வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (12/12/2017)

கடைசி தொடர்பு:18:17 (12/12/2017)

திருமணம் என்பது இணைந்து வாழத்தான்... பெண்ணின் சம்மதமின்றி பாலியல் அத்துமீற அல்ல! #RespectWomenhood

பெண்


“அம்மா, என்னைத் தயவுசெய்து அங்கே அனுப்பிவைக்காதீர்கள்!” என அந்தப் பெண் அழுகிறாள். 

“கத்தாதே, உன் மாமனார் வீட்டில் உன்னைத் திரும்ப ஏற்றுக்கொள்ளச் சம்மதித்துவிட்டார்கள். நீ நன்றியுடையவளாக இருக்க வேண்டும்.” 

“நன்றியா? எதற்கு? என் கணவன் என்னை ஒருமுறைகூடத் தொட்டதில்லை. பக்கத்துக்கு ஊரில் அவனுக்காக ஒருத்தி இருக்கிறாள்.” 

“போதும் நிறுத்து. மேலும் மேலும், உன் பிறந்த வீட்டுக்கு அவமானத்தைத் தருவிக்காதே!” 

“அம்மா, என் கொழுந்தன் என்னுடன் படுக்கிறான். அந்த வீட்டில் உள்ள எந்த ஆணும் என்னுடன் படுக்காமல் இருப்பதில்லை. என் மாமனார்கூட.... (கதறுகிறாள்) இன்னும் கேட்க உனக்குத் திராணி உள்ளதா? என் வயிற்றில் வளர்ந்த குழந்தையை நான் கலைத்துவிட்டேன். ஏனென்றால், அதன் அப்பா யார் என எனக்குத் தெரியவில்லை.” 

தாய் விதிர்விதிர்த்து தன் மகளைப் பார்க்கிறாள். 

“அம்மா, என்னை அந்த நரகத்தில் தள்ளாதே, என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள்!” 

ஆனாலும், மகள் கதறக் கதற இழுத்துச்சென்று காத்திருந்த மாமனாரின் வண்டியில் அவளை ஏற்றிவிடுகிறாள் தாய். செத்துப்போன கண்களுடன் தாயைப் பார்த்துக்கொண்டே மகள் புறப்படுகிறாள். 

‘பார்ச்ட்’ Parched என்கிற இந்திப் படத்தில் வரும் காட்சி இது. கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன் அல்லவா? காதலும் திருமணமும் இந்த உலகின் வெகு அழகான விஷயங்கள். மனம் கவர்ந்த ஆணின் முதல் தொடுதல், ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் இன்பங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தடைகள் நிரம்பிய, அச்சுறுத்தல் நிரம்பிய உலகில் தனக்கான ஒரே நிம்மதியாக அவள் தேடுவது, தன் மனம் கவரும் ஓர் ஆணையே. அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பவள், அவனுக்காகத் தன் வாழ்வையே மாற்றிக்கொள்வாள். அதனை அறியாமை, இயலாமை, பெண்களின் கடமை என்று கூறுவது முட்டாள்தனம். இன்றுவரை தலைகோதலுக்காக ஏங்கும் எத்தனையோ மனைவிகள் உண்டு. ஆனால், இருமனங்கள் ஒத்து இணைவதுதான் அழகான குடும்ப வாழ்வின் அடிப்படை என்பதுகூடத் தெரியாத சமூகத்தில், மனைவியின் ஆசைகள் குறித்துப் பேச என்ன இருக்கிறது? 

பெண்

இந்த உலகம் உயிர்ப்புடன் தொடர்ந்து இயங்கிவருவதற்கான காரணங்கள் காதலும் காமமும். காதல் பொங்கிய கணம் முதல், குழந்தை பிறப்பது வரை நாம் கொண்டாட தவறுவதில்லை. பாடல்களில், கதைகளில், திரைப்படங்களில் கொண்டாடுகிறோம். ஆனால், இரண்டாவது வார்த்தைக்கான அர்த்தத்தில் என்று மாற்றங்கள் உண்டாக்கப்பட்டதோ அன்று தொடங்கியது, சக உயிரின் உடல்மீதான வன்முறைகள். காதல், திருமணம் என்பதற்கான அர்த்தமும் மாற்றம் பெற்றது. காதல் என்றால் எதிர் பாலினம் மீதான அன்பும், ஒருவனின் (ஒருத்தியின்) உடல் அவன் (அவள்) உரிமை என்ற புரிதலும்தானே? இந்தப் புரிதல் இல்லாத தொடுதல் மிக மோசமான வன்முறை. அது திருமணத்துக்கு முன்புதான் வன்முறை; திருமணத்துக்குப் பின்பு கணவனால் என்றால் வன்முறை அல்ல என்று சொல்வது சரியான முறையல்ல. 

இந்த உலகில் மிகுந்த வலி கொடுக்கும் தாக்குதல்களுள் ஒன்று பாலியல் வன்முறை. திருமணம் முடிந்து எத்தனையோ ஆசைகளோடும் கனவுகளோடும் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, கணவனின் உடல் இச்சைகளைத் தீர்க்கும் ஓர் உடல் மட்டுமே நீ எனச் சொல்வது எவ்வளவு வலியைக் கொடுக்கும்? அந்த வலிக்கு மருந்து கொடுக்காமல், அவள் கண்ணீருக்குப் பதில் சொல்லாமல், மறுபடியும் மறுபடியும் குடும்பம் என்கிற பெயரில் அதே நரகக் குழியில் தள்ளுவது எவ்வளவு கொடூரம்? அதைக் கொடூரம் எனவும் சட்டம் கூறாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? 

2001 முதல் 2011 வரை, திருமணமான பெண்களில் 60 சதவிகிதம் பேர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திலாசா மையம் என்பது, 'பிரஹன்' மும்பை மாநகராட்சியும், 'சிஹாட்' என்னும் அரசு சாரா அமைப்பும் இணைந்து உருவாக்கிய, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கும் மையம். இங்கே ஆலோசனை பெற்ற பெண்களில் 79 சதவீதம் பேர், தங்கள் கணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தெரிவித்துள்ளார்கள். பல பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டபோது, அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இருப்பது தெரிந்தது. சட்டம் இந்த விஷயத்தில் என்ன சொல்கிறது என்பதை அறிய வழக்கறிஞர் ரஞ்சித்திடம் சில விஷயங்களைப் பேசினேன். 

"பாலியல் வன்புணர்வு என்பதற்கு இந்தியச் சட்டம் கொடுக்கும் வரையறை என்ன?"

"பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகவோ, பெண்ணின் சம்மதத்தை மிரட்டிப் பெற்றோ, பெண்ணைப் பொய்யாக நம்பவைத்து அவள் சம்மதத்தைப் பெற்று அல்லது மயக்க மருந்து தந்தும் தன் உணர்வை இழந்த நிலையில் பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு செய்யபவர்கள், மேலும், ஒரு பெண், தான் கொடுக்கும் சம்மதத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளாத நிலையில், அந்தச் சம்மதத்தின் விளைவுகளை அறிந்துகொள்ளாத நிலையில், பெண் 16 வயதுக்கு உட்பட்டவளாக இருந்தால் அவளுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வதைத்தான் சட்டம் தண்டனைக்குரிய பாலியல் வன்புணர்வு என்று கூறுகிறது. இதற்கு ஒரு விதிவிலக்கு இருக்கிறது. அதாவது, ஒருவர் தன் மனைவியோடு அந்த மனைவி பதினைந்து வயதுக்கு உட்பட்டவளாக இல்லாத போது கொள்ளும் பாலியல் உடலுறவு வன்புணர்ச்சி ஆகாது. இந்த ஒரு விதிவிலக்கு மட்டும் உண்டு."

"அப்படியென்றால், ஒரு மனைவி ‘கணவன் என் விருப்பமின்றி என்னுடன் உடலுறவு கொள்கின்றான்’ எனக் குற்றம் சாட்டினால் எந்த செக்‌ஷனின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும்?"

"செக்‌ஷன் 376(A) படி பிரிந்து வாழ்வதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பாணையின் கீழ் தனியாக வாழும் தன் மனைவியுடனோ அல்லது பிரிந்து வாழும் தன் சொந்த மனைவியுடனோ அவரின் சம்மதமின்றி உடலுறவு கொள்ளும் கணவனுக்கு இரண்டாண்டுகள் வரை தண்டனை கொடுக்க இயலும். இந்த செக்‌ஷனின் கீழ் கூட பிரிந்து வாழும் மனைவிகளால்தான் தன் கணவர்களுக்கு எதிராக இப்படியொரு வழக்கினைப் பதிவு செய்ய இயலும். சேர்ந்து வாழும் மனைவியாய் 15 வயதுக்கு மேலுள்ளவளாக இருந்தால் பாலியல் வல்லுறவு என்று சொல்லவே முடியாது. ஆனால், கணவன் மனைவியைப் பாலியல் ரீதியாய்த் துன்புறுத்தினால் இயற்கைக்கு மாறான குற்றங்களைப் பதிவு செய்யும் செக்‌ஷன் 377 கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறது." என்கிறார்.

பெண்

திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒரு சட்டம் இயற்ற நீதித்துறை மறுக்க முதன்மையான காரணம், பெண்கள் அதனை ஆண்களுக்கு எதிராக உபயோகிக்கலாம் என்பதுதான் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. கண் முன்பு எத்தனையோ பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். அவர்களை மீட்டெடுக்க வழியைத் தேட உதவ வேண்டியது நீதித்துறையின் முதன்மையான வேலை. வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களைப் பெண்கள் சிலர், ஆண்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். அதேசமயம், அந்தச் சட்டத்தால் எத்தனையோ பெண்களுக்கு நீதி கிடைத்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மைதானே? 

‘என்னதான் சட்டம் கொண்டுவந்தாலும், பெண்கள் இதைக் குறித்துப் பேசத் தயங்குவார்கள், கூச்சப்படுவார்கள்’ என்ற குரலும் கேட்கிறது. காலம் காலமாக தன் உடலை மறைத்தே பழகிய பெண்களுக்கு, இந்தக் கொடுமையை வெளியில் சொல்ல தயக்கம் இருக்கும் என்பது உண்மைதான். தனக்கு நீதி வழங்க எந்த நீதிமன்றமும், வழக்குப் பதிவுசெய்ய எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், எந்த நம்பிக்கையில் ஒரு பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்ல முன்வருவாள்? இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பெண்கள் இதை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை. தன் உடலைத் தின்ன கொடுத்தே மடிந்துபோன முந்தைய தலைமுறை பெண்கள், அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கும் அதைப் பாடமாகக் கடத்தியிருக்கிறார்கள். 

இங்கே திருமணம் என்ற சொல்லுக்குப் பின்னால் எத்தனையோ மேற்பூச்சுக்கள் பூசப்பட்டுள்ளன. திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்புணர்வுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அந்தப் பூச்சுகள் அனைத்தையும் கலைத்துவிடும். அந்தச் சட்டம் ‘பெண் என்றால் வெறும் உடல் அல்ல’, ‘திருமணம் என்பது பெண் உடலை அனுபவிக்கும் பாத்தியதை தரும் சடங்கல்ல’ என்று இந்தச் சமூகத்துக்கு உணர்த்தும். பால் வேற்றுமையை ஒழிக்கத் தேவைப்படும் ஒரு வலுவான ஆயுதமாக மாறும். 

என்று கிடைக்கும் அந்தச் சட்டம் என்கிற சுதந்திரம்?


டிரெண்டிங் @ விகடன்