Published:Updated:

``ஆட்டோலயேதான் என் பிள்ளைங்களப் போட்டு வளர்த்தேன்!" - பெண் ஆட்டோ ஓட்டுநர் சித்ரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண் ஆட்டோ ஓட்டுநர் சித்ரா
பெண் ஆட்டோ ஓட்டுநர் சித்ரா ( படம்: தே.சிலம்பரசன் / விகடன் )

``எங்க ஆட்டோ ஸ்டாண்ட்ல நான் மட்டும்தான் பெண் ஆட்டோ ஓட்டுநர். பெரும்பாக்கம் ஏரியாவுல ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநர் இருக்காங்க. எங்க ஆட்டோ ஸ்டாண்ட்லயும் சரி, சுத்துப்பட்டுலயும் சரி, சக ஆட்டோகாரங்க என்னை `மாமியார்'னு தான் கூப்பிடுவாங்க.

விழுப்புரம் சிக்னலில் பார்த்த காட்சி.

வளையல்கள் சலசலக்கும் அந்தக் கைகள், ஸ்டியரிங்கை கவனமாகப் பிடித்துக் கொண்டிருந்தன. தன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான பயணத்தில் அந்தக் கண்கள் குவிந்திருந்தன. கம்பீரமாகத் தன் ஷேர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கிளம்பினார் சித்ரா. கடந்த 22 வருடங்களாக ஆட்டோ ஓட்டிவரும் சீனியர் ஆட்டோக்கார அக்கா சித்ராவிடம் பேசினோம்.

``எனக்கு 43 வயசாகுது. 22 வருஷமா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பாண்டிச்சேரியில. என் கூடப் பிறந்தவங்க மூணு பேரு. நான் எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எனக்கு 13 வயசு இருக்கும்போதே என் அப்பா தவறிட்டாரு. அம்மாதான் என்னைய வளர்த்துக் கட்டிக் கொடுத்தாங்க.

சித்ரா
சித்ரா

எனக்கு 22 வயசு இருக்கும்போது, அப்போ பாண்டிச்சேரி முதலமைச்சரா இருந்த ரங்கசாமி சார் 500 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி கொடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். லைசென்ஸ், பர்மிட், ஆட்டோ வாங்குறதுக்கு பேங்க்ல லோன், மானியம்னு எல்லாமே இலவசமா பண்ணிக் கொடுத்தாங்க. அந்த நேரத்துல, எங்க ஐயா (கணவர்) கிட்ட அனுமதி வாங்கி நானும் ஆட்டோ ஓட்டுற பயிற்சிக்குப் போய் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறமா பாண்டிச்சேரியிலதான் நாலு வருஷம் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தேன். பாண்டியில நல்ல வருமானம் இருந்துச்சு'' என்றவர், தாய்மைப் பொறுப்புகளுக்கு இடையிலும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டியது பற்றிப் பகிர்ந்தார்.

``எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. ரெண்டு பேரையும் ஆட்டோலயேதான் போட்டு வளர்த்தேன். தொட்டில்ல கிடக்குற மாதிரி, ஆட்டோலயேதான் இருப்பாங்க.

சவாரிக்கு வண்டியில ஏற வர்றவங்க, `ஏம்மா, யாரோட குழந்தைகளோ ஆட்டோல ஏறிட்டாங்க போல'னு சொல்லுவாங்க. `என் பசங்கதான்'னு சொல்லிட்டு சாவாரிக்குப் போவேன். அப்புறம் பசங்க பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சதுல இருந்து சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆட்டோல என்கூட இருப்பாங்க.

பையன் பி.ஏ இங்கிலீஷ் படிச்சான். பொண்ணு பி.ஏ வரலாறு படிச்சாங்க. இப்போ ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. எனக்குப் பேரன், பேத்திகள் இருக்காங்க'' என்றவர், பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்திருக்கிறார்.

``2005வது வருஷம், விழுப்புரம் மாவட்டத்துல இருக்குற, என் ஐயாவின் சொந்த ஊரான சிறுவாக்கூருக்கு வந்துட்டோம். அவர் ஆரம்பத்துல கூலி வேலைக்குத்தான் போய்கிட்டு இருந்தாரு. நான் மோட்டார் லைனுக்கு வந்ததுக்கு அப்புறமா அவருக்கும் ஆட்டோ ஓட்டக் கத்துக் கொடுத்தேன். அவரும் இப்போ ஆட்டோதான் ஓட்டுறாரு. என் பையனுக்கும் நான்தான் ஆட்டோ ஓட்டக் கத்துக் கொடுத்தேன். படிச்சும் வேலை கிடைக்காம, அவனும் இப்போ ஆட்டோதான் ஓட்டுறான்.

விழுப்புரம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கூட்டு சாலை
விழுப்புரம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கூட்டு சாலை
``18 நாள்ல 140 சடலங்கள், தகனமேடை தண்டவாளமே உருகிடுச்சு!" - மின்மயான ஊழியர் கண்ணகி #SheInspires

நான் ஓட்டுற ஆட்டோ மட்டும்தான் சொந்த ஆட்டோ. என் ஐயாவும், பிள்ளையும் வாடகை ஆட்டோதான் ஓட்டுறாங்க. நாங்க விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தப்போ, புது ஆட்டோ வாங்க `தாட்கோ' மூலம் உதவி பண்ணினாங்க. மானியமும் கொடுத்தாங்க. அந்தக் கடனை முறையா திருப்பி அடைச்சுட்டேன்.

2005-ல எல்லாம் அதிகமா ஷேர் ஆட்டோ கிடையாது. எங்க ஊருக்கு சுத்துப்பட்டுல இருக்குற பலருக்கும் நம்ம ஆட்டோ சவாரிதான். நம்ம வண்டியில பிரசவத்துக்குக் கிளம்புற கர்ப்பிணிகள் பலருக்கு சுகப்பிரசவம்தான் ஆகும். அதுக்காகவே மறு குழந்தைக்கு பிரசவத்துக்குக் கிளம்பும்போதும், `சித்ராக்கா வாங்க...'னு கூப்பிடுவாங்க. எப்படியும் 100 கர்ப்பிணிகளை பிரசவத்துக்குக் கூட்டிட்டுப் போயிருப்பேன். ராத்திரி, மழைனு எப்போ கூப்பிட்டாலும் ஓடிடுவேன். அப்படி பிறந்த பல பிள்ளைகளுக்கும் இப்போ கல்யாணமே ஆகிடுச்சு. ஆம்புலன்ஸ் வசதி வந்ததுக்கு அப்புறம் அந்தளவுக்கு இப்போ பிரசவ சவாரிகள் வர்றதில்ல'' என்றவர், ஆட்டோ ஸ்டாண்டில் சக ஓட்டுநர்களின் ஆதரவு பற்றியும் பகிர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்க ஆட்டோ ஸ்டாண்ட்ல நான் மட்டும்தான் பெண் ஆட்டோ ஓட்டுநர். பெரும்பாக்கம் ஏரியாவுல ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநர் இருக்காங்க. எங்க ஆட்டோ ஸ்டாண்ட்லயும் சரி, சுத்துப்பட்டுலயும் சரி, சக ஆட்டோகாரங்க என்னை `மாமியார்'னு தான் கூப்பிடுவாங்க. நானும் அவங்களை `என்ன மருமகனே'னுதான் பதிலுக்குக் கூப்பிடுவேன். அந்தளவுக்கு உரிமையோட கலகலப்பா பேசிக்குவோம். நான் இத்தனை வருஷமா ஆட்டோ ஓட்டுறதுக்கு சக ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ற ஆதரவும், பலமும் முக்கியக் காரணம்'' என்றார்.

அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை காண்பித்த சித்ரா, ``நான் இங்க ஆட்டோ ஓட்ட வந்தப்போ இவரு சின்ன பையன். இப்போ அவரும் வளர்ந்து சொந்தமா ஆட்டோ ஓட்டுறாரு. இந்த இடம் மட்டும்தான் மாறாம இருக்கு. மீதி எல்லாமே மாறிடுச்சு. நிறைய சின்ன வயசுப் பொண்ணுங்க எங்கிட்ட வந்து, ``உங்கள மாதிரி ஆட்டோ ஓட்ட ஆசை. ஓட்டுறதுக்கு கத்துத் தருவீங்களா''னு கேக்குங்க. நானும், `ஞாயித்துக்கிழமை வாங்க, கத்துத் தர்றேன்'னு சொல்லி அனுப்புவேன். ஆனா, அதுக கேக்குறதோட சரி, திரும்ப வாராதுக. இந்த 22 வருஷத்துல எத்தனையோ பெண்களைக் கூப்பிட்டுப் பார்த்துட்டேன். யாரும் இந்த மோட்டார் லைனுக்கு வரல'' என்கிறார் வருத்தத்துடன்.

சித்ரா
சித்ரா
``இல்லாதவர்களுக்கு உதவுவது ஒரு போதை!" - அறம் செய்யும் இளம்பெண் லிடியா #SheInspires

``நான் இந்த மோட்டார் லைனுக்கு வந்துதான், என் பிள்ளைங்கள வளர்த்தேன், காலேஜ் வரை படிக்க வெச்சேன். ஆட்டோ தொழிலைப் பொறுத்தவரைக்கும் ஒரு நாளைக்கு வருவாய் கிடைக்கும், ஒரு நாளைக்குக் கிடைக்காது. ஆனாலும், யாரையும் நம்பி வாழ வேண்டியதில்ல. நான் பொதுவா ஸ்டாண்ட்ல இருக்க மாட்டேன், ரவுண்ட்ஸ்லயேதான் இருப்பேன். 30 ரூபா சவாரி ஆனாலும் சரி... 300 ரூபா சவாரி ஆனாலும் சரி எடுத்துப்பேன்.

பொதுவா, பொண்ணுங்க வாழ்க்கையே சவால்கள் நிறைஞ்சதுதான். அது என் வாழ்க்கையிலும் உண்டு. இந்தச் சமூகத்தில நிறைய பேரை சமாளிக்க வேண்டியது இருக்கும். சாலையில, ஒரு பொம்பளை நம்மளை முந்துறதானு நம்மளை வெறியோட முந்திக்கிட்டு போறவங்க, சில நேரம் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டிட்டுப் போவாங்க. டிராஃபிக்ல திட்டுவாங்க. லைசென்ஸே இல்லாம ஓட்டுற சின்ன பசங்ககூட திட்டுவாங்க. இந்த மாதிரி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். அதையெல்லாம் கண்டுக்க மாட்டேன். அவங்கள சீரியஸா எடுத்துக்கிட்டா நாம வேலை செய்ய முடியாது. சில நேரம் ராத்திரி சவாரி போறப்போ வண்டி ரிப்பேராகி நடு ரோட்டுல நிக்கும். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். அந்த மாதிரி சமயத்துல கடவுள் மாதிரி யாராவது வந்து உதவி பண்ணுவாங்க'' என்றவர், தன் கணவர் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

``என் ஐயா, `நான் ஆட்டோ ஓட்ட சொல்லிக்கொடுக்குற கிளாஸுக்கு போறேன்'னு அன்னைக்கு சொன்னப்போ எனக்குத் தெம்பு கொடுத்து அனுப்பி வைக்காம இருந்திருந்தா, நான் இந்த லைனுக்கே வந்திருக்க மாட்டேன். எனக்கு பக்கபலமா இருந்து ஊக்கப்படுத்தினது அவர்தான். பெரும்பாலும் ராத்திரி சவாரினா என் ஐயாவும் கூட வருவாரு. இப்படி ஒவ்வொரு சவாலையும் என்னைப் பழக வெச்சது அவருதான். ரெண்டு பேருமே ஆட்டோ ஓட்டுறதால, வீட்டு வேலை செய்யுறதுக்கு எப்பவும் ஒத்தாசையா இருப்பாரு. தினமும் காலையில அவர் சமைக்க, நான் மத்த வீட்டு வேலைகளை செஞ்சு முடிச்சிடுவேன். அவரு ஆட்டோ ஓட்டக் கிளம்பினதுக்கு அப்புறமா நான் ஆட்டோவை எடுப்பேன். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள், துணி துவைக்கிறது போன்ற வீட்டு வேலையச் செய்ய சரியா இருக்கும்'' என்றவர்,
தினந்தோறும் 50 பேருக்கு உணவு, புற்றுநோயாளிகளுக்கு உதவி; எளியவர்களின் நாயகி டெய்சி ராணி! #SheInspires

``கொரோனா வர்றதுக்கு முன்னாடி ஸ்கூல் சவாரி எல்லாம் எடுத்து ஓட்டுவோம். நல்ல வருமானம் இருந்துச்சு. ஆனா, கொரோனாவுக்கு அப்புறம் வருமானமே போச்சு. இன்னொரு பக்கம் டீசல் விலை ரொம்பவே ஏறிடுச்சு. பெண்களுக்கு இலவசப் பேருந்து விட்டிருக்காங்க.

பேசாம ஆட்டோவை விட்டுட்டு கூலி வேலைக்குப் போகலாமானு அப்பப்போ தோணும். ஆனாலும் மனசு வராது. டீசல் விலையைக் கொஞ்சம் குறைச்சாலாவது பரவாயில்ல. இதோ இன்னைக்குக் கூட பாருங்க... மதியம் மூணு மணி ஆகிடுச்சு. காலையிலிருந்து 50 ரூபாய்க்குத்தான் ஓட்டியிருக்கேன். ஆனாலும், கொரோனாவுக்கு முந்தைய உலகத்துக்கு சீக்கிரமே போயிடுவோம்னு நம்பிக்கை இருக்கு'' - நேர்மறையாக முடித்தார் சித்ரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு