Published:Updated:

ஒரு பிரசவம், ஐந்து குழந்தைகள், மூன்று திருமணங்கள்! - ஓர் அபூர்வ குடும்பத்தின் அன்புக் கதை

மூன்று திருமணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மூன்று திருமணங்கள்

அபூர்வ சகோதரிகள்

ஒரு பிரசவம், ஐந்து குழந்தைகள், மூன்று திருமணங்கள்! - ஓர் அபூர்வ குடும்பத்தின் அன்புக் கதை

அபூர்வ சகோதரிகள்

Published:Updated:
மூன்று திருமணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மூன்று திருமணங்கள்

குருவாயூர் கோயில் அம்பல நடையில் அக்டோபர் 24-ம் தேதி நடந்த 12 திருமணங்களில், மூன்று திருமணங்கள் சிறப்புச் செய்தி ஆகின. ஒரே பிரசவத்தில் பிறந்த உத்ரா, உத்தரா, உத்தமா ஆகிய மூன்று சகோதரிகளும், ஒரே மாதிரி பட்டுச்சேலை, ஒரே மாடல் நகைகள், ஒரே மாதிரி அலங்காரம் எனக் கண்கொள்ளா மணப்பெண்களாக வந்து நிற்க... ஒரே முகூர்த்தத்தில் அவர்களை மூன்று மணமகன்களும் கைப்பிடிக்க... கெட்டிமேளம் கெட்டிமேளம்!

ஃபேஷன் டிசைனரான உத்ராவை, மஸ்கட்டில் ஹோட்டல் மேனேஜராகப் பணிபுரியும் ஆயூரைச் சேர்ந்த அஜின் குமார் மணந்தார். ஆன்லைன் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் உத்தராவை கோழிக்கோட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரான மகேஷ் குமார் மணந்தார். மயக்கவியல் டெக்னீஷியனான உத்தமாவை மஸ்கட்டில் அக்கவுன்டராக வேலை பார்க்கும் வட்டியூர்காவைச் சேர்ந்த வினீத் மணந்தார். தந்தை ஸ்தானத்தில் இருந்து சகோதரிகளைக் கரம்பிடித்துக் கொடுத்தார் சகோதரன் உத்ரஜன். பெரிய கடமை நிறைவேறிய நிம்மதியில் நின்றிருந்தார், இவர்களின் அம்மா ரமாதேவி. 

ஒரு பிரசவம், ஐந்து குழந்தைகள், மூன்று திருமணங்கள்! - ஓர் அபூர்வ குடும்பத்தின் அன்புக் கதை

“எனக்கு ஒரே பிரசவத்தில் நாலு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் சில நிமிட இடைவெளியில பிறந்தாங்க’’ என்று பேச ஆரம்பித்தார் ரமாதேவி... ‘`அஞ்சு பேருக்கும் சோறு கொடுப்புலயிருந்து (முதன்முறையாக சாப்பாடு ஊட்டுவது), பள்ளியில சேர்த்தது, பொதுத்தேர்வு ரிசல்ட் வந்தது, கல்லூரியில் சேர்த்ததுனு எல்லாமே ஒண்ணாதான் நடக்கும். கல்யாண வயசு வந்தப்போ, என் நாலு பெண் பிள்ளைங்களும் ஒரே முகூர்த்தத்துல, ஒரே மணமேடையில திருமணம் செய்துக்கணும்னு விரும்பினாங்க. இதுக்காக நாலு பொண்ணுங்களுக்கும் ஆறு மாசமா வரன்கள் தேடினோம். எங்க எண்ணப்படியே வரன்களும் அமைஞ்சது. நாலு பேரு கல்யாணத்தையும் போன ஏப்ரல் மாசம் 28-ம் தேதி நடத்த நாள் குறிச்சிருந்தோம். அதுக்காக நாலு பேருக்கும் ஒரே மாதிரி முகூர்த்தப் புடவை, ஒரே மாடல்ல சொர்ண நகைகள், ஒரே அளவு சீதனம்னு எல்லாம் ஏற்பாடு செய்து வெச்சிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு பிரசவம், ஐந்து குழந்தைகள், மூன்று திருமணங்கள்! - ஓர் அபூர்வ குடும்பத்தின் அன்புக் கதை

ஆனா, கொரோனா வந்ததால ஊரடங்கு காரணமா கல்யாணம் தள்ளிப்போனது. இப்பவும், மூணு மகள்களுக்குத்தான் ஒரே நேரத்தில் கல்யாணத்தை நடத்த முடிஞ்சிருக்கு. இன்னொரு மகளான உத்ரஜாவுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை, பத்தணம்திட்டாவைச் சேர்ந்த ஆகாஷ் குவைத்ல இருக்கார். கொரோனா போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால அவரால இப்ப வரமுடியலை. அதனால அவங்க திருமணத்தை மட்டும் தள்ளிவெச்சிருக்கோம். சீக்கிரமே அவங்க கல்யாணம் நடக்கும்”

- மகிழ்வு, நெகிழ்வு, நிம்மதியுடன் பேசினார் ரமாதேவி.

ரமாதேவியின் குடும்பம் இன்று நேற்றல்ல... அவர் குழந்தைகள் பிறந்த 1995-ம் வருடம் முதலே கேரளத்துக்கு ஸ்பெஷல்தான். திருவனந்தபுரம் போத்தன்கோட்டைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு 1995-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் என ஐந்து குழந்தைகள் பிறந்தன. அன்று முதல் மீடியாவுக்கும் கேரள மக்களுக்கும் அந்தக் குழந்தைகளும் பெற்றோரும் மிகவும் பரிச்சயம். குழந்தைகளின் முதல் பிறந்தநாள், முதல்நாள் பள்ளிக்கூட பிரவேசம் என எல்லாமே மீடியா செய்திதான்.

ஒரு பிரசவம், ஐந்து குழந்தைகள், மூன்று திருமணங்கள்! - ஓர் அபூர்வ குடும்பத்தின் அன்புக் கதை

குழந்தைகள் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்ததால் அதன் காரணமாகவே உத்ரா, உத்தரா, உத்ரஜா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயர் வைத்தனர் பெற்றோர். இவர் களுக்குச் செல்லமாக வைக்கப்பட்ட பெயர், ‘பஞ்சரத்தினம்’. தங்கள் வீட்டுக்கும் ‘பஞ்சரத்தினம் இல்லம்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். போத்தன்கோட்டில் ‘பஞ்சரத்தினம் வீடு’ என்று கேட்டால் குழந்தைகூட வழிகாட்டும் அளவுக்குப் பிரபலம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சகோதரிகளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து கடமையாற்றிய உத்ரஜனிடம் பேசினோம். “எந்தப் பண்டிகையா இருந்தாலும் என் சகோதரிகள் ஒரே மாதிரிதான் ஆடைகள் வாங்குவாங்க. அவங்க நாலு பேரும் ஒரே மாதிரி மணக்கோலத்துல, ஒரே நேரத்துல மணமேடை ஏறணும்னு ஆசைப்பட்டாங்க. அந்த ஆசையையும் அம்மா நிறைவேற்றியிருக்காங்க. இந்த மூணு சகோதரிகளுக்கும் எடுத்தது போல பட்டு, நகை எல்லாம் உத்ரஜாவுக்கும் எடுத்து வெச்சிருக்கோம். மாப்பிள்ளை வெளிநாட்டுலயிருந்து வந்ததும் அவங்களுக்கும் குருவாயூர் கோயில்ல வெச்சே கல்யாணம் நடத்தவிருக்கோம். எங்க அம்மாவின் மன தைரியம்தான் எங்க எல்லாரையும் வளர்த்து, ஆளாக்கி, இன்னைக்கு இந்த சந்தோஷ தருணத்துல நிறுத்தியிருக்கு’’ என்றார். உத்ரஜன் அதைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு, இந்தக் குடும்பம் ஒரு புயல் தாண்டியே வந்திருக்கிறது. 

‘பஞ்சரத்தினங்களி’ன் அப்பா பிரேம்குமார், சிறு வியாபாரி. ரமாதேவிக்கு இதயத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவச் செலவு அதிகரித்தது. இதனால் பிரேம்குமாருக்குக் கடன் ஆனது. ஒருகட்டத்தில் கடனை சமாளிக்க முடியாமல் 2004-ம் ஆண்டு பிரேம்குமார் தற்கொலை செய்துகொண்டார். அதற்குப் பிறகு, தன் ஐந்து பிள்ளைகளுடன் ரமாதேவி கஷ்டப்படுவதைப் பார்த்து கேரள அரசு கூட்டுறவு வங்கியில் அவருக்கு வேலை வழங்கியது. அதன் பிறகுதான் அந்தக் குடும்பம் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணித்தது. தனி ஒருவராக ஐந்து பிள்ளைகளையும் வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய ரமாதேவி, இப்போது அவர்களை மணக்கோலத்தில் பார்த்த நிறைவில் இருக்கிறார்.

ஐந்து குழந்தைகளையும் வளர்த்தது பற்றி ரமாதேவி, “எனக்கு அடிக்கடி உடம்புக்கு சரியில்லாம ஆகிடும். அந்த நேரத்துல பிள்ளைகளை வீட்டுல விட்டுட்டுப்போனா பார்த்துக்க யாரும் இருக்க மாட்டாங்க. அதனால, நாங்க ஆறு பேருமாதான் ஹாஸ் பிட்டலுக்குப் போவோம். அதேபோல, ஒரு பிள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னாலும், அஞ்சு பிள்ளைகளையும்தான் ஹாஸ்பிட் டலுக்குப் கூட்டிட்டுப் போவேன் இப்படி நான் எங்க போனாலும் நாங்க எல்லாருமாதான் போவோம். அடுத்தடுத்த வயசுல ரெண்டு பிள்ளைகளையோ, ட்வின்ஸையோ வளர்க்கிறதே எத்தனை சிரமம்னு உங்களுக்குத் தெரியும். இதுல ஒரே வயசுல ஐந்து பிள்ளைகளை நான் வளர்த்த கதைகளை, கஷ்டங்களைச் சொல்ல என்கிட்ட வார்த்தைகள் இல்ல. சமாளிக்க முடியாத பொறுப்புகளால திணறும்போது, வாழ்க்கையே எனக்குத் திறந்தவெளி சிறைச்சாலை மாதிரி தோணும்’’ என்றவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டு சந்தோஷ மோடுக்கு மாறினார்.

‘`என் ஐந்து பிள்ளைகளும் செம சேட்டை. ஆனா, ஒருவருக்கு தலையில குட்டுவெச்சா மத்த நாலு பேரும் சரண்டர் ஆகிடுவாங்க. என் பஞ்சரத்தினங்கள் அவங்களுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு பேசாம இருந்த தெல்லாம் இல்ல. இந்த ஒற்றுமை எப்பவும் அவங்களுக்குள்ள இருக்கணும்’’ என்றவர் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள்.

ரமாதேவியின் மகள்கள், ‘`எங்க வீட்டுத் திருமணத்துக்கு கேரள காங்கிரஸ் தலைவர் உட்பட பல வி.ஐ.பி-க்கள் வாழ்த்து தெரிவிச் சிருந்தாங்க. அம்மா இதுவரை எங்களுக்காக ஓய்வில்லாம ஓடிட்டே இருந்துட்டாங்க. இனி அம்மாவை நாங்க எல்லோரும் குழந்தையா பார்த்துக்கணும்’’ என்றார்கள் ஒரே குரலில். ‘`பஞ்சரத்தினம் குடும்பத்தில் இப்போ நாங்களும் இணைந்தாச்சு’’ என்றார்கள் புது மாப்பிள்ளைகள்.

ரமாதேவி வீட்டுத் திருமணப் புகைப் படங்கள்... கதை, கவிதை!