Election bannerElection banner
Published:Updated:

``சர்வதேச பதக்கங்களை திருச்சிக்கு எடுத்துகிட்டு வருவேன்!" - தனலெட்சுமி #SheInspires

Dhanalakshmi
Dhanalakshmi ( Photo: Vikatan / Dixith )

``என் முயற்சிக்கும் பயிற்சிக்குமான பரிசாதான் இந்த வெற்றி கிடைச்சிருக்கு" என்கிறார் தனலெட்சுமி.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடந்த 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்ட தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து, இந்தியாவின் முன்னணி வீரரான டூட்டி சந்தை (11.58 விநாடிகள்) முந்தினார். இதேபோல 200 மீட்டர் ஓட்டத்தில் போட்டி தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

இந்தப் போட்டிகள் முடிந்து, கடந்த ஞாயிறு (மார்ச் 21) இரவு திருச்சி திரும்பிய தனலெட்சுமி, அடுத்த நாள் காலை 8 மணிக்கு கிரவுண்டில் ஆஜரானார்; பயிற்சிக்காக. விறுவிறுப்பான பயிற்சியின் இடையில் அவர் நம்மிடம் உரையாடினார்.

``தேசிய அளவிலான ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் கிடைத்துள்ள வெற்றி... தமிழகத்துக்குப் பெருமை தேடித் தந்த அந்த நொடி எப்படி இருந்தது?"

``வார்த்தைகள்ல விவரிக்க முடியாத சந்தோஷம் அது. இந்த நொடிக்காக நான் கடந்த ஆறு மாசமா ரொம்ப கடுமையான பயிற்சியில ஈடுபட்டிருந்தேன். கொரோனா காலகட்டம் என்பதால மைதானத்துல பயிற்சியில ஈடுபட அனுமதி கிடைக்கல. அதனால, வீட்டுக்குப் பக்கத்துல இருந்த சின்னத் தோப்பிலும், வீட்டுக்குப் பக்கத்துல இருந்த சின்ன இடத்திலும்தான் பயிற்சி எடுத்தேன். இடைவிடாத பயற்சிகளாலதான் என்னால இதை சாதிக்க முடிந்தது.''

கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி
கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி

``உங்கள் குடும்பம் பற்றி..."

``ஏழு வருஷத்துக்கு முன்னால உடல்நலக் குறைவால அப்பா இறந்துட்டாங்க. எனக்கு அம்மாதான் அப்பாவும். ரெண்டு அக்கா. நான் கடைசிப் பொண்ணு. முதல் அக்காவுக்குத் திருமணம் ஆகிடுச்சு. ரெண்டாவது அக்கா சமீபத்துல இறந்துட்டாங்க. அந்த இழப்புல இருந்து மீள முடியாத என் குடும்பத்துக்கு, இப்போ இந்த வெற்றி பெரிய ஆறுதல். என் குடும்பம்தான் என் பலம். அவங்க எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாங்க, இருக்காங்க. அவங்க இல்லைன்னா தனலெட்சுமியால இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.''

``மைதானத்திலேயே கிடந்தபோது அம்மா என்ன சொன்னார்?"

``நான் ஜெயிப்பேன்னு நம்பிக்கை வெச்சு என் வெற்றிகளுக்காகக் காத்திருந்தாங்க. அப்பா இறந்த பின் மூணு பெண் குழந்தைகளையும் வளர்க்க அம்மா ரொம்ப சிரமப்பட்டாங்க. வயல் வேலைகளுக்கும், கூலி வேலைகளுக்கும் போவாங்க. ஆடு, மாடுகள் வளர்த்தாங்க. தனக்கென எதுவுமே நினைக்காம, எங்களுக்காகவே வாழ்ந்தாங்க. இப்பவும் அப்படித்தான் இருக்காங்க.

பொதுவா பெரிய நகரங்கள்லேயே பிள்ளைகளை ஸ்போர்ட்ஸ்ல ஊக்குவிக்கிறது இல்ல. நாங்க நகரத்துல இருந்து உள்ளடங்கியிருக்குற ஒரு ஊருல வசிக்கிறோம். அதனால, பொம்பளப் புள்ளைய எதுக்கு விளையாடவெல்லாம் அனுப்புறனு என் அம்மாகிட்ட பலரும் பலவிதமா கேட்பாங்க, சொல்வாங்க. ஆனா, ஒருபோதும் என் அம்மா அதுக்கெல்லாம் யோசிச்சோ, இல்லை வேற எதையும் காரணம் காட்டியோ என்னைத் தடுத்ததே இல்ல. மாறாக, எனக்கு முழு பக்கபலமா இருக்காங்க இப்போ வரை.''

கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி
கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி

``உங்கள் ஆடுகளத்தை நீங்கள் கண்டுகொண்டது எப்போது?"

``பள்ளியில 9-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்போ, என்னோட உடற்கல்வி ஆசிரியர் ஆரோக்யராஜ் சார்தான் என்னை மைதானத்துக்கு அழைச்சுட்டு வந்தார். தடகளத்தில் என் திறமையை நானே உணர்ந்ததும் அறிந்ததும் அப்போதான். பள்ளிகளுக்கு இடையேயான போட்டி, மாவட்ட அளவிலான போட்டினு பல்வேறு போட்டிகள்ல பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றேன். அதெல்லாம் என் ஆர்வத்தையும் பயிற்சியையும் அதிகமாக்குச்சு. அதுக்கு அப்புறம், இப்போ எனக்குப் பயிற்சியளிக்கும் கோச் மணிகண்ட ஆறுமுகம் சார் ஆசானா கிடைச்சார். எனக்கான பயிற்சியில இருந்து என்னை பல போட்டிகள்ல கலந்துக்க வைக்கிறதுவரை வழிகாட்டுறார். என் வளர்ச்சியில முக்கியமான பங்கு, என் கோச்க்கு இருக்கு.''

``தேசிய அளவிலான போட்டிகளில் எப்போது பங்குபெற ஆரம்பித்தீர்கள்?"

``நான் திருச்சியில உள்ள ஒரு கல்லூரியில இளங்கலை தமிழ் படிச்சேன். அப்போ கல்லூரி கோகோ அணியில இடம் பெற்றிருந்தேன். அதுவரை நான் பெற்றிருந்த வெற்றிகள் தந்த தன்னம்பிக்கையால, எனக்கு முறையான பயிற்சி கிடைச்சா என்னால நிச்சயமா தேசிய அளவிலும், இந்தியாவுக்காக சர்வதேச அளவிலும் போட்டிபோடுற அளவுக்கு முன்னேற முடியும்னு தோணுச்சு. அதனால, செகண்ட் இயர் படிச்சப்போ, என் கோச் மணிகண்ட ஆறுமுகம் சார்கிட்ட பயிற்சிக்காகச் சேர்ந்தேன். அதுக்கு அப்புறம் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள்ல பங்கேற்க ஆரம்பிச்சேன். வெற்றிகளும் தொடர்ந்தது.''

``உந்துதல் தந்த ஒரு வெற்றி பற்றி?"

``2018-ம் ஆண்டு தேசிய அளவுல நடந்த போட்டியில பங்கேற்று 200 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றேன். என் வாழ்வின் நெகிழ்ச்சியான தருணம்னு அதைத்தான் சொல்வேன். எனக்கு உந்துதல் தந்த வெற்றி அது. அந்த வெற்றி தந்த பொறுப்பை உணர்ந்துதான், ஒலிம்பிக்ல நான் இந்தியாவுக்காக ஓடணும்ங்கிற இலக்கு ஏற்பட்டது.''

தந்தையின் பிரிவும், வறுமையின் பிடியும் அவர் கால்களைப் பிடித்து பின்னால் இழுத்தது. வாழ்க்கையின் இழுப்புக்கெல்லாம் ரப்பர்...

Posted by Vikatan EMagazine on Tuesday, March 23, 2021

``தடைகளாக எதை நினைக்கிறீர்கள்?"

``குடும்பத்தோட பொருளாதாரச் சூழல்தான். மைதானத்துல எனக்குத் தேவையானதை என் கோச் பார்த்துக்கிட்டாலும், வீட்ல நான் சாப்பிட வேண்டிய சத்தான டயட்டை என்னால ஃபாலோ செய்ய முடியலை இப்போவரை. வயல்வேலை செய்ற அம்மாகிட்ட, நட்ஸ் வாங்கிக்கொடுங்கனு எல்லாம் எப்படி கேட்க முடியும்னு, கேட்கிறதேயில்ல. நான் வெளியூர் போட்டியில கலந்துக்கப் போகும்போதெல்லாம் கடன் வாங்கியோ, நகைகளை அடமானம் வெச்சோதான் அம்மா என்னை அனுப்புவாங்க.

நான் பெண் என்பதாலயும், அப்பா இல்லாததைச் சொல்லியும் சுற்றம் எல்லாம் என்னை வீட்டுக்குள்ள இருக்க வைக்கவே நினைப்பாங்க. ஸ்போர்ட்ஸ் உடையில இருந்து பயிற்சி வரை விமர்சிச்சு பேசுவாங்க. ஆனா, அதையெல்லாம் நானும் என் குடும்பமும் கடந்து வந்துட்டோம். இந்தப் பொருளாதார சிரமங்களைக் கடக்கத்தான் வழி தெரியல.''

``ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான டூட்டி சந்த், ஹிமா தாஸை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றது பற்றி..."

``2019-ம் வருஷம் நடந்த ஃபெடரேஷன் கோப்பை போட்டியில நான் வெண்கலப் பதக்கம் பெற்றேன். அப்போது தங்கப் பதக்கம் பெற்றவர் டூட்டி சந்த். அடுத்த போட்டியில நாம அவரைவிட வேகமா ஓடணும்னு மனசுக்குள்ள வைராக்கியம் விழுந்துச்சு. அதுக்காக நிறைய நிறைய பயிற்சிகள் செய்தேன். என் முயற்சிக்கும் பயிற்சிக்குமான பரிசாதான் இந்த வெற்றி கிடைச்சிருக்கு.

ஆனா, பி.டி.உஷாவின் சாதனையை 23 வருஷம் கழிச்சு முறியடிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அந்தத் தருணத்தில் என் உணர்வுகள்... அதைச் சொல்லக்கூடத் தெரியல எனக்கு. 200 மீ. ஓட்டப்பந்தயத்தோட தகுதிச் சுற்றை 23.26 நொடிகள்ல முடிச்சு, 23 வருஷத்துக்கு முன்னால பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடிச்சப்போ, அது கனவா நனவா நொடி மாதிரி இருந்தது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி பெற்றும், சாதனை நிகழ்த்தியும், ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல நான் தேர்வாகலை என்பது ரொம்ப வருத்தமா இருக்கு. இப்போ என் இலக்குகளை இன்னும் பெருசா ஆக்கியிருக்கேன். அதையெல்லாம் அடைவதே என் குறிக்கோள்.''

Dhanalakshmi with her mother
Dhanalakshmi with her mother
Photo: Vikatan / Dixith

``ரோல் மாடல்..?"

``என் கோச் மணிகண்ட ஆறுமுகம்தான் என் இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல் எல்லாமே.''

``அடுத்து..?"

``இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட பல்வேறு சர்வதேசப் போட்டிகள்ல ஓடி, திருச்சிக்குப் பதக்கத்தை எடுத்துகிட்டு வரணும்!"

நான்கு நாள்கள் பாட்டியாலா போட்டியை முடித்துக்கொண்டு, இரண்டு நாள்கள் ரயில் பயணம் மேற்கொண்டு முதல் நாள் இரவு கூடடைந்தவர், மறுநாள் காலை மைதானத்தில்...

ஓட ஆரம்பித்தார் தனலெட்சுமி வேகமெடுத்து....

அந்த 22 வயது கிராமத்துப் பெண்ணின் கால்களில் அடுத்த வெற்றிக்கான பசி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு