Published:Updated:

கலையும் இப்போ சேவை ஆச்சு!

உஷா சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
News
உஷா சரவணன்

வாவ் பெண்கள்

காய்ந்த வனத்தில் பற்றிய தீயென கொள்ளை நோய் ‘கோவிட் 19’ பரபரவென பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் பல தன்னார்வலர்களும் சமூக சேவகர்களும் தங்களால் இயன்றதை, தங்கள் வீட்டிலிருந்த படியே மக்களுக்காகச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதுபோன்ற குழுக்களில் ஒன்றுதான் சென்னையின் க்வில்ட் (துணியாலான விரிப்பு/மெத்தை) கலைஞர்கள் இணைந்த ‘தி ஸ்கொயர் இன்ச்’ குழு. இக்குழுவை நிர்மாணித்தவர் டினா கிட்வால் என்னும் பெண்மணி. துணிப்பை, துணி விரிப்பு /மெத்தை போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே விதவிதமாகத் தைக்கும் இக்குழுவின் உறுப்பினர்கள், இப்போது துணி மாஸ்க் தைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிகிச்சைக்கென வரும் (கொரொனா வைரஸ் தொற்று இல்லாத) மற்ற நோயாளிகளுக்கான முக கவசங்களை, மத்திய அரசு வழங்கியுள்ள விதிமுறைகளின்படி தைத்து அனுப்புகின்றனர். இக்குழுவில் ஒருவரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனின் மகளுமான உஷா சரவணனிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘`நாங்க எல்லாருமே க்வில்டர்ஸ்... ‘தி ஸ்கொயர் இன்ச்’தான் இந்தியாவின் முதல் க்வில்ட் ஸ்டூடியோ. அதில் இணைந்துள்ள எங்களை ‘இன்ச் வார்ம்ஸ்’னு  சொல்வாங்க. கிட்டத்தட்ட 200 பெண்களுக்கு மேல் இணைஞ்சிருக்கோம். இப்போது நாடு இருக்கும் கஷ்டமான சூழ்நிலையில் நம்மால் முடிஞ்சதைச் செய்யணும் யோசிச்சு, இந்த மாஸ்க் தைக்கிற யோசனையைச் சொல்லித் தொடங்கி வெச்சவங்க எங்க குழுவில் இருக்கும் லலிதா, ராஜம், வர்ஷா சுந்தர்ராஜன் ஆகியோர்.

உஷா சரவணன்
உஷா சரவணன்

டயாலிசிஸ், பிஸியோதெரபி போன்ற அத்தியாவசிய சிகிச்சை களுக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கு சாதாரண முக கவசம் தேவைப்படுது. அதை நாம் தைக்கலாமேன்னு அவங்க சொன்ன யோசனையைத்தான் இப்போ செயல்படுத்தறோம்.

சென்னையில் கிட்டத்தட்ட 20 இடங் களில் எங்க குழுவினர் தைக்கிறோம். வீட்டு வேலையையும் பார்த்துக்கிட்டே இதையும் செய்யறோம். இதுவரை 500-க்கும் அதிகமான மாஸ்க்குகள் தைத்து அனுப்பிட்டோம். மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்குத் தைத்துக்கொடுக்கும் மாஸ்க்கை நாம நினைக்கிற மாதிரி எல்லாம் தைச்சிட முடியாது. அரசு சில விதிமுறைகள் வெச்சிருக்கு. அந்த வழிகாட்டுதலின்படி நல்ல தரமான துணியில் தைக்கணும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் துணியை வெளியில் வாங்குவது சாத்தியமில்லை. அதனால் க்வில்ட் தைப்பதற்காக நாங்க ஏற்கெனவே வாங்கி வெச்சிருந்த நல்ல தரமான, மிருதுவான பருத்தித் துணியைப் பயன்படுத்துகிறோம்.

மாஸ்க்
மாஸ்க்

ரெண்டு லேயர் வெச்சுத் தைக்கணும். அதுக்கு நடுவில் ஒரு ஃபில்டர் வைக்கிறதுக்கு இடம் விடணும். சரியான அளவுகளில் கீழ்நோக்கிய மடிப்புகள் வைக்கணும்'' என்று கூறுகிறார் உஷா.

மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மற்றும் சீதாபதி மருத்துவமனைக்கு இவர்கள் தயாரித்த முக கவசங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கும் மாஸ்க் தைத்துக் கொடுத்துள்ளனர்.

‘‘எல்லாமே இலவசம்தான். எதுக்கும் நாங்க கட்டணம் வாங்கிக்கலை. எங்க வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள், அக்கம் பக்கம் தெரிஞ்சவங்கன்னு  பலருக்கும் கொடுத்துட்டிருக்கோம். இது ஒரு பாதுகாப்பு தான். ஆனாலும், வீட்டிலேயே இருப்பது, வெளியே வரும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறது, கைகளை நல்லா சோப்புப் போட்டு கழுவுறது... இவற்றை எல்லாம் கண்டிப்பாகச் செய்யணும்’’ என்கிறார் அக்கறையுடன்.

ஊரடங்கு உத்தரவு காலத்தையும் தமக்குத் தெரிந்த கலையையும் ஊருக்குப் பயன்படும் விதத்தில் உபயோகப்படுத்திக்கொண்ட இந்தப் பெண்கள், ரியலி கிரேட்!

காக்க காக்க... கவசம் காக்க...

  • துணிக் கவசங்களைக் கழற்றும்போது, முன்புறம் தொடாமல் பின்புறமுள்ள கயிற்றை அவிழ்த்து எடுத்து, அப்படியே வெந்நீரில் போட வேண்டும்.

  • துணிக் கவசங்களை சோப்பு போட்டு துவைத்து, வெந்நீரில் அலசி மீண்டும் உபயோகப்படுத்தலாம்.  

  • ஒரு முறை உபயோகத்துக்குப்பின் துவைக்காமல் மறுமுறை உபயோகப்படுத்தக் கூடாது.

  • டிஸ்போசபிள் மாஸ்க்கைக் கண்டிப்பாக ஒரு முறைக்குப் பின் பயன்படுத்தக் கூடாது.