தன்னை `லேடி ஒபாமா' என்றவர்களுக்கு கமலா ஹாரிஸ் சொன்ன பதில்... முக்கியமான மெசேஜூம் கூட!

ஒரு பெண்ணின் திறமையையும் வெற்றியையும் அளக்க ஆணின் வெற்றி அளவுகோல்கள் இனியும் தேவை இல்லை; அதற்கு நம் வெற்றி - ஒரு பெண்ணின் வெற்றிதான் தேவை. அத்தகைய வெற்றியைத்தான் கமலா ஹாரிஸ் நமக்கு தந்திருக்கிறார்.
கமலா ஹாரிஸ்... இன்று உலகம் முழுவதும் ஓர் அசரீரி போல் ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர் இது! அமெரிக்காவின் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது தேர்தல் வெற்றி மட்டுமல்ல; வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே, 2020-ம் ஆண்டில்தான் முதன்முறையாக ஒரு பெண் துணை அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். என்றாலும், அமெரிக்காவில் ஒடுக்கப்படும் மக்களான கறுப்பினப் பின்னணியைக் கொண்ட கமலா ஹாரிஸ் முதல் பெண் துணை அதிபராகியிருப்பதன் மூலம், ஒரு சகாப்தத்தையே உருவாக்கியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தன் வெற்றியை, துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பின் வழங்கிய தன் முதல் உரையில் மிகவும் அழுத்தமாகப் பதிவுசெய்தார்.
``நான் இங்கு இருப்பதற்கு முதல் காரணமாக இருந்த பெண்... என் தாய்... எங்கள் இதயங்களில் எப்போதும் வாழும் ஷ்யாமளா கோபாலன் ஹாரிஸ். அவர் தனது 19 வயதில் இந்தியாவிலிருந்து இங்கு வந்தபோது, இப்படியான ஒரு தருணத்தைக் கற்பனை செய்திருக்க மாட்டார். ஆனால், அமெரிக்காவில் இப்படியான ஒரு தருணம் சாத்தியமாகும் என்பதை அவர் மிக ஆழமாக நம்பினார்.
நான் அவரையும், பல தலைமுறைகளாக இங்கு இருக்கும் பெண்கள் - கறுப்பினப் பெண்கள், ஆசியப் பெண்கள், லத்தின், பூர்வகுடி அமெரிக்க பெண்கள் என வரலாற்றில் இந்தத் தருணத்தை ஏற்படுத்த உழைத்த அனைத்து பெண்களையும் நினைத்துக்கொள்கிறேன்” என்று நன்றி தெரிவித்தார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸுக்கு 5 வயது இருக்கும்போது, அவர் பெற்றோர் விவாகரத்து செய்தனர். அவரின் தாயார் இவரையும், இவரின் சகோதரி மாயா ஹாரிஸையும் சிங்கிள் பேரன்ட்டாக வளர்த்தெடுத்தார். அமெரிக்காவில் கறுப்பினப் பெண்களாக வளரவிருந்த தன் மகள்களுக்கு, அந்த நாடு தங்களை ஒடுக்கப்பட்ட மக்களாகப் பார்க்கும் பார்வையையும், நடத்தும் முறையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும், உரிமைக்காகப் போராடும் குணத்தையும் ஊட்டியே வளர்த்தார்.
கமலாவின் அம்மா, மார்பகப் புற்றுநோய் மருத்துவ நிபுணர். அவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே, கறுப்பின மற்றும் பெண்களின் உரிமைக்களுக்காகக் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குணம் அப்படியே கமலா ஹாரிஸுக்கும் வாய்த்தது.

நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
கமலா ஹாரிஸின் வெற்றியை, அவர் ஓர் இந்தியர் என்பதற்காகவோ, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காகவோ கொண்டாடுவதைவிட, ஒரு பெண்ணாக அவரின் வெற்றியைக் கொண்டாடுவதுதான் மிகவும் அவசியம்! இன்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அடக்குமுறைகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் நிலையில், கமலா ஹாரிஸ் என்ற பெண்ணின் வெற்றியைக் கொண்டாடுவதுடன் கூடவே, பெண்களுக்கு எதிரான சவால்களை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்லும் ஓர் ஊக்கசக்தியாக அவரைப் பார்ப்பதுதான் சரியான பார்வை! இந்த எண்ணத்தை விதைக்கும் வகையில்தான் அவரின் உரையும் இருந்தது.
இந்தப் பதவிக்கு நான் முதல் பெண்மணியாக இருக்கலாம். ஆனால், கடைசியாக இருக்க மாட்டேன். ஏனென்றால், இந்த நிகழ்வைப் பார்க்கும் ஒவ்வொரு சிறுமியும், இந்த நாடு இதுபோன்ற வெற்றிகளுக்கான பல சாத்தியங்களைக் கொண்டது என்பதை உணர்வார்கள். நம் நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும், அவரின் பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஒரு தெளிவான செய்தியைக் கூற விரும்புகிறேன்: லட்சியத்துடன் கனவு காணுங்கள், உறுதியுடன் முன்னேறிச் செல்லுங்கள், மற்றவர்கள் உங்களைக் காண இயலாத இடத்தில் வைத்து உங்களைப் பாருங்கள். ஏனென்றால், அத்தகைய ஓர் இடத்தை மற்றவர்கள், முன்பு ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அத்தகைய தருணம் வாய்க்கும்போதெல்லாம் நிச்சயம் கைதட்டுவார்கள்கமலா ஹாரிஸ்
இந்தச் சமூகம் பெண்களைப் புகழவோ இகழவோ ஒரு வரியை அடிக்கடி பயன்படுத்தும். `அவ ஆம்பள மாதிரி இருக்கிறா' என்று சொல்லும். அல்லது `அவளுக்கு ஆம்பள மாதிரி தைரியம்' என்று சொல்லும். இதற்குப் பதிலடியாக கமலா ஹாரிஸின் வாழ்க்கையில், வார்த்தைகளிலிருந்து ஒரு சிறு உதாரணம்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் இருக்கும் கமலா ஹாரிஸை, பலரும் பராக் ஒபாமாவின் பெண் வெர்ஷன் என்றே அழைப்பார்கள். தான் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கமலா ஹாரிஸ், ``என் வெற்றியையும் பலத்தையும் யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. என் முந்தைய வெற்றியையும் செயலையும் கொண்டே என்னை அளக்க வேண்டும்” என்று அழுத்தமாகக் கூறினார்.

இந்தப் பண்பைத்தான் நாம் உணர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் திறமையையும் வெற்றியையும் அளக்க ஆணின் வெற்றி அளவுகோல்கள் இனியும் தேவை இல்லை; அதற்கு நம் வெற்றி - ஒரு பெண்ணின் வெற்றிதான் தேவை. அத்தகைய வெற்றியைத்தான் கமலா ஹாரிஸ் நமக்கு தந்திருக்கிறார். அவர் தமிழ் மண்ணை பூர்விகமாகக் கொண்டுள்ளதால், நமக்குள் நம்மை அறியாமல் ஒரு பிணைப்பு உருவாகியுள்ளது. அவர் நிகழ்த்தியது போன்ற வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவதுதான், இந்தப் பிணைப்பை அர்த்தமுள்ளதாக்கும்!