Published:Updated:

``காத்து வேகமா அடிச்சாலே மனசு படபடனு அடிக்குது!" - தார்ப்பாய் மூடிய குடிசையில் கலங்கும் வள்ளி

எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விழலாம் என்ற நிலையில் இருக்கும் அந்தக் குடிசைக்குள்தான் வள்ளியும் அவரின் மகனும் வசித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே தாந்தாணியில் இருக்கிறது வள்ளியின் குடிசை வீடு. கஜா புயலில் முழுமையாகச் சேதமடைந்த அந்தக் குடிசை வீட்டை எடுத்துக் கட்ட முடியாத நிலை வள்ளிக்கு. குடிசையே தெரியாத அளவுக்கு தார்ப்பாய்கள் கொண்டு ஒட்டுப் போடப்பட்டு, சுற்றிலும் கம்புகள் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வள்ளியின் குடிசை வீடு
வள்ளியின் குடிசை வீடு

எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விழலாம் என்ற நிலையில் இருக்கும் அந்தக் குடிசைக்குள்தான் வள்ளியும் அவரின் மகனும் வசித்து வருகின்றனர். வள்ளியின் மகன் மலலைய்யாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட, அவர் பார்த்துக்கொண்டிருந்த ஹோட்டல் வேலை தற்போது இல்லை. தாயும் மகனும் இன்று ஒருவேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வள்ளியிடம் பேசினோம், "எனக்கு மூணு பொம்பள புள்ளைங்க, ஒரு பையன். வீட்டுக்காரர் இறந்து ரொம்ப வருஷம் ஆச்சு. கூலி வேலைகளை செஞ்சு தனியாளாதான் பிள்ளைகள வளர்த்தேன். காடு, மேடு, கரைன்னு ஓய்வில்லாம வேலை செஞ்சு எப்படியோ மூணு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக்கொடுத்து கரை சேர்த்துட்டேன்.

எங்க குடும்பத்துக்குப் போதாத நேரமோ என்னமோ தெரியலை, பொண்ணுங்க மூணும் இப்போ ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு கிடக்குதுக. அத நெனச்சாலே தூக்கமே வர மாட்டேங்குது. மூத்த பொண்ணு சாந்தி வீட்டுக்காரருக்குச் சின்ன வயசுதான். இன்னைக்கு உயிரோட இல்லை. பொம்பள புள்ளைகள வெச்சிக்கிட்டு சிரமப்பட்டுக்கிட்டு கிடக்கு. ரெண்டாவது பொண்ணு ராஜேஸ்வரியும் கணவரை பிரிஞ்சு வாழுது. ஒரே ஆறுதல், மூணாவது பொண்ணு தமிழ்ச்செல்வி மட்டும்தான். கஷ்டப்பட்டாலும் குடும்பத்தோட வாழ்ந்துக்கிட்டு இருக்கு.

வள்ளியின் குடிசை வீடு
வள்ளியின் குடிசை வீடு

பையனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வெச்சிட்டா போதும், என் கடமை எல்லாம் முடிஞ்சிடும். மலலைய்யாவை பெருசா படிக்க வைக்கல. ஹோட்டல் வேலைசெய்யுறான். கொஞ்ச நாளுக்கு முன்னாடி எனக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அந்த நேரத்துல எங்க கடன் வாங்கினான், என்ன பண்ணான்னு தெரியலை. ஆனா, மருத்துவம் பண்ணி என்னைய காப்பாத்திட்டான். பிள்ளைகளுக்காகவே கஷ்டப்பட்டு, இத்தனை வருஷத்துல இந்த குடிசை வீட்டை என்னால எடுத்துக்கட்ட முடியாம போயிருச்சு. கஜா புயல்ல மொத்தமா சுவர் எல்லாம் கொட்டிப்போய் வீடே உட்கார்ந்திருச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த நேரத்துல முகம் தெரியாத சிலர் தார்ப்பாய் கொடுத்து உதவினாங்க. அவங்க கொடுத்த தார்பாயாலதான் இன்னைக்கு அதுக்குள்ள வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். பசுமை வீடு கேட்டு பலமுறை கலெக்டர் ஆபீஸ் ஏறி இறங்கியிருக்கேன். ஆனா, எந்த பலனும் இல்லை. இந்த நேரத்துலதான், நிவர் புயல் வரப்போகுது, அதுவும் புதுக்கோட்டையைத்தான் அதிகமாக தாக்கப்போகுதுன்னு சிலர் சொன்னாங்க. வீட்டுக்குள்ள இருக்கவே பயமா இருந்துச்சு. ஆனா, எங்களுக்குத்தான் வேற வழியே இல்லையே, அதுக்குள்ளதான் கிடந்தோம். கடைசியா, அந்த புயல் இங்க வராமலே நல்லபடியா போயிருச்சு. நிவர் புயல் அடிச்சிருந்தா எங்க குடிசையும் இருந்திருக்காது, நாங்களும் உசுரோட இருந்திருக்க மாட்டோம்.

வள்ளியின் குடிசை வீடு
வள்ளியின் குடிசை வீடு

பையன் ஏதோ ஒரு வேலை வெட்டி செஞ்சுக்கிட்டிருந்தான். கொரோனா வந்து 20 நாளா திருச்சி அரசு மருத்துவ மனையிலிருந்து மீண்டு வந்தான். அதுலயிருந்து, வேலைபார்த்து வந்த இடத்துல வேலை இல்லை. கொரோனாவை காரணம் காட்டி எந்த ஹோட்டல்லயும் வேலை இல்லைன்னு அனுப்பிட்டாங்க. வீட்டுலதான் இருக்கான். கூலோ, கஞ்சியோ வேலை செஞ்சு இருக்கிறத வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். இப்போ எனக்கும் உடம்புக்கு முடியலை. பையனுக்கும் வேலை இல்லை. மழைக்கு ஒழுகுற வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக்கிட்டு கிடக்கோம். காத்து வேகமா வீசுனாலே மனசு படபடனு அடிச்சுக்குது. இந்த புயலையும் மழையவும் குளிரையும் எங்க குடிசையும் நாங்களும் எப்படி கடக்கப்போறோமோ தெரியலையே..." என்றார் வேதனையுடன்.

மழை எல்லோருக்குமானதுதான். ஆனால், எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு