தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

‘என்னால் முடியும்... எல்லோராலும் முடியும்!’

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி

தன்னம்பிக்கைக்கு வித்திட்ட மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி

#Motivation

'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!' என்பதன் சான்றாக பத்திரிகை உலகில் தனக்கே உரித்தான பெருமைகளையும் அனுபவங்களையும் எதிர்கால தலைமுறையினருக்கு அளப்பரிய சந்தோஷத்துடன் அளித்து வருகிறது விகடன். 1984-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மாணவப் பத்திரிகையாளர் திட்டமே இதற்கு சாட்சி.

தலைநகர் தொடங்கி கடைக்கோடி கிராமத்தின் மாணவர்களையும் பத்திரிகையாளர்களாக்கி அழகுபார்த்து வருகிறது. இன்று ஊடகத்துறை மட்டுமன்றி மருத்துவம், காவல்துறை, குடிமைப் பணிகள் என வெவ்வேறு துறைகளில் கோலோச்சி வரும் திறமைசாலிகள் விகடன் மாணவப் பத்திரிகையாளர்களே!

‘என்னால் முடியும்... எல்லோராலும் முடியும்!’

அந்த வகையில், 2019-2020-ம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நவம்பர் 21-ம் தேதி விகடன் அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னை மாணவர்கள் நேரிலும் கோவிட்-19 காரணமாக பிற மாணவர்கள் இணைய வழியிலும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறப்பான மற்றும் அதிக எண்ணிக்கையில் பங்களிப்பைச் செலுத்தியதன் அடிப்படையில் மாணவர்கள் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்படித் தேர்வானவர்களுக்கு, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், "இந்த எழுத்துப் பயணம் மாணவப் பத்திரிகையாளர்களிடம் 'என்னால் முடியும், முயற்சி செய்தால் நல்ல விஷயங்கள் நடக்கும், நம்மால் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும்' என்ற தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் கற்றுக்கொண்டதைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வீர்கள் என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை" என உற்சாகம் அளித்தவர், "கொரோனா பரவல் காரணமாக 2020-2021 ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை நடத்த இயலவில்லை. தடுப்பூசி கண்டறியப்பட்டு, கொரோனா அச்சம் தவிர்க்கப்பட்ட பிறகு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்" என்ற மகிழ்ச்சியான தகவலையும் பகிர்ந்தார்.

கடந்த 37 வருடங்களாக, மாணவப் பத்திரிகையாளர்களில் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் எனத் தன்னார்வத்தோடு கட்டுரைகளைப் படித்து, மதிப்பிட்டு அவர்களுக்கு பேனா பரிசளித்துவரும் வாசகர் சத்தியநாராயணனும் ஒரு பட்டியலைத் தயார் செய்து வந்திருந்தார். விகடனின் தேர்வும் வாசகர் பிரதிநிதியான அவரின் தேர்வும் ஒரே மாதிரியாக இருந்தது. வாசகர்களின் அதே அலைசரிசையில் விகடனும் பயணிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகவும் அமைந்தது.

சிறப்பாகப் பங்களித்த மாணவர்கள் அவுட்ஸ்டாண்டிங், எக்ஸலன்ஸ், டிஸ்டிங்ஷன் என்ற பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். எண்ணிக்கையின் அடிப்படையில் 220-க்கும் அதிகமான கட்டுரைகளை அளித்து விருது பெற்றவர் மருத்துவ மாணவியான பா.கவின்.

"திட்டம் நிறைவுபெற்றாலும் நீங்கள் என்றுமே விகடனின் குழந்தைகள்தான். உங்களுக்காக விகடனின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். எங்களுடன் எப்போதும் இணைந்து பயணிக்க வாழ்த்துகள்" என்று நன்றி அறிவித்தார் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பாலமுருகன்.

‘என்னால் முடியும்... எல்லோராலும் முடியும்!’
‘என்னால் முடியும்... எல்லோராலும் முடியும்!’

விருது பெற்றவர்களின் அனுபவ பகிர்வுகள்...

“கடந்த ஆண்டு இத்திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட போது, முந்தைய ஆண்டில் விருது பெற்றவர்களில் பெண்கள் யாரும் இல்லை. அப்போதே இதை முறியடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இலக்கைவிட அதிக கட்டுரைகள் எழுதி அதைச் சாதித்திருக்கிறேன்.”

- பா.கவின்

“தமிழுக்கும் எனக்குமான தொடர்பை நீட்டிக்கச் செய்தது, மன தைரியத்தைப் பெருக்கியது என விகடன் எனக்குக் கற்றுக்கொடுத்தது அதிகம். விகடன் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்.”

- ஆ.வல்லபி

“வீடியோ எடிட்டராக விகடனில் நுணுக்கமான நிறைய விஷயங் களைக் கற்றுக்கொண்டேன். புகைப்படக்காரராகவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிலும் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு மறக்க முடியாதது.”

- க.ஸ்ரீநிதி

“விகடனில் இந்த ஓராண்டு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. அந்த அனுபவத்தின் மூலம் என் திறமையையும் கூர் தீட்டிக் கொண்டேன்.’’

- தி.ஷிவானி