பெண்ணுறுப்பைச் சிதைப்பதற்கு எதிராகக் குரல்கள் வலிமையாகட்டும் #DayOfZeroToleranceForFemaleGenitalMutilation | Let us learn to respect women on this day

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (06/02/2018)

கடைசி தொடர்பு:18:11 (06/02/2018)

பெண்ணுறுப்பைச் சிதைப்பதற்கு எதிராகக் குரல்கள் வலிமையாகட்டும் #DayOfZeroToleranceForFemaleGenitalMutilation

பெண்

“காம்பியாவில் நானும் என் தங்கையும் விளையாடிக்கொண்டிருந்தோம். எனக்கு ஆறு வயது, என் தங்கைக்கு மூன்று. திடீரென்று அங்கு வந்த ஒரு பெண்மணி எங்களுக்கு ஒன்றைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றார். ஒரு கட்டடத்துக்குள் நுழைந்தோம். உள்ளே நுழைந்தவுடன் எங்களின் கண்களைக் கட்டி அடர்ந்த புதர் அருகில் கொண்டுவிட்டனர். என்னால் அந்த அழுக்கு, இலைகள், வாசனை எல்லாவற்றையும் உணர முடிந்தது. குழந்தைகள் அலறும் சத்தம் இடைவிடாமல் கேட்டது. திடீரென்று நான் மற்றோரிடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். அங்கு என் கண்கட்டு அவிழ்க்கப்பட்டது. மற்ற குழந்தைகள் அழுவதையும், ரத்தம் கொட்டுவதையும் பார்த்தேன். மூன்று பெண்கள் என் கை, கால்களைப் பிடித்துக்கொள்ள, ஒருவர் என் வாயைப் பொத்தினார். கூர்மையான, ரத்தம் தோய்ந்த கத்தியைப் பிடித்திருந்த அந்தப் பெண்மணி என்னருகே வந்தார். இன்றுவரை அந்த முகங்களை எனக்கு மறக்க முடியவில்லை. என் கால்கள் விரித்துவைக்கப்பட்டன. வெகுவேகமாக அது நடந்தது. அவர் என் பெண்குறிக்காம்பையும் அதனருகில் இருந்தவற்றையும் மொத்தமாகப் பிடிக்க முயன்றார். நான் தீவிரமாகப் போராடினேன். அதனால் என் பெண்குறிக்காம்பும் இடது இதழும் மட்டும் வெட்டப்பட்டது. அங்கு அழைத்து வரப்பட்டிருந்த அனைத்துப் பெண் குழந்தைகளின் பிறப்புறுப்புகளையும் அவர்கள் நினைத்தபடியே வெட்டிய பிறகு சில மணி நேரங்களுக்கு, ரத்தம் வெளியேறுவது ஓரளவு நிற்கும் வரை நாங்கள் அப்படியே விடப்பட்டோம். பிறகு காய்ந்த இலைகளைப் புண் இருக்கும் இடத்தில் வைக்கச் சொன்னார்கள். வடுவாக மாறும் வரை இது தொடர்ந்தது.” பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் குரல் பதிவு இது.

சிறு பெண் குழந்தைகளின் மனதில், உடலில், ஆழமான ரணத்தை ஏற்படுத்தும் இது என்ன... எதற்காகச் செய்யப்படுகிறது? பெண் உறுப்புச் சிதைப்பு! நாளொன்றுக்கு ஆறாயிரம் பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஆய்வொன்று சொல்கிறது. பெண்ணுறுப்பு சிதைப்புக்கு எதிரான நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2003- ம் ஆண்டு இதே நாளில் ஆப்பிரிக்காவின் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் முதல் குரல் ஒலித்தது. அப்போதைய நைஜீரிய அதிபரின் மனைவி ஸ்டெல்லா ஒபஸாஞ்ஜோ ‘இனியும் பெண்ணுறுப்புச் சிதைப்பைச் சகித்துக்கொள்ள முடியாது’ என்று அறிவித்தார். அந்த நாளே பெண்ணுறுப்பு சிதைப்புக்கு எதிரான நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பெண்ணுறுப்புச் சிதைப்பில், பெண்குறிக் காம்பு நீக்கப்படுவதிலிருந்து வெளிப்புற உறுப்புகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டு, சிறுநீரும் மாதவிடாயின் உதிரமும் மட்டும் வெளியேறுவதற்குச் சிறு துவாரம் விட்டு அனைத்தும் தைக்கப்படுவது வரை இதன் ‘வகைகள்’ வேறுபடுகின்றன. இந்த வழக்கத்தைக் கொண்ட பெரும்பாலான சமூகங்கள் ‘இதை வெளியில் சொல்லக் கூடாது’ என்ற மறைப்பையும் ஆழமாகப் பெண்களிடம் வேரூன்றச் செய்துள்ளன. மிகச் சமீபத்தில்தான் இந்தக் கொடூரம் உலகினர் செவிக்குக் கொண்டுவரப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்காகப் போராடத் தொடங்கினர். அவர்களுள் ஜஹா துக்குரேஹ் முக்கியமானவர். இவர் பிறந்த ஒரு சில வாரங்களுக்குள் அவரின் உறுப்பு சிதைக்கப்பட்டது. அவருக்குச் செய்யப்பட்டது, மூன்றாவது வகை சிதைப்பு. வெளிப்புற உறுப்புகள் அனைத்தும் வெட்டப்பட்டு, வேஜினாவும் தைக்கப்பட்டு, சிறுநீரும் உதிரமும் வெளியேறுவதற்கு சிறு துவாரம் மட்டும் விடப்பட்டது. உறுப்பு சிதைக்கப்பட்ட அந்த நொடியிலிருந்து ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் கொடுமையான வலியை எதிர்கொண்டார். 15 வயதில் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் தாங்க முடியாத வேதனையில் துடிப்பார். பல வருட வலிக்குப் பிறகு ‘பெண்களுக்கான பாதுகாப்பான கரங்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இவர்களைப் போன்றவர்களின் முயற்சிகளால்தான் இன்று மறைத்துவைக்கப்பட்டிருந்த பல பெண்களின் அழுகையையும், வேதனையையும் உலகம் கேட்கிறது. இவரின் தீவிரமான போராட்டத்தால் காம்பியாவில் பெண்ணுறுப்புச் சிதைப்புத் தடை செய்யப்பட்டது.

ஜஹா துக்குரேஹ்

வயதான அம்மாக்கள், பாட்டிகளால் பெண் குழந்தைகளுக்கு இந்த வழக்கம் செய்விக்கப்படுகிறது. பிறந்த சில நாள்களோ பருவம் எய்தும் வயதோ எந்த வயதில் பெண்ணுறுப்பு வெட்டப்பட வேண்டும், எப்படி வெட்டப்பட வேண்டும் என்பதை அந்தந்தச் சமூகங்களின் கலாசாரமே முடிவு செய்கிறது. பெரும்பாலான இடங்களில் தகுந்த மருத்துவ முறைகள், பயிற்சி என்று எதுவும் இல்லாமல் பிறப்புறுப்பை அறுக்கின்றனர். துருப்பிடித்த கத்தி, நெருப்பில் காட்டப்பட்ட பிளேடு போன்றவற்றால், எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் பெண் குழந்தைகளின் உறுப்பை வெட்டுகின்றனர். வெட்டப்பட்ட உடன் பெண்கள் தீவிரமான உதிரப்போக்குக்கு உள்ளாகின்றனர். அப்போதே மரணிப்பதற்கும், இல்லையெனில் பிரசவ நேரத்தில் மரணம் நிகழ்வதற்கும் வாய்ப்பிருப்பதாகச் சமூகச் செயல்பாட்டாளார்கள் தெரிவிக்கின்றனர். பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்ட பெண்கள் பிரசவ நேரத்தில் தாங்க இயலாத வலிக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் மரணம் வரை இழப்புகள் நேர்கின்றன. மேலும், உறுப்புச் சிதைக்கப்பட்ட நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் அதிர்ச்சி, தீவிரமான மனச் சிக்கலுக்கு வித்திடுகிறது. சிறுநீர்ப் பாதையில் தொற்றும் HIV தொற்றும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி, வலியைப் பழக்கிக் கொண்ட வாழ்வு! உலகில் பிறந்த அத்தனை உயிரினமும் செய்யும் அடிப்படைக் காரியங்களைக் கூட வலியுடனே செய்ய வேண்டிய விதி!

ஏன் இப்படி ஒரு கொடுமை? பல நூற்றாண்டுகளாகக் கட்டி எழுப்பப்பட்ட பெண்ணுடலின் மீதான அனுபவப் பாத்தியதையும், அப்பட்டமான சுயநலமும், அதன் பின் உள்ள குரூரமான மிருகத்தனமும். இது ஏதோ படிப்பறிவு இல்லாத சமூகத்து மக்களிடம் குடிகொண்டிருக்கும் பழக்கம் என்று எண்ணிக்கொண்டு கடந்து போக வேண்டிய விஷயம் கிடையாது. இதற்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது என்று செய்தியாகக் காதில் போட வேண்டிய விஷயமும் கிடையாது. பதின்வயதில் ஓர் ஆண் மகனிடம் தோன்றும் ஏதோ ஓர் உணர்வை, சரியாகத் துடிக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாகச் சொல்லும் விஷயம் இது. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளைக் குறித்து அவர்களுக்கு இருக்கும் அறிவைக் கேள்வி கேட்கும் விஷயம் இது. ‘உலகின் உன்னதமான ஒரு செயல்பாடு அதன் அத்தனை அழகியலோடுதான் இருபாலருக்கும் நடக்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்பும் விஷயம் இது. இந்த அத்தனை சந்தேகங்களும், கேள்விகளும் நமக்கு இருப்பின் நமக்கும் இந்தப் பெண்ணுறுப்பு சிதைப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது. இது போக, ஒரு நேரடிச் சம்பந்தமும் நமக்கு இருக்கிறது. ஏனென்றால், பெண்ணுறுப்புச் சிதைப்பு என்பது ஏதோ ஆப்பிரிக்காவில் மட்டும் நடந்து கொண்டிருப்பதாக எண்ண வேண்டாம். இந்தியாவில் தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் இந்த வழக்கம் இருக்கிறது. போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ‘A Pinch Of Skin’ [ ப்ரியா கோஸ்வாமி உருவாக்கிய தேசிய விருது பெற்ற ஆவணப்படம்) இந்தப் படத்தில், குரூரமான இந்தக் காரியத்தை எந்த ஒரு குற்றவுணர்வுமின்றி ஆத்மசுத்தியுடன் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணி கூறுவார், ‘அது ஹராம் கீ போட்டீ’ என்று. அதாவது, ‘அது புனிதமற்ற, சபிக்கப்பட்ட சதைப்பகுதி’ என்று பொருள். எதைக் குறித்துக் கூறுகிறார் என்று புரிகிறது தானே?

பெண்

இந்தியாவில் பெண்ணுறுப்புச் சிதைப்பு நடக்கிறது என்பதை உலகிற்குச் சொன்னதில் சில பெண்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இவர்களில் பலர் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டவர்கள். இனி, ஒரு பெண் குழந்தைக்கும் இந்தக் கொடுமை நடக்கக் கூடாது என்று போராடுபவர்கள். இங்கு சாஹியோ என்ற அமைப்பைக் குறிப்பிட வேண்டும். பெண்ணுறுப்புச் சிதைப்பு குற்றமாக்கப்பட வேண்டும், நம் சமூகத்திடமிருந்து அந்தப் பழக்கத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக உருவான அமைப்பு இது. இந்தப் பழக்கத்துக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்திக்கொண்டிருக்கும் மசூமா இரனால்வி, தனது ஆவணப்படம் மூலம் இந்தக் கொடுமையை உரக்கச் சொன்ன ப்ரியா கோஸ்வாமி, பத்திரிகையாளரான ஆரீஃபா ஜோஹாரி போன்றவர்கள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.       

பெண்ணுறுப்புச் சிதைப்பு எதற்காகச் செய்யப்பட வேண்டும்? பெண் என்பவள் திருமணம் முடித்து, கணவனிடம் செல்லும் போது ‘சுத்தமாக’ இருக்க வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தக் கணவன்தான் அவளை முதலில் தொடுபவனாக இருக்க வேண்டும். அதை எப்படி உறுதிப்படுத்துவது? பெண்ணுறுப்பில் கை வை! பெண்ணுக்கு உடலுறவில் ஆர்வம், இன்பம் என்ற எண்ணமே உருவாகாமல் பார்த்துக்கொண்டால் ஏன் அவள் திருமணத்திற்கு முன்பு வேறோர் ஆணுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளப்போகிறாள்? உடலுறவு வலி மிக்க அனுபவமாக மாறினால் ஏன் அவள் அதனை நாடிச்செல்லப் போகிறாள்? ஜீரணிக்க முடியவில்லையா? ஆனாலும், இதுதான் உண்மை. படிக்க சங்கடமாக இருந்தாலும், இதுதான் அப்பட்டமான உண்மை.

பெண்ணைக் கொண்டே பெண்ணுறுப்பைச் சிதைக்க வைப்பது எப்படி? அங்குதான் ‘ஹராம் கீ போட்டீ’ என்ற வார்த்தைகள் உதவி புரிந்தன. ‘பெண்ணின் பெண்குறிக்காம்புதான் அவளின் உடல் பசியைத் தூண்டி விடுகிறது, ஆகவே அதைக் கொஞ்சம் அறுத்து விடுவோம்’ இதுதான் நடக்கிறது. ‘A Pinch Of Skin’ திரைப்படத்தில் பிறப்புறுப்பு சிதைப்புக்கு ஆளான ஒரு பெண் கூறுவார், ‘என்ன தான் அது வலியைக் கொடுத்தாலும், அது செய்யப்படுவது அவசியம். இல்லையெனில், நாங்கள் அனைவரும் பாலியல் தொழிலாளிகளாக மாற வாய்ப்பிருக்கிறது’ என்று. இந்த நம்பிக்கைதான் பெண்ணுறுப்பு சிதைப்பினைச் சாத்தியமாக்குகிறது. தாய்மார்களே தங்கள் பெண் குழந்தைகளுக்கு இதனைச் செய்வதன் மற்றொரு காரணம், தாங்கள் தங்களது சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டு விடக் கூடாது என்ற பயம்தான். மேலும், இது பெண் குழந்தைகளுக்கான ‘பெருமை’யாகவும் பார்க்கப்படுகிறது. பெண் என்பதைக் குறிக்கும் அத்தனை உறுப்புகளும் அசிங்கமானவை என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றப்பட்டு அதன் விளைவாக அந்த உறுப்புகளைக் கொஞ்சம் அறுத்து விடுவோம் என்று பெண்ணுறுப்பைச் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். யோசித்துப் பாருங்களேன், பெண்ணை தெய்வமாக, தாயாகப் புனிதப்படுத்தியிருக்கும் நம் நாட்டில்தான் ‘பெண்’ என்ற பிறப்பால் வந்த உறுப்புகள் புனிதமற்றவை என்ற எண்ணமும் நிலவுகிறது.

பெண்ணுடலின் மேல் ஏன் இத்தனை வன்முறைகள்... சுத்தம், புனிதம் என்ற வார்த்தைகள் பெண்ணுடலில் ஏன் புகுத்தப்படுகிறது... கலாசாரம், குடும்ப கௌரவம், மானம் என்பனவெல்லாம் ஏன் பெண் உடலில் மட்டும் ஏற்றப்பட்டது... பெண் என்றாலே அவளின் மார்பகங்கள், பிறப்புறுப்பு மட்டும் தானா? அவளுக்கான தனிக் குணங்களைக் குறிக்காதா! பெண் என்றாலே அவள் உடல் மட்டும்தான் என்ற பார்வை இருப்பதனால் தானே அவள் உறுப்புகளைக் குறி வைத்து இப்படி ஒரு வன்முறை இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது? பலரின் பார்வை எப்போதுமே பெண்ணின் உடலைச் சுற்றியே ஏன் மையமிட்டிருக்கிறது? உடல் குறித்து இவ்வளவு யோசனைகளும் குழப்பங்களும் எதற்கு? இவற்றிலிருந்து விடுபட வேண்டியது மிக அவசியம் அல்லவா? ‘இதுதான் சந்தோஷம்’ என்ற பொய்யான பிம்பத்தை ஒரு பாலருக்கும், காலம் காலமாய்ப் பழகிக்கொள்ள விதிக்கப்பட்ட வலியை ஒரு பாலருக்கும் ஏற்றுக்கொள்வதே இந்தப் பிரச்னையின் அடிப்படை. இதைப் புரிந்து கொண்டால் போதும். பெண்ணுறுப்பு சிதைப்போ, பாலியல் வன்கொடுமைகளோ, பால் வேற்றுமையோ எதுவும் இருக்காது. உடல் குறித்த எல்லாச் சிந்தனைகளையும் விட்டுவிட்டு நம் மறுபாதியை அணுகுவோம். 

‘A Pinch Of Skin’ ஆவணப்படத்தைக் காண:

 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்