Published:Updated:

எந்தச் சூழலிலும் பெண்களால் வெற்றிபெற முடியும்! - கிருஷ்ணா ராதாகிருஷ்ணா

 சிங்கப்பெண்கள் குழுவினர்
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கப்பெண்கள் குழுவினர்

சிங்கப்பெண்ணே

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம், விமன் சேவா டிரஸ்ட் உடன் அவள் விகடன் இணைந்து `சிங்கப்பெண்ணே' விழாக்கள் நடத்தப்பட்டன.

இவற்றில் சென்னை, மதுரையை மையமாகக்கொண்டு ஒன்பது மாவட்டங்களைச் சார்ந்த பெண்களுக்குத் தொழிற்பயிற்சி, மத்திய மாநில அரசு திட்டங்கள், வங்கிக் கடனுதவி வழி காட்டுதல்கள் மற்றும் தொழில்முனைவோர், சமூக சேவை புரிவோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

இப்போது ஊரடங்கு காரணமாக தொழில் முனைவோருக்கான பிரச்னைகள், பொருளாதாரச் சிக்கல்கள், மன அழுத்தம், உடல்நலக் கோளாறுகள் உட்பட மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் `சிங்கப்பெண்ணே' நிகழ்ச்சிகள் ஆன்லைன் சேவையாக முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி ஆலோசகர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு நாள்களில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஆலோசனைகள் மற்றும் விளக்கங்களை வழங்கிவருகிறார்கள். கையில் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தாலே போதும்... நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வெபினார்களில் இணைந்து பயன்பெறலாம்.

சிங்கப்பெண்கள் குழுவினர்
சிங்கப்பெண்கள் குழுவினர்

இந்தியன் வங்கி சேர்மன் பத்மஜா சந்துரு பரிந்துரையின்பேரில் எந்தவித பிணையமும் இன்றி பெண் தொழில்முனைவோருக்குத் தேவைப்படும் கடனுதவி மூன்று வருடங்களுக்கு இந்தியன் வங்கி மூலம் தரப்படும் என்பதற்கான வீவா - இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகி உள்ளது.

இப்போது ஆன்லைன் சேவைகள் மூலம் திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் பதிவு (உத்யோக் ஆதார் வழிமுறைகள்), விற்பனை வரி, மத்திய மாநில அரசு திட்டங்கள், மானியங்கள், வங்கிக் கடனுதவி, தொழிற்கூடங்களுக்குக் கிடைக்கப்பெறும் வசதிகள், பனைத் தொழில், கயிறு வாரியத்துறை, ஏற்றுமதி இறக்குமதி, முத்து, மீன், இறால் பண்ணைகள் ஏற்படுத்தும் முறை, அரசின் இ-மார்க்கெட், மாடித் தோட்டம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்ற விளக்கங்கள், சட்ட ஆலோசனை, இந்தியப் பொருளாதாரம், கல்வி, மத்திய மாநிலப் போட்டித் தேர்வுகள், அழகுக்கலை, உடல்நல மனநல ஆலோசனைகள், மகப்பேறு, கருப்பை சார்ந்த தீர்வுகள், யோகா, சித்த மருத்துவம், கொரோனா பாதுகாப்பு போன்றவற்றுக்கான நிபுணர் சந்திப்புகள் நடத்தப்படுகின்றன. ஆலோசனைகளைத் தொடர்ந்து நடைபெறும் பயனாளிகளின் கேள்வி-பதில் அமர்வு மிகவும் பயனுள்ளது. இதன் பதிவுகளை யூடியூப் சேனலில் (bit.ly/singapennae) பார்த்து பலன் பெறலாம்.

இவற்றோடு, மத்திய அரசின் இ-மார்க்கெட்டிங் (GeM) மூலமாக முதன்முதலாக தமிழகத்தில் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு அறிவிப்பின்படி பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களை அரசின் இ-மார்க்கெட்டிங் மூலமாகவே வாங்க வேண்டும். குறிப்பாக 3.5 சதவிகிதம் வரை மகளிர் பதிவு செய்து விற்கும் தயாரிப்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியும் திட்டமும் பெண் தொழில்முனைவோருக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக உள்ளன. லாக் டெளன் சூழலில் தொழில்முனைவோருக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து வீவா அமைப்பின் நிறுவனர் - தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணாவோடு பேசினோம்.

``இனி இந்த ஆலோசனை நிகழ்ச்சிகள் பயிற்சி வகுப்புகளாக மாற்றம் பெறுகின்றன. ஞாயிறுதோறும் 3 மணிக்கு இந்த வகுப்புகள் நடைபெறும். உங்கள் பெயர், ஊர் ஆகிய தகவல்களை 73582 44511 அல்லது 78717 02700 என்கிற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பயிற்சிகளில் பங்குபெறலாம்.

சாக்லேட், பேக்கரி, மசாலா, பாக்குமட்டைத் தட்டு, காளான் வளர்ப்பு, ஹெர்பல் நாப்கின், மெழுகுவத்தி, சணல் பைகள், அலங்காரப் பொம்மைகள், பூங்கொத்து, பினாயில், சோப், கம்ப்யூட்டர் சாம்பிராணி, அலங்காரப் பொருட்கள், மணப்பெண் நகைகள், ஆரத்தி தட்டுகள், இயற்கை உரம், ஜூஸ், வடாம், ஆரி வொர்க், கல் ஒட்டுதல், புடவை பிரின்ட்கள் மற்றும் பல தொழிற்பயிற்சிகள் வல்லுநர்கள் மூலம் தரப்பட உள்ளன.

தயாரிப்பு, நேரடியாகவும் ஆன்லைனிலும் மூலப்பொருள்கள் வாங்குமிடங்கள், கொள்முதல் செலவுகள், லாபக் கணக்கீடுகள், மார்க்கெட்டிங் உத்திகள், கடனுதவி அனைத்தும் அதே பயிற்சி வகுப்பிலேயே கற்றுத் தரப்படும். மாவட்டத் தொழில் மையம் மூலமாக தொழில் பதிவு மற்றும் மானியம் பெறுதலுக்கும், MSME-DI மூலம் திட்ட அறிக்கை தயாரிக்க உதவுவதற்கும், இந்தியன் வங்கி (பிணைபொருள் ஏதுமின்றி ரூபாய் ஒரு கோடி வரை) கடனுதவி பெறவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

`பெண் தொழில்முனைவோரின் தரமான பொருள்கள் அந்தந்த மாவட்டத்திலேயே வணிகர் பேரமைப்பு மூலமாக மொத்தமாக வாங்கிக் கொள்ளப்படும்' என்று பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா உறுதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எந்தச் சூழலிலும் உழைக்கும் பெண் களால் வெற்றி பெற முடியும். பெண் தொழில் முனைவோர் அனைவரும் இக்கட்டுகளைக் கடந்து வெற்றிபெற வாழ்த்துகள்'' என்று நம்பிக்கை அளிக்கிறார் கிருஷ்ணா ராதாகிருஷ்ணா.