Published:Updated:

``அந்த ஆசையை இன்னும் என்னால கைவிட முடியலை!" - டி.டி.இ வள்ளி

பாடகியாகணும்ங்கிற என் கனவு பொய்துப்போயிடக்கூடாதுனு, ரயிலில் பாடிட்டிருக்கேன்.

டி.டி.டி வள்ளி
டி.டி.டி வள்ளி

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயிலில் டிக்கெட் பரிசோதகராகப் (டி.டி.இ) பணியாற்றிவருபவர் வள்ளி. ஏழ்மை நிலையிலிருந்த குடும்பத்தை, தன் உழைப்பால் உயர்த்தியவர். பல்வேறு அவமானங்கள் மற்றும் புறக்கணிப்புகளைக் கடந்து தற்போது நல்ல பணியில் இருக்கிறார். பாடகியாகவேண்டும் என்ற தன் கனவு பொய்த்துப்போகவே, மலை ரயில் பயணத்தில் பாடல்கள் பாடி பயணிகளை உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டார்.

வள்ளி
வள்ளி

தன் சிறப்பான பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுவருகிறார் வள்ளி. இன்று சென்னையில் நடைபெற்ற தென்னக ரயில்வேயின் நிகழ்ச்சியிலும் வள்ளிக்கு விருது கிடைத்திருக்கிறது. இத்தகவலை உற்சாகத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். வள்ளி கூறுகையில்...

``64-வது ஆண்டாக நடக்கும் ரயில்வே வார விழாவின் ஒரு பகுதியாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்துச்சு. அதில், தென்னக ரயில்வேயில் சிறப்பாகப் பணியாற்றிய பலருக்கும் விருது வழங்கினாங்க.

டி.டி.இ வள்ளி
டி.டி.இ வள்ளி

மலை ரயிலில் வேலை செய்யும் நான், பாட்டுப் பாடி பயணிகளை உற்சாகப்படுத்தியதற்காக எனக்கும் விருது கிடைச்சிருக்கு. இது, தென்னக ரயில்வேயில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருது. தென்னக ரயில்வே மேலாளர் விருதுகளை வழங்கினார். ரயில்வே துறையில் வேலை செய்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த விழாவில் கலந்துகிட்டாங்க. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தின் சார்பில் நான் மட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன்.

ரொம்பவே கஷ்ட நிலையிலிருந்தேன். துப்புரவு பணியாளரா என் பணியைத் தொடங்கி, இன்னைக்கு டி.டி.இ (டிக்கெட் பரிசோதகர்) பணிக்கு உயர்ந்திருக்கேன். பாடகியாகணும்ங்கிற என் கனவு பொய்துப்போயிடக்கூடாதுனு, ரயிலில் பாடிட்டிருக்கேன். பயணிகளும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. அதனால, எனக்குப் பல விருதுகள் கிடைச்சுகிட்டிருக்கு.

டி.டி.இ வள்ளி
டி.டி.இ வள்ளி

பயணிகள் என் பாடலைக் கேட்டு ரசிப்பதால்தான் தொடர்ந்து நான் பாடறேன். எனவே, எனக்குக் கிடைக்கிற விருதுகளுக்காகப் பயணிகளுக்குத்தான் நன்றி சொல்வேன். ஆனாலும், பாடகியாகணும் என்ற ஆசையை என்னால இன்னும் கைவிட முடியலை. அந்தக் கனவை நோக்கித் தொடர்ந்து ஓடிட்டேயிருக்கேன்" என்றார் நெகிழ்ச்சியாக.