“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation | FGM survivors speak out - What it is like to experience the most cruelest act known on earth

வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (06/02/2018)

கடைசி தொடர்பு:16:20 (06/02/2018)

“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation

உலகில் வாழ்ந்து வரும் பெண்களில் 200 மில்லியன் பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைவால் (Female Genital Mutilation) பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு (2016). அதென்ன ஜெனிடல் மியுட்டிலேஷன் என்பவர்களுக்குப் பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளுவதில் இன்பம் தரும் பகுதியை, ப்ளேடாலோ அல்லது ஏதேனும் கருவியைப் பயன்படுத்தி வெட்டி எடுத்துவிடுவார்கள். பெண்ணுறுப்பிலிருந்து மாதவிடாய் வெளியேறும் அளவுக்கான சிறு துவாரத்தை மட்டும் வைத்துவிட்டுப் பிற பகுதிகளைத் தைத்து மூடிவிடுவார்கள். இப்படிச் செய்வதில் பல நிலைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதிக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் இந்தச் சடங்கு, நடைபெற்றால்தான் அவள் சுத்தமானவளாகப் பார்க்கும் நடைமுறை சில கலாசாரங்களில் இருக்கிறது.

இந்தியாவிலும் சில பகுதிகளில் பெண்ணுறுப்புச் சிதைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. உலகம் முழுக்க இதற்கு எதிரான மிகப்பெரிய அளவிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது வரவேற்க வேண்டிய விஷயம். இன்று (06 பிப்ரவரி) உலகப் பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான நாள் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation) முன்னிட்டு, இந்த நிகழ்விற்கு ஆளாகிப் பின், இதற்கு எதிரான மிகப்பெரிய பிரசாரங்களில் முன்னெடுத்து வரும் பெண்களின் கருத்துகள் இதோ...

ஜஹா டுக்குரேஹ்

அமைதியான, அன்பான ஊர் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த எங்கள் சொந்த ஊரான மொகடிஷுவில்  எனக்கு அந்தப் பயங்கரம் என் ஐந்து வயதில் நிகழ்த்தப்பட்டது. எங்கள் வீடு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கள் வீட்டிற்கு பல்வேறு பரிசுப்பொருள்களுடன் நிறையப் பேர் வந்தார்கள். அது போன்றதொரு சூழ்நிலையில் இருப்பதே அலாதியாக இருந்தது. நானும் என் சகோதரி லெய்லாவும் விளையாடிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பக்கத்து வீட்டுக்காரப் பெண் என்னை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே உணவு அருந்தும் மேஜை இருந்தது. தெரியாத ஒரு ஆள், வித்தியாசமான சில கருவிகளுடன் அங்கு அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி ஆட்கள் நின்றிருந்தார்கள். ”அவளை டேபிளில் படுக்கவைத்து, உடையை அகற்றுங்கள்” என்ற அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும், நான் அழத் தொடங்கிவிட்டேன். மற்றொரு அறையிலிருந்த என் தங்கை மற்றும் அருகில் இல்லாத அம்மாவை நினைத்து அழத் தொடங்கினேன். அந்தச் சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்யமுடியாது என்றானதும், வீட்டின் கூரையை வெறித்துப் பார்க்கத் தொடங்கினேன். எனக்கு அந்த நிமிடங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. குளிர், அவமானம், குழப்பம் இதோடு சேர்த்து மோசமான வலி. நான் நினைவிழக்கத் தொடங்கினேன். ஆனால், அந்தக் கருவிகளின் ஒலி எனக்கு கேட்டுக்கொண்டே இருந்தது - ஃபேரஸ் ஹுஸ்ஸைன்


 

கற்பனை செய்து பாருங்கள்... நீங்கள்  ஆறு வயதுக் குழந்தை. விடியற்காலையில் எழுந்து, குளித்து, உடைகளை அணிந்து கொண்டு உங்கள் தோட்டத்தின் முடிவில் இருக்கும் ஒரு கூடாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். அதன் பின் உலகின் மோசமான நிகழ்வு உங்கள் உடலில் அரங்கேற்றப்படுகிறது. அந்த நிகழ்வை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மறக்கவே மாட்டீர்கள். காரணம் அது உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தமாக, விவாகரத்தாக, குடும்ப வன்முறையாக... பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். நான் பல வருடங்களாக மெளனமாக இருந்தேன். என்னுடைய மௌனத்தை நான் உடைத்தபோது, ஒரு அடைக்கப்பட்ட கதவிலிருந்து வெளியே வந்ததுபோல் உணர்ந்தேன். இனி அங்கு பேசாமல் இருக்கும் கோடானுகோடிப் பெண்களுடைய குரலாக நான் இருக்க விரும்புகிறேன்.  ஏனெனில், அது எவ்வளவு மோசமானது என்பது எனக்குத் தெரியும்! - ஹீபோ வார்டர்


 

நான் எப்படி இவ்வளவு வலிமையான பெண்ணாக மாறினேன் என்பதற்கான காரணம் எனக்குப் புரிய சற்றுத் தாமதமானது. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்களின் தொகுப்பும்தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் வாழ்வதைத் தேர்ந்தெடுத்தேன். நான் உறுப்புச் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டவள். சில நொடிகளில் நடந்தேறிவிட்ட அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கதறலையும் வலியையும் தாண்டி, மெதுவாகக் கண்களைத் மூடித் திறந்தேன். அப்போது சோகமாகவும் வருத்தம் தோய்ந்த முகத்தோடும் இருந்த என் தாயின் கண்களைப் பார்த்தேன்.

 ”நீ வாழ விரும்புகிறாயா. நீ வாழ விரும்பினால் போரிடு” என்றார் அவர். “என்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகள் முழுவதும் எனக்குப் புரியாவிட்டாலும், இறைவனிடம் என் உயிரை வைத்திருக்கும்படி கண்களை மூடி வேண்டினேன். வலி வாழ்வின் ஒரு பகுதி என்பதை உணர்ந்துகொண்டேன். ஒரு முத்து உதிப்பதைப்போல, என் வலியிலிருந்து எனக்கு ஏதாவது நல்லது நடக்கலாம். எனக்கு ஏற்பட்ட வலியின் மூலமாகவே என் தைரியத்தை வளர்த்தெடுத்தேன். ஏனெனில் இந்த வலி வீணாவதில் எனக்கு விருப்பமில்லை - ஜே கமாரா ஃப்ரெட்ரிக்


 

நீங்கள் நேசிக்கும் நம்பும் ஆட்கள்கூட உங்களைக் காயப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்துகொண்ட காலம் அது. நடந்தவற்றை ஏற்றுக்கொள்வற்கே எனக்குப் பல காலம் தேவைப்பட்டது. என் பாட்டியின் நம்பிக்கையின்படி, பெண்ணுறுப்புச் சிதைவு என்பது பெண்ணாக என்னை எந்த வகையிலும் உயர்த்தப்போவதில்லை... என் நம்பிக்கைகளின்படி குறைக்கப் போவதும் இல்லை.

என்னால் நான் விரும்பும் மனிதர்களிடம் கோபப்படவும், வருத்தப்படவும் முடியும். என்னால் வலிமையாகவும், வலிமை குன்றியவராகவும் இருக்க முடியும். ஏற்கெனவே நடந்துவிட்ட ஒன்றை என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இன்றைய பொழுது என் கைகளில் இருக்கிறது. என்னை உறுதிப்படுத்திக்கொள்ள, வளர்த்தெடுக்க என்னால் முடியும் என்பதை என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பயங்களிலிருந்து வெளியே வந்து இந்தக் கொடுமைகளுக்கு எதிராக என்னால் போராட முடிகிறது என்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இனி ஒருவருக்கேனும் இந்தக் கொடுமை நடக்கக் கூடாது. அது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மோசமான வலியினை உண்டாக்கும். முக்கியமாக, இது தேவையற்றது!  - ஃபட்டுமட்டா ஜாட்டா


 

என் வாழ்நாளுக்கும் மனதிலிருந்து அகல முடியாத வலியை ஏற்படுத்திவிட்டார்கள். சிறுமியாக இருந்தபோது நான் சென்ற சுற்றுலா, என் மனதில் வடுவாகிப் போயிருக்கிறது. அந்த வாடை, என்னுடைய கதறல், உடலிலிருந்து வெளியேறிய ரத்தம்... என அப்போது எழுந்த என் உணர்வுகளை இப்போதும் மறக்க முடியவில்லை. உளவியல் ரீதியாகக் கடுமையான பாதிப்பினை அது என் வாழ்வில் ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கொடுமையிலிருந்து என் தங்கையைப் பாதுகாக்க முடியவில்லை என்கிற குற்றவுணர்ச்சியிலிருக்கிறேன். நான் என்னை ஒரு முழுமையான பெண்ணாக உணரவில்லை. என்னிடமிருந்து ஒன்று எடுக்கப்பட்டுவிட்டது. உணர்வு மற்றும் உள்ள ரீதியிலான இந்த வலிகள் என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதியாகி இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவை என்னுடைய முடிவல்ல! - ஆயிஸ்ஸா எதூன்


 

என்னுடைய 7 வயதில், சோமாலியாவில் என்னுடைய பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டது. இதன் விளைவுகளை 12 வயதில் சந்திக்கத் தொடங்கினேன். சிறிதாக விடப்பட்டிருந்த துவாரம் வழியாக மாதவிடாய் வரமுடியாமல் தொற்று ஏற்பட்டுப் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு என்னுடைய முதல் சீரான மாதவிடாய் போக்கை 17 வயதில் பெற்றேன். அதன் பிறகு நடந்த தொற்றுகள் தொடர்கதையாகிப் போனது. என் அம்மாவும், பாட்டியும் இந்தக் கொடூரத்துக்கு பலியானவர்கள்தாம்.

உச்சகட்டமாக IVF மற்றும் கருச்சிதைவுகளை அனுபவித்தேன். என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும், என் உடன் பிறந்தவர்களுடைய குழந்தைகளுக்கு இந்தக் கொடூரம் நடக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள்தாம் பெண்ணுறுப்புச் சிதைவினை அனுபவிக்காத முதல் தலைமுறை. அவர்களிடம் ‘மற்றவர்கள் உன்னை எந்த அளவிற்கு நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதே அளவு நீ உன்னை நேசி. மற்றவர்கள் உன் காதுகளில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் விஷயங்களை நீயே உனக்குச் சொல்லிக்கொள். உனக்காக மட்டுமில்லை, உன்னைச் சுற்றியிருக்கும் குரலற்றவர்களுக்கும் குரலாக இரு” என்று எப்போதும் சொல்லுவேன் - ஹோடா அலி


 

13 வயதில் எனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையில், பீறிட்டக் குருதியின் காரணமாக மரணத்துக்கு அருகில் சென்று வந்தேன். நான் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக இந்தச் சடங்கு ரகசியமாகத்தான் நடத்தப்படும். என்னுடைய பெண்ணுக்கு இது நடக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதை எப்போதும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய இந்தப் பயம் அவளுக்கு 'அந்த வலி' எப்படியிருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறது. இன்று அவளும் பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறாள். ஒரு விஷயம் பல நாள்களாக நீடிக்கிறது என்பதற்காகவே அவற்றை நீடிக்கவிடக் கூடாது. மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு விஷயம் கலாசாரமாக இருக்கக் கூடாது - ஹவா டாபோ செஸ்ஸே


 

அந்த நிகழ்வு நடக்கும்போது நான் பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை. எனவே, அப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு நினைவும் எனக்கில்லை. உங்களுடைய நினைவு தெரிந்து உங்கள் பெண்ணுப்பு சிதைக்கப்படுகிறது அல்லது உங்களுக்கு அப்படி ஒன்று இருந்ததாகவே தெரியும் முன்பே அகற்றப்படுகிறது. எப்படி இருந்தாலும், அதன் விளைவுகளை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். உடல் ரீதியாக உங்களுக்கு ஏற்படும் தொற்றுகள், பாலியல் ரீதியான ஆரோக்கியம் ஒருபுறம் இருக்க நீங்கள் மன ரீதியாக அனுபவிக்கும் துன்பம் மற்றொரு புறம் உங்களை வாட்டும். கட்டாயம் மற்ற பெண்களைப்போல் உங்களால் உடலுறவு கொள்ள முடியாது. சிலர் இதனைக் கலாசாரம், மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார்கள். ஆனால், இது சரி தவறு சம்பந்தப்பட்ட விஷயம். பெண்ணுறுப்புச் சிதைவு என்பது கட்டாயம் தவறு. 

எனக்கு குழந்தை பிறக்கும்போது, அவளுக்கு இது போன்றதொரு கொடுமை நிகழவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் குழந்தையைப் பாதுகாப்பதன் மூலம், இது போன்றதொரு கொடூரம் வேறு எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதைத்தான் செய்துகொண்டும் இருக்கிறேன் - ஜஹா டுக்குரேஹ்


 

நான் கருவுறும்போதுதான், உறுப்புச் சிதைவு என்னை எந்த அளவுக்குத் தீவிரமாக பாதித்திருக்கிறது என்பதை உணரத்தொடங்கினேன். அது மிக மோசமான மன உளைச்சலைக் கொடுத்தது. ஒவ்வொரு முறை மருத்துவரிடம் நான் செல்லும்போதும் மிக மோசமான உடல் உபாதைகளுக்கு உள்ளானேன். என்னை யாராவது தொட்டாலே பயந்து ஒடுங்கினேன். மருத்துவர் என்னைத் தொட்டுப் பரிசோதிக்கும்போதெல்லாம் எனக்கு பய அடைப்பு ஏற்பட்டது. அந்த நிமிடம்தான் என் குழந்தைகளுக்கு இப்படியொரு நிகழ்வு ஏற்படக் கூடாது என்பதை முடிவு செய்தேன். ஒரு பெண் அந்த நிகழ்வுக்கு உட்படுத்தப்படும்போதே, அவள் நம்பும் நபர்களால் அத்துமீறித் தாக்கப்படுகிறாள்; மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறாள். அதன் தழும்புகளைத் தன் வாழ்நாள் முழுக்க தாங்கிச் செல்கிறாள்  - லெய்லா ஹுஸ்ஸைன்


 

அப்போது எனக்கு பதினோரு வயதிருக்கும்... எனக்கும் என் சகோதரிகளுக்கும் சேர்த்து உறுப்புச் சிதைவுக்கான நிகழ்வு நடைபெற்றது. இதை ஒரு கலாசார நிகழ்வாகவும், எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கலாசாரமாகவும் மக்கள் பார்க்கலாம். ஆனால், அனுபவிக்கும் பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் மோசமான காயங்களை ஏற்படுத்தும். யாருக்கும் பயன்பெறாத, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமை. இது உறவுகளைப் பாதிக்கும். ஆனால், மக்கள் இது குறித்து உரையாட மாட்டார்கள்.

தற்போது எனக்கு 36 வயதாகிறது. எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். உறுப்புச்சிதைவின்போது நான் அனுபவித்த வலியை வார்த்தைகளில் வடிக்க முடியாது. பிரசவ வலிகளுக்கும் அப்பாற்பட்டு கற்பனை செய்யக்கூட முடியாத வலியைத் தரும் உறுப்புச் சிதைவு.  என்னுடைய பெண் குழந்தைகளை இந்தக் கொடூரத்திலிருந்து நான் காப்பாற்றியிருக்கிறேன் - சரியன் கரிமா கமரா


டிரெண்டிங் @ விகடன்