Published:Updated:

பெண்ணென்று கொட்டு முரசே!

பெண்ணென்று கொட்டு முரசே!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்ணென்று கொட்டு முரசே!

கொண்டாடுவோம்...

காயத்ரி சித்தார்த் - ஓவியம்: ராஜா

இப்போதுதான் காதலர் தினம் வந்து போயிருக்கிறது. போதாக்குறைக்கு இப்போது சில ஆண்டுகளாக ரோஜா தினம், முத்த தினம், கட்டிப்பிடி தினம் என இன்னும் ஐந்தாறு தினங்களை முன்னோட்டாகச் சேர்த்து வேறு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் முடித்து, கொஞ்சம் ஓய்வெடுப்பதற்குள்ளாக, ஆண்டுதோறும் ஆண்களின் முணுமுணுப்புகளுக்கு ஆளாகும் சர்வதேச மகளிர் தினம் வந்துவிட்டது. பின்னே, மாதம்தோறும் அந்த டே, இந்த டே என்று சொல்லிக் கொண்டிருந்தால் சலிப்பாயிருக்காதா என்ன? எதற்கு இந்த மகளிர் தினம்?

`வருஷம் முழுக்க 365 நாளும் வீட்ல பெண்களுக்குத்தான முன்னுரிமை தர்றோம்... அதுல எதுக்கு ஸ்பெஷலா ஒரு நாளை கொண்டாடுறது?' என்று ஒரு தரப்பு. `சர்வதேச ஆண்கள் தினம் என்னிக்குன்னே தெரியல. அப்படி ஒண்ணு இருக்கான்னும் தெரியல. இவங்களுக்கு மட்டும்தான் இப்படி கொண்டாட்டமெல்லாம்' என்று அங்கலாய்க்கும் மற்றொரு தரப்பு. இவர்களுக்கு மத்தியில்தான் இந்த தினம் வருடா வருடம் வந்து செல்கிறது.

உண்மையில் மகளிர் தினம் என்பது, பெண் கல்விக்காகவும் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் ஆண் பெண் சமத்துவத்துக்காகவும் போராடிப் போராடி, வரலாற்றில் பெயர்கூட எஞ்சாமல் காற்றில் மறைந்த கோடிக்கணக்கான பெண்களுக்காக, அவர்களை நினைவு கூர்வதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுவதாக இருந்து, கடைப்பிடிக்கப்படுவதாக மாறி இப்போது கொண்டாடப்படுவதாக மாறியிருக்கிறது. எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த நாளை ஒரு பண்பட்ட சமூகம் நிச்சயம் கொண்டாடியாக வேண்டும்.

ஆனால், எதற்காக? ஒரு சமூகம் ஏன் பெண்களை, பெண்மையை, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவென சிறப்பாக ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டும்? ஏனென்றால் அது ஒரு நன்றியறிதல். அது ஒரு வகையான மன்னிப்புக் கோரல். ஒரு வகையில் வழிபாடும்கூட. முளைத்தது புல்லானாலும் பெரு விருட்சமானாலும் அது மண்ணை நோக்கிச் சொல்ல வேண்டிய சொல் எதுவோ, அதுவே ஒரு சமூகம் பெண்ணை நோக்கிச் சொல்ல வேண்டியதுமாக இருக்கும்.

பெண்ணென்று கொட்டு முரசே!

சமூகம் சொல்வதிருக்கட்டும். பெண்களே முதலில் உங்கள் மதிப்பென்ன என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா... நீங்கள் மறந்து விடாமலிருக்க, உங்கள் பலவீனங்களை இந்த உலகம் பட்டியல் போட்டு உங்கள் காதுகளுக்குள் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், உங்கள் பலம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா...

யானைப் பாகன்கள் பெரும்பாலான நேரங்களில் யானையைக் கட்டி வைப்பதில்லை. இரும்புச் சங்கிலியை அதன் காலருகே தரையில் இரண்டு முறை தட்டி சப்தமெழுப்பிவிட்டு தரையில் போட்டுவிடுவார்கள். யானை பழக்க தோஷத்தில், தான் கட்டப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டு அங்கேயே நின்றிருக்கும். பெண்களும் இப்படித்தான். கடமை, காதல், தாய்மை, குடும்பம், குடும்ப கெளரவம் என ஏதோவொரு சங்கிலியில் தாங்கள் கட்டப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தங்களை சிலை வைக்கப்படாத தியாகிகளாக எண்ணிக்கொள்கிறார்கள். பொன்னால் செய்து வைரத்தால் அலங்கரித்தாலும் கூண்டென்பது பறவைக்குச் சிறை மட்டுமே. நாம் இருப்பது கூண்டுக்குள்ளா, கூட்டுக்குள்ளா என்பதை அறிந்திருக்க வேண்டியதே பெண் விடுதலையின் முதல் படியாக இருக்கும். அதை நினைவூட்டுவதற்காகவே இந்த தினம் இருக்கிறது.

கொண்டாடுங்கள் பெண்களே... பெண்ணா யிருப்பதே கொண்டாடுவதற்குப் போதுமான காரணம் என்பதை அறியுங்கள். பணம், படிப்பு, பதவி, குடும்பம், செல்வாக்கு எனச் சுகமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துக் கும் முன்பாக, உங்கள் சுயமரியாதையை முன்னிறுத்துங்கள். உருவ கேலிகளை, ஓயாத மதிப்பீடுகளை ஒதுக்குங்கள். பொலிவையும் ஆரோக்கியத்தையும் பேணுங்கள். சமைய லறையில் முடங்காதீர்கள். வீட்டில் எஞ்சியதையும் ஆறிப்போனதையும் உண்ணாதீர்கள். பிடித்ததை உண்ணுங்கள், உடுத்துங்கள், செய்யுங்கள். தேவையானபோது, ஓய்வெடுங்கள், ஊர் சுற்றுங்கள்.

நினைவிருக்கட்டும். உங்களுக்கான அனைத் தையும் எவரிடமும் கேட்டுப் பெறாமல் அடைந்திருக்க வேண்டியது உங்கள் உரிமை. அவ்வுரிமையை எதன்பொருட்டும் விட்டுக் கொடுக்காமல் காத்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை.