வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (09/03/2018)

கடைசி தொடர்பு:19:25 (09/03/2018)

தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு மூச்சுத் திணறுவது ஏன்? தவிர்ப்பது எப்படி? மருத்துவ விளக்கம்

தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தை ஒன்று, மூச்சுத்திணறி தன் பிஞ்சு உயிரைவிட்ட பரிதாபம், விழுப்புரத்தில் நடந்திருக்கிறது. இதைப் படித்த நொடியில், பல தாய்மார்கள் தங்கள் குழந்தையை ஒரு நடுக்கத்துடன் அணைத்து முத்தமிட்டுருப்பார்கள். இப்படியும் ஒரு விபரீதம் நடக்குமா? அதற்கான காரணங்கள் என்ன? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ, குழந்தை நல மூத்த மருத்துவர் சீனிவாசன், மூத்த பொதுநல மருத்துவர் ஜோஸ் என மூன்று பேரிடம் கேட்டோம். 

தாய்ப்பால்

தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணற வாய்ப்பிருக்கிறது! 

இன்றைக்கும் வயதான பாட்டிகள் இருக்கிற வீடுகளில், ''பால் கொடுக்கிறப்போ புள்ளைக்குப் புகைச்சல் ஏறிடாமல் பார்த்துக்கொடு'' என்பார்கள். அந்தப் புகைச்சல் அல்லது புரையேறுதல்தான் விழுப்புரம் குழந்தையின் விஷயத்தில் நடந்திருக்கிறது. குழந்தையானது பாலை வேகவேகமாக உறிஞ்சிக் குடிக்கையில், சின்னச் சின்ன இடைவெளிகளில் மூச்சும் விட்டுக்கொள்ளும். பாலை விழுங்குதல், மூச்சுவிடுதல் என மாறி நடக்கையில், மயிரிழை நேரத்தில் பாலானது உணவுக்குழாய்க்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடலாம். இப்படி மூச்சுக்குழாய்க்குள் சென்ற தாய்ப்பால், நுரையீரலுக்குள் நுழைந்து கண்ணிமைக்கும் நொடியில் சிசுவின் மூச்சை நிறுத்திவிடலாம். இது ஒரு காரணம். இன்னொரு காரணம், குழந்தை அளவுக்குத் அதிகமாக தாய்ப்பால் குடித்திருந்தால், அந்தப் பாலை எக்களிக்கும். இது, வாந்தியாக வெளியே வராமல் மூச்சுக்குழாய்க்குள் நுழைந்து, நுரையீரலுக்குள் சென்றுவிடும்போது கண்ணிமைக்கும் நொடியில் இறப்பு நேரலாம். இதைத் தொட்டில் மரணம் என்போம். இந்த இரண்டு சம்பவங்களுமே அரிதினும் அரிதாகவே நடக்கும் விஷயம் என்பதால், இளம் அம்மாக்கள் பயந்துவிட வேண்டாம். 

அம்மா

தாய்ப்பால் குடிக்கும்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுதிணறுவதற்கான காரணங்கள் என்னென்ன? 

* குழந்தைக்கு உட்கார்ந்து பாலூட்டாமல் படுத்தபடியே கொடுப்பதுதான், குழந்தைக்குப் புரையேறுவதற்கான முதல் காரணம். 

* குழந்தை பால் குடித்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதே என்று, அரைத் தூக்கத்தில் எழுப்பி பாலூட்டுவது அடுத்த காரணம். 

* குழந்தையானது பால் குடித்து முடித்த பிறகும், கொஞ்சம்தான் குடிச்சிருக்கு என்று கட்டாயப்படுத்தி, வயிறு முட்ட பாலூட்டுவது மூன்றாவது காரணம். இதுதான் குழந்தைக்குக் குமட்டல் வருவதற்கு முக்கியமான காரணம். 

* குழந்தை முழுங்கும் அளவைவிட அதிகமான அளவு பால் சுரந்தாலும், குழந்தை பாலை விழுங்க கஷ்டப்படும். 

* பெரிய மார்பகங்கள்கொண்ட அம்மாக்கள், தங்கள் குழந்தைக்குப் பாலூட்டும்போது, மார்பகம் குழந்தையின் மூக்கின் மேல் அழுத்தினாலும் மூச்சு திணறும். 

* பெரிய மார்பகங்கள்கொண்ட இளம் அம்மாக்கள், படுத்தவாறு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவே கூடாது. அப்படிப் பாலூட்டும்போது, குழந்தையுடன் சேர்ந்து தூங்கிவிட்டால், அம்மாவின் ஹெவி பிரெஸ்ட்டானது குழந்தையின் மூக்கின் மேல் அழுத்தி விளைவு விபரீதமாகலாம். 

* அன்னப்பிளவு இருக்கும் குழந்தைக்கும் புரையேறுதல் பிரச்னை வரும். இந்த வகை குழந்தையின் அம்மாக்கள், அன்னப்பிளவை ஆபரேஷன் மூலம் சரிசெய்கிற வரை கவனமாக இருக்க வேண்டும். 

* அரிதாக சில குழந்தைகளுக்கு உணவுக்குழாய்க்கும் காற்றுக்குழாய்க்கும் கனெக்‌ஷன் இருக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் குடிக்கும்போது அடிக்கடி புரையேறும். இதன் தொடர்ச்சியாக மூச்சுத் திணறும். 

குழந்தை

மூச்சுத்திணறலை எப்படித் தவிர்ப்பது? 

* உட்கார்ந்து ஒரு கையால் குழந்தையின் முகத்தில் மார்பு விழாத வண்ணம் பிடித்துக்கொள்ளுங்கள். மறு கையால், குழந்தையின் தலையை அதன் உடம்பைவிடச் சற்று உயர்த்திப் பிடித்து, பால் கொடுங்கள். 

* படுத்தபடி தாய்ப்பால் கொடுப்பதை முற்றிலும் தவிருங்கள். 

* குழந்தை நன்கு விழித்த பிறகுதான் பாலூட்ட வேண்டும். 

* பாசத்தில் குழந்தையின் குட்டி வயிற்றின் கொள்ளளவுத் தாண்டி பாலூட்டாதீர்கள். 

* சில அம்மாக்களுக்கு ஒரு மார்பகத்தில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் பால் சுரப்பு குறைவான பக்கம் முதலில் பாப்பாவுக்குப் பாலூட்ட ஆரம்பித்தால், அதிகமாகச் சுரக்கிற மார்பிலிருந்து கொஞ்சம் பால் வடிந்துவிடும். இதனால், பாப்பா முழுங்கும் அளவுக்கு மட்டும் பால் சுரக்கும். 

* அன்னப்பிளவு இருக்கும் குழந்தைகளுக்கு, அதைச் சரிசெய்கிறவரை ஒரு பிளேட்போல குழந்தையின் உதட்டில் சொருகி பாலூட்ட வேண்டும். 

* உணவுக்குழாய்க்கும் காற்றுக்குழாய்க்கும் கனெக்‌ஷன் இருக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும்போது அடிக்கடி புரையேறும். இதன் தொடர்ச்சியாக மூச்சுத்திணறல் ஏற்படும். இந்தக் குழந்தைகளை உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றுவிடுங்கள்.

 

 


டிரெண்டிங் @ விகடன்