Published:Updated:

``எனக்கு சொந்த மெஷின்னு நெனைக்கையில மனசு பூவா மலருது!" விகடன் வாசகர்களால் நெகிழும் சரோஜா

புதிய மெஷினோடு சரோஜா ( நா.ராஜமுருகன் )

''விதியை நொந்துகிட்டு வாழ்க்கையை ஓட்ட வழிதெரியாம நின்னப்பதான், விகடன்ல என்னைப் பத்தி எழுதினீங்க. இப்போ எனக்கு 18,200 ரூபாய் வரை உதவி கிடைச்சிருக்கு. அதோட, தையல் மெஷினும் வாங்கிக்கொடுத்திருக்காங்க...''

``எனக்கு சொந்த மெஷின்னு நெனைக்கையில மனசு பூவா மலருது!" விகடன் வாசகர்களால் நெகிழும் சரோஜா

''விதியை நொந்துகிட்டு வாழ்க்கையை ஓட்ட வழிதெரியாம நின்னப்பதான், விகடன்ல என்னைப் பத்தி எழுதினீங்க. இப்போ எனக்கு 18,200 ரூபாய் வரை உதவி கிடைச்சிருக்கு. அதோட, தையல் மெஷினும் வாங்கிக்கொடுத்திருக்காங்க...''

Published:Updated:
புதிய மெஷினோடு சரோஜா ( நா.ராஜமுருகன் )

விகடன் இணையதளத்தில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து, குளித்தலை சரோஜாவுக்கு வாசகர்கள் உதவியிருக்கிறார்கள். "இனி, என் வாழ்க்கையில கஷ்டம் இருக்காது. அந்த மகமாயிதான், என் கஷ்டத்தை உங்க பத்திரிகையில போடவெச்சு, இத்தனை பேரை எனக்கு உதவ வெச்சுருக்கா" என்று நெக்குருகிப்போய் பேசுகிறார், சரோஜா.

வாடகை மெஸினில் தைக்கும் சரோஜா
வாடகை மெஸினில் தைக்கும் சரோஜா
நா.ராஜமுருகன்

சரோஜா, கரூர் மாவட்டம், குளித்தலை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர். வாடகை தையல் மெஷினில் சாக்குகளில் படுதாக்கள் தைக்கும் வேலையைச் செய்துவருகிறார். சாதாரண நாள்களில் அதிகபட்சம் ரூ. 300 வரை வருமானம் கிடைக்கும். அதில் பாதியை மெஷின் வாடகையாகக் கொடுக்க வேண்டும். ஆனால், கொரோனா வந்த பிறகு, கடந்த நான்கு மாதங்களாக சரியான வருமானம் இன்றி தான் தவித்து வருவதாக நம்மிடம் கண்ணீரோடு தெரிவித்தார்.

"தினமும் 50 ரூபா சம்பாதிக்கிறதே பெருசுங்கிற நிலைமை ஆகிப்போச்சு. குடிகாரக் கணவனும் மூணு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார். ரெண்டு ஆம்புளை புள்ளைங்களும் எனக்கு சோறு போடுறதில்ல. அதனால, நானே வருமானத்துக்காக கையை ஊணி கரணம் போட்டுக்கிட்டு இருக்கேன்" என்று நம்மிடம் தன் நிலைமை பற்றி, ஆதங்கத்தோடு பகிர்ந்திருந்தார் சரோஜா. இவரின் இந்த அல்லாட்டம் நிறைந்த வாழ்க்கை பற்றி, விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். கடந்த 7-ம் தேதி, 'கரூர்: 'கொரோனாவால எங்க பொழப்பே பொசுங்கிப்போச்சு!' - படுதா தைக்கும் சரோஜாவின் சோகம்' என்ற தலைப்பில் அந்தச் செய்தி பதிவானது. செய்தியின் முடிவில், 'சரோஜாவுக்கு உதவ நினைப்பவர்கள் உதவலாம்' என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

புதிய மெஷினோடு சரோஜா
புதிய மெஷினோடு சரோஜா
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், அந்தச் செய்தியைப் படித்த வாசகர்கள் பலர், 'நாங்கள் சரோஜாவுக்கு உதவுகிறோம்' என்று பரிவு காட்டினர். அதோடு, சரோஜாவின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு வாங்கியவர்கள், அவருக்கு இதுவரை ரூ. 18,200 வரை அனுப்பிவைத்து, கொரோனா காலத்தில் திக்குத்தெரியாமல் திகைத்து நின்ற சரோஜாவை, சந்தோஷத்தில் திக்குமுக்காடவைத்துவிட்டார்கள்.

மேலும், சென்னையைச் சேர்ந்த பிரியா என்பவர், 'சரோஜா இனி சொந்த மெஷின்ல தைக்கலாம், நான் வாங்கிக்கொடுக்கிறேன்' என்று கூறி சரோஜாவை நெகிழ வைத்தார்.

ரூ. 10,500 மதிப்புள்ள தையல் மெஷினுக்குரிய பணத்தை சென்னையைச் சேர்ந்த பிரியா அனுப்ப, கரூரில் உள்ள பிரபலக் கடையில், புதிய மெஷின் வாங்க ஆர்டர் கொடுத்தோம். சரோஜா கேட்டமுறையில் மெஷினை ஆர்டர் செய்ததும், சரோஜாவை கரூருக்கு அழைத்து வந்து, அவரை மெஷினில் அமரவைத்து, தைத்துப்பார்க்க வைத்து, அவருக்குத் திருப்தியானதும் மெஷினை வழங்கினோம்.

வாடகை மெஸினில் தைக்கும் சரோஜா
வாடகை மெஸினில் தைக்கும் சரோஜா
நா.ராஜமுருகன்

கண்முண் நடப்பவை எல்லாம் நிஜமா என்று மலைப்போடு பார்த்துக்கொண்டிருந்த சரோஜா, "என் புருஷன் உயிரோட இருந்தவரைக்கும், தினமும் குடிச்சுட்டு வந்து, என்னை இல்லாத இம்சை பண்ணினார். பிள்ளைங்களாச்சும் என்னை உட்காரவச்சு சோறு போடுவாங்கனு நினைச்சேன். ஆனால், அவங்களும் என்னை பாரமா நினைச்சு ஒதுக்கிட்டாங்க. அதனால, என்னோட பணத்தேவைக்காக, வாடகை மெஷின்ல படுதா தைச்சுக்கிட்டு இருந்தேன். பத்து ரூபாய்க்கு தைச்சா, அஞ்சு ரூபாய மெஷின் ஓனருக்கும், மீதியுள்ள அஞ்சு ரூபாய எனக்கும்னு பிரிச்சுக்கணும். பெருசா வருமானம் இருக்காது. ஆனா, மாத்து தொழில் தெரியாம, இதை தைச்சுக்கிட்டு இருந்தேன்.

கொரோனா வந்து, அந்த சொற்ப வருமானத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டு. ஒரு லட்சம் வரை வாங்கியிருந்த கடனுக்கு வட்டிகட்டமுடியாம அல்லாடினேன்.

கடன் கொடுத்தவங்க வீடுவரைக்கும் வந்து வசவுச்சொல் பேசினாங்க. விதியை நொந்துகிட்டு, வாழ்க்கையை ஓட்ட வழி தெரியாம நின்னப்பதான், விகடன்ல என்னைப் பத்தி எழுதுனீங்க. இப்போ, எனக்கு ரூ. 18,200 வரை அனுப்பியிருக்காங்க. அதோட, புதுசா மெஷினும் வாங்கிக்கொடுத்திருக்காங்க.

புதிய மெஷினில் தைத்துப் பார்க்கும் சரோஜா..
புதிய மெஷினில் தைத்துப் பார்க்கும் சரோஜா..
நா.ராஜமுருகன்

எனக்கும் சொந்த மெஷின்னு நினைக்கையிலேயே, மனசு பூவா மலருது. அந்த மகமாயிதான், என் கஷ்டத்தை விகடன் மூலமா வெளியில கொண்டு வந்து, நிறைய பேரை உதவவெச்சு, என் கஷ்டத்தைப் போக்கியிருக்கு. இனி, இதை வெச்சு யார் தயவும் இல்லாம, மிச்ச வாழ்க்கையை வாழ்ந்துருவேன் தம்பி. உதவி செஞ்ச எல்லாரையும் என்னைக்கும் மறக்கமாட்டேன்'' என்று உணர்வுப்பெருக்கோடு சொல்லி முடித்தார்.

சிலரின் உதவி ஒரு பெண்ணின் வாழ்வுக்கு உயிரூட்டியிருக்கிறது!

சரோஜாவுக்கு பண உதவி செய்தவர்கள்:

சரவணன் - ரூ.500

உதயகுமார் - ரூ.3,500

மாமல்லன் - ரூ.500

பெயர் குறிப்பிடாதவர்கள் - ரூ.14,000

பிரியா (தையல் மிஷின்) - ரூ.10,500