Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பிரீமியம் ஸ்டோரி

இங்கிலாந்து அரசியிடம் விருதுபெற்ற மார்கரெட் அட்வுட்!

மீபத்தில் இரண்டாவது முறை புக்கர் பரிசை வென்றவர் பிரபல எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். ஏற்கெனவே `தி ஹாண்ட்மெயிட்ஸ் டேல்' என்ற நூலுக்கு புக்கர் பரிசு வென்றவர், இந்த ஆண்டு மீண்டும் அந்தப் புத்தகத்தின் தொடர் நூலான `தி டெஸ்டமென்ட்ஸ்' என்ற நூலுக்குச் சில வாரங்களுக்கு முன் புக்கர் பரிசை வென்றார். இதையொட்டி இங்கிலாந்து அரசி எலிசபெத், அட்வுட்டின் இலக்கிய சேவையைப் பாராட்டி, `ஆர்டர் ஆஃப் கம்பானியன்' விருதை தனது விண்ட்சர் அரண்மனையில் வழங்கினார். கனடா நாட்டைச் சேர்ந்த அட்வுட்டும் அரசி எலிசபெத்தும் புன்னகையுடன் கைகுலுக்கிக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்தச் சந்திப்பால் மனம்நெகிழ்ந்துபோனதாகக் கூறியுள்ள அட்வுட், ``அரசியைச் சந்திப்பது என்பது வரலாற்றைச் சந்திப்பதற்கு இணையானது. போர்களில் வென்று மீண்ட அரசி அவர். இந்த வயதிலும் ஒரு நாட்டின் அரசியாக கடினமான அட்டவணையைப் பின்பற்றி அவர் பணியாற்றி வருவது அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது'' என்று கூறியுள்ளார் அட்வுட்.

மார்கரெட் அட்வுட்
மார்கரெட் அட்வுட்

79 வயதான அட்வுட்டுக்கு 93 வயதான அரசி விருதளித்திருக்கிறார். ``எங்கள் வயதில் பெரும்பாலும் பெண்கள் எங்கோ மறைந்து போவார்கள். நாங்கள் அப்படி அல்ல என்பதே மகிழ்வாக இருக்கிறது'' என்றும் கூறியிருக்கிறார் அட்வுட். கலை, இலக்கியம், மருத்துவம் போன்ற துறைகளில் பெரும் தொண்டாற்றியவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக வழங்கப்படும் இந்த விருது, இதுவரை 65 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இது பாட்டிகளின் காலம்!

ரம்யா
ரம்யா

‘ஒரு நாள் கமிஷன'ரான ரம்யா

தெலங்கானா மாநிலம் பழைய அல்வல் பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் ஏ.ரம்யா, சமீபத்தில் ரச்ச கொண்டா மாவட்டக் காவல்துறை ஒரு நாள் கமிஷனராக நியமிக்கப்பட்டார். மெட்சல் மாவட்டம் சுசித்ரா பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியேட் பயின்றுவரும் ரம்யாவுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. `மேக் ஏ விஷ் ஃபவுண்டேஷன்' அமைப்பு, ரச்சகொண்டா மாவட்டக் காவல்துறை கமிஷனரான மகேஷ் பகவத் ஐ.பி.எஸ்ஸிடம் ரம்யாவின் `ஒரு நாள் கமிஷனர் ஆசை'யைக் கூறியதும் உடனடியாக அவரை கமிஷனராக நியமித்து உத்தரவிட்டார்.

ஹைதராபாத்தின் பஞ்சகட்டா பகுதியிலுள்ள நீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் ரம்யா, ரச்சகொண்டா கமிஷனராகப் பதவியேற்றுக்கொண்டதும் மாவட்டத்திலுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சரிசெய்ய முயற்சிசெய்வதாகவும் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அறிவித்தார். கமிஷனர் பகவத் மற்றும் துணை கமிஷனர் சுதீர் பாபு இருவரும் இணைந்து சிறுதொகை ஒன்றையும் ரம்யாவுக்கு அன்பளிப்பாக வழங்கினர். ரம்யா மற்றும் அவருடைய தாய் பத்மா இருவருக்கும் `கார்டு ஆஃப் ஆனர்' மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோல புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் ஆசையை ரச்சகொண்டா காவல்துறை அதிகாரிகள் நிறைவேற்றிவைப்பது இது இரண்டாவது முறை!

நலம்பெற்று வாழ வாழ்த்துகள் கமிஷனர் ரம்யா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலிசா கார்சன்
அலிசா கார்சன்

செவ்வாய்க்கிரகத்தில் வாழ ஆசைப்படும் பெண்

`மூன்று வயது முதல் செவ்வாய்க்கிரகத்துக்கு செல்வதே என் ஆசையாக இருந்தது' என்று சொல்லும் இளம் விண்வெளி விஞ்ஞானியான அலிசா கார்சன், `வாய்ப்பு அமைந்தால் செவ்வாய்க்கிரகத்திலேயே குடியேறிவிடுவேன்' என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் `தி ஸ்டைலிஸ்ட்' இதழுக்கு அளித்த பேட்டியொன்றில் தன் விண்வெளிப் பயண அனுபவம் குறித்து விளக்கியுள்ளார் அலிசா. உணவு இல்லாதது, விண்வெளிப் பயணத்தின் விநோதமான கழிவறை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அலிசா, செவ்வாயில் கால்பதிக்கப்போகும் முதல் பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். அமெரிக்க விண்வெளிப் பயணங்களில் முன்பு அதிகமிருந்த ஆண் பெண் வேறுபாடு இப்போது ஓரளவுக்குக் களையப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ``பொறியாளர்கள் முதல் ராக்கெட் சோதனையாளர்கள் வரை பலரது பங்களிப்பு ஒரு விண்வெளிப் பயணத்துக்குத் தேவையானதாக இருக்கிறது. ஒரு விண்வெளிப் பயணத்தை ஆயிரக்கணக்கானோர் பின்னிருந்து இயக்கு கின்றனர். அந்த வகையில் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே என் ஆசை'' என்றும் கூறியுள்ளார் அலிசா.

செவ்வாய்க்கே சவால்விடுவாள் சாதனைப் பெண்!

சாய் பல்லவி
சாய் பல்லவி

திரையில் `உண்மைப் பெண்'களைக் காண வேண்டிய காலம் இது!

மீபத்தில் பெங்களூரு நகரில் நடைபெற்ற `வி தெ விமென்' நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவிக்கு விருது வழங்கப்பட்டது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பர்கா தத் முன்னின்று நடத்திய இந்த நிகழ்ச்சியில், சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம் விளம் பரத்தில் நடிக்க மறுத்ததற்காகவே சாய் பல்லவிக்கு இந்த விருது.

``உங்களைப் போல ஒருத்தியாகத்தான் நானும் இருந்தேன். ஒரு காலத்தில் என் வாழ்க்கையில் என்னைக் குறித்த தெளிவில்லாமலும் இருந்தேன். திரையில் அளவான உடல், அழகான சருமம் போன்ற பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. என்னையே நான் இப்படி ஏற்றுக்கொண்டிருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால், `பிரேமம்' படத்தில் நடித்ததற்குப் பின் வந்த பாராட்டுகள், அழகு பற்றிய என் பார்வையை மாற்றியுள்ளன. என்னை எனக்காகவே ஏற்றுக்கொண்டவர்களைக் காண மகிழ்ச்சியாக இருந்தது'' என்று கூறினார் சாய் பல்லவி.

விருதெல்லாம் எதற்கு? நாமே பெரும் விருதுதானே!

சாதனா
சாதனா
இந்தியாஸ் ஃபர்பிடன் லவ்
இந்தியாஸ் ஃபர்பிடன் லவ்

சர்வதேச எம்மி விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் சாதனைப் படம்!

ல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் `விட்னஸ்' தொடருக்காக எடுக்கப்பட்ட `இந்தியாஸ் ஃபர்பிடன் லவ்' என்ற குறும்படம் சர்வதேச எம்மி விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தப் படத்தை சாதனா சுப்ரமணியம் இயக்கியுள்ளார். கன்னட மற்றும் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த சாதனா, தன் 16-வது வயதில் இங்கிலாந்து சென்று குடியேறினார். 2016-ம் ஆண்டு, இதழியல் படித்துக்கொண்டிருக்கும்போது செய்தித்தாள்களில் உடுமலை சங்கர் - கௌசல்யா வழக்கு குறித்து வாசிக்க நேரிட்டது. அவரின் துறைத் தலைவரும், விரிவுரையாளரும், பிரபல டாக்குமென்டரி பட இயக்குநருமான ஒர்லாண்டோ வான் அறிவுரையின்பேரில் குறும்படம் தயாரிக்கும் எண்ணம்கொண்டார் சாதனா. சாதனாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது அல் ஜசீரா தொலைக்காட்சி. வழக்கு விசாரணை முதல் தீர்ப்பு வெளியாகும் வரை நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களையும் அலசி ஆராய்கிறது சாதனாவின் குறும்படம். வெறும் வழக்கை மட்டுமே ஆராயாமல், கௌசல்யாவின் தாய், தந்தை, தம்பி கௌதம் என சாதியத்தில் ஊறிய சமூகத்தின் அவலத்தை எடுத்துச்சொல்கிறது இந்தப் படம். ``குற்றவாளிகளை ஏன் படம் பிடிக்கிறீர்கள்; அவர்கள் பேசுவதை ஏன் காண்பிக்கிறீர்கள் என்ற கேள்விகள் என்னை நோக்கி வருகின்றன. ஆனால், அவர்களது பார்வையும் நாம் அறியவேண்டிய ஒன்று. அவர்களும் சாதிய கட்டமைப்பால் பலியானவர்கள்தாம்'' என்று சொல்கிறார் சாதனா. முதல் குறும்படமே உலகின் பார்வையைப் பெற்றிருப்பது தனக்கு மகிழ்வைத் தருகிறது என்று சொல்லியிருக்கிறார் சாதனா.

இன்னும் சாதிக்க வாழ்த்துகள் சாதனா!

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ந்த உதவியும் இன்றி, இரண்டே நிமிடங்களில் தன் இரண்டு ஆண்டு ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு, படபடவெனப் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டனது காணொலி ஒன்று சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர் என்று மக்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

காணொலி சுட்டி: http://bit.ly/newzel

நவ்யா சோஃபியா
நவ்யா சோஃபியா

த்தாலி நாட்டில் வசித்துவரும் இளம்பெண்ணான நவ்யா சோஃபியாவுக்குத் தன் தந்தை தாய் போல இல்லாமல் வித்தியாசமான பழுப்புநிற சருமம் கொண்டிருப்பதில் ஐயம். தாய் தந்தையிடம் விசாரிக்க, தான் தத்தெடுக்கப்பட்ட பெண் எனத் தெரியவருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இணையம் மூலம் தன்னைப் பெற்ற தாயைத் தேடிவந்த நவ்யா, சமீபத்தில் தாயைக் கண்டுபிடித்து அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். விரைவில் அம்மாவைக் கண்டுபிடிக்க உதவியவர்களைச் சந்திக்க வரும் நவ்யா, தாயின் திருமணத்துக்கு முன்பே தான் பிறந்ததாலும், இப்போது அவர் நிம்மதியாக வேறு வாழ்க்கை வாழ்ந்து வருவதாலும் அவரை சந்தித்து அதைப் பாழாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்!

நைட் கேர் சென்டர்
நைட் கேர் சென்டர்

ரவு நேரம் பணியாற்றும் பெண்களின் குழந்தை களைப் பராமரிக்க நைட் கேர் சென்டர்கள் பரவலாக செயலாற்றத் தொடங்கியுள்ளன. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேரத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் இந்த மையங்களை நடத்தி வருகிறார் பிரியா கிருஷ்ணன். இரவு 9 - காலை 9, இரவு 9 - காலை 6, இரவு 8 - காலை 5 மணி வரை என்று தேவைக்கேற்ப இந்தப் பராமரிப்பு மையங்களை நடத்துவதாகச் சொல்கிறார் பிரியா.

மெட்டில்டாஸு
மெட்டில்டாஸு

ஸ்திரேலியாவின் ஆண்கள் அணியான சாக்க ரூஸுக்கு இணையாக அதன் பெண்கள் அணியான மெட்டில்டாஸுக்கும் ஊதியம் வழங்கப்போவதாக ஆஸ்திரேலிய நாட்டின் கால்பந்து ஃபெடரேஷன் அறிவித்துள்ளது. உலகத் தரவரிசைப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியப் பெண்கள் அணி, 44-வது இடத்தில் இருக்கும் ஆண்கள் அணிக்குச் சரிசமமாக ஊதியம் பெற்றுக்கொள்கிறது. “இரு பாலருக்கும் இடையே இருக்கும் ஊதிய ஏற்றத்தாழ்வைப் போக்கவே இந்த முயற்சி” என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய கால்பந்து ஃபெடரேஷனின் தலைவர் டேவிட் காலப்.

சிந்தாஹரண் சவுஹான்
சிந்தாஹரண் சவுஹான்

ரணத்துக்கு பயந்து கடந்த 30 ஆண்டுகளாகப் பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தாஹரண் சவுஹான் என்ற ஆண். தன் உறவினரில் 14 பேர் இதுவரை இறந்துபோனதாகக் கூறும் சிந்தாஹரண், மணப்பெண் போல தான் வேடமிட்டதற்குப் பிறகுதான் தொடர் மரணங்கள் முடிவுக்கு வந்தன என்கிறார்.

‘சுபிக்‌ஷா’ அமைப்பு
‘சுபிக்‌ஷா’ அமைப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இயங்கிவரும் ‘சுபிக்‌ஷா’ அமைப்பு தேங்காயைக் கொண்டு எண்ணெய் தயாரிப்பு, தேங்காய் ஊறுகாய் போன்ற பொருள்களை முழுக்க முழுக்க பெண்களின் உதவியுடன் தயாரித்து வருகிறது. இப்போது 2,000 வணிக நிறுவனங்களுக்கு தேங்காயால் செய்யப்படும் பொருள்களை விற்பனைக்கு வழங்கிவரும் சுபிக்‌ஷா, ஏழு கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 588 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முழுமையான உதவி செய்து வருகிறது.

மொகுலம்மா
மொகுலம்மா

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மொகுலம்மா... கணவரை இழந்தவர். இவர் தன் இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் 25 வகை சிறு தானியங்களை வளர்த்து சாதனை படைத்திருக்கிறார். 36 வயதாகும் மொகுலம்மாவுக்கு கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று விருது வழங்கினார் குடியரசுத் தலைவர். சமீபத்தில் ஐ.நா சபையின் யுனெஸ்கோ வழங்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஈக்குவட்டார் பரிசும் பெற்றிருக்கிறார் இவர்!

அமலா பால்
அமலா பால்

ஹிந்தியில் வெளியாகி பேராதரவைப் பெற்ற ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ குறும்படத் தொகுப்பை தெலுங்கு மொழியில் படமாக்கி நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ஒரு பகுதியை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, அமலா பால் நடிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு