Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்கள் படிக்க 5 புத்தகங்கள்!

நெட்டும் சாட்டும்தான் பொழுதுபோக்கா...? இதோ பெண்கள் படிக்க 5 சுவாரஸ்ய புத்தகங்களின் பட்டியல்... 

 
Menstrupedia Comic: The Friendly Guide To Periods For Girls by Aditi Gupta and Tuhin Paul
 
பெண் குழந்தைகளின் அம்மாக்கள், அவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சிகொடுத்து கற்றுத்தருவதற்கான எளிமையான கருவி, இந்தப் புத்தகம். பீரியட்ஸ் குறித்த விளக்கங்களும், வீடியோக்களும் இப்போது ஏராளமாக ஆன்லைனில் கிடைக்கின்றன. ஆனால், சிறுமிகள் கைகளில் வைத்துப் படிக்கும் வகையில்  கார்ட்டூன் விளக்கப்படங்கள் நிறைந்த புத்தகம் இது. நாப்கின் உபயோகிக்கும் முறையில் இருந்து, அந்நாட்களில் சுகாதாரம் பேணுவது எப்படி என்பதுவரை, படங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எளிய ஆங்கிலத்தில் இருக்கும் இந்தப் புத்தகத்தை, அம்மாவும் பெண்ணும் சேர்ந்து படிக்கலாம், புரிந்து கொள்ளலாம்! 
 
 
The Mother I Never Knew by Sudha Murthy 
 
தகவல் தொழில்நுட்ப உலகின் லெஜண்ட் என்று அழைக்கப்படும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவியும், எழுத்தாளருமான சுதா மூர்த்தி எழுதியுள்ள புத்தகம் இது. இரண்டு குறு நாவல்கள் அடங்கியது. இரண்டு ஆண்கள், இருவருமே தங்களின் முகம் தெரியாத அம்மாக்களைத் தேடிப் பயணப்படுகிறார்கள். ஒருவர், தந்தையின் கடந்தகாலத்தில் குழந்தையுடன் தனித்து விடப்பட்ட தன்னுடைய மூத்த அன்னையைத் தேடுகிறார். இன்னொருவர், தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என்று தெரியவரும்போது, தன் பெற்ற தாயை அடையத் தேடலைத் தொடங்குகிறார். இந்த ரகசியங்களின் சுழற்சியினை அழகாக விவரித்துள்ள, திருப்பங்கள் அடங்கிய புத்தகம் இது. நாவல் பிரியைகளுக்குப் பிடிக்கும்! 
 
நீலப்படம் - ல‌ஷ்மி சரவணகுமார்
 
பெயரைப் பார்த்தவுடன் யோசிக்க வேண்டாம்.  நடிகைகளும் பெண்கள்தான் என்பதை, எழுத்தும் உணர்வுமாக எழுதியுள்ள புத்தகம் இது. ஒரு ‘பி’ கிரேடு பட நாயகியின் வாழ்க்கையை மையமாக வைத்து வரையப்பட்டுள்ள கதை. அவளுடைய ஆசைகள், பொய்த்துப்போன கனவுகள், அவமானங்கள் ஆகியவற்றை சித்தரித்துள்ள நாவல். காமம் பற்றிய பார்வையும், புரிதலும் அவரவர் கண்ணோட்டத்தில் இருக்கின்றன என்பதை, வார்த்தைகள் வழி உணர வைக்கிறார் லஷ்மி சரவணகுமார். 
 
 
 
சோபியின் உலகம் - யோஸ்டைன் கார்டர் 
 
சோபி, நார்வேயைச் சேர்ந்த குட்டிச் சிறுமி. அவரது தந்தை பிறந்த நாள் பரிசாக அவளுக்கு கடிதமொன்றை அனுப்பி வைக்கிறார். அந்தக் கடிதம் அச்சிறுமியின் வாழ்க்கையையே எப்படி மாற்றுகிறது என்பதுதான், இந்த மொழி பெயர்ப்பு நாவலின் கதை. தமிழில் ஆர்.சிவக்குமார் இப்புத்தகத்தினை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். உள் வெளியின் சிறகுகளை விரிக்கும் வகையில் அமைந்துள்ள கதைவடிவம், பெண்களின் மன ஓட்டத்திலும் பல மாற்றங்களைச் செய்யும் வகையில் அமைந்துள்ளது அழகு. 
 
6174 - சுதாகர் 
 
சுஜாதா ஸ்டைலிலான சயின்ஸ் ஃபிக்‌ஷன் நாவல்கள் படிக்க ஆர்வமுள்ள பெண்களுக்கு,  இந்தப் புத்தகம் வாசிப்பின் முழுமையைத் தரும். தமிழ் சார்ந்த செய்யுள்கள், லெமூரியாக் கண்டம், புதிர்கள் என்று மேலும் மேலும்  படிக்கத் தூண்டும் திருப்பங்கள் நிறைந்த நூல்.  மர்ம முடிச்சுகள் நிறைந்துள்ள இந்தப் புத்தகம், பெண்களின் ஒரு நாளை பரபரப்பாக நகர்த்தும்.
 
 
 
 
ஹேப்பி ரீடிங்!
 
- பா. விஜயலட்சுமி
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement