“இன்டர்நெட், யூடியூப், பாஸ்புக்னு (‘ஃபேஸ்புக்’கைத்தான் அப்படிச் சொல்கிறார்) ஏதேதோ சொல்லு றாங்க. இதைப் பத்தி யெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. சமையல்லதான் அதிக விருப்பம். எனக்குத் தெரிஞ்ச மாதிரி சமைப்பேன். கேமரா வுல அதை வீடியோ பிடிச்சு கம்ப்யூட்டருக் குள்ள போடுவாங்க. அதைப் பலரும் பார்த் துப் பாராட்டுறதா சொல்லுவாங்க. ஆனா, என் வீடியோக்கள்ல சிலதைத்தான் நான் பார்த்திருக்கேன்”
- யதார்த்தமாகவும் வெகுளியாகவும் பேசு கிறார், யூடியூபில் கலக் கும் கேரளாவைச் சேர்ந்த ஓமனா.
கிராமத்துப் பின்னணி, விறகு அடுப்பு, மண்பாண்ட பாத்திரங்கள், பாரம்பர்ய கைமணம், செயற்கையான வார்த்தை ஜாலங்கள் சேர்க்கப்படாத இயல்பான உடல்மொழி எனத் தனி அடையாளத்துடன் கூடிய ஓமனாவின் ‘சுடச்சுட’ சமை யலை, ‘அட அட’ வென்று உச்சுக்கொட்டி ரசிக்கும் பார்வையாளர்கள் ஏராளம். கூலி வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவரை, வீட்டிலிருந்தபடியே நிறைவான சம்பாத்தியத் துடன், வெளிநாட்டினரும் அறிந்த இணைய பிரபலமாகவும் மாற்றியிருக்கிறது இவரின் சமையல் திறன்.

“என்னோடது ஏழ்மையான குடும்பம். என் கூடப்பிறந்தவங்க மொத்தம் பதினொரு பேர். என் சின்ன வயசுலேயே அம்மா இறந் துட்டாங்க. நாலாவதுவரைதான் படிக்க முடிஞ்சது. அப்புறம் அப்பாவுடன் விவசாய வேலைகள் செய்திட்டிருந்தேன். எனக்கு சமையல்ல ஆர்வம் அதிகம். கல்யாணத்துக்குப் பிறகு கோயில், சத்திரம், விசேஷ வீடுகள்ல சமையல் வேலைக்குப் போனேன். பலதரப் பட்ட சமையற்கலைஞர்களுடன் இணைஞ்சு வேலை செய்ததால பலவிதமான உணவு களையும் சமைக்கக் கத்துக்கிட்டேன். நாலு வருஷங்களுக்கு முன்னாடி வீட்டுக்காரர் இறந்துட்டார். என் வாழ்வாதாரத்துக்காக தினமும் சில நூறு ரூபாய் சம்பளத்துல விவ சாயக் கூலி வேலைக்குப் போயிட்டிருந்தேன்”
- எளிமையாக அறிமுகம் பகிரும் ஓமனா, பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள குக்கிராமம் ஒன்றில் இருப்பவர். இரண்டரை வருடங்களுக்கு முன்பு ‘வில்லேஜ் குக்கிங் - கேரளா’ என்ற சமையலுக்கான யூடியூப் சேனல் தொடங்க ஆயத்தமான ஓமனாவின் உறவுக்கார சகோதரர்களான அமிஜித்தும் அபிஜித்தும், இந்த சேனல் மூலம் இவரது சமையல் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுத்தனர்.

“என்னை வெச்சு வீடியோ எடுக்கணும்னு பசங்க சொன்னதுமே எனக்கு வெட்க மாயிடுச்சு. இதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராதுனு சொல்லி ஒரு மாசம் தட்டிக் கழிச்சேன். ‘கேமராவைப் பார்க்காம, எதுவும் பேசாம வீட்டுல சமைக்குற மாதிரி உங்க விருப்பம்போல சமைச்சா போதும்’னு சொன்னாங்க. மிக்ஸி, கிரைண்டர், காஸ் அடுப்பு எதையும் பயன்படுத்தாம, என் வீட்டுல சமைக்குற மாதிரி அம்மிக்கல், மண்பாண்ட பாத்திரங்களைத்தான் பயன் படுத்துவேன்னு சொன்னேன். ஆரம்பத்துல பல வீடியோக்கள்ல ஒரு வார்த்தைகூட பேசாம என் போக்குல சமைச்சேன். அதைப் பார்த்த பலரும், ‘கொஞ்சமாச்சும் பேசிக் கிட்டே சமைச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாங்களாம். நான் வெளியுலகம் தெரியாத கிராமத்து மனுஷி. எனக்கு கேமரா முன்னாடி ஈர்ப்பா பேச வராது. இருந்தாலும் முயற்சி பண்றதா சொல்லி, வீடியோவுல சமையல்ல சேர்க்குற பொருள்களோட பேரை மட்டும் சொல்லுறேன். எனக்குப் பரிச்சயமில்லாத ரெசிப்பியை முன்தினமே செஞ்சு பார்த்து திருப்தி கிடைச்சாதான் அதை வீடியோவுல சமைப்பேன். என் சமையல் பலருக்கும் பிடிக்கும்போல. வெளி யிடங்கள்ல என்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பாராட்டுறாங்க; என்கூட போட்டோ எடுத்துக் குறாங்க”

- 68 வயதாகும் ஓமனாவின் அதிகம் பேசாத இயல்பே, இந்த சேனலின் தனித்துவமாக மாறி விட்டது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் பலவும் இவருக்கு அத்துப்படி. ரெசிப்பிகளைத் தனது கைப்பக்குவத்தில் ஒரே டேக்கில் சமைத்து அசத்துபவர், 25 ஆண்டு களுக்கும் மேலாகத் தான் பயன் படுத்தும் சிறிய கத்தியைக் கொண்டு காய்கறிகள் முதல் இறைச்சி வரை பலவித உணவுப் பொருள்களையும் வேகமாகவும் அநாயாசமாகவும் நறுக்கி ஆச்சர்யப்படுத்துகிறார். ஏழரைக் கோடி பேர் பார்த்துள்ள (Total views) இந்த சேனலுக்கு ஏழு லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ் கிரைபர்கள் உள்ளனர்.
“சாதம், கஞ்சி, சக்கப்பழம் (பலா), கப்பக்கிழங்கு (மரவள்ளிக்கிழங்கு)... இதெல்லாம்தான் சின்ன வயசுல எங்களுக்குப் பிரதான உணவு. வெரைட்டியா சாப்பிட முடியாத கஷ்ட ஜீவனம்தான் அப்போ. அதனாலயே, விதவிதமா சமையல் செய்ய விரும்புவேன். மத்தபடி சாப்பிடுறதுல பெரிசா எனக்கு நாட்டமில்ல. காலையில செய்யுற எளிமையான உணவைத்தான் மூணு வேளைக்கும் சாப்பிடுவேன். ரெண்டு மகள்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.

எங்க சமையல் வீடியோக்கள்ல (யூடியூப் வருமானம்) பணம் வருதாம். அதுல ஒரு பகுதியை எனக்கும் பசங்க கொடுக்குறாங்க. அதுவே என் தேவைகளுக்கு நிறைவானதா இருக்கு. வீடியோவுக்குச் சமைக்குறது, தோட்டப் பராமரிப்புதான் இப்போ என் பிரதான வேலைகள்” என்று சுவைபடப் பேசி முடித்த ஓமனா, அடுத்த வீடியோவுக்கு பலா மீன் கூட்டு ரெசிப்பியைச் சமைக்க ஆயத்தமானார்.
அடி பொலி!