லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஒரே வேலை, ஒரே உழைப்பு... ஆணுக்கான சம்பளம் ஏன் பெண்ணுக்கு இல்லை?

ஒரே வேலை, 
ஒரே உழைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரே வேலை, ஒரே உழைப்பு

#Utility

“இப்போவெல் லாம் முன்ன மாதிரி ஆண், பெண் பேதம்லாம் யாரும் பார்க்குறது இல்ல. நீங்களே பாருங்களேன்... பெண்கள் எல்லா துறைகள்லயும் வேலைபார்க்குறாங்க. உண்மையைச் சொல்ல ணும்னா, வேலையில்லாம பசங்க சுத்துற அளவுக்கு பொண்ணுங்க திண் டாடுறது இல்ல. வேலை, புரொமோஷன்னு போய்க்கிட்டே இருக்காங்க’’ என்ற குரல்கள் பரவிக்கிடக்கும் கால கட்டம் இது.

ஆனால் உண்மையில், ஒழுங்கமைக் கப்பட்ட துறைகளில் (Organised sectors) வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் பெண்களின் சதவிகிதம் மிகக் குறைவே. அந்தப் பெண்களும் ஊதியப் பாகுபாட்டுடன்தான் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு கசப்பான உண்மை. ஆம்... ஒரே துறை, ஒரே வேலை, ஒரே உழைப்புதான். ஆனால், ஆண்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியம் இங்கு பெண்களுக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை, வழங்கப் படுவதில்லை.

‘எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கு பெண் இளைப்பில்லை’ என்று பாரதி அப்போதே பாடிவிட்டார். அறிவு ஓகே... சம்பளம்? லிங்க்ட்இன் நிறுவனம், ஜி.எஃப்.கே என்ற நிறுவனத்துடன் இணைந்து 2021-ல் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் ஐந்தில் ஒருவர், தங்கள் நிறுவனம் ஆண்களுக்கே சாதகமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், ஆண்களைவிட தங்களுக்குக் குறைவாக சம்பளம் நிர்ணயிக்கப்படுவதாக 37 சதவிகிதப் பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சில ஆயிரம் பெண்களின் பதில் இது. இன்னும் ஆய்வு பரந்த தளத்தில் செய்யப்படும்போது, இந்த சதவிகிதம் இன்னும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

ஒரே வேலை, ஒரே உழைப்பு... ஆணுக்கான சம்பளம் ஏன் பெண்ணுக்கு இல்லை?

இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் ஆர்டிகிள் 39, சமமான வேலை செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், இது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். அவருக்குக் கொடுக்கப்படும் ஊதியம், ஆண்கள் அணியின் கேப்டன் கோலியின் சம்பளத்தில் 15 சதவிகிதத்துக்குள் மட்டுமே. மிதாலியும் விராட்டும் விரட்டும் கிரிக்கெட்டின் பந்துகளும், ரன்களும், ரூல்களும் ஒன்றுதான். அத்துடன் அவ்விளையாட்டுக்கான பயிற்சியும் உடல் உழைப்பும் இருவருக்கும் ஒன்றுதான். எனினும், சம்பளத்தில் மட்டும் ஏன் இத்துணை வேறுபாடு?

விளம்பரங்கள், விளம்பரதாரர்கள், ஆண்கள் அணியின் ஆட்டத்தைப் பார்க்க வரும் கூட்டம், அதன் மூலம் கிரிக்கெட் போர்டுக்கு வரும் வருமானம் என இன்னும் பல இத்யாதி காரணங்களைத் தாண்டி, இதை நாம் அணுக வேண்டும்.

கிரிக்கெட் மட்டுமா? இந்திய மக்களின் வாழ்வுடன் ஒன்றிவிட்ட திரைத்துறையிலும் இதே கதைதான். சிறிது நாள்களுக்கு முன், ஆண் நடிகர்களுடன் ஒப்பிடும்போது, தான் வாங்கும் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் என்பது மிகவும் பாகுபாடானது என்றார் பாலிவுட் நடிகை கங்கனா. நம்மூர் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் இரண்டு கோடி ரூபாய் சம்பளம்தான், இதுவரையிலும் நடிகைகளுக்கான சம்பளத்தில் அதிகத் தொகை என்று கருதப்படுகிறது.

முறைசாரா துறை (Un-Organised Sectors) பணிகள் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட துறை (Organised Sector) வேலைவாய்ப்புகள் வரை என்று எங்கும் நிறைந்திருக்கிறது இந்தப் பாலின ஊதிய பாகுபாடு. முறைசாரா துறைகளான, வேலியிட்ட வயலில் தினக்கூலி வேலைக்குக் கதிரறுக்கப் போகும் ஆண் - பெண்களின் ஊதியத்தில் தொடங்குகிறது பெண்களுக்கான ஊதிய பாகுபாடு. ஒழுங்கமைக்கப்பட்ட உச்ச துறை யான சிலிக்கான் வேலியில் பெரும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களின் சம்பளம் வரையிலும் அது நீள்வது துரதிர்ஷ்டம்.

என்ட்ரி லெவல் எனப்படும் தொடக்க நிலையில் ஆண் - பெண் பேதமின்றி அனைவருக்கும் ஒரே சம்பளம் என்று இருந்தாலும், பதவி உயர்வு பெற்றுச் செல்லும் ‘கரியர் குரோத்’ என்ற பரமபத விளையாட்டில் மேலே ஏறும்போது, ஆண் - பெண் ஊதிய தராசில் ஆண்களின் பக்கம் கனம் கூடி கீழே வரும். பெரும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் `என்ட்ரி லெவல்' எனப்படும் வேலையில் தொடங்கி மிடில் லெவல் மேனேஜ்மென்ட் என்ற நிலை வரையிலும் பாலின பாகுபாடு இல்லாமல் வழங்கப்படும் ஊதியமானது, சீனியர் மேனேஜர் என்ற நிலையைத் தாண்டி உயரே செல்லச் செல்ல மாறுகிறது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்க இதுதான் நிலை. குறிப்பாக, அமெரிக்காவின் ஐடி துறையில் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பன்னாட்டு நிறுவனமொன்றில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர் பகிர்ந்துகொண்டவை... ‘‘நான் இங்கே வேலைக்குச் சேர்ந்த புதிதில், காலியாக இருந்த வைஸ் பிரசிடென்ட் பணிக்கு, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இவ்வளவு சம்பளம் என்றும், அதுவே ஆணாக இருந்தால் அதைவிட சில சதவிகிதம் அதிகமான சம்பளம் என்றும் நிர்ணயித்திருந்தார்கள். ஒரே வேலையைச் செய்யும் ஆள் எடுக்கும்போது திறன் மற்றும் அவர்கள் இதற்கு முன் வாங்கிய ஊதியத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட வேண்டிய ஊதியத்தை, ஆண் - பெண் என்பதன் அடிப்படையில் ஏன் நிர்ணயிக்க வேண்டும் என்று நான் கேள்வி கேட்டேன். அதைத் தொடர்ந்து, Functional role எனப்படும் தேர்ந்தெடுக்கவிருக்கும் பணியாளர் பொறுப்பேற்றுக்கொள்ளும் இலக்கு களைப் பொறுத்து குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.''

இப்படி, ஒரு நிறுவனத்தில், ஊதியத்தை நிர்ணயிக்கக்கூடிய மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் மனமாற்றம் பெற்றால்தான், பெண்களின் ஊதியத்தில் சமத்துவம் நிலவும். ஓர் ஊழியரின் சம்பளம் என்பது திறன் சார்ந்ததாக இருக்க வேண்டும், பாலினம் சார்ந்திருக்கக் கூடாது என்பது நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். இது தொடர்பான தொடர் உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, சட்டப்புத்தகத்தின் பக்கங்களில் இருப்பதை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

நம் உழைப்புக்கான ஊதியத்தைக் கேட்போம் தோழிகளே!

நாம் செய்ய வேண்டியது என்ன?

பெண்கள் தங்களின் ஊதியத்தை எந்த சமரசமும் இல்லாமல் கேளுங்கள் (Negotiate). அதுதான் ஆரம்பம். உங்கள் அலுவலகத்தில் அப்படிக் கேட்கும் முதல் பெண்ணாக நீங்கள் இருக்கும்போது, பாசிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டு பார்வைகளோடும் நீங்கள் திரும்பிப் பார்க்கப்படுவீர்கள்தாம். நெகட்டிவ் பார்வைகளைப் புறந்தள்ளுங்கள். பழைமையை உடைக்கும்போது எதுவுமே இங்கு எதிர்மறையாகத்தான் பார்க்கப்படும். பாசிட்டிவ் பார்வைகள்தான் முக்கியம். அது, உங்களைத் தொடர்ந்து பல பெண்களும் தங்களின் ஊதியத்தைக் கேட்க அவர்களை முன் நகர்த்தும்.

பாலின ஊதிய பாகுபாடு பற்றிய செய்திகளை, தகவல்களை, ஆய்வு முடிவுகளை அறிந்து கொள்ளுங்கள். அந்த அறிவு, உங்கள் உரிமைக்குரலின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

நினைவில்கொள்ளுங்கள்... நாம் கேட்பது பெண்கள் என்பதாலேயே ஊதியத்தில் சலுகை அல்ல. ஆண்களுக்கு இணையான உழைப்பைக் கொடுக்கும்போது அவர்களுக்கு இணையான சம்பளம் ஏன் இல்லை என்பதைத்தான். எனவே, உங்கள் பணிக்கான 100% உழைப்பையும், பதவி உயர்வுக்கான அதிக உழைப்பையும் கொடுங்கள். கொடுத்த பின்னர் புரொமோஷனை, அதற்குரிய சம்பளத்தை டிமாண்ட் செய்யும்போது இயல்பாகவே உங்கள் தைரியம் அதிகரிக்க வேண்டும்.

ஆண்களுக்கு இணையான சம்பளம், அவர்களைவிட அதிகமான சம்பளம் என நீங்கள் வியக்கும் வெற்றிப் பெண்ணிடம் கரியர் ஆலோசனைகளைக் கேளுங்கள். அவர் ஒரு சாதனையாளராக இருக்க வேண்டியதில்லை. உங்கள் சக அலுவலராக இருக்கலாம். அவரிடம் கற்றுக்கொள்ளும் பாடங்களை உங்கள் கரியரில் செயல்படுத்துங்கள்.

ஊதியப் பாகுபாட்டை ஒழுங்குமுறைப் படுத்தவல்ல ஆணையங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அவர்களின் உதவியை நாடலாம்.