Published:Updated:

''மீட்டிங் முடிவில் பெண்களை தேநீர் பரிமாறச் சொன்னார்கள்'' அரசியல் ஆர்வலர் ஏஞ்ஜலிக்கா!

ஆ.சாந்தி கணேஷ்

''இப்போதும் அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு, அதுதொடர்பான நிகழ்ச்சியில், கடைசி ஓரத்தில் இருக்கை போடுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ''

ஏஞ்ஜலிக்கா ஹரிபம்
ஏஞ்ஜலிக்கா ஹரிபம் ( twitter.com/AngellicAribam )

''அரசியல், அதில் பங்குபெறும் பெண்களை இரண்டாம் தர பிரஜைகளாகத்தான் பார்க்கிறது'' - இப்படி சொல்லியிருப்பவர், அரசியல் ஆர்வலரும் பெண்ணியவாதியுமான ஏஞ்ஜலிக்கா ஹரிபம். இந்திய தேசிய காங்கிரஸில், மாணவர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளராகவும் செயல்பட்டிருக்கிற ஏஞ்ஜலிக்கா, தன்னுடைய அரசியல் செயல்பாடுகளுக்காக 'ஃபோர்ப்ஸ்' இதழின் 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கான பிரிவில் இடம்பிடித்திருக்கிறார்.

''அரசியல், பெண்களை இரண்டாம் தர பிரஜைகளாகத்தான் பார்க்கிறது''
''அரசியல், பெண்களை இரண்டாம் தர பிரஜைகளாகத்தான் பார்க்கிறது''
en.wikipedia.org

அப்படிப்பட்டவர்தான், மேலே இருக்கிற வார்த்தையைப் பொட்டில் அறைந்ததுபோல சொல்லியிருக்கிறார். தான் அப்படி சொன்னதற்கான காரணத்தை அவரே தன் சமூக வலைதளத்தில் சொல்லியும் இருக்கிறார்.

'' ஏழு வருடங்களுக்கு முன்னால், இந்திய தேசிய காங்கிரஸின் மாணவர்கள் பிரிவில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த நேரம் அது. இதற்காக, மாவட்ட அளவில் நடந்த ஒரு மீட்டிங் நடைபெற்றது. மாணவர் பிரிவின் பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு, கலந்துகொண்ட முதல் மீட்டிங் இது. அந்த மீட்டிங்கில் இரண்டு விஷயங்கள் என்னை திடுக்கிடவைத்தன. ஒன்று, அங்கிருந்த 21 பேரில் இருவர் மட்டுமே பெண்கள். அவர்கள் அந்த மீட்டிங் முழுக்க அமைதியாகவே இருந்தது. இரண்டாவது, அங்கிருந்த ஆண்கள், அந்த மீட்டிங் இடைவேளையில் அவர்களை தங்களுக்கு தேநீரும் நொறுக்குத் தீனியும் பரிமாறும்படி சொன்னது.

தனுஶ்ரீ தத்தா, நானாபடேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியபோது, இவர்தான், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடைய படங்களில் மற்ற நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று குரல் கொடுத்தவர்.

இது, சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது அப்படியில்லை என்று சொல்வதற்கில்லை. இப்போதும், அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு, அதுதொடர்பான நிகழ்ச்சியில் கடைசி ஓரத்தில் இருக்கை போடுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அரசியலில் முதல் தலைமுறையாக ஈடுபடுகிற பெண்கள், முதலில் பயத்தில் பேச மாட்டார்கள். அவர்கள், பயம் தெளிந்து பேச ஆரம்பிக்கையில், அது ஆண்களின் குரல்களுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும்.

இந்திய நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது வெறும் 14.3 சதவிகிதம்தான். உலக அளவில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதுடன் கம்பேர் செய்தால், இது மிக மிகக் குறைவு. பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எத்தனையோ தடைகள் இருக்கின்றன. அதை நான் என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்'' என்கிற ஏஞ்ஜலிக்கா ஹரிபம், மணிப்பூரைச் சேர்ந்த 27 வயதே ஆன அரசியல் ஆர்வலர்.

அரசியலில் பெண்களின் பங்கு
அரசியலில் பெண்களின் பங்கு

பாலிவுட் நடிகை தனுஶ்ரீ தத்தா, நடிகர் நானாபடேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியபோது, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடைய படங்களில் மற்ற நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று ஏஞ்ஜலிக்காதான் குரல்கொடுத்தவர்.