...’ என்று அதைப் பார்த்துப் புல்லரித்த பல பின்னூட்டங்களையும் ஸ்டேட்டஸ்களையும் பார்க்க முடிந்தது. ‘அம்மா மேல பாசம் இருந்தா ஷேர் செய்யவும்’ வகையறாவில் அது சேர, பலரும் அதைக் கடமையென ஷேர் செய்தனர். குறிப்பாகப் பெண்கள், ‘நாங்கள் எல்லாம் இப்படித்தான்... குடும்பத்துக்காக உருகும் மெழுகுவத்திகள்’ என்பதில் தொடங்கி, ‘உயிர் போகும் வரை உனக்காக சமைப்பேன்’ என்பதுவரை எழுதி யிருந்தவை எல்லாம் அதிரச் செய்யும் ரகம்.

குடும்பத்தைப் பேணுவதில் ஒரு பெண்ணின் பங்கு, தாய்மை, பெண்மை என இவை யெல்லாம் எப்போதுமே இங்கே புனிதப் படுத்தப்படுகின்றன அல்லது ‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை’ என்று வகுப் பெடுக்கப்படுகின்றன. ஆனால், நேசமணியின் பாஷையில் சொல்வதென்றால், இவை யெல்லாம் ‘தேவையில்லாத ஆணி’. ஏனெனில் புனிதப்படுத்தப்படும் எதுவுமே ஒரு சமுதாயத்தில் தோற்றுவிக்கும் உளவியல் சிக்கல்கள் மற்றும் அழுத்தங்கள் அதிகம். தங்கள் கால்களைப் பின்னிய கட்டுகளில் இருந்து விடுபடும் பெண்களையும் இவை ஒரு கட்டத்தில், ‘இதையெல்லாம் செய்யாத நான் நல்ல அம்மா / மகள் / மருமகள் / மனைவியா?’ என்று சந்தேகப்பட வைக்கும் வல்லமை, புனிதப்படுத்தப்படும் அனைத்துக்கும் உண்டு.

கொரோனா பரவலுக்கு முந்தைய காலம். இரண்டாவது படித்துக்கொண்டிருந்த என் மகள் சொன்ன ஒரு விஷயம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவள் வகுப்பில் படிக்கும் இரட்டையர்கள் ஹர்ஷா, வர்ஷா. இருவரும் ஒரே வகுப்பில் இரு வேறு பிரிவுகளிலும், அவர் களின் அண்ணன் வருண் அதே பள்ளியில் மற்றொரு வகுப்பிலும் படிக்கிறான். மதிய உணவு வேளையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டபோது, ஒரே வீட்டில் இருந்து வந்த மூன்று குழந்தைகளின் லன்ச் பாக்ஸில் இருந்தவை, மூன்று வெவ்வேறு வகையான உணவுகள். நாங்கள் எதைக் கொடுக்கிறோமோ அதை மாத்திரமே உண்ண ஓரளவுக்குப் பழகிவிட்ட என் மகள், அதைப் பற்றி ஆச்சர் யத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டாள். ‘யாருக்கு என்ன பிடிக்குமோ, என்ன கேட்கு றாங்களோ அதை அவங்க அம்மா டெய்லி செஞ்சு பாக்ஸில் வச்சு கொடுப்பாங்களாம். பாவம் அந்த ஆன்ட்டி...’ என்றாள் என் மகள்.

டப்பாவில் அம்மா கட்டிக்கொடுத்த ரவை உப்புமாவை எலுமிச்சை ஊறுகாயுடன் ஒன்றுமே சொல்லாமல் சாப்பிட்ட தலைமுறை இங்கு உண்டு. ஆனால், ‘குழந்தை என்ன கேட்டாலும் செய்து கொடுப்பேன், அதுவே என் கடமை’ என்று நினைக்கும், வருணின் அம்மா போன்ற பெண்கள் இந்தத் தலைமுறையில் அதிகம் இருக்கிறார்கள்.

என் சிறு வயதில், ‘பக்கத்து வீட்டு பிரகதீஷ்ஷின் அம்மா என்னென்னவோ செய்து கொடுக்குறாங்க...’ என்று அம்மாவிடம் சொன்னபோது, ‘கொடுத்ததை சாப்பிட்டுப் பழகு’ என்று என்னை என் அம்மா அடக்கியது போல், நம்மில் பலரின் அம்மாக்களும் நம்மை அடக்கி இருக்கத்தான் செய்வார்கள்.

ஆனால், நம்மில் பெரும்பாலானோர் நம் குழந்தைகளிடம் வருணின் அம்மா போல, ‘குழந்தை கேட்டுடுச்சு, நான் செய்து கொடுக் கிறேன், அது என் கடமை, குழந்தைக்காக எதையும் செய்யும் சூப்பர் மாம் நான்’ என நம்மை நிறுவுவதில் முனைப்பாக இருக்கிறோம். அந்த சூப்பர் மாம்கள் தங்களை தேவைக்கும் அதிகமாக வருத்திக் கொள்வதைவிட, ‘உனக்கு எது நல்லதோ அதைத்தான் நான் கொடுப்பேன்... சாப்பிடு’ என்று குழந்தைகளைப் பழக்குவது அவசியம்.

‘சூப்பர் மாம்’ பட்டம்... ஒரு சுயபரிசீலனை!

ஏனெனில், சமூக அழுத்தங்களுக்காக தங்களின் இயல்பையும் மீறி, தங்களை பல வகைகளிலும் வருத்திக்கொண்டு, ‘எதுவா னாலும் என் குழந்தைக்காக’ என வாழ்ந்த பல அம்மாக்கள்தான், பிள்ளைகள் வளர்ந்து அவரவர் வாழ்க்கையின் திசையில் வேகமாக ஓடத் தொடங்கிய பிறகு, தாங்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டது போல் அப்பிள்ளைகள் தங்களைப் பார்த்துக் கொள்வதில்லை என்ற வருத்தத்துக்கு அதிகமாக உள்ளாகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

பிரதிபலனை எதிர்பார்க்காமல், ‘என் மனத் திருப்திக்காக மாத்திரமே இதை நான் செய்தேன்’ என்ற பக்குவம் உள்ள மனிதர்கள், குறிப்பாக அம்மாக்கள் நம் சமூகத்தில் குறைவே. மாறாக, ‘எதையும்’ செய்த அம்மாக்கள்தாம், ‘நான் என்னவெல்லாம் செய்தேன், நீ என்னை அதுக்கேத்த மாதிரி பார்த்துக்கிறியா?’ என வயோதிகத்தில் தன் குழந்தைகளைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.

இக்கட்டுரையை எழுதியபோது, என் ஒன்பது வயது மகளிடம் சமூக வலைதளங்களில் வைரலான போட்டோவைக் காட்டினேன். சில நொடிகள் அதை உற்றுப் பார்த்தவள், ‘இந்த போட்டோவை எடுத்த அந்த ஆன்ட்டி யோட பையன், இதை எடுத்ததுக்குப் பதிலா, அந்த ஆன்டியை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு அவங்களுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணி யிருக்கலாமில்ல? திஸ் இஸ் பேட்...’ என்றாள்.

ஆம்... நாம் புனிதப்படுத்திய, ‘அம்மான்னா...’, ‘குடும்பத்தலைவின்னா...’, ‘பொண்ணுனா...’ பிம்பங்களை எல்லாம் அபத்தம் என உணர்ந்து கொள்ளும் அடுத்த தலைமுறை இங்கு உருவாகிவிட்டது லேடீஸ்.

ஆக… மாற வேண்டியது நாம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism