Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

வீனஸ் வில்லியம்
பிரீமியம் ஸ்டோரி
வீனஸ் வில்லியம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
வீனஸ் வில்லியம்
பிரீமியம் ஸ்டோரி
வீனஸ் வில்லியம்

வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்த சுட்டிப்பெண்!

ங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ‘வைல்டுகார்டு என்ட்ரி’ என்று நுழைந்தவர் 15 வயதான கோரி காஃப் என்ற சுட்டிப்பெண். ஆப்பிரிக்க அமெரிக்கரான கோரியின் சிறுவயது கனவு செரினா மற்றும் வீனஸ் சகோதரிகளைப் போல டென்னிஸில் கலக்க வேண்டும் என்பது. ஏழு வயதில் டென்னிஸ் ஆட ஆரம்பித்த கோரி, 2017 அமெரிக்க ஓப்பன் ஜூனியர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றார். கோரியின் தந்தைக்குக் கூடைப்பந்து மீது காதல். தன் பிள்ளைகளில் யாராவது கூடைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பது அவரது ஆசை. கோரிக்கோ டென்னிஸின் மீதுதான் காதல்.

10 வயது முதல், தெற்கு பிரான்ஸில் உள்ள, செரினா வில்லியம்ஸின் பயிற்சியாளரான பேட்ரிக் மோரதோக்லாவின் `மோரதோக்லா அகாடமி’யில் டென்னிஸ் பயிற்சி எடுத்து வருகிறார் கோரி. டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரின் `டீம் 8' ஏஜென்சியின் பிரதிநிதி கோரி. இந்த விம்பிள்டன் போட்டிகளில் வைல்டு கார்டாக நுழைந்த கோரி, டென்னிஸ் உலகின் ராணிகள் என்று போற்றப்படும் வீனஸ் சகோதரிகளில் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொள்ளும் சூழல் வந்தபோது, அசராமல் விளையாடத் தொடங்கினார். 6-4, 6-4 என்ற நேர் செட்களில் 39 வயதான வீனஸை வீழ்த்தினார் கோரி. வீனஸைத் தோற்கடித்ததும் மைதானத்திலேயே கண்ணீர்விட்ட கோரி, வீனஸின் கைகளைப் பற்றி நன்றி சொன்னார். “நீங்கள் இல்லையென்றால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது” என்றும் சொல்லியிருக்கிறார் கோரி.

நம்பிக்கை நட்சத்திரமே வருக!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுமிகளைச் சிறக்கவைக்கும் பெண் விஞ்ஞானி!

மெரிக்காவின் ஹாரிஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சிறு செயற்கைக்கோள்களை வடிவமைத்து விண்ணில் செலுத்தும் பணியைச் செய்துவரும் இளம் பெண் விஞ்ஞானி கேலி லூனி. இவர் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர். விஞ்ஞானியான லூனிக்குத் தன் அறிவியல் ரோல் மாடல்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், துறை சார்ந்த பெண்கள் நிலை என்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. செலிபிரிட்டிகள் உடுத்தும் உடைகள், அவர்களின் மேக்கப் போன்றவற்றில் அவருக்கு நாட்டமில்லை.

இளம் பெண் விஞ்ஞானி கேலி லூனி
இளம் பெண் விஞ்ஞானி கேலி லூனி

முகநூல் குழு ஒன்றில் இது போன்ற `ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து, துறைக்குப் புதிதாக வரும் அல்லது வரவிரும்பும் சிறுமிகளுக்காக ஒரு பத்திரிகை நடத்தப்போவதாக அறிவித்தார். இந்தத் துறைகளில் 29% பேர் மட்டுமே பெண்கள் என்ற புள்ளிவிவரம் அறிந்ததும், குடும்பங்களில் உறவில், நட்பில் உள்ள சிறுமிகளுக்குச் சிறந்த ரோல் மாடல்களை ஸ்டெம் துறைகளில் எடுத்துக்காட்ட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டார் லூனி. அவரது வேண்டுகோளுக்கு இணங்கி மாணவிகள் முதல் ஆய்வாளர்கள் வரை பலரும் பத்திரிகைக்குத் தங்கள் பங்கைச் செய்ய விரும்பினர். அவர்கள் பங்களிப்பும் உழைப்பும் கொண்டு அமெரிக்காவின் முதல் சிறுமியருக்கான ஸ்டெம் ரோல் மாடல் பத்திரிகையான `ரீ-இன்வென்ட்’ தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர், ராக்கெட் விஞ்ஞானி லூனி!

மீட்டுருவாக்க வாழ்த்துகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்கைவிட புத்திசாலியான சிறுமி!

லகின் மிகச்சிறந்த அறிவாளியான சிறுமிக்கு வயது 11. அனுஷ்கா தீட்சித் என்னும் அந்தச் சிறுமி, மென்சா தேர்வு எனப்படும் நுண்ணறிவு எண்ணை மதிப்பிடும் தேர்வில் 162 புள்ளிகள் எடுத்துள்ளார். கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இந்தத் தேர்வை எதிர்கொண்ட பார்க்கிங்க்சைட் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்ணான அனுஷ்கா, இதன் மூலம் மென்சாவில் உறுப்பினராக இணைகிறார். உயர் ஐ.க்யூ சொசைட்டியிலும் உறுப்பினராகிறார்.

அனுஷ்கா தீட்சித்
அனுஷ்கா தீட்சித்

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் இந்தத் தேர்வில் 160 புள்ளிகள் எடுத்துள்ளார். அவரைவிட இரண்டு புள்ளிகள் அதிகம் எடுத்துள்ள அனுஷ்கா, “ஆரம்பத்தில் தேர்வு மையத்தைக்கண்டு பயமாக இருந்தது. தேர்வுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் என்னைவிட வயதில் பெரியவர்கள்” என்று கூறினார். அனுஷ்காவின் தாய் ஃபரீதாபாத் நகரைச் சேர்ந்தவர். தன் மகள் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பேசத் தொடங்கிவிட்டதையும், 40 நிமிடங்களில் தனிம அட்டவணை முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டதையும் நினைவுகூர்ந்தார். வளர்ந்து மருத்துவராவதே தன் லட்சியம் என்று கூறியிருக்கிறார் அனுஷ்கா.

அறிவுக் களஞ்சியம்!

நாடாளுமன்றத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த மஹுவா!

ந்த ஆண்டின் சிறந்த பேச்சாக நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது மேற்கு வங்க நாடாளுமன்றப் பெண் உறுப்பினரான மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்றக் கன்னிப்பேச்சு. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 வயதான மஹுவா, இந்தத் தேர்தலில் முதன்முறையாக வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றவர். அமெரிக்காவில் ஜே.பி.மார்கன் நிறுவனத்தில் முக்கியப் பதவி வகித்துவந்த மஹுவா, இயந்திரத்தனமான பணிமீது ஆர்வம் குறைந்ததாலும், நாட்டுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற ஆர்வத்திலும் இந்தியா திரும்பியவர். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினாலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அக்கட்சியின் உறுப்பினராக நாடாளுமன்றமும் சென்றார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மஹுவா, `மக்களாட்சியில் எதிர்ப்புக்குரல்களும் பதிவு செய்யப்பட வேண்டும்' என்று தெரிவித்தவர், `மனித உரிமைக்கு எதிரான குற்றங்கள் 10 மடங்கு உயர்ந்திருக்கின்றன; அறிஞர்கள் மற்றும் கலைஞர்களின் குரல்கள் செவி மடுக்கப்படவில்லை; தேர்தல் நடைமுறையின் நேர்மை கேள்விக்குறி ஆகியிருக்கிறது’ என்று கடும் கோஷங்களுக்கு இடையே தன் வாதத்தை முன்வைத்தார். மஹுவாவின் இந்தப் பேச்சு மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

எதிர்க்குரலுக்கும் இடம் கிடைக்கட்டும்!

ஆற்றுக்கு மறுவாழ்வு தந்த பெண்கள்!

றண்ட வானிலைக்கும் வெயிலுக்கும் வேலூர் வெகுபிரசித்தம். தொடர் வறட்சி காரணமாக கிட்டத்தட்ட 15 ஆண்டு களாக உயிரின்றி காய்ந்துகிடந்தது வேலூர் மாவட்டத்தின் நாகநதி. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 20,000 பெண்கள் கைகோத்து இந்த ஆற்றை மீட்டெடுத்திருக்கிறார்கள்.

2014-ம் ஆண்டு முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக நாகநதி ஆற்றுப் படுகையில் 3,500 நீர்வள புதுப்பிப்புக் கிணறுகளை இந்தப் பெண்கள் தங்கள் கடும் உழைப்பால் கட்டியிருக்கிறார்கள். `ஆர்ட் ஆஃப் லிவிங்’ அமைப்பு அரசுடன் இணைந்து செயல்படுத்திய இந்தத் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் 10 பிளாக்குகளில் கிணறுகளை வெட்டியுள்ளனர்.

வறட்சி
வறட்சி

20 அடி ஆழம், 15 அடி நீளம் மற்றும் 6 அடி அகலம் கொண்ட புதுப்பிப்புக் கிணறுகள் மற்றும் மழைநீர் வேகமாக வழிந்து செல்லாமல் தடுக்கும் சரளைக்கற்களாலான தடுப்பணைகள் போன்றவற்றைக் கட்டி ஆற்றை மீட்டிருக்கின்றனர். கணியம்பாடி பிளாக்கைச் சேர்ந்த நதியா என்ற பெண், “ஆறு இப்போது வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதால், என்னால் நெல் விளைவிக்க முடியும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் ஒரு நாளுக்கு 224 ரூபாய் சம்பளமும் பெற முடியும்” என்று கூறுகிறார். ஐந்து கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்து நாகநதியை மீட்டிருக்கிறது அரசு, இந்தப் பெண்களின் துணையுடன்!

வற்றாது பெண் வலிமை!

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

யோலா கல்லூரியின் மாணவர் சங்கத் தேர்தலில் துணைச்செயலர் பதவிக்குப் போட்டியிட்ட மூன்றாம் பாலினரான நளினா பிரசீதா வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் மாணவர் சங்கத் தேர்தலில் வென்று பதவியில் அமர்ந்த `நாட்டின் முதல் மூன்றாம் பாலினர்' ஆகிறார் நளினா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணான பிரமிதா அகஸ்டின், 3.5 அடி உயரம் மட்டுமே உள்ளவர். மிகச் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரமிதா, கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தில் இருந்த ஒரே வீட்டையும் இழந்தவர். ஆங்காங்கே முகாம்களில் தங்கிய குடும்பம், வீடு இருந்த இடத்தில் ஒற்றை அறையைக் கட்டிக்கொண்டு மீண்டு எழ, தன் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞர் ஆகியிருக்கிறார் பிரமிதா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ந்திய விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக 26 பெண்களைக் கொண்ட `15ஸ்' ரக்பி அணி, 21-19 என்ற கணக்கில் சிங்கப்பூர் பெண்கள் அணியை, ஆசியப் பெண்கள் பிரிவு ரக்பி சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றுள்ளது. இந்த அணியில் 18 வயது முதல் 32 வயதான பெண்கள் வரை இடம்பிடித்துள்ளனர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

75 வயதான பிரபல தெலுங்கு நடிகையும் இயக்குநருமான விஜயநிர்மலா சமீபத்தில் ஹைதராபாத்தில் மரணமடைந்தார். `மச்ச ரேகை’ என்ற தமிழ்ப்படத்தில் 1950-ம் ஆண்டு அறிமுகமான நிர்மலா, அதிக திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற கின்னஸ் சாதனையும் படைத்தவர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

டந்த ஜூன் ஒன்றாம் தேதி தன் 100-வது பிறந்தநாளை முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் கொண்டாடினார் கேரளாவின் பிரபல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான கே.ஆர்.கௌரி அம்மா. ஈழவப் பெண்ணான கௌரி, மிகவும் பிற்படுத்தப்பட்ட அந்த சாதியில் சட்டப்படிப்பில் தங்கம் வென்ற முதல் பெண் ஆவார். தொடர் போராட்டங்கள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியைக் கேரளத்தில் வளர்த்தெடுத்த முக்கியப் புள்ளி இவர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ரோப்பிய யூனியனின் ஐரோப்பிய கமிஷன் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய இரு முக்கிய அமைப்புகளுக்கும் தலைமைப் பொறுப்புகளில் அமர பெண்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சரான அர்சுலா வான் தர்லீன் ஐரோப்பிய கமிஷனின் தலைவராகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் இப்போதைய தலைவரான கிரிஸ்டின் லகார்ட் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராகிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெங்களூரைச் சேர்ந்த பெண் சூழலியலாளர்களான ஹரிணி நாகேந்திரா, சீமா மந்தோலி ஆகிய இருவரும் இணைந்து `சிட்டீஸ் அண்டு கேனபீஸ்’ என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ள மரங்களின் முக்கியத்துவத்தைப் பேசும் சூழலியல் புத்தகமான இது, அவற்றின் வரலாற்றையும், நம் வாழ்வியலுடன் அவற்றின் தொடர்பு குறித்தும் விரிவாக விளக்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism