வெளியிடப்பட்ட நேரம்: 04:33 (29/01/2018)

கடைசி தொடர்பு:04:33 (29/01/2018)

ஆப்பிள் டு ஹவர்கிளாஸ்... பெண்களின் உடலமைப்புக்கு ஏற்ற உடைகள்!

ஒல்லிபெல்லி பெண்கள் முதல் உடல் சற்று பருமனான பெண்கள் வரை அனைவருக்கும் ஆடை வாங்கும் பொழுது மனதில் எழும் ஒரே கேள்வி, "இந்த டிரஸ் எனக்கு ஃபிட் ஆகுமா? இல்ல ரொம்ப ஒல்லியா/குண்டா தெரிவோமா?" என்பதுதான். இப்படி கேள்விகளோடு இருக்க இனி அவசியமில்லை. உங்களின் உடலமைப்பு என்னவென்று உங்களுக்கு தெரிந்திருந்தால் போதும், நீங்களும் ஆகலாம் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்.

பெண்களின் உடலமைப்பு


பெண்களின் உடலமைப்பை நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். அவை ஆப்பிள், பியர் (Pear), ஹவர்கிளாஸ் மற்றும் செவ்வகம். மேலும் இவற்றை, மெல்லிய செவ்வகம், தடித்த செவ்வகம், முழு ஹவர்கிளாஸ் என உட்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். உங்களின் உடலமைப்பை அறிந்து அதற்கேற்றவாறு உடைகளை தேர்ந்தெடுக்க உதவும் கைடு இங்கே


ஆப்பிள் உடலமைப்பு :
பெண்களின் மார்பளவு மற்றும் இடையளவு வைத்துதான் உடலமைப்பின் வித்தியாசங்களை வகைப்படுத்தமுடியும். அந்த வகையில், உங்கள் இடையளவு, தோள்ப்பட்டையை விட குறுகியிருந்தால், நீங்கள் ஆப்பிள் உடலமைப்பை கொண்டவர்கள். உடலை ஒத்தியிருக்கும் ஆடைகள், அதிக லேயர்களுடைய ஸ்கர்ட் அல்லது ஃபுல் டிரஸ் வகைகள், ஸ்ட்ரெயிட் கட் பேன்ட், இடுப்பில் பெல்ட் கட்டப்படும் ஆடை வகைகள், கிமோனோ ஸ்லீவ்ஸ் போன்றவை உங்களுக்கான பக்கா சாய்ஸ். ஸ்கின்னி பேன்ட், ஹய் நெக், அடர்த்தியான நிறங்கள், கனமான வேலைப்பாடுகள் நிறைந்த டாப் வகைகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது சற்று உங்களைப் பருமனாக காண்பிக்கும். ஆப்பிள் உடலமைப்பினை கொண்ட ஏஞ்சலினா ஜோலி, சோனம் கபூர், கரீனா கபூர் போன்ற பிரபலங்களின் ட்ரெண்டை பின்பற்றலாம்.

கரீனா கபூர்


பியர் உடலமைப்பு :
ஆப்பிள் உடலமைப்பின் எதிர்மறையான உடலமைப்பு இந்த பியர் வடிவம். இவர்கள் குறுகிய தோள்பட்டையும், அகன்ற இடையையும் பெற்றிருப்பர். அதிகபட்சப் பெண்கள் இந்த உடலமைப்பில்தான் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு 'ஃபிட் அண்ட் ஃப்ளார்' அதாவது, தோளிலிருந்து இடை வரை உடலை ஒத்தியும், இடையிலிருந்து பாதம் வரை தளர்வான அமைப்பையும் கொண்ட ஆடைகள் மிகவும் ஏற்றது. ஸ்லீவ்லெஸ், Off -Shoulder , V -நெக், கழுத்துப் பகுதிகளில் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ் வகைகள், அடர்த்தியான வண்ண ஆடைகள், ஃப்ளார் ஸ்கர்ட், ஸ்கின்னி ஜீன்ஸ் போன்றவை பியர் உடலமைப்பின் சரியான ஆடை வகைகள். இவர்கள் இலியானா, ரிஹானா, ஜெனிஃபர் லோபஸ், சோனாக்ஷி சின்ஃஹா ஆகியோரின் ஃபேஷனைப் பின்பற்றலாம்.

இலியானா


செவ்வகம் :
பொதுவாக செவ்வகம் உடலமைப்பைக் கொண்டவர்கள் ஒல்லியான தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். தோள்பட்டை முதல் இடை வரை ஒரே அளவைப் பெற்றிருப்பார்கள். அதிக வேலைப்பாடுகள் நிறைந்த டாப் வகைகள் உங்களைக் கொஞ்சம் பருமனாகக் காண்பிக்கும் மாயையை உருவாக்கும். ஷார்ட் அல்லது ஃபுல் ஸ்கர்ட், ஹய் பூட்ஸ், முழு நீல கவுன் வகைகள், ஸ்வீட் ஹார்ட் நெக் போன்றவை இவர்களுக்கு ஏற்ற உடைகள். உடலை ஒத்தி அணியும் ஆடை வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மெல்லிய தேகம் கொண்டிருப்பதால், அது ஆண் உடலமைப்பின் மாயையை உண்டாக்கும். இவர்கள் அனுஷ்கா ஷர்மா, டெய்லர் ஸ்விஃப்ட், கல்கி கோச்செலின் போன்றவர்களின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்களைப் பின்பற்றலாம்.

அனுஷ்கா ஷர்மா


ஹவர் கிளாஸ்:
ஹவர் கிளாஸ் உடலமைப்பினைப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு அத்தனை வகை ஆடைகளுமே மிகக் கட்சிதமாகப் பொருந்தும். செவ்வக உடலமைப்பைபோல் இவர்களின் தோள்பட்டையும் இடையும் ஒரே அளவைக் கொண்டிருந்தாலும், மிகக் குறுகிய வெய்ஸ்ட் கொண்டவர்கள் இவர்கள். எனவே, இவர்களுக்கு பெல்ட் அணியப்படும் ஆடை வகைகள், Wrap ஆடைகள், பெப்லம் ஆடைகள், உடலை ஒத்தியிருக்கும் ஆடைகள் முதலியவை சரியான தேர்வு.

பிரியங்கா சோப்ரா

 

மெல்லிய வேலைப்பாடு முதல் கனமான வேலைப்பாடுகள் வரை எல்லா விதமான ஆடைகளும் ஹவர் கிளாசுக்கு பொருந்தும். ஹவர் கிளாஸ் உடலமைப்பினைக் கொண்ட பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், கத்ரினா கெய்ஃப், மலைக்கா அரோரா கான், மெர்லின் மான்ரோ போன்றவர்களின் ஃபேஷனைப் பின்பற்றலாம். 


டிரெண்டிங் @ விகடன்