Published:Updated:

``முதல்வரிடம் பணி ஆணை வாங்கியபோது கண் கலங்கிவிட்டேன்..!" - ஓதுவார் சுஹாஞ்சனா நெகிழ்ச்சி

சுஹாஞ்சனா
சுஹாஞ்சனா ( படம்: சொ.பாலசுப்ரமணியன் / விகடன் )

தமிழகமே சுஹாஞ்சனாவின் பணிநியமனத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் வாழ்த்துகள் சொல்லி சுஹாஞ்சனாவிடன் பேசினோம்.

­­``தென்னாடுடைய சிவனே போற்றி…

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…’’

சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயில் சந்நிதியில் ஓதுவாராகப் பணியேற்ற முதல் நாள், சுஹாஞ்சனா பாடிய இந்த பாடல்தான் சமூக வலைதளத்தில் சமீபத்திய வைரல். தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ், ஆகம முறைப்படி பயிற்சிபெற்ற 58 பேருக்கு, கடந்த சனிக்கிழமை பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த 58 பேரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் சுஹாஞ்சனா என்ற 27 வயதுப் பெண்ணும் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுஹாஞ்சனா
சுஹாஞ்சனா
படம்: சொ.பாலசுப்ரமணியன் / விகடன்

2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அங்கயற்கண்ணி என்ற பெண், ஓதுவாராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அங்கயற்கண்ணிக்குப் பிறகு நியமிக்கப்படும் பெண் ஓதுவார் சுஹாஞ்சனாதான். தமிழகமே சுஹாஞ்சனாவின் பணிநியமனத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் வாழ்த்துகள் சொல்லி சுஹாஞ்சனாவிடன் பேசினோம்.

``கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்தான் என் சொந்த ஊர். என்கூடப் பிறந்தது ஒரு அண்ணன் மட்டும்தான். அப்பாவுக்கு டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில வேலை, அம்மா ஹவுஸ் வொய்ஃப். ரொம்ப எளிமையான குடும்பம். எல்லோருக்கும் பக்தி ஈடுபாடு அதிகம். அடிக்கடி கோயிலுக்கு கூட்டிகிட்டுப் போவாங்க. எனக்கு ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சதும் ஓம் சக்தி கோயிலுக்கு அடிக்கடி போக ஆரம்பிச்சேன். அங்கே நிறைய பாடல்கள் பாடுவாங்க. அதைக் கேட்கும்போது, நாமளும் இதேபோல பாடணும்னு தோணும்.

வீட்டுக்கு வந்து பயிற்சி பண்ணுவேன். அடுத்த முறை போகும்போது, நான் அந்தப் பாடலை பாடிக்காட்டுவேன். நல்லா இருக்குன்னு எல்லோரும் பாராட்டுவாங்க. கடவுளைப் புகழந்து பாடுறது எனக்கு ரொம்ப பிடிச்சுப்போக அதுலயே மூழ்கிட்டேன். அண்ணன் இன்ஜினீயரிங் சேர்ந்தாலும் எனக்கு அதுமாதிரியான படிப்புகள்ல ஈடுபாடு வரலை. பத்தாவது முடிச்சதும் நான் பாட்டு கத்துக்கப் போறேன்னு வீட்டுல சொன்னேன். மறுப்பு சொல்லாம உடனே சம்மதிச்சுட்டாங்க. என் பெற்றோர்கள் என் விருப்பத்துக்கு மதிப்பளிச்சதுதான் இன்னைக்கு எனக்கு கிடைச்ச வாய்ப்புக்கு முதல் காரணம்” நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பேசுகிறார் சுஹாஞ்சனா..

``பாட்டு கத்துக்குறதுன்னு முடிவான பிறகு, கரூரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில், திருமுறை பாடல்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். மூன்று வருட படிப்பு அது. கரூர் குமார சாமிநாத ஓதுவார் அய்யாதான் என் குருநாதார். படிக்கும்போது, இதுபோல கோயிலில் ஓதுவார் ஆகணும்னு நான் நினைச்சுகூட பார்த்ததில்லை. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை முழுமையா கத்துக்கிட்டு எங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ள குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கணும்ங்கிற எண்ணத்துலதான் படிச்சேன்.

"100 ஆண்டு சமூகநீதிப் பயணத்தில் ஒரு மைல் கல்"-அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன்

படிச்சு முடிச்சதும், என் ஆசைக்கு ஏத்தமாதிரியே ஒரு வேலை கிடைச்சது. கோவை மாவட்டத்தில் உள்ள `மங்கையர்கரசியர் அறநெறி அறக்கட்டளை’யினர் நிறைய அறநெறி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பல பள்ளிகளுக்கு அனுப்பி பள்ளி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம், ஒழுக்கநெறிகளைக் கற்பிக்கும் பணியை முன்னெடுத்தாங்க. அந்தப் பணியில் எனக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஐந்து ஆண்டுகள் ஏராளமான பள்ளிக் கூடங்களில் திருமுறை பாடல்களை சொல்லிக்கொடுத்தேன். அதேபோல கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சில ஆண்டுகள் பணியாற்றினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான் எனக்குத் திருமணம் ஆனது. திருமணத்துக்குப் பிறகு, என்னுடைய இசை வாழ்க்கை எப்படி இருக்குமோனு பயந்துகிட்டிருந்தேன். ஆனா, இன்ஜினீயரான என் கணவர் கோபிநாத்தும் அவருடைய குடும்பத்தினரும், `உனக்குப் பிடிச்சதை செய்’ னு என்னை உற்சாகப்படுத்தினாங்க. பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகியிருந்த நிலையில, மீண்டும் பழையபடி பள்ளி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாமானு யோசிச்சிகிட்டிருந்தேன். இந்தச் சூழல்லதான், ஓதுவார் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து அறிவிப்பு வெளியாச்சு. ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்னு அதில் குறிப்பிட்டிருந்ததும் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

எத்தனையோ கோயிலில் ஓதுவார்கள் பாடுறதையெல்லாம் கேட்டிருக்கேன். அப்போ எனக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்னு சாமிகிட்ட ரொம்ப நாள் வேண்டியிருக்கேன். ஆனா, அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும், நான் கடவுள் சந்நிதியில நின்னு பாடுவேன்னு நினைச்சுகூட பார்த்ததில்லை. எல்லாம் நிஜமாகியிருக்கு. முதல்வர் கையில் பணி ஆணை வாங்கினது, நான் பாட்டுப்பாடுவது சமூக வலைதளங்கள்ல அதிகமாக பகிரப்படுவது எல்லாத்துக்கும் அந்த இறைவன் அருள்தான் காரணம்.

தேனுபுரீஸ்வரர் கோயில்
தேனுபுரீஸ்வரர் கோயில்
படம்: சொ.பாலசுப்ரமணியன் / விகடன்

முதல்வர் கையால் பணி ஆணையை நான் வாங்குறப்போ அருகில் இருந்த சந்நிதானம் என்னைப் பற்றி முதல்வர்கிட்ட பெருமையா ஏதோ சொன்னாங்க. அதைக் கேட்டுக்கிட்ட முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் தலையசைச்சு எனக்கு ஆணையைக் கொடுத்தார். அந்தத் தருணத்தை என் வாழ்நாள்ல மறக்க முடியாது. முதலமைச்சர் கையில் பணி ஆணையை வாங்கினபோது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துருச்சு. அழுகையை அடக்கிகிட்டேன். ஆசிரியர்கள், உறவினர்கள், என்னுடன் படித்தவர்கள், என்னிடம் படித்தவர்கள் எல்லோரையும் இந்த நேரத்துல நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு