Published:Updated:

``காந்தி கனவுகண்ட நாளுக்காக காத்திருக்கிறோம்!”– தத்ரூபக் காட்சி மூலம் பாடம்சொன்ன மாணவிகள்

படிக்கும் வயதில் திருமணம்
படிக்கும் வயதில் திருமணம்

சர்வதேசப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தினத்தையடுத்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவியர் அரங்கேற்றிய தத்ரூப நிலைக்காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வட அமெரிக்காவிலுள்ள டொமினிக் குடியரசில் கொடுங்கோல் ஆட்சியாளரான ராபீல் ருஜிலோவுக்கு எதிராக அரசியல் போராட்டங்கள் நடத்திய `மிராபெல் சகோதரிகள்’ என அழைக்கப்பட்ட மூவர், 1960-ம் ஆண்டு நவம்பர் 25-ல் கொல்லப்பட்டனர். `மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்' எனச் சொல்லப்பட்ட அச்சகோதரிகளின் படுகொலையை நினைவுகூரும் வகையிலும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அந்தநாள் ஐக்கிய நாடுகள் சபையால், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் கடத்தல்
பெண்கள் கடத்தல்

தூத்துக்குடி, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் இத்தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. குடும்ப வன்முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் என நான்கு பிரிவுகளாக 85 மாணவிகள் தத்ரூப நிலைக்காட்சிகளை அரங்கேற்றினர்.

நிலைக்காட்சி குறித்து மாணவிகள் கூறுகையில், ``மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என பாரதியார் பொங்கி எழுந்து 100 ஆண்டுகள் கடந்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை, காதலிக்க மறுத்த பெண்கள் மீதான தாக்குதல், குடும்ப வன்முறை, பள்ளி, கல்லூரி, பேருந்து, பணிபுரியும் இடம்.. என பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன.

பேருந்தில் சீண்டல், விஷம் குடித்தல்..
பேருந்தில் சீண்டல், விஷம் குடித்தல்..

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16 அன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அச்சம்பவம் நடந்த சில நாள்களிலேயே, தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தில் பள்ளிக்குச் சென்று திரும்பிய 8-ம் வகுப்பு மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.

இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலையில் இருந்தாலும், எங்கோ ஒரு பெண்ணுக்கான கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தினமும் எந்த நாளிதழ்களைப் புரட்டினாலும் பெண் வன்கொடுமை பற்றிய செய்தி இல்லாமல் இருப்பதில்லை. `மீ டூ' பிரசாரம் மூலம் பணியிடங்களில் ஏற்பட்ட கொடூரங்கள் குறித்து தைரியமாகப் பெண்கள் வெளியிட்டனர்.

நிலைக்காட்சியில் கலந்து கொண்ட மாணவிகள்
நிலைக்காட்சியில் கலந்து கொண்ட மாணவிகள்

பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றத்துடன் புதிது புதிதாக கொடுமைகளின் மாற்றங்களும் கொடூரமாக வளர்ந்து நிற்கின்றன. பெண்ணின் ஒவ்வொரு விடியலும், இரவும் தன்னை தற்காத்துக் கொள்வதிலேயே கழிகிறது. வாழ்க்கை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.

அதில், ஆண், தன்னை ஆளும் சக்தியாக மாற்றிக்கொண்டதன் விளைவினால்தான் பெண் அடிமை ஆக்கப்பட்டாள். ஒவ்வொரு பெண்ணின் தனிமையையும் யாரோ கவனிக்கிறார்கள் என்பதுதான் இதுபோன்ற குற்றங்களின் பின்னணி. தற்காப்புக்காக மிளகாய்த்தூள், மிளகுத்தூள் ஸ்ப்ரே ஆகியவற்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

நிலைக்காட்சியில் மாணவிகள்..
நிலைக்காட்சியில் மாணவிகள்..

தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியுள்ளோம்” என்றவர்கள் இறுதியாக, `ஒரு பெண் தனியாக சாலையில் தைரியமாக எப்போது நடந்து போகிறாளோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்' என காந்தியடிகள் சொன்ன அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்” எனச் சொல்லி முடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு