Published:Updated:

முயற்சி உடையாள் - காக்கிச்சட்டை கனவு நனவாக... வழிகாட்டும் வனிதா ஐ.பி.எஸ் - புதிய பகுதி

வனிதா ஐ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
வனிதா ஐ.பி.எஸ்

பணியிட சிக்கல்களும் அவற்றை உடைக்க உதவும் தீர்வுகளும்!

முயற்சி உடையாள் - காக்கிச்சட்டை கனவு நனவாக... வழிகாட்டும் வனிதா ஐ.பி.எஸ் - புதிய பகுதி

பணியிட சிக்கல்களும் அவற்றை உடைக்க உதவும் தீர்வுகளும்!

Published:Updated:
வனிதா ஐ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
வனிதா ஐ.பி.எஸ்

ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

அருவியின் அடியில் வைக்கப்பட்ட செம்பு நிறையாது என்பார்கள். நம் சமூகத்தில் பெண் களின் நிலையும் அப்படித் தான். அவர்களுக்கு வேண்டிய எல்லாம்தான் கிடைக்கின்றனவே எனச் சொல்லி நம்ப வைப்பார்கள். ஆனால், எடுத்துப் பார்த்தால் மிஞ்சுவது என்னவோ செம்பில் தங்கும் கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர்தான். பெரும்பாலான பெண்களுக்கு இப்படி நடக்க முக்கிய காரணம் அவர் களுக்கான சரியான வழிகாட்டி கிடைக்காமல் போவதுதான்.

பதினைந்து வருடங்களுக்கு முன், பெண் பிள்ளைகளுக்கு பாவாடை-சட்டை, தாவணி யைத் தவிர வேறு ஆடைகள் பரிச்சயம் இல்லாத எங்கள் ஊரில், காக்கி உடை அணிந்து ஊருக்குள் கெத்தாக நடந்து வந்த தேவி அக்காவின் தோற்றம் எனக்கு பிரமிப்பைத் தந்தது. ‘தேவி அக்கா மாதிரி ஸ்போர்ட்ஸ்ல நிறைய பரிசுகள் வாங்கி போலீஸ் டிரஸ் போட்டுறணும்’ என ஏங்கிய பல தோழிகளை எனக்குத் தெரியும். ‘வயசுக்கு வந்த புள்ள அங்க போகக் கூடாது, இங்க போகக் கூடாது, பொம்பளப் புள்ளைக்கு போலீஸ் வேலை செட் ஆகாது’ என அட்வைஸ் செய்து எங்கள் கிராமம் அவர்கள் கனவுகளைத் தகர்த்திருக்கிறது.

முயற்சி உடையாள் - காக்கிச்சட்டை கனவு நனவாக... வழிகாட்டும் வனிதா ஐ.பி.எஸ் - புதிய பகுதி

வழிகாட்டுதல் இல்லாமலும், தவறான வழி நடத்தலாலும் தடம் மாறிப்போவதைத் தடுக்கவே இந்தத் தொடர். ஒவ்வோர் இதழிலும் ஒவ்வொரு துறையாக எடுத்து அதன் நுணுக்கங்களையும், அதில் வெற்றி பெற உதவும் விஷயங்களையும் அந்தந்த துறை சார்ந்த வெற்றியாளர்கள் நம்மோடு பகிர இருக்கிறார்கள். இந்த இதழில் காவல்துறையில் தன் கரியரைத் தொடங்க விரும்பும் பெண் களுக்காகவும், அத்துறையில் இருக்கும் பெண்களுக்காகவும், காவல்துறைத் தலைவரும், திருப்பூர் மாநகரின் தற்போதைய காவல் ஆணையாளருமான வனிதா ஐ.பி.எஸ் பகிரும் தகவல்கள்.

‘`காவல்துறையில் நுழைய நான்கு வகையான என்ட்ரி நிலைகள் இருக்கின்றன. ஐ.பி.எஸ் போன்று காவல்துறையின் உயர் பணிக்கு வருபவர்கள் அகில இந்திய அளவிலான ஆட்சிப்பணி தேர்வில் எடுத்த மதிப்பெண்ணைப் பொறுத்தே அவர்களுக்கு காவல்துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். கான்ஸ்டபிள் மற்றும் எஸ்.ஐ பணிக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்துகிறது. எழுத்துத் தேர்வுடன் உடல் தகுதியும் அவசியம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் நேரடி காவல் துணை கண்காணிப்பாளர் பதவிக்குத் தேர்வாகலாம். இந்தத் தேர்வில் பெண்களுக்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு உண்டு. பள்ளி, கல்லூரிகளில் மாநில அல்லது தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வைத்திருந்தால் கூடுதல் ப்ளஸ். கான்ஸ்டபிள் பதவிக்கு வருபவர்கள் பத்தாம் வகுப்பு படித்து, உடல் தகுதியோடு இருந்தால் காவல்துறையில் சேர்ந்துவிடலாம். அப்படி சிறு வயதில் பதவிக்கு வருபவர்கள் அடுத்தடுத்து கல்வித் தகுதிகளை உயர்த்திக் கொண்டால் பதவி உயர்வுகள் எளிதில் கிடைக்கும்.

கல்வித்தகுதி என்பதைத் தாண்டி, சமுதாயத்தில் நடக்கும் அனைத்து வகையான பிரச்னைகள் குறித்தும் அப்டேட்டடாக இருக்க வேண்டும். பொது இடங்களில் ஒரு சார்பினர் சார்ந்தோ, கட்சி சார்ந்தோ, மதம் சார்ந்தோ பேசும் பழக்கம் கூடாது.

பெண்கள் என்றாலே எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்ற கருத்து இருக்கிறது. காவல்துறைக்கு வருபவர்கள், எந்தப் பிரச்னையுடனும், எந்த நபருடனும் எமோஷனாலாக கனெக்ட் ஆவதைத் தவிர்த்து, புத்திசாலித்தனமாகப் பழகும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய பெண் காவலர்கள் இந்த விஷயத்தில் ஏமாந்து, அவர்கள் செய்யாத தவற்றுக்கு பலியான சம்பவங்கள் நிறைய நடந்திருக் கின்றன. மற்ற துறைகளில் இருப்பவர்கள் உடன் பணியாற்றும் நண்பர்களுடன் பர்சனலாக கனெக்ட் ஆகி, அண்ணன், அக்கா என உறவுமுறை சொல்லி அழைப்பார் கள். ஆனால் காவல்துறைக்கு வருபவர்கள் உறவுகளைவிட தான் அணியும் உடைக்கு தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். எனவே உடன் பணியாற்றும் நண்பர்களை அவர்களின் பணிக்குத் தகுந்த மரியாதை கொடுத்து அழைப்பது நல்லது.

வேலை நேரம், உடை, பணியின் தன்மையைப் பொறுத்தே பெண்களுக்கு காவல்துறை பொருத்தமாக இருக்காது என்று சொல்கிறார்கள். இந்தப் பிரச்னைகள் எல்லா துறை பெண்களுக்கும் இருப்பவைதான். காவல் துறையில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். சினிமாவில் ஒரு குற்றம் நடந்தால் ஒரு பெண் போலீஸ் மட்டும் தனியாக சம்பவ இடத்திற்குச் சென்று வழக்கை விசாரிப்பார். நிஜத்தில் அப்படியெல்லாம் நடப்பதில்லை. குற்றம் சம்பந்தமாக ஒரு பெண் காவலர் செல்லும் எல்லா இடங்களுக்கும் உடன் பணியாற்றும் சக காவலர்களும் செல்வார்கள். அதனால் சினிமாவில் காட்டுவதை நம்பி குழப்பிக்கொள்ள வேண்டாம்.

காவல்துறை என்பது ஆண்கள் அதிகம் உள்ள ஒரு துறைதான். ஆனால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை அல்ல. காவல் துறையிலும் பல்வேறு உயர் பதவிகளில் பெண்கள் மிளிர்கிறார்கள். நானே ஓர் உதாரணம்தானே? எனவே பெண் என்பதை மறந்து காவல்துறைப் பணியாளராக, காவலராக எல்லா இடங்களிலும் சூழலைக் கையாளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணாகச் சொல்கிறேன், காவல்துறை பெண்களுக்கு பாதுகாப்பான ஒன்றுதான்.

எல்லா துறைகளிலும் இருப்பதுபோல இங்கேயும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றையெல்லாம் மனதில் ஏற்றிக்கொண்டு மன அழுத்தத்துக்கு உள்ளாக வேண்டாம். காவல்துறைக்கு வருபவர்களுக்கு பர்சனலையும், வேலையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். உங்களின் கருத்தை மேலிடம் வரை நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் விசாரணையும், உங்களின் பணியும் தெளிவாக இருக்க வேண்டும். உங்களால் பிரச்னையைத் தீர்க்க முடியாத பட்சத்தில் தலைமைக்கு உங்களின் பிரச்னையை மனுவாக எழுதிக் கொடுத்து, தீர்வு காணலாம்.

வனிதா ஐ.பி.எஸ்
வனிதா ஐ.பி.எஸ்

காவல்துறை பணியாளர்களுக்கு பொறுப்புகள் அதிகம். தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது சிரமம்தான். ஆனால், விடுமுறை தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம். மற்ற துறை பெண்களைப் போலவே ஒன்பது மாத மகப்பேறு விடுப்பு காவல்துறை பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. மகப்பேறு தொடங்கும் முதல் மாதத்திலேயே கூட அவர்கள், ரைட்டர், டெக்னீஷியன் போன்ற பணிகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். பேன்ட் - ஷர்ட் அணிய முடியாதபோது சில மாதங்கள் காக்கி நிறத்தில் புடவை அணிந்து வரவும் அனுமதி உண்டு.

காவல்துறையில் சேர்வது என்பது கனவாக இருக்கலாம். ஆனால் சேர்ந்ததும் இந்த சமூகத்தையே மாற்றி விடுவேன் என நினைப்பது பகல் கனவு. சில பெண்களைப் பார்த்திருக்கிறேன். காவல்துறை யூனிஃபார்ம் போட்டால் ஒரே இரவில் எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன் என்று திரைப்படங்களில் வருவது போன்று ஃபேன்டஸி கனவுகளுடன் வருகிறார்கள். அப்படி வந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை உங்களின் சீனியர்களும் எடுத்திருப்பார்கள். பல காரணங்களால் அந்த மாற்றங்களும், நடவடிக்கைகளும் தள்ளிப்போயிருக்கலாம். எனவே பிரச்னையின் ஆழம் வரை தெரிந்து கொண்டு, மாற்றத்திற்கான வழிமுறைகளை யோசிக்கப் பழக வேண்டும்.

ஒரு துறையில் சேர முதல் தகுதி அதற்கான ஆர்வத்தைக் கொண்டிருப்பது தான். அந்தத் துறையில் சேர்ந்தபின் அதில் வெற்றி பெற செய்ய வேண்டியது அந்தத் துறை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பதுதான். இரண்டையும் சரியாகச் செய்தால், காவல்துறையில் பெண்கள் சாதிப்பது நிச்சயம்.

*****

''நீங்கள் காவல்துறைக்கு ஃபிட்டா?

உடை தொடங்கி மற்றவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்களைக் கடந்து செல்லும் திறன்.

எப்போதும் உடல் உழைப்பு கொடுக்கத் தயார் நிலை.

ஆண், பெண் இரு பாலினத்தவர்களையும் ஹேண்டில் செய்யும் திறன்.

பர்சனல் தாண்டி வேலைக்கு அதிக நேரம் செலவிட சம்மதம்.

எல்லா பிரச்னைகளையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனநிலை.

இந்த ஐந்தும் ஓ.கே என்றால் நீங்கள் காவல் துறை பணிக்குப் பொருத்தமானவர்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism