Published:Updated:

“அப்பாவின் பாசத்தையும் அம்மாவிடமிருந்துதான் பெற்றேன்!”

அம்மாவுடன்...
பிரீமியம் ஸ்டோரி
அம்மாவுடன்...

- கலங்கும் தமிழிசை

“அப்பாவின் பாசத்தையும் அம்மாவிடமிருந்துதான் பெற்றேன்!”

- கலங்கும் தமிழிசை

Published:Updated:
அம்மாவுடன்...
பிரீமியம் ஸ்டோரி
அம்மாவுடன்...

“அம்மா... என் வாழ்க்கையில எல்லாமுமாக இருந்தவர். நான் டாக்டராகணும்ங் கிற அவங்களோட விருப்பத்தை நிறைவேத் தினேன். பிற்காலத்துல என் அரசியல் நிலைப்பாட்டுக்கு வீட்டுல எதிர்ப்பு எழுந்தப்போ, அவங்கதான் எனக்கு ஆதரவா இருந்தாங்க. சந்தோஷம், கவலை, ஏக்கம்னு எல்லா நேரங்கள்லயும் என் மனசு தேடும் முதல் நபர் அம்மாதான். அவங்களோட பாசமும் ஊக்கமும் எனக்கு முழுமையா கிடைக்காம இருந்திருந்தா, வெளியுலகத்துக்குத் தெரியாமலேயே போயிருந்திருப்பேன்”

- ஆற்றாமையுடன் பேசுகிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். அண்மை யில் காலமான தன் அம்மா கிருஷ்ணகுமாரியின் இழப்பால் மீளா துயரில் கலங்குபவர், வலி மிகுந்த தவிப்புடன் அம்மாவின் நினைவுகளைப் பகிர்கிறார்.

“அப்பாவின் பாசத்தையும் அம்மாவிடமிருந்துதான் பெற்றேன்!”

“வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, சமைக்க ஓர் உதவியாளரைக் கூட அப்போ வெச்சுக்கல. வெளியிடங் களுக்கு அதிகம் போகாம, குடும்பம், கணவர், பிள்ளைகள்னு எங்க நலனையே தன் உலகமா மாத்திக் கிட்டாங்க. வீட்டுல மூத்த பொண்ணுங் கிறதால அம்மாவுடனான பிணைப்பும் பாசமும் எனக்கு அதிகமா இருந்துச்சு. சமையல்ல எனக்கு நாட்டமில்லைனு தெரிஞ்சுகிட்டு, அதுக்கு எதிரா ஒரு நாள்கூட அவங்க என்கிட்ட கண்டிப்பு காட்டினதில்ல. சின்ன வயசுலேயே நான் அப்பாவின் அரசியல் பணி களுக்கு உதவியாவும், அரசியல் நாட்டத்துடனும் இருந்தேன். ‘அரசியல் வேண்டாம். உன்னை மருத்துவரா பார்க்க ஆசைப்படுறேன்’னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.

அவங்களுக்காகவே எம்.பி.பி.எஸ் படிச்சேன். காலேஜ் படிக்கும்போதே எனக்குக் கல்யாணமாகி, மூத்த மகன் சுகநாதன் பிறந்தான். ‘நீ படிப்புல மட்டும் கவனம் செலுத்து’ன்னு சொல்லி, என் மகனை அம்மாதான் வளர்த்தாங்க. அதனால, சுகன் குழந்தையா இருந்தபோது, என் அம்மாவை தன் ‘அம்மா’ன்னும் என்னை ‘அக்கா’ன்னும் நினைச்ச விந்தையும் நடந்துச்சு. பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தடையா இருக்கும் எந்த விஷயங்களை யும் தன் நாலு மகள்கள்மீதும் அம்மா திணிச்சதில்ல.

அப்பா குமரி அனந்தனும், சித்தப்பா வசந்தகுமாரும் காங்கிரஸ் கட்சியைப் பாரம்பர்யமா கொண்டவங்க. அந்தக் குடும்பத்திலிருந்து வந்த நான், பாரதிய ஜனதா கட்சியில சேர்ந்தப்போ, வீட்டுல பலத்த எதிர்ப்பு. ‘தனிப்பட்ட முடிவெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்கு. அவ சுதந்திரமா செயல்படட்டும். நீங்க ரெண்டு பேரும் அவங்கவங்க இயக்கத்துக்குச் சிறப்பா செயல்படுங்க’ன்னு அப்பாகிட்ட சொன்னாங்க. ஆனாலும், அப்பா, சித்தப்பா ரெண்டு பேரும் என் மீது கோபமா இருந்ததால, அவங்களோட பாசத்தையும் அம்மாவின் அன்புதான் ஈடுகட்டியது”

- தந்தையாகவும் மாறிப்போன தாயின் பாசம் பகிரும் தமிழிசை, பெற்றோரின் பிரிவுச்சூழல் குறித்து கனத்த மெளனத்துக்குப் பிறகு, முதன்முறையாக மனம் திறந்தார்.

“அப்பாவின் பாசத்தையும் அம்மாவிடமிருந்துதான் பெற்றேன்!”

“கல்யாணத்துக்குப் பிறகு, அப்பாவுக்காகப் பல விஷயங்கள்லயும் அம்மா தன்னை மாத்திக்கிட்டாங்க. விசேஷ தருணங்கள்ல கொஞ்சம் ஆடம்பரமா உடையும் நகையும் அணிய அம்மா ஆசைப்படுவாங்க. காந்தியவாதியான அப்பா எளிமையா வாழணும்னு சொல்லுவார். பண்டிகை நேரங்கள்ல எங்க எல்லோருக்கும் கதர் ஆடைகளை வாங்கிட்டு வந்து உடுத்திக்கச் சொல்லுவார். மறுக்க முடியாம அதை உடுத்திக்கிட்டாலும், ‘குழந்தைகளாச்சும் நல்லா கலர்ஃபுல்லான டிரஸ் உடுத்தினா என்ன?’னு தனிமையில் அம்மா அழுது புலம்புவாங்க. அரசியல் பணிகள்ல அப்பா பரபரப்பா இருந்ததால, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அம்மா தனியாதான் போவாங்க. இதுபோன்ற சின்னச் சின்ன ஏக்கங்களும் ஏமாற்றங் களும் காலப்போக்கில் அவங்க ரெண்டு பேருக்குமே மனஸ்தாபமா மாறிடுச்சு.

அப்பாவின் பணிகளுக்குத் தடையா இருக்க வேண்டாம்னு நினைச்ச அம்மா, அவரிடமிருந்து விலகி தனியா வசிச்சாங்க. அதன் பிறகு, இருவருமே தனித்தனியே வாழ்ந்தாலும், ஒருத்தர் மேல இன்னொருத்தர் ரொம்பவே அன்பு வெச்சிருந்தாங்க. அம்மாவை என் வீட்டுக்குக் கூப்பிட்டேன். ‘மக வீட்டுல அம்மா தங்குனா சிலர் தப்பா பேசுவாங் கம்மா’ன்னு மறுத்துட்டாங்க. அதனாலேயே, சென்னை, சாலி கிராமத்திலிருக்கும் என் வீட்டுக்குப் பக்கத்துலயே தனி ஃபிளாட்டுல அம்மா வசிச்சாங்க. தினமும் அம்மாவைச் சந்திச்சுட்டுத்தான் வெளி நிகழ்ச்சிகளுக்குப் போவேன்.

“அப்பாவின் பாசத்தையும் அம்மாவிடமிருந்துதான் பெற்றேன்!”

தமிழக பா.ஜ.க தலைவரா இருந்தப்போ, என்னை பத்தின மீம்ஸ், கேலி, கிண்டல்களையெல்லாம் அம்மாவும் தொடர்ந்து கவனிச்சாங்க. ‘ஏம்மா இப்படியெல்லாம் பேசுறாங்க?’ன்னு ஆதங்கப்படுவாங்க. சுருட்டை முடியைக் கிண்டல் பண்றாங்கன்னு, என் முடியை ஸ்ட்ரெய்ட்டனிங் செஞ்சுகிட்டேன். ‘யார் என்ன சொன்னாலும், நம்ம இயல்பை மாத்திக்கக் கூடாதுமா. சுருட்டை முடிதான் உனக்கு அழகு’ன்னு உருக்கமா சொன்னாங்க. நான் மக்கள் பிரதிநிதியாகணும்னு அம்மா ரொம்பவே ஆசைப்பட்டாங்க. பல தேர்தல்கள்லயும் தோல்வியடைஞ்சேன். தேர்தல் முடிவுகள் வெளியாகும் அந்த நேரங்கள்ல, முதல் அழைப்பு அம்மாகிட்ட இருந்துதான் வரும். ‘நீ எதுக்கும் கவலைப்படாதே. இதைவிடப் பெரிய வெற்றி உனக்குக் காத்திருக்கும்’னு அவங்க சொல்லும் வார்த்தைகள்தாம் எனக்கு எனர்ஜி டானிக்.

2019 நாடாளுமன்றத் தேர்தல்ல நான் தோல்வியடைஞ்ச நிலையில, வாக்கு எண்ணிக்கை முடிஞ்சதும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குக் கிளம்பினேன். அன்று அட்சய திருதியை. இரவுல கடை மூடும் நேரத்துல அவசரமா போய் புடவையும் தங்க வளையலும் வாங்கிட்டுப் போய் நடுராத்திரியில அம்மாவுக்குப் பரிசு கொடுத்தேன். ‘தேர்தல் தோல்வியால நீ வருத்தத்துல இருப்பே. ஆனாலும், இப்பக்கூட என்னை சந்தோஷப்படுத்த நினைக்குறியே... உன் உழைப்பு வீண் போகாது’ன்னு உச்சி மோந்து ஆசீர்வாதம் செஞ்சாங்க. அடுத்த சில மாதங்கள்லயே நான் ஆளுநரா நியமிக்கப்பட்ட தகவலைக் கேட்டு, ‘உங்க அப்பா ஆளுநர் ஆவார்னு எதிர்பார்த்தேன். ஆனா, உன் திறமைக்கு அங்கீகாரம் கிடைச்சுடுச்சு’ன்னு வாழ்த்தினாங்க” அம்மாவைப் பற்றிப் பேசப் பேச, வருத்தங்களைக் கடந்தும் தமிழிசைக்கு ஆர்வம் கூடுகிறது.

“உடல்நலன் கருதி என்னுடன் ராஜ்பவனிலேயே அம்மாவைத் தங்க வெச்சுகிட்டேன். கொரோனா காலத்துல வலியுறுத்தி அப்பாவையும் ஹைதராபாத் வர வெச்சோம். ‘பா.ஜ.க சார்புல நீ ஆளுநர் ஆனதால, ராஜ்பவன்ல தங்க மாட்டேன்’னு சொன்ன அப்பா, வளாகத்திலிருக்கும் விருந்தினர் இல்லத்துல தங்கினார். தினமும் எங்களை வந்து சந்திச்சுட்டுப் போவார். அந்த நேரங்கள்ல அம்மாவும் அப்பாவும் மனம்விட்டுப் பேசினாங்க. வயோதிகத்தால அம்மாவுக்கு அடிக்கடி மறதியுடன், சுறுசுறுப்பும் குறைய ஆரம்பிச்சது. அண்மையில கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்துட்டாங்க. இப்போ எனக்குக் கிடைக்குற பெயர், புகழ் எல்லாத்துக்கும் முதல் காரணம் அம்மாதான். அவங்களை இழந்தது, என்னையே நான் இழந்தது போன்ற உணர்வைக் கொடுக்குது”

- நெகிழ்ச்சியாக முடிக்கும் தமிழிசைக்குக் கண்கள் பனிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism