Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ஸ்வீட்டி குமாரி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வீட்டி குமாரி

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
ஸ்வீட்டி குமாரி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வீட்டி குமாரி

பஞ்சாயத்துத் தலைவரான துப்புரவுப் பணியாளர்!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத் தன் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு களம் கண்டவர் கான்சாபுரம் சரஸ்வதி. ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த இந்த ஊரில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்த சரஸ்வதி, கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது தன் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோற்றுப் போனவர், வேறு வழியின்றி ஒப்பந்தத் தொழிலாளராகப் பஞ்சாயத்தில் பணியாற்றி வந்தார்.

சரஸ்வதி
சரஸ்வதி

மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தான் பணியாற்றிய கான்சாபுரம் பஞ்சாயத்திலேயே தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இம்முறை 1,113 வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றிருக் கிறார். தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர், `மக்களுக்கு நல்லது செய்வேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள் சரஸ்வதி!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆசியாவின் அதிவேக ரக்பி வீராங்கனை!

`ஸ்க்ரம் க்வீன்ஸ்' என்ற வலைதளம், பீகாரைச் சேர்ந்த 19 வயது ரக்பி வீராங்கனையான ஸ்வீட்டி குமாரியை இந்த ஆண்டின் ‘சர்வதேச பிளேயர் ஆஃப் தி இய'ராகத் தேர்ந்தெடுத்துள்ளது. பீகாரின் நவாடா கிராமத்தைச் சேர்ந்த ஸ்வீட்டியின் ஊரில் யாரும் தங்கள் மகள்களை அரைக்கால்சட்டைகூட அணியவிடுவதில்லை. இந்தச் சூழலில் வளர்ந்து, ரக்பியில் இவ்வளவு உயரத்தை எட்டியிருக்கிறார் ஸ்வீட்டி.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சிங்கப்பூருக்கு எதிரான மகளிர் ரக்பி போட்டிகளில் இந்திய அணி 21-19 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தியாவின் முதல் சர்வதேச ரக்பி விளையாட்டு வெற்றி அது. அப்போது விளையாடிய அணியில் ஸ்வீட்டியின் திறமை பெரிதும் பேசப்பட்டது. ஆசிய ரக்பி அமைப்பு ‘ஆசியாவின் அதிவேக வீராங்கனை’ என்று இவரைக் குறிப்பிட்டுள்ளது. அரசுப்பள்ளியில் பயின்று ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்த ஸ்வீட்டியை அடையாளம் கண்டுகொண்டு ரக்பி விளையாடவைத்தவர் பீகார் ரக்பி அசோசியேஷன் தலைவர் பங்கஜ் குமார் ஜோதி. ஆச்சர்யம் என்னவென்றால், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்கும்போதுதான் தான் ஆடுவது `ரக்பி' என்ற விளையாட்டு என்பதே ஸ்வீட்டிக்குத் தெரிந்திருக்கிறது!

ஸ்வீட்டி உண்மையில் ஸ்வீட்தான்!

51 வயதில் சி.ஏ தேர்வெழுதி வெற்றிபெற்றிருக்கும் பெண்!

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சி.ஏ பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவர் மதுரையைச் சேர்ந்த உமா கிருஷ்ணா. இந்தப் பெண் தன் 51-வது வயதில் சி.ஏ தேர்வெழுதி, அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இளங்கலைப் படிப்பில் பி.எஸ்ஸி வேதியியலும், முதுகலைப் படிப்பில் எம்.ஏ ஆங்கிலமும் படித்த உமா, மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மாற்றுத்துறையில் சாதிக்கும் ஆசைகொண்ட உமாவை, அவரின் கணவர் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு சேர்த்துவிட்டார். அப்போதுதான் சி.ஏ படிப்பு குறித்து அறிந்தார் உமா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சி.ஏ படிக்க அக்கவுன்டன்சி படிப்பு தேவை என்பதால், தனிப்பயிற்சியும் பெற்றார் உமா. தினமும் காலை 4:30 மணிக்கே எழுந்து 10 மணி நேரம் படித்தவர், சி.ஏ இன்டர் தேர்வில் நான்கு பாடங்களில் தேர்ச்சி பெற்றார். அடுத்த நான்கு பாடங்களை எழுதுவதற்குள் தந்தையின் இறப்பு, தாயாருக்குப் புற்றுநோய் என்று குழப்பங்கள் நேர்ந்தன. பொருளாதார இக்கட்டும் சேர்ந்துகொள்ள, படிப்பு தடைப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சி.ஏ தேர்வு எழுதியவர் இன்டரில் நான்கு பாடங்களையும், ஃபைனலில் எட்டு பாடங்களையும் எழுதி வெற்றிகரமாகத் தேர்வானார். இனி, அவர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றலாம் அல்லது தொழில்ரீதியான ஆடிட்டராக இயங்கலாம். மதுரை போன்ற நகரங்களில் இந்தப் படிப்பைப் படிக்க வழி தெரியாமல் தயங்குபவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்கிற ஆவலையும் தெரிவிக்கிறார் உமா.

வயது என்பது வெறும் எண் மட்டுமே!

பிரதமரிடம் விருது வாங்கிய பெண் விவசாயி!

சமீபத்தில் தும்கூர் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் நாமக்கல் மாவட்டம், குஞ்சாம் பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த பாப்பாத்தி என்ற விவசாயிக்கு, பிரதமர் மோடி விருது வழங்கினார். 30 ஆண்டுகளுக்கு முன் கணவர் பொன்னுசாமி இறந்தபோது

31 வயதான பாப்பாத்தி மூன்று குழந்தை களுடன் தவித்தார். தங்களுக்குச் சொந்த மான ஓர் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். 2018-ம் ஆண்டு எள் விதைத்திருந்த அவரது நிலத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள், மகசூலை எடை போட்டுப் பார்க்கப் போவதாகத் தெரிவித்தனர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

அவரது வயலில் அறுவடை செய்யப்பட்ட எள்ளின் எடை 1,210 கிலோ. இது சராசரி மகசூலைவிட 200 கிலோ அதிகம். இதற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்ததில், ரசாயன உரம் எதையும் அவர் பயன்படுத்துவதில்லை என்பதும் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவதும் தெரிய வந்தது. அவரின் மகனான ரமேஷ், அரசு அதிகாரிகள் ஆலோசனையின் அடிப்படையில் முழுக்க முழுக்க இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறுகிறார். பாராட்டுப் பத்திரமும், 2 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் பாப்பாத்தியைப் பாராட்டி தரப்பட்டிருக்கின்றன.

விவசாயி... இவர் இயற்கை விவசாயி!

அவள் செய்திகள்

  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ஏரியேன், இஸ்ரோவின் ஜி-சாட் 30 செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் ஏவவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளம் இந்தியப் பாடகி சோனா மொஹபாத்ராவைச் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்
  • வரும் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பை வழிநடத்தும் பொறுப்பு முதன்முறையாக கேப்டன் டான்யா ஷெர்கில்லுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் ஒருவர் குடியரசு தின அணிவகுப்பைத் தலைமை தாங்கி நடத்துவது இதுவே முதன்முறை. சென்னையின் ஓ.டி.ஏ-வில் பயிற்சி பெற்றவர், ஹொஷியார்பூரைச் சேர்ந்த டான்யா.

  • 94 வயதான மூதாட்டி ஹர்பஜன் கவுர், ‘ஹர்பஜன்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி கடலை மாவு பர்ஃபி தயாரித்து விற்பனை செய்துவருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பர்ஃபிகளின் விற்பனையை கவனித்து வருகிறார் அவரின் மகள். கவுரை `நாட்டின் சிறந்த தொழில்முனைவோர்' என்று பாராட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்
  • சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தாசில்தாராகப் பதவியேற்கவுள்ளார் மாற்றுத் திறனாளியான ஜி.கௌரம்மா. முழுக்க முழுக்க தாய்மொழியான கன்னடத்தில் படித்தவர், இறந்த தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளதாகக் கூறுகிறார்.

  • உத்தரகண்ட் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காகப் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றைத் தயாரித்து அம்மாநில அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்
  • டெல்லியைச் சேர்ந்த கல்பனா விஸ்வநாத், தன் நண்பர் ஆஷிஷுடன் இணைந்து ‘மை சேஃப்டிபின்’ என்ற செயலியை, பெருநகர பெண்கள் தங்கள் பயணங்களில் பயன்படுத்தும் வகையில் தயாரித்திருக்கிறார். இதன்மூலம் பாதுகாப்பான சாலைகள் மற்றும் இடங்களை மொபைல் மூலம் தெரிந்துகொள்ள முடியும். ஆண்டிராய்டு மொபைலில் My SafetiPin செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.