Published:Updated:

எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்...

பல்துறை ஆளுமைகள்
பிரீமியம் ஸ்டோரி
பல்துறை ஆளுமைகள்

ஆளுமைகளின் மகளிர் தின மெசேஜ்!

எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்...

ஆளுமைகளின் மகளிர் தின மெசேஜ்!

Published:Updated:
பல்துறை ஆளுமைகள்
பிரீமியம் ஸ்டோரி
பல்துறை ஆளுமைகள்

புதுப்புடவை உடுத்துவதில் தொடங்கி, வாழ்த்துப் பரிமாற்றம்வரை ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினக் கொண்டாட்டம் மற்றுமொரு நாளாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகளிர் தின நிகழ்வையொட்டி, பெண்களின் எண்ணவோட்டத்தில் எப்படிப்பட்ட மாற்றங்கள் வர வேண்டும் என மெசேஜ் பகிர்கிறார்கள் பல்துறை ஆளுமைகள் சிலர்.

எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்...

அன்பு மட்டுமல்ல, மரியாதையும் முக்கியம்! - ஃபாத்திமா பாபு, ஊடகத்துறை

``எக்காரணம் கொண்டும் கல்வியைக் கைவிடாதீர்கள். பொருளாதாரரீதியில் மற்றவர்களைச் சார்ந்து இருக்காதீர்கள். போதுமான கல்வி பெற முடிய வில்லையென்றாலும், கைத்தொழில் மூலமாக சொந்தக்கால்களில் நில்லுங்கள். வாழ்க்கைத்துணையிடமிருந்து அன்பு மட்டுமல்ல, மரியாதையும் வேண்டுமென்பதில் தெளிவாக இருங்கள். உரிமை என்ற பெயரில் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவதை அனுமதிக்காதீர்கள். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் வேலைகளைப் பகிர்ந்து செய்யுங்கள். தற்காலிக பிரச்னைகள் வரும்போது ‘இனி உன்கூட வாழ மாட்டேன்’ என்பது மாதிரியான நீண்ட கால முடிவுகளை எடுக்காதீர்கள். கூடவே மனிதர்களை மன்னிக்கவும், அவர்களின் தவறுகளை மறக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.’’

எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்...

மென்ட்டாராக மாறுங்கள்! - மதுசரண், தொழிலதிபர்

``16 வருடத் தொழில்முனைவோர் அனுபவத்தில், நான் என் பிசினஸ், என் வெற்றி என ஒருநாளும் நினைத்ததில்லை. என்னை மாதிரியே பல பெண்களை தொழிலில் ஜெயிக்கவைத்து, தொழில்முனைவோர் ஆக்கும் எண்ணத்தில், பெண்களுக்குக் கடன் வாங்க உதவி செய்வதில் தொடங்கி, மார்க்கெட்டிங் வரை ஒரு மென்ட்டராராக உதவிக் கொண்டிருக்கிறேன். கொரோனா காரணமாக இயங்காமலிருந்த நிறுவனங்களை மறுபடி இயங்க வைக்க இப்போது உதவிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் எந்தத் துறையில் சக்ஸஸ்ஃபுல்லாக இருந்தாலும் அடுத்து வரும் தலை முறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அது நம் கடமையும்கூட.’’

எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்...

ஆடை அரசியலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்! - பாலபாரதி, அரசியல்வாதி

``ஒருபக்கம் ஹிஜாப் போடக் கூடாது என்று தடை போடுகிறார்கள். இன்னொருபக்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்குப் பெண்களின் ஆடைகளைக் குறைத்து விளம்பர மாடலாக நடமாட விடுகிறார்கள். ‘அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணுங்க’ என்ற அறிவுரையில் ஆரம்பித்து ‘உங்க டிரஸ்தான் பாலியல் வன்முறைகளுக்குக் காரணம்’ என்ற குற்றச்சாட்டுகள் வரை பெண்களுடைய உடைகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த ஆடை அரசியலுக்கு எதிராக சாதி, மதம், அரசியல் பிரிவுகள், அமைப்புகள் என அத்தனை வேறுபாடு களையும் தாண்டி பெண்கள் ஒன்றுபட வேண்டும்.’’

எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்...

பெண்ணால் முடியும் என நம்புங்கள்! - இன்னசென்ட் திவ்யா, ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர்

``நான் பெண். என்னால் இந்தந்தத் துறைகளில்தான் வேலைபார்க்க முடியும். இந்த வேலைகளைச் செய்ய முடியாது என உங்களை நீங்களே குறுக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் வேலைபார்க்கும் துறைக்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். உங்களுக்கென்று சலுகைகள் எதிர்பார்க்காதீர்கள். நம்மை நாமே வீக்கர் செக்ஸ் என்று நம்பிக் கொண்டிருப்பதைத்தான், ஆண்கள் நமக்கெதிரான ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.’’

எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்...

ஜெயிக்கப் போவது நீங்களாகவும் இருக்கலாம்! - டாக்டர் ஆர்த்தி, தமிழ்நாட்டின் முதல் பெண் பவர் லிஃப்டர் ரெஃப்ரீ

``பவர் லிஃப்டராக வேண்டுமென நான் விரும்பியபோது ‘குழந்தைகள் பிறந்துட்டதால உன் உடம்புல சத்திருக்காது. உன்னால வெயிட் தூக்க முடியாது’ என்றெல்லாம் சொன்னார்கள். இரும்பு ராடுக்கும் வெயிட்டுக்கும் ஆண், பெண் வித்தியாசமெல்லாம் தெரியாதெனச் சொல்லிவிட்டுக் களமிறங்கினேன். காம்ன்வெல்த் போட்டியில் மட்டும் ஐந்து தங்க மெடல்கள் வாங்கினேன். தமிழ்நாட்டின் முதல் பெண் பவர் லிஃப்டர் ரெஃப்ரீயும் ஆனேன். விளையாட்டு, ராணுவம் போல பெண்கள் குறைவாக இருக்கும் துறைகளில் கால் பதிக்கத் தயங்காதீர்கள். அப்படியொரு துறையில் ஜெயிக்கப்போகிற முதல் பெண் நீங்களாகவும் இருக்கலாம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism