Published:Updated:

`பீடி இலையில் கருகுது வாழ்க்கை..!' - பீடி சுற்றும் பெண்களின் துயரங்கள்

பீடிக் கட்டுகள்
பீடிக் கட்டுகள்

தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சொற்ப வருவாய்க்காக நாள் முழுவதும் பீடி சுற்றும் பெண்கள், அதோடு சேர்த்து காச நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் சேர்த்தே கூலியாகப் பெறுகிறார்கள்.

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண்களின் வாழ்வாதாரத் தொழிலாகப் பீடி சுற்றும் தொழில் உள்ளது. கிராமம், நகரம் என்கிற வேறுபாடு இல்லாமல் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத் தேவையை இந்தத் தொழில் ஈடுகட்டுகிறது.

பீடி சுற்றுவதற்குத் தேவையான இலை, புகையிலை போன்றவற்றை பீடி நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கி விடுகின்றன. அதனால் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே குடிசைத் தொழில்போல பீடியைச் சுற்றி அந்த நிறுவனங்களுக்குக் கொடுத்து வருவாய் ஈட்டுகிறார்கள்.

பீடி சுற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் இலை மத்திய பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே பயிரிடப்படுவதால் அங்கிருந்து வாங்கி வரப்படுகிறது. பீடியின் உள்ளே வைக்கப்படும் புகையிலை கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படுகிறது.

மூலப்பொருள்களான இலையையும் புகையிலையையும் பெற்றுக்கொண்டு வீடு செல்லும் பெண்கள், அவற்றைக் கொண்டு பீடி சுற்றுகிறார்கள். அதற்கு ஊதியமாகக் கிடைக்கும் சொற்பத் தொகையை வைத்து குழந்தைகளுக்கான கல்விச் செலவு, உணவு, உறைவிடத் தேவைகளைச் சமாளிக்கிறார்கள்.

பீடித் தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களின் நிலை குறித்து டெல்லியைச் சேர்ந்த ஏ.எஃப் டெவலப்மென்ட் கேர் (ஏ.எஃப்.டி.சி) என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அந்த அமைப்பின் ஆய்வு முடிவில் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

பீடி சுற்றும் தொழில்
பீடி சுற்றும் தொழில்

அதில், `பீடி சுற்றும் பெண்கள் தினமும் 8 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்த நிலையிலேயே பீடி சுற்றுகிறார்கள். அதனால் அவர்களில் 92.5% பேர் நெஞ்சக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90.5% பேர் உடல் வலியால் அவதிப்படுகிறார்கள். 80% பேர் முதுகு வலியாலும், 77% பேர் மூச்சுத் திணறலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீடி சுற்றும் தொழிலில் உள்ளவர்கள் ஆபத்தான சூழலில் இருப்பதாக ஏ.எஃப்.டி.சி ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா என்பதை அறிய நேரில் சென்றோம். பல பெண்களுக்கு, தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியக் குறைபாடு பற்றி எதுவும் தெரியாதபோதிலும் உடலில் வலி இருப்பதையும் சோர்வாக இருப்பதையும் மட்டும் தெரிவித்தனர்.

ஷாஜஹான் பீவி
ஷாஜஹான் பீவி

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் பீடி சுற்றிக்கொண்டிருந்த ஷாஜஹான் பீவி என்பவரிடம் பேசினோம். ``கடந்த 20 வருஷமா பீடி சுத்துறேன். காலையில வீட்டு வேலைகளை முடிச்சுட்டு பீடி சுத்த உட்காருவேன். மதிய சாப்பாட்டுக்கு எந்திரிக்கிற அந்தக் கொஞ்சம் நேரம் போக, ராத்திரி வரை பீடி சுத்துவேன். ரேடியோ கேட்டுக்கிட்டோ, டிவி பாத்துக்கிட்டோ வேலையைப் பார்ப்பேன்.

நாள் முழுக்க பீடு சுத்துறதால அக்கம் பக்கம், சொந்தக்காரங்கனு யார்கூடவும் பேசமுடியுறதில்ல. சில நேரம் பீடி சுத்துற பொருளையெல்லாம் எடுத்துக்கிட்டு பக்கத்து வீட்டுக்குப் போய், வேலைபார்த்துகிட்டே அவங்ககூட பேசிக்கிட்டிருப்பேன்.

பீடி சுற்றும் பெண்கள்
பீடி சுற்றும் பெண்கள்

ஒரே இடத்துல உட்கார்ந்துகிட்டு இருக்கிறதாலேயோ என்னவோ கழுத்து வலி அதிகம் இருக்கு. முதுகிலும் அடிக்கடி வலி வருது. ஆனாலும் பீடி சுத்தினாதான் குடும்பத்தை நடத்த முடியும் என்பதால தொடர்ந்து அதே தொழிலைச் செய்றேன்” என்கிறார், கழுத்தைத் தடவிக்கொண்டே.

அதே பகுதியைச் சேர்ந்த ஃபரீதா பேசுகையில், ``பீடி கம்பெனியில் 1,000 இலைகளையும் அதுக்குத் தேவையான புகையிலைத் தூளையும் கொடுத்துடுவாங்க. அதைச் சுத்தி 1,000 பீடிகளா திருப்பிக் கொடுக்கணும். சில நேரம் பீடி இலைகள் கிழிஞ்சிருக்கும். ஆனாலும் நாம வாங்கிட்டு வந்த இலைகளுக்குத் தகுந்த பீடி கொடுக்கணும்.

பீடி சுற்றும் தொழில் செய்யும் ஃபரீதா
பீடி சுற்றும் தொழில் செய்யும் ஃபரீதா

அதனால சில நேரங்கள்ல வெளியில இலையைச் சொந்தமா விலை கொடுத்து வாங்கி பீடியைச் சுத்திக் கொடுப்போம். நமக்குக் கூடுதல் செலவாகும்தான்... என்ன பண்ணுறது. 1,000 பீடி சுத்தினா எங்களுக்கு 200 ரூபாய் சம்பளமா கிடைக்கும். பீடி சுற்றும் பெண்கள், இந்தத் தொழிலின் மூலம் மாசம் 7,000 ரூபாய் வரை சம்பாதிப்போம்” என்கிறார்.

நெல்லையை அடுத்த மேல குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமியும் முத்துக்குட்டியும் ஒன்றாக அமர்ந்து பேசியபடியே பீடி சுற்றிக்கொண்டிருந்தனர். முத்துக்குட்டியிடம் பேசினோம். ``ஊனமுற்ற எனக்குத் தெரிந்த தொழில் இது மட்டும்தான். காலையில பீடி சுத்தத் தொடங்கிவிடுவேன். 25 பீடிகள் கொண்ட கட்டுகளா 40 கட்டுகளைக் கொடுத்தா 200 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

ராமலட்சுமி, முத்துக்குட்டி
ராமலட்சுமி, முத்துக்குட்டி

பீடி சுத்துறதால முதுகு வலி இருந்துகிட்டே இருக்கும். மூச்சுவிட முடியாம சில நாள்கள் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதாகிடும். மருந்து மாத்திரைகளை வாங்கினா, பீடி சுத்தின பணம் செலவாகிவிடும். ஆனாலும், வேற வேலை எதுவும் இல்லாததால இதுலேயே கிடந்து கஷ்டப்படுறோம்” என்று வேதனைப்பட்டார்.

பீடி சுற்றும் ஆயிஷா பேசியபோது, ``நிறைய பீடி கம்பெனிகள் இருக்கு. ஒவ்வொரு கம்பெனியும் அவங்க பீடி கட்டுகளுக்குத் தகுந்ததுபோல பண்டல் போடச் சொல்வாங்க. அரை கிலோ இலையும் 200 கிராம் புகையிலைத் தூளும் கொடுத்தா 1,000 பீடிகளைத் திருப்பிக் கொடுக்கணும். அதுக்கு சரியா 217 ரூபாய் 85 பைசா சம்பளமா கிடைக்கும்.

மேலப்பாளையம் ஆயிஷா
மேலப்பாளையம் ஆயிஷா

பீடி இலைகளை வாங்கிட்டு வந்து மறுநாள் 11 மணிக்குள் பீடிகளைத் திருப்பிக் கொடுத்தாதான் அடுத்த நாளுக்கான இலையை வாங்க முடியும். அதனால பீடியைச் சுத்தி முடிக்காதவங்க `வட்டி பீடி’ வாங்கிட்டுப் போய் கம்பெனியில கொடுத்து கணக்கை முடிப்பாங்க. வட்டி பீடிங்கிறது என்னன்னா, மூணு கட்டு பீடியை ஒருவர்கிட்டயிருந்து வாங்கினா, திருப்பிக் கொடுக்கும்போது அவருக்குக் கூடுதலாக ஒரு கட்டு பீடியைத் தரணும். சிலர் கைமாத்தாவும் பீடி கட்டுகளை வாங்கிட்டுப் போய் கம்பெனியில கணக்குக் கொடுப்பாங்க.

இப்படி நாங்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம். இன்னொரு பக்கம், நிறைய நோய்கள் வருது. பலருக்குக் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுது. கண் பார்வைக் குறைபாடு, ஒற்றைத் தலைவலினு பல நோவுகள். அதனால வாங்கும் சம்பளத்தில் பாதி டாக்டருக்கே கொடுக்க வேண்டியதாகிறது” என்று வருத்தப்பட்டார்.

நாங்கள் பீடி சுற்றும் தொழில் செய்வதால் நிறைய நோய்களுக்கு ஆளாகிவிட்டோம். எங்கள் பிள்ளைகளுக்கு அந்த நிலைமை வரக்கூடாது.
மகமதா, ஆயிஷா - பீடி சுற்றும் பெண்கள்

மகமதா, ஆயிஷாபீவி ஆகியோரிடம் பேசியபோது, ``நாங்க வெவரம் தெரியாம இந்த பீடி சுத்தும் வேலைக்கு வந்துட்டோம். எங்கள் பிள்ளைகளுக்கும் எங்க நெலமை வந்துடக் கூடாது என்பதால அவங்களை உதவிக்காகக்கூட பீடி சுத்த சொல்றதில்லை. பீடி இலைகளும், புகையிலை வாசமும் எங்களோடு போகட்டும். குழந்தைங்க நல்லா படிச்சு வேலைக்குப் போகட்டும்” என்கிறார்கள் அக்கறையுடன்.

இது குறித்து சி.ஐ.டி.யு நெல்லை மாவட்டச் செயலாளரான மோகனிடம் பேசினோம். ``பீடி சுற்றும் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பீடி விற்பனை தொடர்பாக அரசு பல்வேறு கெடுபிடிகளைச் செய்வதால் பீடி நிறுவனங்கள் அவர்களுக்குச் சம்பள உயர்வு கொடுப்பதில்கூட பாரபட்சம் காட்டுகின்றன. முழுக்கவும் பெண்களின் உழைப்பை நம்பியிருக்கும் பீடி சுற்றும் தொழில், அதில் ஈடுபடுவோருக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடுகிறது.

சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் மோகன்
சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் மோகன்

மூக்கு, வாய் வழியாகப் பீடித்தூள், புகையிலை ஆகியவை செல்வதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகிறார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய் ஏற்படுகிறது. ஆனால், குடும்பத்தின் வறுமையான சூழ்நிலை காரணமாக அந்த நோய்களைக் குறித்துக்கூட வெளியில் பேசத் தயங்குகிறார்கள். அரசு உடனடியாக இந்தத் தொழிலுக்கு மாற்றாக, பெண்கள் பயனடையும் வகையில் சென்ட் தொழிற்சாலை, கயிறு திரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட மாற்றுத் தொழில் குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியம்” என்றார்.

பீடி இலையிலும் புகையிலையிலும் கருகிக்கொண்டிருக்கும் பெண்களின் ஆரோக்கியம் மீட்கப்படுமா?

அடுத்த கட்டுரைக்கு