Election bannerElection banner
Published:Updated:

``ஆர்யா என ஏன் பேர் வெச்சோம் தெரியுமா?" - திருவனந்தபுரம் இளம் மேயரின் பெற்றோர் பெருமிதம்

பெற்றோருடன் ஆர்யா ராஜேந்திரன்
பெற்றோருடன் ஆர்யா ராஜேந்திரன் ( படம்: விகடன் / ரா.ராம்குமார் )

திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள ஆர்யாவின் வீடு குறுகலான சந்துக்குள் இருக்கிறது. ஒரு டூவீலர் மட்டுமே செல்லக்கூடிய பாதை. ஆர்யாவின் குடும்பம் வசிப்பது வாடகை வீட்டில். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரனிடம் பேசினோம்.

கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராகப் பொறுப்பேற்றிருக்கிறார் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன். நாட்டின் மிகவும் வயது குறைந்த மேயர், சி.பி.எம் கட்சியின் சாதாரண தொண்டனின் மகள் எனப் பல பெருமைகளோடு மதிப்புமிக்க மேயர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார் ஆர்யா ராஜேந்திரன்.

மேயர் ஆர்யா ராஜேந்திரன்
மேயர் ஆர்யா ராஜேந்திரன்

ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன், வீடுகளில் மின்சார ஒயரிங் பணி செய்துவரும் எலக்ட்ரீஷியன். அம்மா ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜென்ட். திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள ஆர்யாவின் வீடு குறுகலான சந்துக்குள் இருக்கிறது. ஒரு டூவீலர் மட்டுமே செல்லக்கூடிய பாதை. ஆர்யாவின் குடும்பம் வசிப்பது வாடகை வீட்டில். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரனிடம் பேசினோம்.

``நான் 1995-ம் வருஷம் சி.பி.எம் கட்சியில் சேர்ந்தேன். தேர்தல் நேரத்தில் போஸ்டர் ஒட்டுவது முதல் நான் செய்த பல கட்சிப் பணிகளைப் பார்த்து 2000-ம் வருஷம் எனக்குக் கட்சியில் உறுப்பினர் கார்டு கொடுத்தாங்க. எங்க கட்சியில உறுப்பினராக ஆகுறதுகூட கமிட்டியோட முடிவுதான்.

என் மனைவி ஸ்ரீலதா, மகள் ஆர்யா, மகன் அரவிந்த் என அனைவரும் கேசவதேவ் ரோடு கிளை கட்சி உறுப்பினர்கள்தாம். எனக்குக் குடும்ப வீடு முடவன்முகல்தான். அந்த வீட்டை என் சகோதரிக்கு சீதனமாகக் கொடுத்துவிட்டோம். நான் இந்தப் பகுதியில் சி.பி.எம் உறுப்பினராக இருப்பதால், பழைய வீட்டுக்கு பக்கத்திலேயே வாடகைக்கு இருக்கிறேன். இனி மேயரான என் மகளுக்கு அரசு பங்களா கொடுப்பாங்க. ஆனாலும், ஓட்டுப்போட்ட இந்த மக்களுக்கு பணி செய்வதற்காக நாங்கள் இங்கேயேதான் இருக்கப்போகிறோம்" என்றார்.

கேக் வெட்டும் ஆர்யா ராஜேந்திரன்
கேக் வெட்டும் ஆர்யா ராஜேந்திரன்
படம்: விகடன் / ரா.ராம்குமார்

ஆர்யாவின் அம்மா ஸ்ரீலதா, ``இந்த வார்டில் சி.பி.எம் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. இடையில் ஒருமுறை காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றார். கடந்த முறையும் இங்கு சி.பி.எம் கவுன்சிலர்தான் இருந்தார். இந்த முறை வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் என் மகளுக்கு சீட் கிடைத்தது. சி.பி.எம் கட்சியைப் பொறுத்தவரை சீட் கேட்டு வாங்குவது கிடையாது.

கட்சியினர் முடிவு செய்து தகுதியானவர்களுக்கு சீட் கொடுப்பார்கள். தேர்தலுக்குக்கூட எங்களுக்கு எந்தப் பணச் செலவும் இல்லை. போஸ்டர், சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் விநியோகித்ததுனு எல்லாமே கட்சிதான் பார்த்துக்கொண்டது" எனப் பெருமிதத்துடன் கூறினார்.

ஆர்யா ராஜேந்திரன்
ஆர்யா ராஜேந்திரன்
படம்: விகடன் / ரா.ராம்குமார்
`மாணவர்கள் அரசியலமைப்பு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்!’ - நாட்டின் இளம் பெண் மேயர் ஆர்யா

ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன் தொடர்ந்தார். ``கேரளத்தின் முதல் இடதுசாரி முதல்வரான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தோழரின் மனைவி பெயர் ஆர்யா. என் மனைவி ஸ்ரீலதாவுக்கு இ.எம்.எஸ்ஸின் மனைவி ஆர்யாவை மிகவும் பிடிக்கும். அதனால்தான் எங்களுக்கு மகள் பிறந்ததும் ஆர்யா என்று பெயர் வைத்தார் என் மனைவி" என்றார் பெருமையுடன்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தருணங்கள் பெருகட்டும் இந்த எளிமையான பெற்றோருக்கு!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு