Published:Updated:

புதுக்கோட்டை: மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணம்... பரிசுப்பொருள்களால் திகைக்க வைத்த இளைஞர்கள்!

 திருமணப் பரிசு கொடுத்து அசத்திய இளைஞர்கள்
திருமணப் பரிசு கொடுத்து அசத்திய இளைஞர்கள்

``அவங்க அப்பா இடத்தில் இருந்து பானுப்ரியாவுக்கு நல்லபடியா திருமணம் செய்து அனுப்பணும்னு நெனச்சோம். மிக்ஸி, கிரைண்டர்னு எங்களால முடிஞ்சதை வாங்கிக் கொடுத்தோம்.''

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அலஞ்சிராங்காட்டைச் சேர்ந்தவர், 28 வயது இளம்பெண் பானுப்ரியா. இவர் விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளி. பானுப்ரியாவின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, மகளின் எதிர்காலத்தை எண்ணிய தாய் செல்வி, கூலிவேலை செய்து மகளைப் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டைச் சேர்ந்தவர் ரகுநாத். அவரும் பானுப்ரியாவைப்போல விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளி. பட்டப்படிப்பு முடித்த ரகுநாத் சென்னையில் உள்ள ஆர்.பி.ஐ வங்கியில் வேலைசெய்து வருகிறார்.

இளைஞர்கள்
இளைஞர்கள்

சென்னையில் படிக்கும்போது பானுப்ரியாவுக்கும் ரகுநாத்துக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ரகுநாத், பானுப்பிரியாவிடம் தன் காதலை வெளிப்படுத்த, பானுப்ரியாவோ பெற்றோரிடம் பேசி அவர்கள் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்றிருக்கிறார். ரகுநாத் இதுபற்றி இரண்டு வீட்டாரிடமும் பேச, பெற்றோரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியது.

கூலிவேலை செய்து உயர் கல்வி வரை படிக்க வைத்த செல்விக்கு, மகளின் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருள்கள் கொடுத்து அனுப்ப முடியாத நிலை. என்ன செய்யப்போகிறோம் என்று தவித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், செல்வி கஷ்டப்படுவதை அறிந்துகொண்ட `பாரதப் பறவைகள்' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பானுப்ரியாவுக்கு உதவ முன்வந்தனர். மிக்ஸி, கிரைண்டர், சேலை, மின்விசிறி எனச் சுமார் ரூ.50,000 மதிப்புள்ள திருமணப் பரிசுப் பொருள்களைக் கொடுத்து பானுப்ரியாவின் உறவினர்களை நெகிழவைத்தனர்.

இதுபற்றி `பாரதப் பறவைகள்' அமைப்பின் தலைவர் மெய்யநாதனிடம் பேசினோம்.

``பானுப்பிரியாவோட குடும்ப நிலவரத்தையும், நடக்கப்போற கல்யாணத்தைப் பத்தியும் அவங்க உறவினர் ஒருவர் எங்ககிட்ட போன் பண்ணிப் பேசினார். `பானுப்ரியாவுக்குக் கல்யாண வரன் கூடிருச்சு. அவங்க அம்மா, பொண்ணுக்கு என்ன கொடுத்து எப்படி அனுப்புறதுனு தெரியலையேனு தவிக்கிறாங்க'னு சொன்னாரு. பானுப்பிரியாவோட அப்பா இறந்துட்டாலும், அவங்க அம்மா செல்வி தனி மனுஷியா ரொம்ப கஷ்டப்பட்டு பானுப்ரியாவைப் பட்டப்படிப்பு வரைக்கும் படிக்க வெச்சிருக்காங்க.

அது ரொம்ப பெரிய விஷயம். எங்க அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்கிட்ட, பானுப்ரியாவின் கல்யாணம் பத்தி சொன்ன உடனே எல்லாரும் அவங்களுக்கு உதவ ஓகே சொல்லிட்டாங்க. அவங்க அப்பா இடத்துல இருந்து, அண்ணன் ஸ்தானத்துல இருந்து, பானுப்பிரியாவுக்கு திருமணத்துக்கான பரிசுகளை எல்லாம் கொடுத்து நல்லபடியா திருமணம் செய்து அனுப்பணும்னு நெனச்சோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்தாங்க. அதை வெச்சு மிக்ஸி, கிரைண்டர்னு எங்களால முடிஞ்ச பொருள்களை வாங்கிக் கொடுத்தோம்.

பானுப்பிரியாவோட அம்மா கண்ணுல அவ்வளவு சந்தோஷம். பானுப்பிரியாவுக்கும் ரொம்பவே சந்தோஷம். கஷ்டப்படுற அந்தக் குடும்பத்துக்கு உதவுனதுல எங்களுக்கும் நிறைவு. வருங்காலத்தில் என்ன உதவி வேணும்னாலும் சொல்லுங்கம்மான்னு சொல்லியிருக்கோம்'' என்றார் உற்சாகமாக.

இளைஞர்கள்
இளைஞர்கள்

இளைஞர்களின் உதவி குறித்துப் பேசிய செல்வி, ``அன்றாடம் கூலிவேலைக்குப் போனால்தான் சாப்பிடவே முடியும். பொண்ணை எப்படி கரைசேர்க்கப்போறோம்னு கல்யாணத்துக்கு மொத நாளு வரையிலும் ரொம்ப கவலை இருந்துச்சு. குண்டூசி தங்கம்கூட சேர்த்து வைக்க முடியலை. ஊரக வளர்ச்சித்துறையில அக்கவுன்டராக வேலைசெய்யுற சரவணன் சார், ஒரு பவுன் நகை கொடுத்தாரு. உறவினர்கள் சிலர் உதவுனாங்க. மாப்பிள்ளை வீட்டுல எதுவும் கேக்கலைன்னாலும், புள்ளைக்குத் தேவையான ஒண்ணு, ரெண்டு பொருள்களை வாங்கிக்கொடுத்து அனுப்புனாதானே நமக்கு மனசுக்கு திருப்தியா இருக்கும்? அதுக்கெல்லாம் என்ன செய்யப்போறோம்னு தெரியாத நேரத்துலதான் முகம் தெரியாத அந்த தம்பிங்க மிக்ஸி, கிரைண்டர்னு வாங்கிக் கொடுத்துட்டாங்க. அவங்க கொடுத்த குத்துவிளக்குலதான் பானுப்ரியா விளக்கே ஏத்துனுச்சு. எல்லாரோட உதவியையும் என்னைக்கும் மறக்க மாட்டேன். காலம் பூரா அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்'' என்றார்.

தொடரட்டும் நற்பணி!

அடுத்த கட்டுரைக்கு