வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (07/12/2017)

கடைசி தொடர்பு:11:15 (15/02/2018)

“வெளியூர்ல வேலைக்கு வர்ற இளைஞர்கள் பலரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகுறாங்க!” #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

பாலியல் சீண்டல் குறித்த விவாதம் எழும்போதெல்லாம், அவை பெண்கள் பற்றியும் பெண் குழந்தைகள் பற்றியும்தான் பேசுகிறோம். அது தவறில்லை என்றாலும், ஆண்களும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இது பலருக்கும் திடுக்கிடும் தகவலாக இருக்கலாம். ஆனால், அது உண்மை. என் சக நண்பர்கள் என்னிடம் தெரிவித்ததையும், நானே பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியிருக்கிறேன் என்பதையும் வைத்தே இதை என்னால் அழுத்தமாகச் சொல்லமுடிகிறது” - சென்னையைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 26 வயதான இளைஞரின் குமுறல் இது. வெளிப்படையாகப் பேசினாலும் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு, தான் சந்தித்த பாலியல் துன்பங்களைப் பதிவுசெய்கிறார். 

பாலியல் சீண்டல்

“பசங்களைப் பொறுத்தவரை எல்லாத்திலும் வெளிப்படையா இருக்க நினைப்பாங்க. ஆனால், பாலியல் குறித்த விஷயங்களில் மட்டும் வெளிப்படையோடு இருக்க முடியறதில்லை. வெளியூர்களில் வேலை பார்க்கும் பசங்க, ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பசங்ககூட, பாலியல் விஷயங்களை சக நண்பர்களோடு பகிர்ந்துக்க திணறுறாங்க. வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கும் சுதந்திரம் இருந்தாலும், பெற்றோர்களைப் பிரிந்திருக்கும் தனிமை, ஏக்கம் எல்லாம் சேர்ந்து அவங்களைக் குழப்பும். 

இந்த நேரத்தில் அவங்களுக்குத் தவறான அணுகுமுறை, பழக்கவழக்கங்கள் என ஆரம்பிச்சு, அதில் சந்தோஷம் கிடைக்கிறதா நம்பறாங்க. பெரும்பாலான இளைஞர்கள் கட்டுக்கோப்பான குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருப்பாங்க. அவங்க தன் உணர்ச்சி மோதலை வெளிப்படுத்த ஒரு பெண்ணை நாடினால், அது விபரீதத்தில் முடியும்னு பயப்படறாங்க. அதனால், தன்னுடன் தங்கியிருக்கும் சகப் பாலினத்தவரின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவதும், அவர்களின் பாலியல் தேவையை நிறைவேத்துறதுமா இருக்குறாங்க. ஆரம்பத்தில் இது பெரிய பாதிப்பாக இருக்காது. போகப்போக விபரீதமாகும். எத்தனையோ விடுதிகளில் வார்டன் மூலமாகவும், பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாகவும் பசங்களுக்கு தொல்லைகள் வருது. இதெல்லாம் வெளியில் தெரியுறது இல்லே. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புஉணர்வு வர ஆரம்பிச்சிருக்கு. 

நான் சென்னைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்த நேரம். என் நண்பனுக்குத் தெரிந்தவர்களோடு தங்கியிருக்கேன். அவன் வேற ஏரியா, நான் வேற ஏரியா என்பதால் அடிக்கடி மீட் பண்ணிக்க முடியாத சூழல். என் அறையில் இருந்தவங்களுக்கு என்னைவிட ஒன்றிரண்டு வயசுதான் வித்தியாசம். ஆரம்பத்தில் இரவு நேரத்தில் தூக்கத்தில் கை போடுற மாதிரி கை போடுவாங்க. போகப்போக என்கிட்ட அது தப்பி்ல்லே; இது தப்பில்லேனு சொல்லியே என்னை யோசிக்கவிடாம, அவங்க விருப்பத்துக்கு இணங்கவெச்சாங்க. 

இதைப்பற்றி என் நண்பனிடமும் என்னால் சொல்ல முடியலை. அதை நினைக்கும்போதெல்லாம் மனதுக்குள் ஒருவித அழுத்தம் உண்டாகிடும். ஆனால், அறையில் தங்கியிருந்த அவர்கள் ரொம்ப இயல்பா இருப்பாங்க. பள்ளிப் பருவத்திலேயே அவர்கள் இதுபோன்ற பாலியல் சீண்டலுக்கு உள்ளானதால், இது பெரிய விஷயமா தெரியலைன்னு அப்புறம் புரிஞ்சது. பள்ளிகளில் உயிரியல் பாடங்களில் கருவுறுதல் பற்றி வருது. அதைச் சொல்லிக்கொடுக்கும்போது, ஏன் பாலியல் பற்றியும் சொல்லிக்கொடுத்து மாணவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தறதில்லை? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் குறித்த பாதுகாப்பு சட்டம் இருக்கிற மாதிரி, ஆண்களுக்கும் சட்டம் வந்தால் இது வெளிப்படையாகத் தெரிய வாய்ப்பிருக்குது. அப்போதான் இதுக்கு தீர்வு உண்டாகும்” என்று தன் ஆதங்கத்தை முன்வைத்தார்.


டிரெண்டிங் @ விகடன்