Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கிரேடா தன்பெர்க்
பிரீமியம் ஸ்டோரி
கிரேடா தன்பெர்க்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
கிரேடா தன்பெர்க்
பிரீமியம் ஸ்டோரி
கிரேடா தன்பெர்க்

அட்லான்டிக் பெருங்கடலைப் படகில் கடக்கப்போகும் சிறுமி!

புவி வெப்பமயமாதல் குறித்த ஐ.நா சபையின் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதத்தில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. அதில் உலகெங்கிலும் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்கின்றனர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேடா தன்பெர்க் என்ற 16 வயது மாணவியும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். பள்ளியிலிருந்து ஓர் ஆண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் கிரேடா, `மலிசியா 2' என்ற ரேஸிங் யாட் வகைப் படகில் அட்லான்டிக் பெருங்கடலைக் கடக்க இருக்கிறார். இதற்கு இரண்டு வாரக் காலம் ஆகக்கூடும்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.நா புவி வெப்பமயமாதல் கன்வென்ஷனிலும் இவர் பங்கெடுக்கிறார். இந்த இரு மாநாடுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கிரேடா, ``நம் கையில் காலம் மிகக்குறைவாகவே இருக்கிறது. போதுமான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எனவேதான் இந்தப் பயணங்களை மேற்கொள்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார். இந்த 60 அடி படகில் கிச்சன், ஃபிரிட்ஜ், ஏ.சி, ஷவர் என எந்த நவீன வசதியும் இல்லை என்று சொல்கிறார் படகைப் பயணத்துக்குத் தந்திருக்கும் போரிஸ் ஹெர்மன். ``பாதுகாப்புக்குரிய எல்லா அம்சங்களும் இருந்தாலும், இந்தப் படகில் ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டேன். கிரேடா அதைப் பொருட்படுத்தவில்லை'' என்று கூறியிருக்கிறார் போரிஸ். விமானங்கள் வெளியிடும் `பைங்குடில் வாயு'வை (Greenhouse Gas) கருத்தில் கொண்டு அவற்றில் பயணிப்பதில்லை கிரேடா!

கப்பலும் விடுவாள் பெண்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பதக்கங்கள் குவித்த பாவனா!

ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரில் சமீபத்தில் நடைபெற்ற வலுதூக்கும் (powerlifting) ஓப்பன் ஆசியப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 47 வயது வீராங்கனை யான பாவனா டொகேகர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார். உலக வலுதூக்கும் காங்கிரஸ் நடத்திய இந்தப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் 14 இந்தியர்களும் உண்டு. 67.5 கிலோவுக்குக் கீழ் உள்ள மாஸ்டர்ஸ் 2 பிரிவில் பங்கேற்றார் பாவனா. இந்திய விமானப்படையில் பணியாற்றும் கணவருடன் இரு அரை மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்ட பாவனா, விமானப்படையின் பாடி பில்டிங் குழுவின் அறிவுரையின் பேரில், தன் 41-வது வயதில் வலுதூக்க ஆரம்பித்தார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

``பாடி பில்டிங், வலுதூக்குதல் போன்ற போட்டிகள் குறித்து நிறைய தவறான தகவல்கள் இருக்கின்றன. இவற்றைச் செய்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று தவறாக பரப்புரை செய்யப்படுகிறது. நான் 41 வயதில் தான் பயிற்சியைத் தொடங்கினேன். ஆனால், தவறான முறையில் பயிற்சி செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்" என்று குறிப்பிடும் பாவனா, இன்ஸ்டாகிராம் மூலம் இந்தப் போட்டிகள் குறித்து அறிந்துகொண்டு கூடுதல் பயிற்சிக்கு பெங்களூரு சென்றார். விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து போட்டிகளில் பங்கேற்றவர், முதன்முறையாகப் பதக்கங்கள் வென்றுள்ளார். இவருக்கு இரு பதின்பருவ குழந்தைகள் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி!

வயது வெறும் எண்ணே!

ஆந்திராவில் ஓர் அற்புதம்!

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் மாநில முதல்வராகப் பதவியேற்றது முதல் அதிரடித் திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்திவருகிறார். அந்த வகையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அரசு நியமிக்கும் `நாமினேட்டட்' பதவிகள் மற்றும் அரசு சார்ந்த ஒப்பந்தப் பணிகளில் வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் முன்னோடி மாநிலம் என்று இதன் மூலம் பெருமை பெற்றிருக்கிறது ஆந்திரப் பிரதேசம். அம்மாநில சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா சட்டமன்றத்தில் பேசுகையில், ``நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடு மசோதா குறித்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பேசப்பட்டு, முடிவின்றி விடப்படும். அதுபோல இல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பெண் களுக்கு வாய்ப்பளித்தால் அவர்கள் எந்த இடத்திலும் சாதிப்பார்கள் என்பதால், முதல்வர் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்'' என்று கூறியுள்ளார்.

அத்புதங்கா ஆந்திர மகிளாலு

(அற்புதம், ஆந்திரப் பெண்களே)!

வீடியோ கேமரா பிடிக்கும் வளைக்கரங்கள்!

தெலங்கானா மாநிலத்தில் நல்லமலா மலைப்பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற தலித் விவசாயப் பெண்கள் சிலர் `கம்யூனிட்டி மீடியா டிரஸ்ட்' என்ற தன்னார்வ அமைப்பு மூலம் விவசாய நடைமுறைகளை வீடியோ கேமரா மூலம் படம்பிடித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக தலித் பெண்களின் நலன் காக்கப் போராடி வரும் டெக்கான் முன்னேற்றச் சங்கத்தில் இந்தப் பெண்கள் உறுப்பினர்கள். ஹம்னபூரின் லக்ஷ்மம்மா, இப்பபள்ளியைச் சேர்ந்த மல்லம்மா, மணிகரியைச் சேர்ந்த சந்திரம்மா ஆகிய மூன்று பெண்களுடன் இணைந்து இன்னும் 20 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

``விதை விதைப்பது முதல் அறுவடை செய்யும் வரை உள்ள வேளாண் பணிகளை ஒவ்வொன்றாக, தெளிவாக கேமராவில் படம் பிடித்துக்கொள்கிறோம். இவை குறித்து சரியான தெளிவில்லாதவர்கள்கூட யூடியூபில் (bit.ly/ddsagri) எங்கள் காணொலிகளைக் கண்டு புரிந்துகொள்வர்" என்று கூறுகிறார் லக்ஷ்மம்மா. வேளாண் பணிகள் மட்டுமல்ல... பழங்குடி மற்றும் ஒடுக்கப்பட்ட இன மக்களின் பதபந்தள ஜதரா, எருவாத பண்டிகா போன்ற அந்த மக்களின், மண்ணின் விழாக்களையும் இவர்கள் பதிவுசெய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 75 கிராமங்களில் `சங்கம்' எனப்படும் பெண்கள் அமைப்பை நிறுவி சென்சு பழங்குடியின மக்களான இவர்களுடன் பணியாற்றி வருகிறது டெக்கான் முன்னேற்ற சங்கம்.

வேளாண் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!

மாநிலங்களவையில் வெற்றியடைந்த முத்தலாக் தடுப்புச் சட்டம்!

மக்களவையில் வெற்றியடைந்த முத்தலாக் தடுப்புச் சட்ட வரைவு சமீபத்தில் மாநிலங்களவையிலும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் திருத்தக் கோரிக்கைகளைத் தாண்டி வாக்கெடுப்பில் வென்றது சட்ட வரைவு. மும்முறை `தலாக்' என்ற சொல்லைச் சொல்லி விவாகரத்து செய்யும் வழிமுறையை இந்தச் சட்டம் தண்டனைக்குரிய குற்றமாக்கியிருக்கிறது. மக்களவையில் கடும் எதிர்ப்பைச் சந்தித்த சட்டவரைவு மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் பதிவாகின.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

அ.தி.மு.க, நிதிஷ் குமாரின் ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, மக்கள் குடியரசுக் கட்சி போன்ற கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வாக்கெடுப்பில் வென்றதும் பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், `முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதி இன்று சரிசெய்யப்பட்டது. பாலின நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது; சமூகத்தில் பாலின சமத்துவத்துக்கு இது வித்திடும். இந்தியா இன்று அகமகிழ்கிறது' என்று செய்தி வெளியிட்டுள்ளார்.

சமத்துவம் தழைக்க வாழ்த்துவோம்!

அவள் செய்திகள்

 மணிப்பூர் பொம்மைகள், நெலி சேசியா
மணிப்பூர் பொம்மைகள், நெலி சேசியா
 • கவுஹாத்தி நகரின் அனைத்து உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள கழிவறைகளைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்த இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது கவுஹாத்தி மாநகராட்சி ஆணையம். கடும் இடநெருக்கடி காரணமாக அந்த நகரில் கழிவறைகளை மாநகராட்சியால் கட்டித்தர முடியவில்லை.

 • மணிப்பூரைச் சேர்ந்தவர் நெலி சேசியா. இவர் மக்காச்சோளக் கதிரின் தோகை மற்றும் பட்டு கொண்டு பொம்மைகள் செய்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறார். முழுக்க இயற்கைப் பொருள்களால் செய்யப்படும் இவரது பொம்மைகள்தாம் இப்போது மணிப்பூரின் ஹாட் டாபிக்!

 • மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் ஒன்றின் மூலம் `நேப் நேப் மேட்' என்ற குழந்தைகளைத் தூங்க வைக்க பயன்படும் படுக்கை ஒன்றைத் தயாரித்து விற்பனைக்குக்கொண்டு வந்திருக்கிறார்கள் ஸ்வப்னில் ராவ் மற்றும் சமீர் அகர்வால். தாயின் கர்ப்பப்பையில் இருப்பதுபோல நுண்ணதிர்வுகள் தரும் இந்த மேட் குழந்தைகளின் தூங்கும் நேரத்தை அதிகரித்து பெற்றோருக்கு ஓய்வு தருகிறது என்று சொல்கிறார்கள் இவர்கள்.

 க.பொன்மணி
க.பொன்மணி
 • தற்பாலீர்ப்பாளர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்யப் போராடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான மேனகா குருசாமி மற்றும் அருந்ததி கட்ஜு ஆகிய இருவரும் தாங்கள் ஒன்றாக வாழ்ந்து வருவது உண்மைதான் என்று தெரிவித்திருக்கிறார்கள். 377-க்கு எதிரான தங்கள் போராட்டம் தனிப்பட்ட காரணத்தால் இன்னும் வலுவடைந்ததாகவும் கூறியுள்ளனர்.

 • முதுநிலை படிப்புக்காக நடத்தப்பட்ட ‘ஆயுஷ்’ தேர்வில் அகில இந்திய அளவில் அறந்தாங்கி அருகிலுள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் க.பொன்மணி முதலிடம் பெற்றுள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் மேற்படிப்பு பயிலவிருக்கிறார்.

 மீனாட்சி அரவிந்த், மூகாம்பிகை ரத்தினம், கத்ரினா கட்டுக்காரன்
மீனாட்சி அரவிந்த், மூகாம்பிகை ரத்தினம், கத்ரினா கட்டுக்காரன்
 • உலக அமைதி வேண்டி ராஜஸ்தானைச் சேர்ந்த 33 வயது சுபியா என்ற தடகள வீராங்கனை, காஷ்மீரிலிருந்து 4,035 கிலோமீட்டர் தூரத்தை 90 நாள்களில் ஓடி கடந்து, சமீபத்தில் கன்னியாகுமரி வந்தடைந்தார். கடந்த ஏப்ரல் 21 அன்று ஸ்ரீநகரில் தொடங்கிய அவரது ஓட்டத்தில் தினமும் 50 கிலோமீட்டர் தொலைவு ஓடுவதாகத் திட்டமிடப் பட்டிருந்தது. 100 நாள்களில் குமரி வந்து சேரவேண்டியவர், 90 நாள்களிலேயே அந்த தூரத்தைக் கடந்து சாதித்துள்ளார்.

 • திருச்சூரைச் சேர்ந்த 91 வயது கத்ரினா கட்டுக்காரன் என்னும் மூதாட்டி கடந்த 60 ஆண்டு களாக கட்டுமானப் பணி செய்துவருகிறார். கல்லும் மண்ணும் சுமந்து கூலியாக சம்பாதித்த பணத்தில் தன் பிள்ளைகளுக்கு நான்கு வீடுகள் கட்டித் தந்திருக்கும் இந்த 91 வயது இளைஞி, இறக்கும்வரை பணியைத் தொடரப் போவதாகப் புன்னகை யுடன் தெரிவிக்கிறார்.

 • கோவையைச் சேர்ந்த மீனாட்சி அரவிந்த், மூகாம்பிகை ரத்தினம் மற்றும் குழுவினர் வரும் ஆகஸ்ட் 7 அன்று கோவையிலிருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகர் வரை காரில் நெடும்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். 11,000 கிலோமீட்டர் தொலைவை காரில் குழுவினருடன் கடக்கவிருக்கும் மீனாட்சி இப்போது கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

 • ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கப்பல் கேப்டனான கரோலா ராகெட் சமீபத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்துக்கொண்டிருந்த 53 அகதிகளைக் காப்பாற்றி தன் கப்பலில் ஏற்றி இத்தாலியில் கரைசேர்த்தார். சட்டத்துக்கு எதிராக அகதிகளைக் கொண்டுவந்தார் என்று குற்றம் சாட்டி அவரை கைது செய்தது இத்தாலி அரசு. அவர்மீது எந்தத் தவறும் இல்லை என்று அறிவித்து விடுதலை செய்தார் நீதிபதி அலெசாண்ட்ரா வெல்லா. இத்தாலியின் உள்நாட்டு அமைச்சரான சால்வினி `கிரிமினல் கரோலா' என்று இவர் குறித்து காட்டமாகப் பேசி வரும் நிலையில், சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் கரோலா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்
 • இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான தெரசா மே பணியை விட்டு விலகுவதற்கு முன் அளித்த இறுதிப் பேச்சில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக, தகுதி வாய்ந்த பெண்கள் தங்களுடன் பணியாற்றும் தகுதி குறைவான, பணியாற்ற விருப்பமில்லாத ஆண்களை எப்படிச் சமாளிப்பது என்று விளக்கம் அளித்தார். ``பெண்கள் தங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்; சோர்வுறாமல் பணியைச் செய்ய வேண்டும்; தனக்கான பணி மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டும்'' என்று அறிவுரை அளித்தார்.

 • சென்னையில் 105 வார்டுகளில் பெண்கள் சுயதொழில் கற்கும் வகையில் திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப் பட்டுள்ள இந்த மையங்களில் ஊதுவத்தி மற்றும் மெழுகுவத்தி தயாரித்தல் கற்றுத்தரப்படுகிறது.