Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களின் மூட் ஸ்விங்ஸ்... ஆண்களும் புரிந்துகொள்ள!

 
ஞாயிறு காலை 10 மணி.
 
புளூ டிக்குகள் வாழ்வளிக்கும் லவ் சாட் தொடங்குகிறது.
 
"ஏன்டா இவ்ளோ அழகா இருக்கே...?"
‘உனக்கே ஓவரா இல்ல? எங்க வீட்டுலயே நான்தான் சுமார் மூஞ்சி குமார்!’
 
"ஆனா, இந்த உலகத்துலயே நீதான்டா அழகன் எனக்கு!"
"சரிடி அழகி. நாளைக்கு காலேஜுக்கு 15 நிமிஷம் முன்னாடி வந்துடு. லைப்ரரியில மீட் பண்ணிட்டு, அப்புறம் க்ளாஸுக்குப் போவோம்...!"
 
"முடியாது. அரை மணி நேரம் முன்னாடி வந்துடுறேன்!"
"லவ் யூ!"
"தெரியும்!"
 
ஞாயிறு மதியம் 1 மணி.
 
"மிஸ் யூ... என்னடி பண்ணிட்டு இருக்க உயிரே?"
"என்னனு சொல்லு?"
 
"சொன்னேனே... மிஸ் யூ!"
"அறிவில்ல? நாலு அரியர் மட்டும் இருக்கு. க்ளியர் பண்ற வழியப் பாரு."
 
"என்ன கண்ணம்மா..? தலைவலி எதுவுமா... லவ் தெரபி கொடுக்கட்டுமா?"
"செருப்பு."
 
ஞாயிறு இரவு 9 மணி.
 
"செல்லம்..."
"சொல்லு...!"
 
"சாப்பிட்டியா...?"
"எரிச்சலா இருக்கு. டோன்ட் மெசேஜ்."
 
"உயிர் வாழ்றதே பார்ட்டைம் ஜாப், உனக்கு மெசேஜ் அனுப்புறதுதான் ஃபுல்டைம் ஜாப்னு வாழ்ந்துட்டு இருக்கிற என்னை..."
 
"போன வருஷம் டிசம்பர் 27 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை... நான் 18 மேசேஜ் அனுப்பினதுக்கு அப்புறம்தான் நீ ரிப்ளை பண்ணின... ஞாபகம் இருக்கா?"
" இல்லையே!"
 
"என்ன தைரியம் இருந்தா உன் ஸ்கூல் டேஸ் இன்ஃபேச்சுவேஷன் பத்தி எங்கிட்டயே ரசிச்சு ரசிச்சு சொல்லுவ...?"
"சொல்லி ரெண்டு வருஷமாச்சே. சொன்னப்போ ‘வாலி’ சிம்ரன் மாதிரிதானே ரசிச்சு கேட்டுட்டு இருந்த..?"
 
"ரசிக்கிற மாதிரி நடிச்சேன். உள்ள எவ்ளோ ஹர்ட் ஆனேன் தெரியுமா? எத்தனை நாள் அழுதுருக்கேன் தெரியுமா?"
 
சாட் சண்டை, இருவரின் இரண்டு வருடக் காதல் நினைவுகளின் கறுப்புப் பக்கங்களை எல்லாம் அவள் கிளறி, அவனைக் கிழித்தெறியும்வரை நீண்டு, இறுதியில்...
 
"அழுது அழுது என் கண்ணே வீங்கிருச்சு. சுமார் மூஞ்சிக் குமாரு இல்லடா... நீ ரொம்ப சுமார் மூஞ்சிக் குமாரு. உன்னைப் போய்... கெட் லாஸ்ட்."
 
முடிவுற்றது.
 
"காலையில ‘அழகன்’னு ஆரம்பிச்சு, இப்போ அழுதுகிட்டே முடிக்கிறாளே? நாம எதுவுமே பண்ணலையே..?" என்று மூளை குழம்பிய அவன், அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றபோது, அவள் லைப்ரரிக்கு வருவாள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால், அவள் நின்றிருந்தாள். 
 
"அய்யோ... நிக்கிறாளே..!" - சந்தோஷத்தையும் மீறி, நேற்றிரவு சண்டையின் நீட்சிக்காக நிற்கிறாளோ என, ‘சந்திரமுகி’ ஜோவைப் பார்க்கும் பிரபுவாக அவள் முன் போய் நின்றான்.   
 
"ஸாரிடா... நைட் ஏதேதோ சண்டை போட்டுட்டேன். மூட் ஸ்விங்ஸ். சரி விடு, லவ் யூ. இந்த கருப்புச் சட்டையில, ஏன்டா இவ்ளோ அழகா இருக்கே..!"
 
அவர்கள் காதல் தொடரட்டும். நாம் இப்போதாவது மேட்டருக்கு வருவோம்.
 
மூட் ஸ்விங்ஸ்( Mood swings) 
 
பெண்கள் காரணமே இல்லாமல் திடீரென மூட் அவுட் ஆவதும், கோபம், எரிச்சல், அழுகை என்று தன்னை வருத்தி, தன் அன்புக்கு உரியவர்களைப் படுத்தியெடுத்துவிட்டு, பின்னர் தானாகவே சகஜமாகி, சரியாகிவிடுதையும் பார்த்திருப்போம். இந்த மூட் ஸ்விங்ஸ், அடிக்கடி அவர்களுக்கு நிகழும். காரணம்... அவர்களின் மாதவிலக்கு நாட்களை ஒட்டி நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்.
 
என்ன நிகழ்கிறது பெண்ணுக்குள்?
 
ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சி, பொதுவாக 28 நாட்கள். அந்த சுழற்சியில் அவள் ஹார்மோன்கள் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். குறிப்பாக, எஸ்ட்ரோஜன் ஹார்மோன். மாதவிலக்கு முடிந்த நாளில் இருந்து சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பிக்கும் இந்த ஹார்மோன் லெவல், இரண்டு வாரங்களில் உச்சம் தொட்டிருக்கும். கருமுட்டை வெளியானதுக்குப் (ஓவுலேஷன் - Ovulation ) பிறகான மூன்றாவது வாரத்தில், எஸ்ட்ரோஜன் ஹார்மோனின் லெவல் வடிய ஆரம்பிக்கும். மேலும், புரொஜெஸ்டிரானின் ஹார்மோன் லெவலிலும் மாற்றங்கள் ஏற்படும். நான்காவது வாரத்தில், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் படிப்படியாகச் சரியும். இதுதான், மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் நாட்கள். 
 
சுழற்சியின் இறுதி வாரம், 21 - 28 நாட்கள் வரையிலான முன் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்கள், பெண்களால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. அந்நிலைதான் மூட் ஸ்விங்ஸ். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி போன்றவை தோன்றும். 
 
ஹார்மோன்களின் விளைவாக உணர்ச்சிகள் அவளை உயரத்தில் எடுத்துச்சென்று நிறுத்தி, பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு என விளையாடும். ஆத்திரம், மனச்சோர்வு என இருவேறு மனநிலைகளில் பந்தாடப்படுவாள். மிகச் சிலருக்கு இந்த மூட் ஸ்விங்ஸின் வீரியம் மிகக் கடுமையானதாக இருக்கும். தற்கொலை மனநிலைவரை இழுத்துச் செல்லும். அப்படியானவர்கள், இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
 
 
பெண்ணின் நுண் உணர்வுகளோடு விளையாடும் இந்த மூட் ஸ்விங்ஸ் ஆட்டம், ஒரு வாரம், நான்கு நாட்கள், இரண்டு நாட்கள், ஒரு நாள் என ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் உடல்நிலையைப் பொருத்து நீடிக்கும்; சில மணி நேரங்களில்கூட தோன்றி மறையலாம். அவளுக்கு மாதவிலக்கு ஆரம்பிக்கும் நாளில், ஹார்மோன்களின் லெவல் முற்றிலும் வடிந்து சமதளத்துக்கு வருவதுடன், அவளின் அத்தனை மன ஊசலாட்டங்களும் அந்த நாளில் சட்டென மறைந்துபோகும். பின் மாதவிலக்கு முடிவில் இருந்து, மீண்டும் படிப்படியாக எஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் அதிகரிக்கும் விளையாட்டு ஆரம்பமாகும். 
மாதம் ஒருமுறை மூட் ஸ்விங்ஸ்!
 
காதலியோ, மனைவியோ மாதம் ஒருமுறை காரணமே இல்லாமல் கத்தினாலும், கண்ணீர்விட்டாலும் கைகோத்து அவளை அதிலிருந்து கரைசேர்க்க வேண்டியதில், ஆண்களுக்கும் பொறுப்புண்டு. அவளைப்படுத்தும் ஊசலாட்டம் அவளால் தவிர்க்க முடியாத, அவள் கைமீறிய விஷயம். அதைப் புரிதலுடன் பொறுத்துக்கொள்ளும் அன்பே, அந்நாட்களுக்கான மருந்து.

-தீபிகா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement