தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ஹில்தர் ஹில்டர் குட்னடாட்டிர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹில்தர் ஹில்டர் குட்னடாட்டிர்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

நான்காம் வகுப்புத் தேர்வெழுதி வெற்றிபெற்ற 105 வயது மூதாட்டி

கேரள மாநிலம் கொல்லம் நகரை அடுத்த பிராக்குளம் பகுதியைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாகீரதி அம்மாள். அம்மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்திய நான்காம் வகுப்புக்கு ஈடான தேர்வில் இவர் வெற்றி பெற்றுள்ளார். சுற்றுச்சூழல், கணிதம், மலையாள மொழித் தேர்வு என மூன்று தாள்களை முதுமை காரணமாக மூன்று நாள் களில் பாகீரதி அம்மாள் எழுதி முடித்தார்.

ஆறு குழந்தைகள், பதினாறு பேரக் குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்தின் தலைவியான இவருக்குத் தேர்வுத் தயாரிப்புக்கு ஓராண்டுக் காலம் பிடித்தது.

பாகீரதி
பாகீரதி

74.5% மதிப்பெண் பெற்றுள்ள பாகீரதி அம்மாள் பிராக்குளம் அரசுப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்தவர். தாயை இழந்த காரணத்தால், தன் தம்பி தங்கைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு சிறு வயதிலேயே இவர் மேல் சுமத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இப்போது தான் கல்வியைத் தொடரும் வாய்ப்பு பாகீரதி அம்மாளுக்குக் கிடைத்திருக்கிறது.

வயது முதிர்ந்தோருக்கான பென்ஷன் தனக்குத் தரப்படவில்லை என்பது அம்மாளின் பெரும் மனக்குறை.

பட்டையைக் கெளப்புங்க பாட்டிம்மா!

திருமணம் செய்துவைத்த பெண் புரோகிதர்

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றை முன்னின்று நடத்தியுள்ளார் மைசூரைச் சேர்ந்த பிரமரம்ப மகேசுவரி என்ற பெண். சென்னையைச் சேர்ந்த சுஷ்மா ஹரிணி - விக்னேஷ் ராகவன் ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இருவேறு சமூகங்களைச் சேர்ந்த இவர்கள், திருமணத்தைப் புதுமையாக நடத்த திட்டமிட்டனர்.

வழக்கறிஞரான சுஷ்மா, தன் திருமணத்தைப் பெண் இசைக் கலைஞர்கள்சூழ, பெண் புரோகிதர் செய்துவைத்தால் நன்றாக இருக்குமே என்ற கருத்தை முன்வைத்தார். மைசூரில் வேத மந்திரங்கள் படித்து திருமணங்கள் செய்துவந்த பிரமரம்ப மகேசுவரி பற்றிய தகவல் அறிந்து அவரது உதவியை நாடினார்கள்.

சுஷ்மா
சுஷ்மா

பெண் இசைக் கலைஞர்கள் சுஷ்மாவின் விருப்பத்துக் கிணங்க கிடைக்கவில்லை என்றாலும், பிரமரம்ப மகேசுவரி திருமணத்தை நடத்திவைக்க ஒப்புக்கொண்டார். சென்னை தக்‌ஷின்சித்ரா வளாகத்தில் நடைபெற்ற திருமணத்தை நடத்திவைத்த மகேசுவரி, ஒவ்வொரு மந்திரத்துக்கும் நிறுத்தி நிதானமாக ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தது அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஆச்சர்யம் அளித்தது.

மணப்பெண் சுஷ்மா, “திருமணம் செய்வது என்பது ஆணின் தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இதை மாற்றிக்காட்ட விரும்பினேன். பெண் புரோகிதர்களை ஊக்கப்படுத்த வேண்டியது பெண்களாகிய நம் கடமையும் கூட” என்று கூறியுள்ளார்.

பெண்ணால் எல்லாம் முடியும்!

பாலின சமத்துவத்தை வலியுறுத்திய ஆனந்த் மஹிந்திரா

ஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா அண்மையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தார். ஓட்டப்பந்தயப் போட்டி ஒன்றில் ஓடத் தயாராக ஆண்களும் பெண்களும் ‘ஃபார்மல்’ உடையில் தயாராக இருக்க, பெண்களின் முன்னே வரிசையாக வீட்டுப் பணிகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. இந்தப் படத்தைப் பகிர்ந்த ஆனந்த், ``கடந்த ஒரு வாரமாக ஒரு வயது பேரனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் நிஜம் என்னைச் சுடுகிறது. ஆண் வெற்றி பெறுவதைவிட ஒரு பெண் வெற்றி பெறுவது எத்தனை கடினமானது என்பதை இந்த ஓவியம் விளக்குகிறது” என்று எழுதியிருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

“ஆண்கள் வெகு சுலபமாக அலுவலகங்களில் அடையும் பதவிக்கே பெண் அதைவிட இரு மடங்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது” என்று ஆனந்தின் பதிவைப் பகிர்ந்து ட்விட்டரில் பெண்கள் எழுதியுள்ளார்கள். பணியிடங்களில் பாலின சமத்துவம் பற்றிய உரையாடலை இந்தப் பதிவு முன்னெடுத்திருக்கிறது. உழைக்கும் பெண்களின் போராட்டத்தை உணர்ந்து எழுதியிருக்கும் ஆனந்த்தை, பெண்களும் ஆண்களும் பாராட்டி வருகிறார்கள்.

ஆணும் பெண்ணும் ஒண்ணு!

தொந்தரவுகளை ‘ஃபயர்வால்’ செய்துவிட வேண்டும்:

மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தலைவர் அறிவுரை சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் நடைபெற்று வருகின்றன. தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால், தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்றும் கூறியுள்ளார். தேர்வுகளைச் சமாளிப்பது எப்படி என்று கணிப்பொறி சாதனங்கள் மற்றும் இன்டர்நெட் வார்த்தைகளைக் கொண்டே அவர் விளக்கியுள்ள விதம் மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தேர்வு நேரத்தில் தேவையற்ற தொந்தரவுகளை ‘ஃபயர்வால்’ செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கும் அவர், தேர்வுகளில் வலைதள யுஆர்எல் போல செயல்பட்டு, வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல தேவையான திறனை வெளிக்கொணரும் ‘சர்ச் இன்ஜின்’தான் அறிவு என்றும் கூறியுள்ளார்.

ஃபயர்வால்
ஃபயர்வால்

மாணவர்களின் ‘ஹார்டு டிஸ்க்’ வெளி பெரிதாக இருப்பதால் மாணவர்களின் பள்ளிக் காலம்தான் கற்றுக்கொள்ள சிறந்தது என்று கூறியிருக்கும் அவர், ‘ஆட்டோ கரெக்ட், பாஸ், ஷிஃப்ட், டெலீட்’ போன்ற பல கட்டளைகள் கல்விக்கு உறுதுணையாக உள்ளன என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 12.87 லட்சம் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை எதிர்கொள்கிறார்கள்.

ஆல் தி பெஸ்ட் குட்டீஸ்!

இசைக்கான ஆஸ்கர் விருது வென்ற ஹில்தர்

ஸ்லாந்தைச் சேர்ந்த பெண் இசை யமைப்பாளரான ஹில்தர் ஹில்டர் குட்னடாட்டிர் இந்த ஆண்டு இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். 1997-ம் ஆண்டுக்குப் பிறகு இசைக்கான ஆஸ்கர் விருது பெறும் பெண்மணி இவர்தான். டாட் பிலிப்ஸ் இயக்கிய ‘ஜோக்கர்’ திரைப்பட இசைக்காக ஹில்தருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின் இசையமைப்பாளர் விருதுபெறும் பெண் என்பதாலும், ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் விருது பெறும் முதல் நபர் என்பதாலும் ஹில்தரின் ஏற்புரையை ஹாலிவுட்டே எதிர்நோக்கியிருந்தது.

ஹில்தர் ஹில்டர் குட்னடாட்டிர்
ஹில்தர் ஹில்டர் குட்னடாட்டிர்

சமீபத்தில் நடைபெற்ற வண்ணமிகு விழா வில் ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொண்ட ஹில்தர், “நான் எந்த உணர்வுடன் இசையமைத்தேனோ அதே உணர்வை மக்களுக்குப் படத்தின் கதாநாயகன் ஜோக்கின் கடத்தியிருக்கிறார். படத்தின் இயக்குநரது திறமையே இசையமைப்பாளரிடமிருந்து வெளிப்படுகிறது. தனக்குள்ளேயே இசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் சிறுமிகள், பெண்கள், அன்னையர் மற்றும் மகள்களே... தயவுசெய்து உரக்கப் பேசுங்கள். உங்கள் குரல்களை நாங்கள் கேட்க வேண்டும்” என்று பேசினார்.

ஐந்து வயது முதல் செலோ இசைக்கருவியை இசைத்து வரும் ஹில்தரின் கணவர் டாம் ஸ்லேட்டரும் இசையமைப்பாளரே!

நம்ம ஊர் பெண் இசையமைப்பாளர்களுக்கு பக்கா ஊக்கம் ஹில்தர்!

அவள் செய்திகள்

காம்யா
காம்யா

தென்னமெரிக்க நாடான அர்ஜென்டைனாவில் உள்ள 6,962 மீட்டர் உயரம் கொண்ட மவுன்ட் அகோங்காகுவா என்ற மலையுச்சியைத் தொட்டிருக்கும் மிக இளம் வயதுப் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் மும்பையில் வசிக்கும் காம்யா கார்த்திகேயன். 12 வயது மலையேற்ற வீராங்கனையான காம்யா, லடாக்கிலுள்ள இரண்டு மலை முகடுகளையும் தொட்டிருக்கிறார்!

போலீஸ் நண்பர்கள் குழு
போலீஸ் நண்பர்கள் குழு

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் போலீஸ் நண்பர்கள் குழு கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இக்குழுவில் இப்போது தமிழகத்திலேயே முதன்முறையாக எட்டு பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

பரிகுல் பரத்வாஜு
பரிகுல் பரத்வாஜு

கேதர்நாத் பயணம் செல்லும் பயணிகளைப் பாதுகாக்கும் 13 வயது சிறுமியான பரிகுல் பரத்வாஜுக்கு இந்த ஆண்டுக்கான சமூகப்பணி பிரிவு தேசிய வீர விருது வழங்கப்பட்டுள்ளது. 14,000 அடி உயரத்தில், மைனஸ் 9 டிகிரி குளிரில், மலையேறும் பயணிகளுக்கு மருத்துவர்களான தன் பெற்றோருடன் சேர்ந்து மருத்துவ உதவி செய்து வருகிறார் பரிகுல்.

லால்ரெம்சியாமி
லால்ரெம்சியாமி

19 வயது இந்திய இளம்பெண் லால்ரெம்சியாமி, சர்வதேச ஹாக்கி ஃபெடரேஷன் அமைப்பின் ‘ரைசிங் ஸ்டார்’ விருதை வென்றிருக்கிறார். இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இளம் வீராங்கனையான லால்ரெம்சியாமி, 2020-ம் ஆண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி இடம்பெற முக்கிய காரணமாக விளங்கியவர்.

`திஷா' மகளிர் பாதுகாப்பு
`திஷா' மகளிர் பாதுகாப்பு

ந்திர மாநிலம் ராஜமுந்திரியில் அம்மாநிலத்தின் முதல் `திஷா' மகளிர் பாதுகாப்புக் கான பிரத்யேக காவல் நிலையத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்துவைத்தார். சமீபத்தில் ஹைதராபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட திஷாவின் நினைவாக மகளிர் பாதுகாப்பை முன்னெடுக்கும் வகையில் 18 ‘திஷா’ பிரத்யேக மகளிர் காவல் நிலையங்கள் ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளன.

உபாஷா தலுக்தர்
உபாஷா தலுக்தர்

சாம் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி உபாஷா தலுக்தர், கவுஹாத்தியில் சமீபத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் பதக்கங்கள் வென்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் மட்டுமே இவர் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யக் கற்றுக்கொண்டுள்ளார் என்பது இவரது தனிச்சிறப்பு!