Published:Updated:

“பொம்பளப் புள்ளையும் கொள்ளி வைக்கலாம்!” - பஞ்சாயத்தில் பேசி உரிமையைப் பெற்ற செல்லம்மாள்

 செல்லம்மாள் தந்தையுடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லம்மாள் தந்தையுடன்...

உரிமை

“பேருக்கு மட்டும் ஆம்பளப் புள்ளைங்க இருந்தா போதுமா... பெத்து, வளர்த்து, ஆளாக்கின பெற்றோரை கடைசிக்காலத்துல பார்த்துக்க வேணாமா... பெற்றோரை கைவிட்ட பிள்ளைகளுக்குக் கொள்ளிவைக்க மட்டும் எங்கிருந்து உரிமை வரும்? பெற்றோரை பார்த்துக்கிட்ட பெண் பிள்ளைகளுக்கும் இடுகாட்டில் ஈமச்சடங்கு செய்யவும் கொள்ளிவைக்கவும் உரிமை உண்டு” - இப்படியெல்லாம் கிராமப் பஞ்சாயத்தாரிடம் வாதாடி, போராடி இறந்த தாயின் சடலத்துக்கு இடுகாட்டில் ஈமச்சடங்கு செய்து கொள்ளிவைத்து மறுநாள் தாயின் அஸ்தியைக் கடலில் கரைத்து தன் கடமையை நிறைவேற்றி யிருக்கிறார் செல்லம்மாள்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த முதலியார் தோப்புக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளான அஞ்சான் - மீனாட்சி தம்பதியின் இளைய மகள் செல்லம்மாள். செல்லம்மாளுக்கு மூன்று அண்ணன்கள், இரண்டு அக்காக்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை. ‘`மூணு அண்ணன்களும் திருமணம் முடிஞ்ச கையோடு அப்பா அம்மாவை விட்டுட்டு தனிக்குடித்தனம் போயிட்டாங்க’’ என்று மிச்சமிருக்கும் கோபத்துடன் பேச ஆரம்பித்தார் செல்லம்மாள்.

 செல்லம்மாள் தந்தையுடன்...
செல்லம்மாள் தந்தையுடன்...

‘`நான் பள்ளியில படிக்கும்போதே பட்டி மன்றப் பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழி வாளர், மேடைப் பாடகி. இதுலயெல்லாம் வரும் வருமானத்தைக்கொண்டுதான் பி.காம், எம்.எஸ்.டபுள்யூ முடிச்சேன். தனியார் நிறுவனப் பணி, தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பணி, தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல மகளிர் திட்டத்தில் பணின்னு தொடர்ந்து உழைச்சுகிட்டே இருக்கேன். நான் கல்யாணம் செய்துக்காம, ரெண்டு அக்கா, ஒரு தங்கைனு மூணு பேருக்கும் திருமணம் முடிச்சு வெச்சேன். தம்பியைப் படிக்கவெச்சு மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பினேன். கணவனை இழந்த அக்காவின் பிள்ளை கோபிநாத்தை, ரெண்டு வயசுலயிருந்து என் வளர்ப்பு மகனா வாரிக்கிட்டு படிக்கவெச்சுட்டு வர்றேன்’’ என்று இடைவெளி விட்டார் செல்லம்மாள்.

இத்தகைய குடும்பச் சூழலில்தான், செல்லம்மாளின் தாய் - தந்தை இருவரும் கடந்த இரண்டாண்டுகளாகப் படுக்கையில் இருக்க, அவர்களைக் குழந்தைகளைப்போல பராமரித்து வந்திருக்கிறார். தாய் மீனாட்சி சமீபத்தில் இறந்துவிட, சமுதாயக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து தன் இடுகாட்டு உரிமையை நிலைநாட்டியிருக்கிறார் செல்லம்மாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“அம்மாவுக்கு 75 வயசு. ரெண்டு வருஷமா நடக்க முடியல. கண்ணும் தெரியல. எனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் அவங்களுக்கு செய்ற பணிவிடையில குறைவைக்க மாட்டேன். ‘நாலு ஆம்பளப் புள்ளைகளப் பெத்தும் ஒண்ணுகூட தவிச்ச வாய்க்கு ஒரு டம்ளர் தண்ணி கொடுக்கலையே... எங்களுக்காக நீ இவ்வளவு கஷ்டப்படுறியே’னு அம்மா அடிக்கடி சொல்லி கண்கலங்குவாங்க. ‘ஏம்மா கவலைப்படுற... உனக்குப் புள்ளைக்குப் புள்ளையா, பொண்ணுக்கு பொண்ணா நான் இருக்கேன்’னு சொல்லி சமாதானப்படுத்துவேன் மரணப்படுக்கையில இருந்த அம்மாவை அவங்கள்ல பலரும் எட்டிப் பார்க்கலை” என்று சொல்லும்போதே செல்லம்மாளுக்கு கண்கலங்கி குரல் தழுதழுத்தது. சில விநாடிகள் மௌனித்து பேச்சைத் தொடர்ந்தார்.

 தாய் மீனாட்சி,  சிவக்குமார்
தாய் மீனாட்சி, சிவக்குமார்

“அம்மா இறந்தவுடனே, பெத்தவங் களுக்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடலைன்னாலும் ஆம்பளப் புள்ளைங்கதான் கொள்ளி வைக்கணும், பொம்பளப் புள்ளைங்க விலகிதான் நிக்கணும் என்ற வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு நெனைச்சேன். ‘நான்தான் கொள்ளி வைப்பேன்’னு ஊர்ப் பஞ்சாயத்துல சொன்னேன். எல்லாரும் கடுமையா எதிர்த்தாங்க. ‘பொம்பளப் புள்ளைங்க இடுகாட்டுக்கு எல்லாம் வரக்கூடாது, ஆம்பளப் புள்ளைங்க இருக்கும்போது அவங்கதான் கொள்ளி வைக்கணும்’னு சொன்னாங்க. ‘ஊர்க் கட்டுப்பாட்டை மீறினா நாங்க சாவுல கலந்துக்க மாட்டோம்’னு சில பேரு சொன்னாங்க.

ஆனா, நான் என் கருத்துல உறுதியா இருந்தேன். என் நியாயமான கேள்விகளுக்கு எல்லாம் அவங்ககிட்ட பதில் இல்லாமப்போக, ஒருவழியா ஒப்புக்கிட்டாங்க. இடுகாட்டுக்குப் போனேன். நானே கொள்ளி வச்சேன். மறுநாள் அள்ளி வச்சேன். பெத்தவங்கள புறக்கணிக்கும் ஆம்பளப் புள்ளைகளுக்கெல்லாம் என்னோட செயல் சவுக்கடியா இருக்கணும். ஆணோ, பெண்ணோ... பெத்தவங்கள கைவிடும் புள்ளைங்க வெட்கித் தலைகுனியணும்’’ என்றார் ஆவேசமாக.

கிராமத் தலைவர் சிவக்குமாரிடம் பேசினோம். “புதுசா ஒரு காரியம் செய்யும்போது சில பேர் எதிர் கருத்து சொல்லத்தான் செய்வாங்க. ஆனா, நடந்ததை எல்லாம் நாங்க கண்முன்னால பார்த்திருக்கோம். செல்லம்மா தனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சிக்காம, பெத்தவங்களுக்காகவும், கூடப் பொறந்தவங்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிச்சிருக்கு. அதனால, செல்லம்மா கொள்ளி வெச்சாதான் அவங்க அம்மா ஆத்மா சாந்தியடையும்னு இந்த முடிவுக்கு வந்து ஒத்துழைப்பு தந்தோம்” என்றார்.

நல்லதொரு தொடக்கம்!