`என் அப்பா யார்?' - மகனின் கேள்விக்காக 27 ஆண்டுகளுக்குப் பின் தாய் தொடங்கிய சட்டப் போராட்டம்!

உத்தரப்பிரதேச மாநிலம் உதம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், 27 வருடங்களுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீது புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உதம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் 27 வருடங்களுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீது புகார் கொடுத்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் அளித்த இந்தப் பெண் 1993-ம் ஆண்டு தனது 12-ம் வயதில், தன் அக்கா மற்றும் அவரின் கணவருடன் ஷாஜஹான்பூரில் வசித்து வந்தார். ஒருநாள் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகி ஹாசன் என்பவர் சிறுமியை சிறார் வதை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து நாகி ஹாசனின் தம்பியான குத்துவும் சிறுமியை சிறார் வதை செய்துள்ளார்.
அண்ணன், தம்பி இருவரும் பலமுறை சிறுமியை சிறார் வதைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். இதனால் சிறுமி கர்ப்பமானார். அவருக்கு 13 வயதில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமியின் குடும்பத்தினவர், அவர்களது சொந்த ஊரான உதம்பூரில் உள்ள ஒருவருக்கு அக்குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டனர்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரின் அக்கா மற்றும் அக்கா கணவர், காஜிப்பூரில் உள்ள ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில், தன் மனைவி திருமணத்துக்கு முன்னரே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர் என்பதை அறிந்து, 10 ஆண்டுகளுக்குப் பின் அவரை அவரின் கணவர் விவாகரத்து செய்துவிட்டார். இதனால் அந்தப் பெண் தனது சொந்த ஊரான உதம்பூருக்கு வந்துவிட்டார்.
இதற்கிடையே, அந்தப் பெணின் மகன் பெரியவனாகிவிட்டான். தான் வளர்ப்பு மகன் என்பதை அறிந்த அவன், தன் அப்பா, அம்மா யாரென்று விசாரிக்கத் தொடங்கினான். இதில், தன் தாய் இவர்தான் என்று பாதிக்கப்பட்ட பெண்ணை அறிந்துகொண்டு, அவரை சந்தித்துள்ளான். தன் அம்மாவிடம், தன் அப்பா யார் என்று கேட்டுள்ளான்.
இந்தக் கேள்வியால் திகைத்துப்போன அந்தப் பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த இருவரில், தன் மகனுக்குத் தந்தை யார் என்பதை அறிவதற்காக, அந்த இருவர் மீதும் போலீஸில் புகார் கொடுத்து, அதன் மூலம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், இந்தப் புகாரை போலீஸார் ஏற்க மறுத்தனர். எனவே, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் சென்று மனு கொடுத்து தன் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்ததால் கோர்ட்டின் உத்தரவுப்படி போலீஸார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, நகர எஸ்.பி பிரவீன் குமார் யாதவ் கூறுகையில், "சம்பந்தப்பட்ட பெண் குற்றம் சாட்டும் அண்ணன் தம்பியான நாகி ஹாசன் மற்றும் குத்துவை அடையாளம் கண்டுள்ளோம். இருவர் மீதும் கூட்டுப்பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் டி.என்.ஏ பரிசோதனைக்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இச்சம்பவம் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது என்பதால் ஆதாரங்களைச் சேகரிக்க முயன்றுவருகிறோம்" என்றிருக்கிறார்.

தாய், தந்தை அரவணைப்பின்றி அக்கா வீட்டில் வளர்ந்த சிறுமிக்கு, சிறார் வதை, குழந்தைப் பருவத்திலேயே அம்மாவானது என்று வாழ்க்கை மிக விரைவிலேயே கசப்பான பக்கங்களைக் காட்டியுள்ளது. பெற்ற பிள்ளையைத் தத்துக் கொடுத்தது, திருமணம், மணமுறிவு என்று தொடர்ந்து இன்னல்களை அனுபவித்தவர், தற்போது மகனுக்காக சட்டத்தின் வழியே பதில் சொல்ல முடிவெடுத்திருக்கிறார். பதில் கிடைக்கட்டும் விரைவில்.