Published:Updated:

``வெறுமையை கலைபொருளாக்கினேன்!'' தன்னம்பிக்கையால் நோய்மையை வென்ற கோவை ராதிகா

ராதிகா
ராதிகா

தொடர்ந்து 3 சிகிச்சைகள் செய்த ஒரே வாரத்தில், வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மீண்டும் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் இரு கால்களிலும் செய்யப்பட்டதால் நடக்கவே 2 வருடங்கள் தேவைப்பட்டன.

'இந்த வாழ்க்கை அவ்வளவுதான்' என்று அவநம்பிக்கை நம்மைச் சூழும்போது, மீட்பராக யாரேனும் ஏதேனும் வந்து நிற்கும். ராதிகாவின் வாழ்வில் அவருக்கு அப்படி மீட்பராக அமைந்தது காகிதக் கலை.

கேரளாவைச் சேர்ந்த ஆறுமுகம்-ஜெயா தம்பதியினர், கோவையில் உள்ள பாப்பம்பட்டியில் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு, ராஜ்மோகன் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர். சிறுவயதில் எல்லாக் குழந்தைகளையும்போல ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தாள் ராதிகா. எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில், காலில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றார். பின்பு, அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவரை அணுகியபோது, ராதிகாவுக்கு எலும்பு குறைபாடு இருப்பதை அறிந்தனர். தற்போது வீட்டிலிருந்து கல்வி கற்கும் ராதிகா 11-ம் வகுப்பு படித்துவருகிறார்.

``சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஹார்மோன் பிரச்னைகள் ஏற்படும்!" - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

வீட்டுக்குள்தான் இனி தன் வாழ்க்கை என்று மனம் உடைந்தவரை மீண்டுவர உதவியது, காகிதக் கலை. 'என் வாழ்க்கையின் தொடக்கப்புள்ளி காகிதங்களுடனும் வண்ணங்களுடனும் கலந்த தருணமே' என்று தன் கைகளை விரித்து ராதிகா காட்டியபோது, வீட்டின் நான்கு புறச்சுவர்கள், உட்கூரை, மேசை என அனைத்திலும் பல வண்ணங்களில் கலைப் பொருள்கள் நிறைந்திருந்தன.

"சின்னவயதில் நான் படுசுட்டிப் பெண். ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். ஐந்து வயதில் பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றபோதுதான் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெற்றேன். தொடைப் பகுதியில், ஒரு வருடமாக வலி தொடர்ந்து இருந்ததால் கேரளா சென்று சிகிச்சை பெறுவது நல்லது என்று அங்கு சென்றோம். எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த பின்புதான், எலும்பைச் சுற்றி தசை வளர்ந்திருப்பது தெரிய வந்தது. ஒரு வருடம் கேரளாவில் சிகிச்சைபெற்றுவந்தேன்.

பெற்றோருடன் ராதிகா
பெற்றோருடன் ராதிகா

ஊர் திரும்பிய பின் மீண்டும் வலி வரவே, கோவை தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். அதே காலில் அறுவைசிகிச்சை செய்தார்கள். வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பது கொடுமையாக இருந்தது.

இரண்டு வருடம் கழித்து மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். நான்காம் வகுப்பு வரை சரியாகச் சென்றேன். தொடர்ந்து அறுவைசிகிச்சை காரணமாக உட்கார்ந்த நிலையில் அதிக நேரம் இருந்ததால், முதுகுத்தண்டு வளைய ஆரம்பித்தது. அதற்கான சிகிக்சைகள் பலனிக்காமல் போனால், இரண்டு கால்களும் முடங்கிவிடும் என்ற பயமும் இருந்தது. அதனால் கொஞ்சம் யோசித்து முடிவுசெய்துகொள்ளலாம் என விட்டுவிட்டோம். கால் எலும்பு வளைய ஆரம்பித்ததால், கோவை தனியார் மருத்துவமனையிலிருந்த எலும்பு பிரிவு வல்லுநரிடம் சென்று பார்த்தபோது, எலும்பினுள் இருக்கும் மஜ்ஜையில் குறைபாடு இருப்பதை அறிந்தோம்.

நான் பள்ளிக்குச் சென்றுவர, யாரேனும் உடனிருந்து உதவவேண்டியிருந்தது. இதனால், பள்ளியிலிருந்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இடுப்பெலும்பு இறங்கியதால் சிகிச்சை செய்யவேண்டி இருந்தது. அதேபோல, இடது கால் முட்டியிலும் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து 3 சிகிச்சைகள் செய்த ஒரே வாரத்தில், வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மீண்டும் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து இரு கால்களிலும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால், நடக்கவே இரண்டு வருடங்களானது.

உயிரிழந்த 9 சிறுவர்கள், தடை செய்யப்பட்ட இருமல் மருந்து... மருத்துவர் விழிப்புணர்வு!

ஐந்து வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன். அதே சுவர், வெறுமையான வாழ்கையென கோபமும் வருத்தமும் சூழ்திருந்தது. கோவை நகரத்தை மருத்துவமனை செல்லும்போது மட்டுமே பார்த்தேன். எனக்கான வெளி உலகத் தொடர்பு அதுமட்டுமே!

பின்னர், எனது இருளை நீக்க நானே ஒளியானேன். திருமண அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள் செய்யத் தொடங்கினேன். முதலில், பென்சிலால் ஓவியங்கள் வரைந்தேன். பின்பு கலர் ஓவியங்களையும் வரைந்தேன். யூ டியூபில் கலைப் பொருள்கள் செய்யும் விடியோக்களை எனக்கு அண்ணன் காண்பித்தார். தனியார் இன்ஸ்டிட்யூட் ஒன்றில் சேர்ந்து படித்து, 2018-ம் ஆண்டில் 8-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றேன். ஒரு வருடத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுக்கு சிரமப்பட்டு படித்துத் தேர்ச்சி பெற்றேன். 11-ம் வகுப்புக்கு பள்ளிக்குச் சென்று படிக்கலாம் என விரும்பினேன். ஆனால், அருகில் இருந்த நான்கு பள்ளிகளிலும் இடம் கிடைக்கவில்லை. கடைசியில், நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளியில் இடம் கிடைத்தது. நல்லபடியாகத்தான் பள்ளிக்குச் சென்றுவந்தேன். மீண்டும் காலை மண்ணில் ஊன்ற முடியாதபடி ஆகிவிட்டது. எனவே, மூன்று மாத காலம் ஓய்வில் இருந்தேன். மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடியாததால், தற்போது வீட்டிலிருந்தே படித்துவருகிறேன்.

ராதிகாவின் படைப்புகள்
ராதிகாவின் படைப்புகள்

மீண்டும் அதே தனிமையை உணர ஆரம்பித்தேன். எனவே, காகிதங்களில் கலைப் பொருள்கள் செய்யத் தொடங்கினேன். வெறுமையான நேரங்கள், கலைப் பொருள்களாக மாறுவதை விரும்பினேன். போட்டோ ஃப்ரேம், கூடைகள், பைக், கித்தார், ஆப்பிரிக்கன் பொம்மைகள் எனப் பல விதங்களில் காகிதங்கள் கொண்டு செய்தேன். ஆப்பிரிக்கன் பொம்மைகளை முதலில் அருகில் இருப்பவர்களுக்குக் கொடுத்தேன். இவற்றின் படங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் என் அண்ணன் பதிவு செய்தார். அவை மிகுந்த வரவேற்பைப் பெற்றன. காகிதப் பொருள்கள் என்பதால் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை; சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது.

என் வயது பெண்கள் பள்ளி, கல்லூரி, வேலை என அடுத்த கட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தனர். நான் என்னுடைய முயற்சியில் ஏதேனும் செய்ய வேண்டும் என கலைப் பொருள்கள் செய்து விற்றேன். அவற்றில் வரும் தொகையில் என் படிப்புக்குத் தேவையான புத்தகங்களை வாங்கினேன். இது, எனக்குத் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. தற்போது பலரிடமிருந்து ஆர்டர் வருகிறது.

கஸ்டமரின் விருப்பத்திற்கு ஏற்ப பொம்மைகளை வடிவமைத்துக் கொடுக்கிறேன். திருமணங்களுக்கு ஜோடியாக இருக்கும் பொம்மைகள், சிலம்பாட்டம் செய்வது போன்ற பொம்மைகள், மத்தளம் வைத்திருக்கும் பொம்மைகள் எனப் பல வகையில் பொம்மைகள் செய்துவருகிறேன். என்னை விடவும் மோசமான நிலையில் உள்ளவர்களும் தன்னம்பிக்கையோடு முன்னேறி வருகின்றனர். பாகிஸ்தானின் முனிபா மசாரிதான் என் இன்ஸ்பிரேஷன். அவர்களைப் பார்த்து, நான் வாழ்க்கையை வெல்ல கற்றுக்கொள்கிறேன். அதுபோல், நானும் பிறரின் வாழ்க்கைக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். என்னைப் போன்றவர்களுக்கு கருணை தேவையில்லை. அவர்களின் திறமைக்கான அங்கீகாரம்தான்" என்கிறார் தன்னம்பிக்கை பொங்கும் குரலில்.

இஞ்சி டீ முதல் நெல்லிக்காய் ஜூஸ் வரை... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5 உணவுகள்!

ராதிகா தற்போது, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் தன்னம்பிக்கைப் பேச்சாளராகத் தம் அனுபவங்களைப் பகிர்ந்து உற்சாகமளித்துவருகிறார். தம் வாழ்வில் சூழ்ந்த இருட்டில் ஒளியேற்ற யாரையும் எதிர்பாராது தன் முயற்சியில் சிறு மெழுகுவத்தியை ஏற்றிக்கொண்டார். ஆனால், அம்மெழுகுவத்தி, சூரியனுக்கு இணையான பேரொளியை அவருக்குத் தருகிறது.

உடல் உறுப்புகளும் வாய்ப்புகளும் சரியாக இருந்தும் சோம்பிக்கிடக்கும் பலரின் மத்தியில், ஓய்வின்றிச் சுழலும் சக்கரமாகத் திகழ்கிறார் ராதிகா.

அடுத்த கட்டுரைக்கு